அத்தியாயம் 9

வஞ்சி என ஆங்காரத்துடன் கோபமாய் அழைத்த தாயின் குரலில் வஞ்சியின் உடல் நடுங்க, சட்டெனத் தனது கையை அவனது கையிலிருந்து உருவியவளாய் வீட்டினுள்ளே சென்றாள் இளவஞ்சி‌.

உள்ளே சென்ற மகளையும், வெளியே அவளையே பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் சக்தியையும் கோபமாய் பார்த்தார் வசந்தா.

வீட்டினுள்ளே சென்ற வஞ்சியின் உள்ளம் நடுக்கத்தை நிறுத்தாமல் இருக்க, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்‌.

“தம்பி இது சரியில்ல! என் பொண்ணுக்கு நான் வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துட்டேன். இப்ப வந்து இப்படி இந்த நேரத்துல பேசுறது சரியில்ல. எனக்குத் தெரிஞ்சி என் பொண்ணு யாரையும் காதலிக்கலை. அவ மனசை நீங்க கலைக்க நினைச்சீங்கனா ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்திடுவேன் பார்த்துக்கோங்க” முறைத்தவாறு உரைத்தவர் விறுவிறுவென உள்ளே சென்று விட்டார்.

அவளின் மனநிலையைச் சரி செய்யாமல் அங்கிருந்து செல்ல மனமே இல்லை அவனுக்கு.

‘இந்தம்மா வேற இடையில நந்தி மாதிரி வந்துட்டு பேசுற பேச்சை பாரு’ மனதிற்குள்ளேயே வசைப்பாடிக் கொண்டான் சக்தீஸ்வரன்.

‘உள்ளே போய் அவளைத் திட்டாம இருக்கனுமே’ அவளுக்காக அவனின் மனம் பதைபதைத்தது‌.

உள்ளே ஏதும் அவளிடம் கேட்கிறாரா எனக் காதைக் கூர்மையாக்கி அந்த இடத்திலேயே நின்றான்.

உள்ளே சென்ற வசந்தா நேராக படுக்கையில் தலை வரை போர்த்திப் படுத்திருந்த வஞ்சியிடம் வந்தவர் அவளின் போர்வையை இழுத்தார்‌.

“என்னம்மா?” எரிச்சலாய் அவள் மொழிய,

“என்ன பழக்கம் இது வஞ்சி? கண்டவன் கூட கண்ட நேரத்துல பேசிட்டு இருக்கிறது? நீ அவனைக் காதலிக்கலைனு எனக்குத் தெரியும்! நீ யாரையும் காதலிக்க மாட்ட! உங்கப்பா உன்னை அப்படி வளர்க்கலைனும் எனக்குத் தெரியும். இந்தப் பையன் கூட சேர்ந்து உன்னோட கல்யாணத்தை நிறுத்துறதுக்கான பிளான் எதுவும் செய்ற நினைப்பு இருந்தா இப்பவே அதை அழிச்சிடு! உனக்கு நான் பார்த்திருக்கிற பையன் கூட தான் கல்யாணம் நடக்கும். நடந்தே ஆகனும்” அதட்டலாய் கூறியவராய் அங்கிருந்து சென்றார்.

‘அப்பாடா பொண்ணு மேல இவ்வளோ நம்பிக்கை இருக்கே! அது வரைக்கும் சந்தோஷம்’ என்று மனதோடு எண்ணிக் கொண்டவனாய் வீட்டிற்குள் சென்றான் சக்தீஸ்வரன்.

அன்னையின் குரலில் விழித்த மங்கை, “என்னாச்சு வஞ்சி? எதுக்கு அம்மா இப்ப வந்து இப்படிப் பேசுறாங்க? யார்கிட்ட பேசப் போன நீ?” எனக் கேட்டாள்.

