எதிர் வீட்டு மேல் மாடியில் பார்த்திருந்த அந்த பெண் தான் நின்றிருந்தாள்.
“ஹாய் வஞ்சி! என் பேரு மேனகா! எதிர்வீட்டுல புதுசா குடி வந்திருக்கோம். நாங்க பால் காய்ச்சும் போது நீங்க வரலைல அதான் இப்ப ஸ்வீட் கொடுக்கலாம்னு வந்தேன்” எனக் கையிலிருந்த இனிப்புப் பொட்டலத்தை அவள் கையில் திணித்தாள் மேனகா.
மேனகாவின் கழுத்தினில் இருந்த தாலியைப் பார்த்தவளுக்கு யாரிவள் என்ற குழப்பம் ஏற்பட அப்படியே பார்த்தவாறு நின்றாள்.
இளவஞ்சியின் கண்கள் பால்கனியின் மீதும் இந்த பெண்ணின் மீதும் சுழன்றவாறு இருக்க, “அண்ணாவை தேடுறீங்களா? அண்ணா வீட்டுக்கு வர லேட் ஆகும் இன்னிக்கு. அதான் நான் உங்களுக்கு கம்பெனி கொடுக்கலாம்னு வந்தேன்” என்று கண் சிமிட்டினாள் அந்த பெண்.
அண்ணன் என்ற வார்த்தையில் ஆசுவாசமாகிக் கம்பெனி கொடுக்கிறேன் என்று வார்த்தையில் உக்கிரமாகி முறைத்த இளவஞ்சி, “இங்க யாரையும் கம்பெனி கொடுக்க நான் கூப்பிடலைங்க. உங்க அண்ணன் யாரு எவருனு எனக்குத் தெரியாது” என்று கோபமாய் கூறிய நேரம் வாசலின் உள்ளே நுழைந்த மங்கை,
“ஹாய் மேனகா! எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க?” என்று கேட்டாள்.
உனக்கு இவங்களை தெரியுமா என்பது போல் இளவஞ்சி பார்க்க, “வீடு பால் காய்ச்சினப்ப எதிர் வீடுனு வந்து நம்மளை இன்வைட் செஞ்சாங்கனு சொன்னேன்ல” என்றாள் மங்கை.
ஓ என்றவாறு மேனகாவை உள்ளே அழைத்தவள் அவளை அமரச் சொல்லி குடிக்க நீர் அளித்தாள்.
மங்கை ரிஃபெரஷ் ஆக உள்ளே செல்ல, மேனகாவுடன் பேசுவதற்கு அமர்ந்தாள் இளவஞ்சி.
“உங்க அண்ணா சொன்னாங்களா இப்படி எனக்குக் கம்பெனி கொடுக்கிறதா? இனி இப்படிப் பேசிட்டு வராதீங்க? கேட்குறவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க” தீர்க்கமாய் பார்த்தவாறு இளவஞ்சி உரைக்க,
“அச்சோ சாரி வஞ்சி! தப்பா எடுத்துக்கீட்டீங்களா? சாரி சாரி! நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்” கண்களைச் சுருக்கிக் கெஞ்சியவாறு அவளைச் சமாதானம் செய்ய விழைந்தாள்.
“எங்கே வேலை செய்றீங்க வஞ்சி?” என்று வஞ்சியின் குடும்பத்தைப் பற்றி கேட்டறிந்து கொண்ட மேனகா, தனது குடும்பத்தினரைப் பற்றி உரைத்தாள்.
மேனகா திருமணமாகிச் சென்னையிலேயே வேறு இடத்தில் இருக்கிறாள். இன்று பிறந்த வீட்டிற்கு வந்திருந்தவள் இளவஞ்சியைப் பற்றி அறிந்து கொள்ள இங்கு வந்திருந்தாள்.
சக்திண்ணா என்று வார்த்தைக்கு வார்த்தை சக்தியை இழுத்து அவனது பராக்கிரமங்களை உரைத்தவளை அசூயையுடன் கவனித்த வஞ்சியின் ஆழ்மனமோ, சக்தி எனும் பெயரையே தித்திப்பாய் உணர்ந்து தனக்குள்ளேயே கூறிக் கொண்டது. சக்தியைப் பற்றிய அனைத்தையும் ஆர்வமாய் கேட்டு சேமித்துக் கொண்டது அவளின் மனது.
