அத்தியாயம் 6

தனது அறைக்குச் சென்று படுத்தவளிடம் வந்த மங்கை, “சாப்பிட்டுப் படு வஞ்சி” என்றாள்.

“பசியில்லைக்கா! சாரி என்னால நீயும் திட்டு வாங்குறல!” என்றவாறு வஞ்சி எழுந்து அமர,

“என்னால என் காதல்னால தானே அம்மா உன்னை இந்த கல்யாணத்துக்கு வற்புறுத்துறாங்க. நான் தான் சாரி சொல்லனும். என்னால் தானே உன் கல்யாணமும் டிலே ஆகி இப்படி இரண்டாம் தாரமா கட்டி வைக்க கேட்குற அளவுக்கு வந்துடுச்சு. நானும் சுயநலக்காரி தான் வஞ்சி” வருத்தத்துடன் உரைத்தாள் மங்கை.

“ம்ப்ச் ஏன்க்கா இப்படி பேசுற! நீ காதலிச்சவனைக் கட்டிக்கனும்னு பிடிவாதமா இருக்கிறதுல என்ன தப்பிருக்கு! இந்த தம்பி பையன் ஒரு வேலைக்குப் போய் சம்பளம் வாங்கின பிறகு என் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சா போதும்னு தான் நான் நினைச்சேன். ஆனா இப்படி வேலை கிடைக்காம திண்டாடுவான்னு நினைக்கலை. அதுக்கு என் வாழ்க்கையையே அடமானம் வைக்கிற அளவுக்கு போவான்னு நினைக்கலை. அவனை எவ்ளோ செல்லமா வேண்டியதுலாம் முடிஞ்ச வரை செஞ்சி கொடுத்து வளர்த்தோம். மனசு ரணமா வலிக்குதுக்கா! அவனுக்கு மட்டும் ஏன் நம்ம மேல பாசமில்லாம போச்சு” என்று கேட்டாள் வஞ்சி.

“சுயநலமாக யோசிக்கிறவங்களுக்கு அன்புலாம் இரண்டாம் பட்சம் தான் வஞ்சி” என்றாள் மங்கை.

“நாம இரண்டு பேரும் வேற எங்கேயாவது போய்டுவோமாக்கா. இவங்க பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா எங்கயாவது போய் இருக்கனும்னு போல இருக்குக்கா!” சோகமாக வஞ்சி உரைக்க,

தங்கையின் தலையைக் கோதிய மங்கை, “சீக்கிரம் விடிவு காலம் வரும் வஞ்சி. தனியா போய்ட்டா பிரச்சனை இருக்காதுனு நினைக்கிறியா? இது இல்லனா வேற பிரச்சனை வந்து நிற்கும். எப்பவும் பிரச்சனை கண்டு ஓடக் கூடாது. எதிர்த்து நின்னு சரி‌ செய்ய தான் பார்க்கனும். நான் அப்படி நிக்கிறனால தான் கண்ணனைத் தான் கட்டிப்பேன்னு பிடிவாதமா என் நிலைல இருக்கேன்‌” என்றாள்.

“நீ ஜானுக்கிட்ட பேசினியா என்ன? அவளை மாதிரியே அட்வைஸ் பண்ற!” என்று சிரித்த வஞ்சி,

“ஆமா கண்ணன் மாமா என்ன சொல்றாங்க?” என்று கேட்டாள்.

“தங்கச்சிக்குக் கல்யாணம் செஞ்சிட்டு நீ யாரை வேணாலும் கல்யாணம் செஞ்சிக்கோனு அவங்க வீட்டுல இப்ப தான் இறங்கி வந்திருக்காங்களாம்” என்றாள் மங்கை.

“சூப்பர் அக்கா! எத்தனை வருஷ பிடிவாதம். இவ்ளோவாவது இறங்கி வந்திருக்காங்களே! இப்ப அவங்க தங்கச்சிக்கு மாப்பிள்ளை ஃபிக்ஸ் ஆகிட்டா உன் லைன் கிளியர்! சோ ஹேப்பி ஃபார் யூ அக்கா” என்று அணைத்துக் கொண்டாள் இளவஞ்சி.

