ஆமென தலையசைத்தவளாய், “என்னால நார்மலா இருக்க முடியலை ஜானு. ஒரு மாதிரி அவர் நினைப்பாவே இருக்கு. நான் இது வரைக்கும் யார்கிட்டேயும் இப்படி ஃபீல் செஞ்சது இல்லை ஜானு. அவர் நினைப்பை ஒதுக்கி வைக்க நினைச்சாலும் முடியாம தவிச்சிட்டு இருக்கேன்” குற்றவுணர்வுடன் தன்னிலையை இளவஞ்சி விளக்க,
ஆச்சரியமடைந்தவளாய், “ஓ மை காட்! யாரது? எங்க வஞ்சியோட தவத்தை கலைச்சது? நேத்து மணிகண்டன் தானே உன்னைப் பார்க்க வந்தாரு! வேற யாரும் வந்தாங்களா என்ன?” படபடவென கேட்டாள் ஜானகி.
“அவரு சரியான வசியக்காரன் ஜானு. அவரைப் பார்த்தாலே அப்படியே மெஸ்மெரைஸ் ஆகி அவரையே பார்த்துட்டு இருக்கேன். அவரைப் பார்க்கவும் அவர் குரலைக் கேட்கவும் ரொம்பப் பிடிச்சிருக்கு. காலைல அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சது அப்படியே கண்ணுக்குள்ளேயே இருக்கு. திரும்ப எப்ப அந்தச் சிரிப்பைப் பார்ப்போம், அந்தக் குரலைக் கேட்போம்னு மனசு ஏங்குது. இது சரியா தப்பா? ஏன் எனக்கு இப்படித் தோணுது? ஒன்னும் புரியலைடி! யோசிச்சு யோசிச்சு மண்டைத் தான் வலிக்குது” என்றவாறு தலையில் கை வைத்துக் கொண்டாள் இளவஞ்சி.
“வாரே வா! யாரது இந்த சாமியாரினியின் தவத்தைக் கலைக்க வந்த அந்த ஆசாமி” என்று அதீத ஆச்சரியமும் மகிழ்வுமாக ஜானகி கேட்டிருக்க,
“நேத்து கோவில்ல நெத்தியில மூனு பட்டை போட்டு குங்குமம் வச்சிருந்தாரே அவர் தான் ஜானு” என்றாள் இளவஞ்சி.
“ஹே வஞ்சி! நேத்தே அப்படி யாரையும் நான் பார்க்கலைனு சொல்ல வந்தேன்டி! ஒரு வேளை நான் பார்க்கிறதுக்கு முன்னாடி கிளம்பிப் போய்ட்டாரு போல! அவர் பேரு என்னடி?” ஆர்வமாய் கேட்டாள் ஜானகி.
“பேரா? ஆமா அவர் பேரு என்ன? எங்கேயாவது அவர் பேரு சொன்னாரா?” நடந்த நிகழ்வுகளை மனதினுள் ஓட்டியவளுக்கு எங்கேயும் அவனது பெயரினைக் கூறியதாக நினைவில் இல்லை.
“பேரு தெரியலைடி! ஆனா இன்னிக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தாருடி! அதை மறந்தே போய்ட்டேன் பாரேன்” என்றவளை மேலும் விழித்த கண்களுடன் பார்த்த ஜானகி,
“பார்ரா கிஃப்ட் வேறயா?” என்று கலாய்த்தவள், “அதெப்படி அவர் நினைப்பு இருக்கு ஆனா அவர் கொடுத்த கிஃப்ட் நினைவுல இல்லை” எனக் கேட்டாள்.
“அட நீ வேற இன்னிக்கு எப்படியும் ஐம்பது தடவையாவது அந்த கிஃப்ட்டை எடுத்துப் பார்க்கனும்னு நினைச்சிருப்பேன். ஆனா ஒவ்வொரு நேரமும் நினைச்ச உடனேயே வேற வேலை வந்து மறந்துடுறேன்” என்றவளாய் தனது பையினுள் கைகளைத் துழாவி அதனை எடுக்க, அங்கிருந்த இன்டர்காம் அலறியது.
இன்டர்காமை எடுத்த ஜானகி, “பிரின்சி” என்று வாயை அசைத்தவாறு இளவஞ்சியிடம் உரைக்க, எடுத்த பரிசை அப்படியே பையினுள் மீண்டுமாய் வைத்தவளாய் ஜானகியின் அருகில் சென்றாள் இளவஞ்சி.
அந்த பரிசினை அவள் காணும் நேரம் வரவில்லை போலும். அந்த நேரம் வரும் பொழுது அவளின் நிலை என்னவாக இருக்குமோ!
