தாயிடமிருந்து தேநீர் கோப்பையை வாங்கிவிட்டு மன அமைதியைத் தேடி மாடியிலிருக்கும் தனது அறைக்கு வந்த சக்தீஸ்வரன், தனது அறையில் அமைக்கப்பட்டிருந்த ஹோம் தியேட்டரில் பாடலை ஓட விட்டான்.
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
எண்பதுகளின் பாடல்கள் அவனது காதினில் இன்ப தேன் பாயச்செய்ய,
மாடியிலிருக்கும் தனது அறையின் பால்கனியில் வந்து அமர்ந்தான் சக்தீஸ்வரன்.
சொந்தமாகக் கட்டிய வீட்டில் இப்பொழுது தான் முதன் முறையாக அந்த ஹோம் தியேட்டரை இயக்கி கேட்டவாறு இப்படி பால்கனியிலிருக்கும் ஊஞ்சலில் அமர்கிறான்.
அவனின் தந்தை நல்லசிவமே வீட்டின் கட்டுமான பணிகள் அனைத்தையும் மேற்பார்வை பார்த்திருக்க, இவன் தனது அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்தான். வீட்டின் வேலைகள் முடிந்து கிரகப்பிரவேசத்தின் அன்று தான் வீட்டை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்தான்.
அதன் பிறகு கடந்த பத்து நாட்களாய் தொடர்ந்த வேலையினால் நள்ளிரவு வந்து விட்டு விடியற்காலையில் பணிக்குச் சென்றிடுவான். ஆக இன்று தான் அந்த இடத்தினில் இளைப்பாறும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தது அவனுக்கு.
மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா
கண்களை மூடியவாறு தேநீர் அருந்திக் கொண்டு பாடல்களைக் கேட்டு ரசித்து கொண்டிருந்தவனுக்கு அடுத்து தொடர்ந்த இப்பாடலின் வரிகளில் தானாய் அவனின் மனம் அந்த மூக்குத்திப் பெண் மீது தாவியது.
‘என்ன ஒரு அழகான முகம்ல அந்த பொண்ணுக்கு! அந்த மூக்குத்தி அதை விட அழகு’
தனது சிந்தைப் போகும் திசையை எண்ணி திடுக்கிட்டவனாய் பட்டெனக் கண்களைத் திறந்து நிமிர்ந்து அமர அந்த ஒற்றை ஊஞ்சல் ஆடி அசைந்தது.
ஆடிய ஊஞ்சலில் அமர்ந்திருந்தவனின் பார்வை ஏதேச்சையாக வெளியே செல்ல, எதிர் வீட்டுத் தோட்டத்தில் நாற்காலிப் போட்டவாறு வந்து அமர்ந்தவளை இன்ப அதிர்ச்சியுடன் பார்த்தான் சக்தீஸ்வரன்.
‘கடவுளே இந்தப் பொண்ணு எப்படி இங்க?’ இன்னுமே அவனின் கண்களை அவனால் நம்ப முடியவில்லை.
ஊஞ்சலில் இருந்து எழுந்து பால்கனியின் கைப்பிடிச்சுவரைப் பிடித்தவாறு எட்டிப் பார்த்தான். அவன் இதயம் இரு மடங்காய் துடித்துக் கொண்டிருந்தது.
தான் நினைத்த மாத்திரத்தில் எதிரில் வந்து நிற்பது போல் அல்லவா வந்து அமர்ந்திருக்கிறாள்.
‘எம்பெருமானே இதென்ன அதிசயம்’ என்று தான் எண்ணத் தோன்றியது அவனுக்கு.
கண்கள் மின்ன இதழில் குறுநகை தானாக வந்து ஒட்டிக் கொண்டது.
அவளைக் கண்ட உற்சாகத்தில் நெஞ்சில் இருந்த ஒருவிதமான இறுக்கம் தானாக தளர்வதை நன்றாகவே உணர்ந்தான்.
‘இந்தப் பொண்ணு அந்த மாப்பிள்ளைக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்குமா?’