“உனக்கும் நல்ல மாப்பிள்ளை கிடைச்சிட்டா என் மனசு நிம்மதி ஆகிடும் வஞ்சி. என் அளவுக்கு சூதனமாலாம் உனக்கு இருக்கத் தெரியாதே! யாரும் கட்டிக்கிட்டுப் போய் உன்னைக் கஷ்டப்படுத்திடக் கூடாதேனு தான் பயமா இருக்கு எனக்கு!” என்று கவலையாய் மங்கை கூற,

“அக்கா நான் காலேஜ் பிரபோசர் ஆக்கும். அதெல்லாம் எல்லா சூதனமும் எனக்கு உண்டு” என்று இல்லாத காலரை இழுத்தவாறு கூறிய இளவஞ்சியைப் பார்த்துச் சிரித்தவளாய்,

“அதான் உன் சூதனத்தை பார்த்தேனே! ஒழுங்கா வந்தவன்கிட்ட எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லைனு சொல்லாம அவன் மனசு கஷ்டப்படும்னு டைம் கேட்டுட்டு வந்திருக்கியே! ரொம்ப சூதனம் தான்” என்று கேலிச் செய்தாள் மங்கை.

“அக்கா” என்று சிணுங்கியவளாய் அவள் மடியில் படுத்துக் கொண்டாள் இளவஞ்சி.

சிரித்தவாறு தங்கையின் தலையைக் கோதியவாறு சாய்ந்தமர்ந்தாள் மங்கை.

******

உறக்கம் வராமல் தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான் சக்தி.

வஞ்சியை எவரிடமும் தன்னால் விட்டுக் கொடுக்க முடியாது என்று இன்றைய அவர்களின் சண்டையில் கண்டு கொண்ட சக்திக்கு தன்னையே நம்ப முடியவில்லை.

யாரென்றே தெரியாத பெண்ணிற்காக தனது மனம் ஏன் இத்தனை தவிக்கிறது என்ற குழப்பத்திலேயே உழன்றவன் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்தப்பின் தான் ஆசுவாசமானான்.

அவனருளால் தான் எடுத்திருக்கும் இம்முடிவு தனது வாழ்வில் நிகழ்த்தப்போகும் மாயங்களை அறியாதவனாய் உறங்கிப் போனான் சக்தீஸ்வரன்.

********

பூக்களால் சூழப்பட்ட வனம் அது!

தடாகத்தில் அன்னப்பறவைகள் நீந்தியவாறு விளையாடிக் கொண்டிருக்க, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அதனை ரசித்துப் பார்த்திருந்தவளின் கண்களில் பிரதானமாய் ஏக்கமும் வலியும்!

திடீரென ஓர் ஆடவனின் கைகள் அவளின் கண்களைப் பின்னின்று மறைக்க, தன்னவனின் வாசத்தைச் சுவாசத்துள் இழுத்தவளுக்கு கண்ணீர் பெருகியது.

தனது கைகளில் உணர்ந்த கண்ணீரின் ஸ்பரிசத்தில் பதறியவனாய், “ஏனிந்த கண்ணீர் தேவி?” என்று கேட்டவாறு அவளருகில் வந்தமர்ந்தான்.

“என்னை வந்து சேர ஏன்‌ இத்தனை தாமதம் சுவாமி” கண்களில் நீருடன் கேட்டவளின் கரத்தினைப் பற்றியவன், “இனி ஒரு போதும் தங்களைப் பிரியேன் தேவி” அவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் உரைத்தான்.

நெற்றியில் மூன்று பட்டையும் அதன் நடுவே குங்குமமுமாய் தெய்வீகக்களையுடன் அருகில் அமர்ந்தவனைக் கண்களுக்குள் பொத்தி வைப்பவள் போல் காதலுடன் பார்த்திருந்தாள் அவள்.

“அதிரூபசுந்தரி தாங்கள்” மூன்று கல் மூக்குத்தியுடன் பேரழகியாய் அமர்ந்திருந்தவளைக் கண்டு மயங்கியவனாய் அவன் உரைக்க, நாணத்தில் முகத்தைத் தாழ்த்தினாள்‌‌ அவள்.

மசமசவென மங்கலாய் இந்தக் காட்சி மறைய, கண் விழித்தாள் இளவஞ்சி‌.

உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த வஞ்சிக்கு ஏகத்துக்கும் குழப்பம்!

“ஏன் இந்த எதிர்வீட்டு ஆளுக்கிட்ட நாம மயங்கி நிற்கிற மாதிரி கனவு வருது? இதே மாதிரியான நெற்றிப்பட்டையை தானே நேத்து கோவில்ல பார்த்தோம். இந்தக் கனவுக்கு அர்த்தம் தான் என்ன?” குழம்பிய நிலையிலேயே கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் இளவஞ்சி.