இறைநம்பிக்கை இல்லாத அக்காவிடம் தனது கனவினைப் பற்றி உரைக்க மனமில்லாமல், “ஒன்னுமில்லைக்கா! அந்த எதிர் வீட்டு ஆளு இப்ப தான் வீட்டுக்கு வந்தாரு போல! நான் பாத்ரூம் போக வெளில போனேனா அப்ப பார்த்து பேசினாரு. நேத்து என் கல்யாணம் பத்தி பேசினப்ப பூந்தொட்டியைத் தூக்கி போட்டாருனு சொன்னேன்ல. அதான் எனக்குப் பிடிக்காத கல்யாணத்தைச் செஞ்சி வைக்கப் பார்க்கிறாங்களானு கேட்டாரு. அதை அம்மா பார்த்துட்டாங்க! அதான் அதட்டிட்டு போறாங்க” என்றாள்.

இத்தனை கோர்வையாகத் தன்னால் ஒரு பொய்யைக் கூற முடியும் என்பதை இன்று தான் அறிந்து கொண்டாள் இளவஞ்சி.

‘காதல் வந்தா பொய் தானா வந்துடுதே’ என்று அவளின் மனசாட்சி குட்டு வைக்க,

‘என்னது காதலா? நோ நோ! அதெல்லாம் நான் யாரையும் காதலிக்கலை. அது அந்த கனவோட தாக்கத்துல போய் பேசிட்டேன்’ மனசாட்சியின் குற்றச்சாட்டுக்கு மறுதலித்தவாறு மனதோடு எண்ணிக் கொண்டவளை விசித்திரமாகப் பார்த்த மங்கை,

“என்னமோ சரியில்லையே! நீ இப்படிப் போய் பேசுற ஆளே இல்லையே! அந்தாளு உன்னை எதுவும் பிளாக் மெயில் செய்றானா?” என்று மங்கை தீவிரமாகக் கேட்க,

“அய்யோ அக்கா அதெல்லாம் ஒன்னும் இல்லை. அவரை நான் ஏற்கனவே கோவில்ல பார்த்திருக்கேன். நல்லா பாடுவாரு. அவர் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ஃப்ரண்ட் மாதிரி அவரு” என்றாள் இளவஞ்சி‌.

“ஓ அப்ப சரி! ஆனாலும் ஆம்பிளைங்ககிட்ட பார்த்து தான் பழகனும் வஞ்சி! நான் சொல்லித் தான் உனக்குத் தெரியனும்னு இல்லை. பார்த்துக்கோ” என்றவாறு படுத்து விட்டாள் மங்கை.

மங்கையின் அருகில் படுத்த இளவஞ்சியோ, ‘இனி இந்த வசியக்காரன் பக்கமே போக கூடாது சாமி! ஈசனே எம்பெருமானே இனி இவரை நான் பார்க்கவே கூடாது! என்னை இவர்கிட்ட இருந்து காப்பாத்து’ என்று வேண்டிக் கொண்டாள்.

ஈசனின் திருவிளையாடலை அறியா பேதையாய் அவனை விட்டு விலகும் எண்ணத்தைத் திண்ணமாய் மனதினுள் உருவேற்றியவாறு உறங்கிப் போனாள் இளவஞ்சி.

தனது அறைக்குச் சென்று குளித்து விட்டு படுத்த சக்தியின் மனத்தை நிறைத்திருந்தாள் இளவஞ்சி‌.

‘ஏன் திடீர்னு வந்து அப்படி அழுதா? நான் கொடுத்த பரிசைப் பார்த்தாளா இல்லையா? பார்த்திருந்தா கண்டிப்பா இப்படி வந்து பேச வாய்ப்பில்லையே! இந்நேரம் என்கிட்ட வந்து சண்டைத் தானே போட்டிருக்கனும். இன்னும் பார்க்காம தான் இருக்கா போல! இந்த மேனகா வேற நேத்து அவகிட்ட என்ன பேசினானு தெரியலையே!’ யோசனையுடன் படுத்திருந்தான்.