தன்னவளை வேறொருவனுக்குத் தாரை வார்க்கும் உணர்வு எழுந்து உள்ளத்தை உளியால் குத்திய வலி வந்து போனது அவனுக்கு.
தனது உணர்வுகளை இன்ப அதிர்வுடன் அவதானித்திருந்தான் சக்தீஸ்வரன்.
*****
தோட்டத்தில் அமர்ந்திருந்தவளிடம் வந்த அவளின் தாய் வசந்தா, “மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ? அந்த பையனுக்கு என்ன குறைச்சல்? பார்க்க வயசு கூட அதிகமா தெரியலை. எதுக்கு இப்ப ஒரு வாரம் டைம் கேட்ட நீ?” கடுகடுவென அவர் கேட்க,
“எனக்குத் தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொன்னேனே! காதுல வாங்கினியா நீ!” முறைத்தவாறு உரைத்தாள் இளவஞ்சி.
யார் காதில் விழ வேண்டுமோ அவன் காதில் அவளின் இந்த வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.
‘ஹப்பாடா அவளுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லையாம்’ மாடியில் நின்றவாறு கேட்டிருந்தவனின் மனது ஆசுவாசம் கொள்ள, ‘டேய் என்னடா நடக்குது இங்க’ தன்னைத் தானே கேட்டுக் கொண்டவனாய் ஊஞ்சலில் அமர்ந்து விட்டான் சக்தீஸ்வரன்.
“நேர்ல வந்து பரிவா பேசுறவங்க மூஞ்சுல அடிச்சா மாதிரி சொல்ல மனசு வராம தான் ஒரு வாரம் டைம் கேட்டேன். இப்ப கேட்டுக்கோ நீ எவ்ளோ நாள் கழிச்சி கேட்டாலும் எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லைனு தான் சொல்லுவேன்” அடக்கப்பட்ட அழுகையுடன் கரகரத்த குரலில் சத்தமாக உரைத்தாள் இளவஞ்சி.
“ஏன்க்கா இதனால எனக்கு ஒரு நல்லது நடக்குதுனா கூட நீ ஒத்துக்க மாட்டியா? நாம என்ன நாளும் கிழமையும் பணத்துலயே புரண்டுட்டு இருக்கோம்னு நினைப்பா உனக்கு? பணத்தோட ஒருத்தர் கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு கேட்கும் போது செஞ்சிக்கிறது தான்க்கா புத்திசாலித்தனம். நான்லாம் சம்பாதிச்சு உனக்குக் கல்யாணம் செஞ்சி வைப்பேன்னு நினைக்காத” தன் பங்கிற்கு அவளின் தம்பி பேசிக் கொண்டே போக,
கண்ணீர் பொங்கி இவளுள்ளம் கொதித்துக் கொண்டு வந்தது.
“என்னடா ஓவரா பேசிட்டு இருக்க? நான் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. பணம் தான் முக்கியம் உனக்கு! நீ எனக்குக் கல்யாணம் செஞ்சி வைப்பனு நான் ஒன்னும் இங்கே காத்துக் கிடக்கலை. சொந்த முயற்சியில முன்னேற வக்கில்லாம அக்கா வாழ்க்கையைப் பணயம் வச்சி வாழனும்னு நினைக்கிற நீ எல்லாம் என்னடா மனுசன்?” கோபமாய் பேசியவளை நோக்கி,
“ஏய்” என்ற அரட்டலுடன் அவளின் தம்பி திருச்செல்வம் கையை ஓங்கிக் கொண்டு அவளை அறைய முற்பட,
டமால் என்ற சத்தத்தில் அனைவரின் பார்வையும் எதிர் வீட்டு மாடியில் போய் நின்றது.
இளவஞ்சி அழுகையுடன் பேச ஆரம்பித்த பொழுதே மனம் கலங்கி போனது சக்திக்கு. இதில் அவளின் உடன் பிறந்தவனும் சுயநலமாக பேசியது இவனின் முஷ்டியை இறுகச்செய்ய, இதற்கு மேல் நின்றிருந்தால் எங்கே தானே சென்று அவனை அறைந்து விடுவோமோ என்று பயந்தவனாய் உள்ளே செல்லலாம் என எண்ணிய நேரம் திருச்செல்வம் கையை ஓங்கி இருந்தான்.