“பிரின்சி உன்னைப் பார்க்கனும்னு சொன்னாங்க. அந்த மது பையன் விஷயமா பேசனுமாம்” என்றவாறு இணைப்பைத் துண்டித்தவள், “அந்த பையன் மேல கண்டிப்பா ஆக்ஷன் எடுக்கனுமா வஞ்சி?” எனக் கேட்டாள்.
“ஆமா ஜானு. இந்த வயசுல திருந்தலைனா எந்த வயசுல திருத்த முடியும் சொல்லு. என்னைப் பத்தி தப்பு தப்பா அவ்ளோ கமெண்ட் அடிச்சிருக்கான். அதை என்கிட்ட சொன்ன பையன் வாயில ரத்தம் வர அளவுக்கு அடிச்சிருக்கான். இவனை சஸ்பெண்ட் செஞ்சியே ஆகனும் ஜானு” என்றவளாய் தலைமை ஆசிரியரை பார்க்கச் சென்றாள்.
ஜானகியும் அவளுடன் செல்ல இருவருமாக இந்த விஷயத்தை பற்றிப் பேசி விட்டு வெளியே வரும் போது இவர்களின் பேருந்து கிளம்பும் நேரமாகி இருந்ததால் இளவஞ்சியின் மனம் கவர்ந்தவனைப் பற்றி பேச ஜானகிக்கு நேரமில்லாமல் போனது.
மாலை ஆறு மணிக்கு மேல் தனது பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இளவஞ்சியின் கால்கள் கோவிலை நோக்கிச் சென்றது.
கோவிலின் உள்ளே நுழையும் போதே வஞ்சியின் உள்ளம் சக்தியின் குரலை எதிர்பார்த்தவாறு சென்றது.
‘இன்னிக்கு அந்த வசியக்காரன் வரலையா?’ எண்ணியவாறு உள்ளே சென்றாள்.
சிவபெருமான் முன்பு கண் மூடி நின்றவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
‘என் அப்பா இப்ப இருந்திருந்தா என்னோட இந்த குழப்பத்தை உடனே நிவர்த்தி செஞ்சிருப்பாரு தானே! உங்களைப் பார்க்கும் போதெல்லாம் என் அப்பா நினைப்பு வரதைத் தடுக்க முடியலையே! அதுவே என்னை உங்களை விட்டு ஒதுங்கிப் போக வைக்குது. முன்னாடி மாதிரி நான் உங்களைப் பக்தியா கும்பிடனும்னா என் அப்பா தான் திரும்ப வரனும்’ மனதோடு சிவபெருமானிடம் பேசிக் கொண்டவளுக்கு பெரும் பாரம் ஏறிக் கொண்டது.
சுற்றுப் பிரகாரத்தில் வந்து அமர்ந்தவளின் கண்களோ சுற்றி முற்றி அவனைத் தான் தேடியது.
அவனைக் காணாது செல்ல மனமே இல்லை அவளுக்கு. இன்னும் பத்து நிமிடம், மேலும் பத்து நிமிடம் என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு அவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவள் அரை மணி நேரம் கடந்த பின்பு தான் அங்கிருந்து கிளம்பினாள்.
வெளியே வந்து தங்களது பூக்கடையில் நின்றிருந்த தாயைக் கண்டதும் தான், மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று பேச போவதாக நேற்று தாய் உரைத்தது நினைவினில் வந்தது இவளுக்கு.
பூக்கடைக்குச் சென்றவள், “அக்கா வேலையிலிருந்து வந்துட்டாங்களாம்மா?” எனக் கேட்டாள்.
ஒரு தனியார் அலுவலகத்தில் கணக்காளராக (அக்கவுண்ட்டென்ட்) வேலை செய்து கொண்டிருக்கிறாள் மங்கை.
“இல்ல! நேத்து லீவ் போட்டதுக்கு இன்னிக்கு சேர்த்து வச்சி வேலை வாங்குறாங்கனு சொன்னா. வர லேட் ஆகுமாம். நீ போய் எல்லாருக்கும் டிபன் செஞ்சி வச்சிடு! நான் கொஞ்ச நேரத்துல கடையை எடுத்து வச்சிட்டு வந்துடுறேன்” என்றார் வசந்தா.
சரியெனத் தலையசைத்தவள், மணிகண்டன் வீட்டிற்குத் தனது தாய் சென்றாரா இல்லையா என்பதை தாயிடமே எப்படிக் கேட்பது என யோசித்தவாறு நின்றாள்.