முந்தைய நாள் இரவு சக்தியைத் தேடி தனது வீட்டு மாடியை பார்த்த வஞ்சியை கண்டதும் அண்ணனுக்கு கைபேசியில் அழைத்து விட்டாள் மேனகா.

இளவஞ்சியைப் பற்றி அவனிடம் அவள் விசாரிக்க, அவன் பிடி கொடுக்கவே இல்லை. தானே சென்று வஞ்சியிடம் பேசப் போவதாய் சக்தியிடம் உரைத்து விட்டு தான் அங்கே சென்றாள் மேனகா.

‘அவங்க அம்மா பேச்சே சரியில்லை! இதுக்கும் மேல தாமதிக்காம வஞ்சிக்கிட்ட பேசிடனும்’ எண்ணியவனாய் உறங்கிப் போனான் சக்தீஸ்வரன்.

*****

காலை ஏழு மணியளவில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வஞ்சியின் செவியைத் தீண்டியது அவனது குரல்.

பொன்னார் மேனியனே

புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல்

மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே

மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால்

இனியாரை நினைக்கேனே

சுந்தரரின் தேவாரப் பாடலை மனமுருக பாடிக் கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்.

பொன் போன்ற திருமேனியை உடையவனே, இடையில் புலித்தோலை உடுத்தி, மின்னல் போன்ற சடையில் மிளிர்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கமே, எனக்குத் தாய் பேன்றவனே, இனி உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன்?

சிவனை மனத்தில் இருத்தி ஒவ்வொரு வரியின் பொருளையும் உணர்ந்து அவரைப் போற்றிப் பாடிக் கொண்டிருந்தான் சக்தீஸ்வரன்.

மனதினில் குழப்பமும் சுணக்கமும் ஏற்படும் வேளைகளில் சிந்தையில் சிவனை நிறுத்தி அவரை போற்றி இப்பாடலைப் பாடுவான். இதனை முடிக்கும் பொழுதே மனதினுள் ஆழ்ந்த அமைதியையும் உடலில் புத்துணர்வையும் உணர்வான் சக்தீஸ்வரன்.

கோவிலில் இருந்து கேட்ட அவனின் குரலில் இவளின் கால்கள் அவளையும் மீறி கோவிலை நோக்கிச் செல்ல, கோவிலின் வாயிலில் கால்களை எடுத்து வைத்தவள் அப்படியே நின்று விட்டாள்.

‘ம்ஹூம் இந்த வசியக்காரனுக்கு அடிமையாகிப் போக மாட்டேன் நான். என் மனசைக் கட்டுக்குள்ள வைக்க எனக்குத் தெரியும்’ தனக்குள்ளே கூறிக் கொண்டவளாய் மனத்தினை இழுத்து பிடித்து வெளியே சென்றவள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள்.

அவளின் உடல் தான் அங்கே இருந்ததே தவிர அவளின் ஆன்மா உள்ளே அவனின் குரலை ரசித்து கேட்டு நெகிழ்ந்திருந்தது‌.

அவன் பாடி முடிக்கவும் இவளின் கல்லூரிப் பேருந்து வரவும் சரியாக இருந்தது.

கல்லூரிக்கு வந்தவள் பணியாளர் அறையில் அமர்ந்து அன்றைய வகுப்பிற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.‌ ஜானகிக்கு அன்று சோதனைக் கூடத்தில் (லேப்) வகுப்புகள் இருந்ததால் காலை முழுவதும் அந்த வகுப்புக்கான ஆய்வுக்கூடத்தில் இருந்தாள்.

காலை பத்து மணியளவில் வஞ்சியின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்து பார்த்தவள் புதிய எண்ணாகத் தெரியவும், எடுத்துப் பேசினாள்.

இவள் அழைப்பை ஏற்ற நொடி, சிறிதும் தயங்காது, “வணக்கம் வஞ்சி! நான் தான் சக்தி” என்றான் சக்தீஸ்வரன்.