******

“ஓம் நம சிவாய சிவாய நம ஓம்”

கணீர் குரலில் சத்தமாய் ஆழ்மன பக்தியுடன் கூறியவாறு கோவிலின் பிரகாரத்தை சக்தீஸ்வரன் சுற்றிக் கொண்டிருக்க,

வெளியே கோவிலினருகே இருக்கும் தங்களது பூக்கடையில் நின்றிருந்த இளவஞ்சியின் கால்கள் தாமாக கோவிலை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்தது.

அவன் குரலைக் கேட்ட நொடியிலிருந்து பரவசத்தில் துள்ளிக் குதித்த அவளின் மனது, ‘உள்ளே செல்! உள்ளே செல்’ என்று அவளை உந்தித் தள்ள, தன்னையும் மீறி கோவிலை நோக்கி காலடி எடுத்து வைத்துச் சென்றவளை,

“வஞ்சி! எங்கடி போற? காலேஜூக்கு டைம் ஆகலையா?” என்ற அவளது தாயின் குரல் தடுத்து நிறுத்தியது.

“ஹான் போகனும்மா!” என்றவள் கோவிலை நோக்கிச் செல்ல,

“என்னடி கோவில் பக்கமே போகாதவ நேத்துலருந்து கோவிலுக்கு போய்ட்டு இருக்க” என்று கேட்டார்.

அவரின் கேள்விகளை எல்லாம் காதினில் வாங்காதவளாய் கோவிலின் உள்ளே சென்றவளின் செவிகளைத் தீண்டிய சக்தியின் சத்தமான ஓம் நமசிவாய ஒலியே அவளை அவனருகில் கொண்டு சென்று நிறுத்தியது.

கருவறையில் லிங்கத்தின் முன்பு அவன் கண்களை மூடியவாறு நின்றிருக்க, அவனைப் பார்த்தவாறு எதிரே நின்றிருந்தாள் இளவஞ்சி.

இப்பொழுது அவனின் நெற்றியில் மெலிதாய் திருநீறு பட்டை இருக்க, ‘ஏன் இவர் நேத்து மாதிரி மூனு பட்டை வைக்கலை. அப்படி வச்சப்ப அவர் முகத்துல இருந்த அந்த தெய்வீக அழகு இப்ப இல்லயே’ தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டவளாய் நின்றிருந்தவளைக் கண் விழித்து பார்த்தவனுக்குள் பரவசம்! இன்பமாய் அதிர்ந்தான்.

அவனின் பார்வை அவளின் விழி நுழைந்து உள்ளத்தைத் தாக்கவும் தான் தன்நிலைக்கு வந்தவள், ‘அய்யோ இவரைப் பார்த்தாலே இவர் குரலைக் கேட்டாலே மெஸ்மரைஸ் ஆகி இவரைப் பார்க்க ஆரம்பிச்சிடுறேனே! என் கொள்கையை டெஸ்ட் செய்றதுக்காகவே கடவுள் இவரை அனுப்பிருப்பாரோ’ எண்ணியவளாய் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்‌.

‘அச்சோ டைம் ஆகிடுச்சு’ என்று அவசர அவசரமாக வெளியே வர, அவளின் பின்னேயே வந்த சக்தீஸ்வரன், “வஞ்சி” என்று சத்தமாக அழைத்து அவளின் நடையை நிறுத்தினான்.

‘தன்னையா அழைத்தார்’ உள்ளம் பூரிப்பில் நடுங்க கேள்வியுடன் அவனை அவள் திரும்பிப் பார்க்க, அவளருகில் வந்தவன் “இந்தாங்க” என்று ஒரு பார்சலை தனது தோள் பையினில் இருந்து எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

என்னவெனப் புரியாது விழித்தவளாய் அதனை வாங்க அவள் தயங்க, “அட வாங்கிக்கோங்க வஞ்சி!” என்று அவளின் கையினில் திணித்திருந்தான் சக்தீஸ்வரன்.

‘நேத்து போட்ட சண்டைக்கு இவங்க என்ன இன்னிக்கு கிஃப்ட் கொடுத்துட்டு இருக்காங்க’ சிந்தித்தவளாய் நின்றிருக்க,

“உங்களுக்கு வேலைக்கு நேரமாகலையா?” மேலும் அவளை யோசிக்க விடாதவாறு அங்கிருந்து செல்ல வைத்தான்.

அந்த பார்சலை தனது பையினுள் வைத்தவளாய் கல்லூரி பேருந்தில் ஏற பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினாள் இளவஞ்சி. மென்னகையுடன் செல்பவளைக் காதலாய் பார்த்திருந்தான் சக்தீஸ்வரன்.

இருவரின் வாழ்விலும் தனது திருவிளையாடலைத் தொடங்கியிருந்தார் எம்பெருமான் ஈசன்.