அவ்வளவு தான் அண்ணனின் குரலில் உதடு பிதுக்கி ஒரு அழுகையை ஆரம்பிக்க…
“ஷ்” என்று ஒற்றை விரல் கொண்டு சுதர்ஷன் மிரட்ட…
அவ்வளவு தான் கண்கள் கலங்க உதடு பிதுங்க அப்படியே நின்றாள்.
எங்கே எந்த சத்தமும் காணோம் என்று எட்டிப் பார்த்த நிலா, மகள் நின்று கொண்டிருந்த கோலம் பார்த்து, அரிசி ஆட்டிக் கொண்டிருந்த கையை வேகமாக கழுவி வந்தவள்,
“டேய், என்னடா பண்ண? பண்ணக் கூடாதுன்னு சொல்லணும் எதுக்குடா மிரட்டுற?” என்றபடி மகளை கைகளில் அள்ள, அவ்வளவு தான் அப்படி அழுகை ஸ்ராவணி.
அம்மாவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“மா, செல்லம் குடுக்காதீங்க, நீங்க முதல் தடவை சொன்ன போதே அவ கேட்டிருக்கணும்” என்றான் அதே அழுத்தமான குரலில்.
“ஆரம்பிச்சிட்டான்டா” என்று சொல்லியபடியே கௌரிஷ் வீட்டிற்குள் நுழைந்தவன், “மா குடுங்க” என்று ஸ்ராவணியை கைகளில் வாங்கிக் கொண்டான்.
“ஆறு வயசு ஆகிடுச்சு அவளுக்கு. சின்ன குழந்தை மாதிரி என்னடா தூக்கி வெச்சு கொஞ்சறீங்க ரெண்டு பேரும்” என்று அதற்கும் சுதர்ஷன் ஒரு அதட்டலிட்டான்.
அவ்வளவு தான் ஸ்ராவணியின் அழுகை இன்னும் அதிகமாக, அம்மாவையும் உடன் பிறந்தவனையும் முறைத்து நின்றான்.
இப்படியாக ரூல்ஸ் ராமானுஜமாக சுதர்ஷன் பதினைந்து வயதில் இருந்தவன் பத்தாம் வகுப்பு படித்தான். எல்லோரையும் அனுசரித்து அரவணைப்பவனாக கெளரிஷ் பதினைத்து வயதில் அவனும் பத்தாம் வகுப்பில் இருந்தான்.
ஆம்! இருவரும் இரட்டையர்கள். அதன் பிறகு ஒன்பது வருட இடைவெளியில் பிறந்தவள் ஸ்ராவணி. சுட்டி தனமும் குறும்பும் நிறைந்தவள், அம்மாவின் செல்லம் கொண்டே அனைத்தும்.
“இன்னைக்கு பாப்பா என்ன பண்ணினா?” என்று கேட்டுக் கொண்டே கெளரிஷ் அவளை வெளித் திண்ணைக்கு அழைத்து சென்று அமர்த்திக் கொள்ள, அவனிடம் என்ன நடந்தது என்று கதை பேசிக் கொண்டே அண்ணன் மேல் சாய்ந்து கொண்டாள்.
“கெளரிஷ் தூங்கிட போறா இட்லி குடு” என்று வேகமாக தட்டில் இட்லி கொண்டு வந்து குடுக்க, வேகமாக எழுந்து சென்று கைகளைக் கழுவி வந்தவன், தங்கைக்கு ஊட்ட, அவளும் அண்ணனிடம் கதை பேசியபடியே உண்டாள்.
திண்ணையில் கால் நீட்டி ஆசுவாசமாய் நிலா அமர்ந்து கொள்ள, புத்தகத்தை மூடி வைத்து அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் சுதர்ஷன்.
அம்மாவின் பார்வை எதிர்வீட்டினை வெறித்திருந்தது. தப்பு, தப்பு, அது வீடல்ல, பங்களா அதுவுமல்ல அது ஒரு ஜமீன் பங்களா சிறிய அரண்மனையை ஒத்தது.
அம்மாவின் கையை ஆதூரமாய் பிடித்துக் கொண்டான்.
பின் அம்மாவின் முகத்தை, அதில் இருந்த கண்களை பார்க்க நீர் நிறைந்ததோ என்று தோன்ற,
“மா” என்றான் மெல்லிய குரலில், கெளரிஷிற்கும் ஸ்ராவணிக்கும் கேட்காதவாறு.
“ம்ம்” என்று அவளின் குரல் ஒலித்த போதும் பார்வை மாறவில்லை.
“மா, யூ ஆர் எ ப்ரேவ் கேர்ள்” என்றான் அவளை சமாதானப்படுத்தும் நோக்கோடு.
அவன் அம்மாவின் செல்லமில்லை, அம்மா தான் அவனிற்கு செல்லம்.
“எஸ், ஐ அம்” என்று சொன்ன போதும் அவளின் பார்வை மாறவில்லை.
“மா” என்று சலித்தவன் பின்பு விட்டு விட்டான். ஆனால் கையை இன்னும் அழுத்தமாய் பற்றிக் கொண்டான்.