“அப்புறம் வஞ்சி அந்த மாப்பிள்ள பையனோட அம்மா பேசினாங்க. ஒரு வாரத்துல நல்ல பதிலா சொல்லுங்க. ஆவலா காத்துட்டு இருக்கோம்னு சொன்னாங்க. நீ டைம் கேட்டதை மாப்பிள்ள பையன் அவங்க அம்மாகிட்ட சொல்லிருப்பான் போல! நீ எதுவும் எடக்கு முடக்கா செஞ்சி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்னு மட்டும் நினைக்காத. ஒரு மாசத்துலயே கல்யாணத்தை வச்சிடனும்னு இருக்கேன். இப்படிப் பரம்பரைப் பணக்காரங்களா இருந்துட்டு நம்ம மாதிரி குடும்பத்துல அவங்களா வந்து பொண்ணுக் கேட்குறது எவ்ளோ பெரிய விஷயம். நீ ஆயுசுக்கும் வேலை செய்யாம இருக்கிற சொத்தைப் பராமரிச்சா போதும். உன்னோட சந்தோஷமான வாழ்க்கைக்காகத் தானே அம்மா சொல்றேன்” என்றார்.
“அப்படி இரண்டாம் தாரமா போய் சொகுசான வாழ்க்கையை நான் வாழ விரும்பலைமா. என் சம்பாத்தியத்துல கிடைக்குற சொகுசும் சுகமும் போதும் எனக்கு” தாயை முறைத்தவாறு உரைத்தவள் வீட்டை நோக்கிச் சென்றாள்.
‘இவளை வீட்டுல போய் பேசிக்கிறேன்’ எனத் திட்டியவராய் பூவைக் கட்டிக் கொண்டிருந்தார் வசந்தா.
தாயின் பேச்சைக் கேட்டு உள்ளம் கொதித்தவாறு வீட்டை அடைந்தவள் தனது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.
‘என் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கிறதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லையா? எனக்குனு சுயமரியாதை இல்லையா? பணம் இல்லைனா மானம் மரியாதை எல்லாத்தையும் வித்துடனுமா என்ன? ஏன் இந்த அம்மா இப்படிப் பணம் பணம்னு அலையுறாங்க. இந்தப் பணத்துக்காகக் கட்டிக்கிட்டவ தானே நீ னு நாளைக்கு ஒரு வார்த்தை கட்டிக்கிட்டவன் கேட்டானா நான் நாண்டுக்கிட்டு தானே சாகனும்’ புலம்பியவளாய் படுத்திருந்தவள் கைபேசியில் இருந்த தந்தையின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.
‘ஏன்ப்பா என்னை விட்டு போனீங்க? நீங்க இருக்கும் போது கஷ்டம் கூட கஷ்டமா தெரிஞ்சதில்லைப்பா! நீங்க போனப்பிறகு என் வாழ்க்கையோட ஒவ்வொரு அடியையும் இடியாக மனசுல வாங்கி தான் எடுத்து வச்சிட்டு இருக்கேன்ப்பா. போதும்ப்பா இந்த வலி”
‘வந்துட்டாரா?’ அவளின் உள்ளம் துள்ளியடங்க, அவளையும் மீறி அவளின் கால்கள் விறுவிறுவென வாசலை நோக்கிச் சென்றது.
மனம் நிறைந்த எதிர்பார்ப்புடன் கண்கள் எதிர்வீட்டு பால்கனியைப் பார்க்க, அங்கு வேறொரு பெண் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். காற்று இறங்கிய பலூனாய் சட்டெனச் சோர்ந்து போனது அவளின் மனது.
கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்தவளாய், ‘எதிர்பார்த்து ஏமாந்து போறது நமக்கு ஒன்னும் புதுசு இல்லயே’ தன்னைத் தானே தேற்றிக் கொண்டு உள்ளே சென்றவள் முகத்தைக் கழுவி விட்டு சமையலைத் தொடங்கினாள்.
எதிர்வீட்டில் தொடர்ந்து ஒலித்த பாடல்கள் இவள் மனத்தின் வலியினை வருடியபடி இருக்க, கைகள் தானாகச் சமையலைச் செய்து கொண்டிருந்தன.
அடுத்த அரை மணி நேரத்தில் அவளது வீட்டின் கதவு தட்டப்பட, மங்கை தான் வந்திருக்கிறாள் என எண்ணியவாறு கதவைத் திறந்தவள் அங்கு நின்றிருந்தவளைக் கண்டு அதிர்ந்த பார்வைப் பார்த்து வைத்தாள்.