அவளை தனக்கு நெடுங்காலமாக தெரியும் என்பது போல் அத்தனை இயல்பாக இருந்தது அவனின் குரல்‌.

சக்தி என்ற வார்த்தையில் உள்ளம் திடுக்கிட, “எ.. எந்த சக்தி? எனக்கு எந்த சக்தியும் தெரியாது?” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்.

‘அச்சோ ஏன் இப்படி சொதுப்புற வஞ்சி? சொல்லுங்க சக்தினு நார்மலா பேசிட்டு வச்சிருக்க வேண்டியது தானே! இப்ப நீ வேணும்னே அவரை அவாய்ட் செய்ற மாதிரி தானே இருக்கும். அப்ப உனக்குள்ளே என்னமோ இருக்குனு நினைச்சிட மாட்டாரா?’ மனசாட்சி கேள்வி கேட்க, ஆமா சரி தான் என எண்ணியவளாய் அவளே அவனுக்கு அழைத்தாள்.

‘அய்யோ நீயே ஏன் கால் செய்ற? அவனை தெரியாதுனு சொன்னவன்கிட்ட போய் என்னனு பேசுவ?’ மீண்டுமாய் மனசாட்சி கேள்வி கேட்க, அழைத்த இணைப்பைத் துண்டித்தாள்.

“அய்யோ நானே இந்தாளு விஷயத்துல குழம்பிப் போய் இருக்கேன். இதுல இந்த மனசாட்சி வேற என்னை வம்பிழுக்குதே” தலையில் கை வைத்தவாறு அவள் அமர்ந்து கொள்ள, சக்தியே மீண்டுமாய் அவளை அழைத்தான்.

நீண்ட பெருமூச்சு விட்டவளாய் அழைப்பை ஏற்றவள், “சாரி சக்தி! அப்ப வேற யாரோனு நினைச்சிட்டேன். எதுக்கு கால் செஞ்சீங்க? என்கிட்ட என்ன பேசனும் உங்களுக்கு? காலைல ஏதோ தெரியாம உங்க கையை பிடிச்சு அழுதுட்டேன். அதுக்காகலாம் அட்வான்டேஜ் எடுக்கலாம்னு நினைக்காதீங்க! நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்ல” படபடவெனப் பேசிக் கொண்டே போக,

அவள் மூச்சு விட எடுத்த இடைவெளியில், “கொஞ்சூண்டு கேப் விட்டா நானும் பேசிப்பேன் வஞ்சிமா” மென்னகையுடன் உரைத்தான் சக்தி.

வஞ்சிமா! அந்த அழைப்பு அவளை அசைக்க, ‘நோ இந்த வசியக்காரன்கிட்ட சிக்கிடக் கூடாது வஞ்சி’ தனக்குத் தானே கூறிக் கொண்டவளாய்,

“என்ன பேசனும் உங்களுக்கு? அதான் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்ல” சற்று அதட்டலாய் கேட்டாள்.

“உன்னோட அதட்டல் உருட்டல் மிரட்டல்லாம் நீ என்கிட்ட நேர்லயே காண்பிக்கலாம் வஞ்சிமா! அதுக்கான முழு உரிமையும் உனக்கு இருக்கு. உன்னோட காலேஜ் வாசலுக்கு முன்னாடி தான் நான் இருக்கேன்” அதே மாறாத சிரிப்புடன் உரைத்தான் சக்தீஸ்வரன்.

“என்னது காலேஜூலயா?” வாய்விட்டு கூறியவாறே அதிர்ந்தவளாய் சட்டென எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பால்கனி கைப்பிடியினருகே நின்று எட்டிப் பார்த்தாள்.

அந்த கல்லூரியின் நுழைவு வாயிலில் இருந்து சில அடி தூரம் தள்ளியிருந்த கட்டிடத்தின் பால்கனியில் நின்று, சாலையின் மறுபக்கம் தனது பைக்கில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.