வசந்தாவும் கடையை எடுத்து வைத்துவிட்டு வந்துவிட மேனகாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இளவஞ்சியின் அந்த நிமிட நேர முக மாற்றத்தைக் கவனித்து உள்ளூர மகிழ்ந்தவளாய் வசந்தாவைப் பார்த்தாள் மேனகா.
“சரியான கோபக்காரனா இருக்கே அந்தப் பையன். நேத்து என் கால்ல பூந்தொட்டியைத் தூக்கி போட்டுடுச்சுமா. சொல்லி வைமா! நாங்க உன் மூஞ்சுக்காக தான் போனா போகுதுனு விட்டோம்” என்றவர் கூறியதும்,
“அப்படியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டவள், அண்ணனுக்காகப் பேசிச் சமாளித்தாள்.
மேனகா சென்றதும் சில மணி நேரத்தில் வஞ்சியின் தம்பி திருச்செல்வமும் வந்துவிட அனைவரும் உண்டுவிட்டு உறங்கச் செல்ல, தனது அறையின் ஜன்னல் வழியாக எதிர்வீட்டு பால்கனியைப் பார்த்திருந்தாள் இளவஞ்சி.
‘இன்னுமா ஆபிஸ்லருந்து வரலை இவரு’ ஏனோ மனம் சுணங்கிப் போனது இவளுக்கு.
‘ஏன் இந்த மனசு அவரை இந்தளவுக்கு தேடுது’ அவனின் நினைவினுடனேயே உறங்கிப் போனாள் இளவஞ்சி.
******
வாசனை மலர்கள் சூழ்ந்த பூஞ்சோலை அது!
எங்கும் ஒலித்தது சிவாய மந்திரம்!
அந்தச் சோலையின் மத்தியில் அழகாய் அமைந்திருந்த லிங்கத் திருமேனியின் முன்பு கண்களை மூடியவாறு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தாள் அவள்.
பண்டைய காலத்து பெண்கள் போன்று புடவையை வித்தியாசமாக உடுத்தியிருந்தவளின் முகத்தில் பொலிவை மீறிய தவிப்புத் தெரிந்தது.
அவளருகில் அவளை போன்றே தீவிரமான சிவ தியானத்தில் அமர்ந்திருந்தான் அவன்.
‘ஓம் நம சிவாய சிவாய நம ஓம்’
அவன் தனது கணீர் குரலில் கூற, அவனைத் தொடர்ந்து அதே போன்று கணீர் குரலில் உச்சரித்தாள் இவள்.
ஆன்மாவின் ஆழ்ந்த பக்தியுடன் இம்மந்திரத்தை இருவரும் உச்சரித்தவாறு அந்த லிங்க திருமேனிக்கு மலர்களைத் தூவி பூஜித்தனர்.
பூஜையின் நிறைவில் முகத்தில் ஏகத்துக்கும் கலக்கம் குடிக்கொண்டிருக்க, தன்னவனின் கைகளைப் பற்றியவளாய், “ஈசனிட்ட பணியை விரைவாக நிறைவுச் செய்து என்னை வந்தடையுங்கள் சுவாமி! தங்களைக் காணும் வரை இவ்வுடலும் மனமும் எவ்வித சுகத்தையும் உணராது சுவாமி” என்றாள்.
“நித்தமும் ஈசனுடன் நின்னையும் நினைந்த வண்ணமே என் பயணம் இருக்கும் தேவி! காற்றோடு என் சுவாசத்தைக் கடத்தித் தங்களுக்குத் தூதனுப்புவேன். அது உங்களைச் சுகமாய் தழுவும் நேரம் என்னை உணர்வீர்கள் தாங்கள். இன்முகத்துடன் விடைத் தாருங்கள் தேவி”
அவளின் முகத்தைப் பார்த்து உரைத்தவனின் முகத்தில் தோன்றிய காதல் உணர்வுகளை மனதோடு சேமித்தவளாய், “போய் வாருங்கள் சுவாமி! காத்திருப்பேன் தங்களுக்காக” என்று வழியனுப்பி வைத்தாள்.
முன்தினம் போலவே மசமசவென மங்கலாய் இந்த காட்சி மறைய, கனவினில் உணர்ந்த அப்பெண்ணின் உணர்வுகள் அவளைத் தாக்கியது.