வெகு சில நேரங்களில் இப்படி மனதளவில் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு விடுவாள் நிலா.
இவர்களின் வீட்டின் கேட் திறந்திருந்தது.
இவர்களதும் பெரிய வீடு, கீழேயே சமையல் கூடம், உணவறை, பூஜை அறை, படிக்கும் அறை, பெரிய கூடம், மூன்று படுக்கை அறை என்று விஸ்தாரமாக இருந்தது. திண்ணைக்கு பக்கத்தில் வெளியே நிறைய இடம், பக்கவாட்டில் ஒரு அறை என்று இருக்கும்.
மேலேயும் சில அறைகள் என. இன்னொரு வார்த்தையில் இதுவும் வீடல்ல பங்களா.
இவர்கள் நால்வரையும் எதிர் ஜமீன் அரண்மனையின் பிரமாண்ட வெளி கேட் திறந்திருக்க, அதில் வராண்டாவில் ஆளும் கட்சி அமைச்சர் மட்டுமல்லாது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கேசவ நாராயணன் அமர்ந்திருந்தார். அவரின் அருகில் கை கட்டி பவ்யமாய் நின்று கொண்டிருந்தவன் பார்வை இவர்களை தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்தது.
அவன் தமிழ்செல்வன்….
அவனும் அந்தக் குடும்பம் தான். குடும்பத் தலைவன் என்று ரேஷன் கார்டில் இருப்பவன். மனது முழுக்க பொறாமையோடு தன் மனைவியையும் மக்களையும் பார்த்திருந்தான். அது அவர்களின் உலகம்.
இவன் சென்றால் அடுத்த நொடி நிலா அங்கிருந்து சென்று விடுவாள். அதன் பின்னர் பிள்ளைகள் இருப்பர். ஆனால் ஸ்ராவணி சில நிமிடங்களில் அம்மாவைத் தேடி ஓடி விடுவாள். அவள் செல்வதும் இல்லாமல் “அண்ணா இங்க வா” என்று அண்ணன்களையும் அழைத்துக் கொள்வாள்.
அவளாய் அழைக்கிறாளா இல்லை நிலா சொல்லி அழைக்கிறாளா, அவனுக்குத் தெரியாது, மகளிடம் கேட்டதும் இல்லை, கேட்டால் சொல்லிவிடுவாள் ஆனால் கேட்க மாட்டான். அவனுக்கும் நிலாவிற்கும் இடையில் மக்களை என்றுமே இழுக்க மாட்டான். நிலா இழுப்பாளா இல்லையா அவனுக்குத் தெரியாது.
மக்கள் அன்பான மக்கள், அப்பாவிடம் மிகுந்த மரியாதையுடன் நடக்கும் மக்கள். ஆனால் அது அப்பா மக்கள் உறவள்ளவே, அவர்களுக்கு எதற்கும் அம்மா வேண்டும்.
இதோ இப்போது பொறாமையோடு பார்க்கும் கண்கள் பலமுறை ஏக்கத்தோடு பார்க்கும், ஆனால் யாரும் அறியாமல்.
இவ்வளவு மனதிற்குள் ஓடினாலும் கேசவநாராயணின் வார்த்தைகளுக்கும் செவி சாய்த்து இருந்தவன், “சரிங்க அய்யா, சரிங்க அய்யா” என்று பதிலளித்துக் கொண்டிருந்தான்.
“ஆட்சி முடிய இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு, இப்போயிருந்தே நம்ம தொகுதி முழுக்க ரவுண்டு அடிக்க ஆரம்பிச்சிடணும், என்ன குறைன்னு கேட்டு நம்மால சரி செய்ய முடிஞ்சதை உடனே சரி செஞ்சிடணும்”
“நாளையிலிருந்து நீ அங்கங்க போ, பின்ன எங்க நான் தேவையோ அங்க என்னைக் கூட்டிட்டுப் போ, வட்டம் மாவட்டம் வார்டு கவுன்சிலர் ன்னு எவனுக்கும் சொல்ல வேண்டாம், சொல்லாம போய் நில்லு”
“சரிங்க அய்யா”
“கிளம்புமுன்ன பணம் பீரோல இருக்கும் எடுத்துட்டுப் போ”
“ஆகட்டும்ங்க அய்யா”
அவர் பேசி முடித்து விட்டார் என்று தெரிந்ததும்,
“நான் கிளம்பட்டுமுங்களா?”
“உன்ற அக்கா கிட்ட சொல்லிட்டுப் போடா, பின்ன என்னை குடைவா”
“ம்ம், சரிங்க” என்றவன் வீட்டிற்குள் நுழைந்தான்.
டைனிங் ஹால் செல்ல அங்கே அக்காவின் மக்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். பெரியவள் வாசவி இருபத்தி மூன்று வயது, இப்போது தான் கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். சிறியவன் ராஜ நாராயணன், இருபது வயது, கோவையில் உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் இருந்தான். அப்பாவைப் போல அரசியலில் ஆர்வம் அதிகம்.