தூரமாய் ஒரு கட்டிடத்தின் பால்கனியில் கைப்பேசியைக் காதோடு வைத்து நின்றிருந்தவளைக் கண்டவன் அவளை பார்த்தவாறு கை அசைத்தான்.

“இங்கே ஏன் வந்தீங்க? நீங்க இங்க நின்னு எனக்கு கை அசைக்கிறதை பார்த்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? என் மானத்தை வாங்க வந்தீங்களா?” அவள் பொரிந்து தள்ள,

“உங்க வீட்டுக்கிட்ட வச்சி பேச முடியாத அளவுக்கு இன்னிக்கு காலைல என்னென்னமோ நடந்து போச்சு! கோவிலுக்கு வந்தா பேசலாம்னு நினைச்சேன். காலைல அங்கேயும் வரலை. இதுக்காக உன்னைத் தனியா எங்கேயும் கூட்டிட்டு போயும் பேச முடியாது. எனக்கு இருக்க ஒரே ஆப்ஷன் இங்க வந்து பேசுறது தான் வஞ்சி. இப்ப நீ ஃப்ரீயா இருந்தா ஒரு பத்து நிமிஷம் கீழே இறங்கி வந்து நான் சொல்றதை கேட்டுட்டு போய்டு. இல்லனா நீ ஃப்ரீயா இருக்கிற நேரத்தைச் சொல்லு அப்ப நான் வரேன்” என்றான்.

பரபரவென பரபரப்பாய் எப்பொழுதும் வாகனங்கள் விரைந்தோடும் சாலை அது.

வாகனங்களின் இரைச்சலுக்கிடையில் அவன் கூறியதைக் கேட்டவளோ, ‘அப்படி என்ன பேசப் போறாரு?’ சில நொடிகள் யோசித்தவளாய், “சரி இருங்க நான் வரேன்” என்று அலைபேசி இணைப்பைத் துண்டித்தவள், இரண்டாம் மாடியிலிருந்து படிக்கட்டின் வழியாகக் கீழே இறங்கினாள்.

‘இன்பத்தில் ஆடுது என் மனமே’ எனும் அளவிற்கு அவளின் மனம் அவனிடம் பேசப் போவதை எண்ணியே ஆனந்தத்தில் துள்ள, தனது மனம் அவன் மீது மையல் கொண்டு முழுவதுமாகச் சாய்ந்து விட்டதை தெளிவாக உணர்ந்தாள் இளவஞ்சி‌. ஆனால் உணர்ந்ததை ஏற்றுக்கொள்ள தான் அவளால் இயலவில்லை. எப்படி தனது மனம் இப்படி யார் எவரென்றே தெரியாதவன் மீது இத்தகைய நேசத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்று தனக்குத் தானே வேலியை உருவாக்கத் தான் எண்ணினாள் இளவஞ்சி. நினைத்ததை செயல்படுத்தும் திடத்தை அந்த ஈசன் தான் வழங்க வேண்டுமெனவும் நினைத்துக் கொண்டாள்.

இவ்வாறாக தன்னோடு பேசிக் கொண்டவாறே கல்லூரியின் வாயிலில் வந்து நின்றாள். சாலையின் மறுபக்கம் ஈருருளியில் (பைக்) அமர்ந்திருந்தவன் கையைக் காண்பித்து அவளை நிற்க கூறி விட்டு, சாலையைக் கடந்து அவளின் புறம் வருவதற்காகத் தனது வண்டியை இயக்கி திரும்பிய வேளையில் தடுப்பானைப் (பிரேக்) பிடித்தும் நிற்காமல் தடுமாறிய ஆட்டோ ஒன்று அவனது வண்டியை இடித்து தள்ளியிருந்தது.

தனது வண்டியின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்திருந்தவன் வண்டியுடன் சேர்ந்து சற்று தூரம் தள்ளி கீழே விழுந்திருந்தான். வண்டி அவன் மீது விழுந்திருந்தது‌.