நிஜமாகவே சக்தீஸ்வரன் தன்னை விட்டு எங்கோ செல்வது போன்ற பிரமை உருவாக, ‘சக்தி போகாதீங்க! என்னை விட்டுப் போகாதீங்க!’ அவளின் ஆழ்மனம் கதறிக் கொண்டிருக்க, பரிதவித்த உள்ளத்துடன் பதறியவாறு எழுந்தமர்ந்தாள் இளவஞ்சி.
முகம் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க, நேரத்தைப் பார்த்தாள்.
காலை நான்கு மணியெனக் காண்பிக்க, உடனே அவனைக் காண வேண்டுமெனத் தவிக்கும் மனத்தினை அடக்கும் வழி தெரியாது, எழுந்து வாசலுக்குச் சென்றவள் எதிர் வீட்டுப் பால்கனியைப் பார்த்தவாறு நின்றாள்.
எங்கும் இருட்டாய் ஆங்காங்கே மின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, “சக்தி உங்களை பார்க்கனும்! ப்ளீஸ் வெளில வாங்களேன்” மந்திரம் போல் தொடர்ந்து கூறியவாறு பால்கனியை அவள் பார்த்திருக்க, அவனது வீட்டின் வாசல் முன்பு வந்து நின்றது புல்லட் வாகனம்.
சட்டெனப் பார்வையை மாடியிலிருந்து வண்டியின் மீது கடத்தியவள் புருவம் இடுங்க அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்தாள்.
வண்டியை நிறுத்திவிட்டு அவன் இறங்கிய நொடி, மனதின் உந்துதலில் தங்களது இரும்பு கதவைத் திறந்து சக்தி என்று அழைத்தவாறு அவன் முன்னே வந்து நின்றாள் இளவஞ்சி.
இரவு உடையில் கலைந்த கூந்தலும், தூங்கி எழுந்த முகமும் சிவந்த விழிகளுமாய் வந்து நின்றவளை அதிர்வுடன் பார்த்தான் சக்தீஸ்வரன்.
அவள் கண்களில் இருந்த பரிதவிப்பு அவனைக் கலங்கச் செய்ய, “என்னாச்சுடா வஞ்சி மா?” எனக் கேட்டான்.
வஞ்சி மா! அவள் தந்தையின் அழைப்பல்லவா அது!
கடகடவெனக் கண்ணீர் விழிகளிலிருந்து பெருகி வழிய, அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள் அவள்.
“என்னடா! ஏன் இந்த நேரத்துல இங்கே நிற்கிற? எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான்.
அவனது கரத்தினிலேயே முகத்தைப் புதைத்தவளாய் கண்ணீர் சிந்தினாள்.
இத்தனை நேரமாய் அவனைக் காண வேண்டுமென மனதினுள் எழுந்த பரிதவிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போக, முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்த போது தான் தன்னிலைக்கு வந்தவளாய், தான் செய்திருக்கும் காரியத்தின் வீரியத்தை உணர்ந்தாள்.
சட்டென அவனது கரத்தினிலிருந்து தனது கையை உருவியவளாய் ஓரடிப் பின்னே சென்றவள், “சாரி” என அங்கிருந்து நகர முற்பட, அவளின் கையைப் பற்றி தன்னை நோக்கி திருப்பியவனாய் பார்க்கச் செய்தான் சக்தீஸ்வரன்.
“நீ எதுவும் தப்பு செய்யலை வஞ்சி மா!” அவளின் முக மாற்றத்தையும் உடலின் இறுக்கத்தையும் கண்டவன் அவளை இயல்பாக்க முனைந்தான்.
“இப்ப நடந்தது ஜஸ்ட் உன்னோட மன உணர்வுகளின் வெளிப்பாடு தான் சரியா! இது சரியா தப்பானுலாம் யோசிச்சு உன்னை நீயே குழப்பிக் காயப்படுத்திக்காத வஞ்சி மா! சரியா” அவளைப் பற்றியும் அவளின் உணர்வுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவனாய் அவன் கூறிக் கொண்டிருந்த நேரம்,
“வஞ்சி” அவளைக் கோபமாய் முறைத்தவாறு ஆங்காரக் குரலில் அழைத்திருந்தார் அவளின் தாய் வசந்தா.