அவனின் செயலைத் தடுக்கும் பொருட்டு அதீத கோபத்தில் பால்கனியில் இருந்த பூந்தொட்டியைக் கீழே போட்டிருந்தான் சக்தீஸ்வரன். டமால் என்ற சத்தத்துடன் அது விழவும் அனைவரின் பார்வையும் அங்கே திரும்பியது.
நெற்றியில் பட்டை இல்லாமல் அவன் காட்சி கொடுக்க, முதலில் யாரிவன் என எண்ணியவாறு பார்த்தவளுக்கு சிறிது நேரத்தில் ‘இவர் அந்த சிவன் கோவில்ல பாடினவர் தானே’ என்ற நினைவு வந்தது.
இப்பொழுதும் இத்தனை கலவரத்திலும், ‘இவரை முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேன்’ என்றே அவளின் மனம் கூவியது.
“இது வரைக்கும் நீங்க போட்ட சண்டைலாம் வீடியோ எடுத்துட்டேன்” என்று தனது கைபேசியை அவர்களிடம் காண்பித்த சக்தி,
“என்னங்க தம்பி ஆம்பளைங்கிற திமிருல திரியுறீங்களோ! இதுக்கு மேலேயும் சண்டை போட்டீங்கனா நாளைக்கு யூடியூப்ல பப்ளிக்கா பெண்ணை அடிக்க கை ஓங்கிய ஆண்மகன்னு வைரல் ஆக்கி சொல்வதெல்லாம் உண்மை ஷோல உங்க குடும்ப மொத்தத்தையும் உட்கார வச்சிடுவேன். இதுக்கு மேல உங்க வீட்டுல குண்டூசி விழுற சத்தம் கூட என் காதுக்குக் கேட்க கூடாது” என்று எச்சரித்தவனாய் உள்ளே சென்றான்.
‘எவன்டா இவன் நம்ம குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்கிறேன்னு சொல்றவன்’ வசந்தா மகனின் காதில் கேட்க, “பணம் இருக்கிற திமிர்ல பேசுறான் அவன்” என பல்லைக் கடித்த திருச்செல்வம் உள்ளே சென்றான்.
அந்நேரம் பூக்கடை வேலையை முடித்தவளாய் வீட்டின் கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் இளவஞ்சியின் அக்கா மங்கை.
“என்னடா அந்த ஆளு கூட சண்டை? நம்ம வீட்டை பார்த்து ஏதோ சொல்லிட்டு இருந்தாரு?” என்று கேட்க, வசந்தா நடந்ததை உரைத்தாள்.
“ஏன்மா அவளுக்கு பிடிக்கலைனா விட வேண்டியது தானே! எதுக்கு கம்பெல் செய்றீங்க?” இளவஞ்சிக்காக பரிந்துக் கொண்டு மங்கை கேட்க,
“ஏன்டி நீயும் கல்யாணம் செய்ய மாட்ட! உன் தங்கச்சிக்கு வர்றவனையும் வேண்டாம்னு சொல்ற! என்ன தான் நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? காலம் முழுக்க என் காலடில கிடந்து உசுர வாங்கலாம்னு நினைக்கிறீங்களா அக்காவும் தங்கச்சியும். பொட்ட பிள்ளைங்க காலம் தாண்டியும் கல்யாணம் ஆகாம வீட்டுல இருந்தா கிடைச்சவனுக்கு கட்டி வைக்க தான் பார்ப்பாங்க. இனியும் உங்க சம்மதத்தைலாம் கேட்டுட்டுக் கிடப்பேன்னு நினைக்காதீங்க. இந்தப் பையன் தான் உனக்கு மாப்பிள்ளை வஞ்சி. என் பொண்ணு சம்மதம் சொல்லிட்டானு நாளைக்கே நான் போய் பேசுறேன் அவர்கிட்ட!” ஆத்திரமாக அவர் பேசிக் கொண்டே போக மீண்டுமாய் ஒரு பூந்தொட்டி வசந்தாவின் காலருகே வந்து விழுந்தது.