“அறிவிருக்கா உனக்கு? அந்த பொண்ணு பாதுகாப்பா நீ எங்கேயாவது கூட்டிட்டு போவனு உன்னை நம்பி வந்தா.. என்ன செஞ்சி வச்சிருக்க நீ?” ஜானகியின் கணவன் ராஜாராமன் அவளைப் பொரிந்தவாறு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
இளவஞ்சியை அவளின் தாய் வசந்தா கோவிலில் இருந்து அழைத்துச் சென்றதும் சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தான் ராஜாராமன்.
மனைவியின் முக வாட்டத்தைக் கண்டு அவன் வினவியிருக்க, நடந்த நிகழ்வுகளை அவனிடம் பகிர்ந்தவாறு பயணித்தவளைத் தான் இவ்வாறு கடிந்து கொண்டிருக்கிறான் ராஜாராமன்.
“இல்ல ராஜா! அவ கோவிலுக்குப் போக மாட்டானு எல்லாருக்கும் தெரியும். அதனால அவளை கோவில்ல வந்து தேட மாட்டாங்கனு நினைச்சேன். அதுவுமில்லாம அந்த சிவபெருமான் நமக்கு எவ்ளோ நல்லது செஞ்சிருக்காரு. இவளுக்கு ஏன் இந்த வைராக்கியம்? அவரை கேட்டா செய்ய மாட்டாரான்ற ஆதங்கத்துல எப்படியாவது இவளை அவர்கிட்ட கொண்டு போய் சேர்த்துடனும்னு தான் கூட்டிட்டு வந்தேன். ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலை. மனசே சரியில்லைங்க” என்று கலங்கியவாறு உரைத்தாள்.
“சரி இன்னிக்கு என்ன நடக்குதுனு பார்ப்போம். நம்மளால எந்த வகையிலயாவது அந்தப் பொண்ணுக்கு உதவ முடியும்னா செய்வோம்” என்று மனைவிக்கு ஆறுதல் உரைத்தான் ராஜாராமன்.
*****
அழுது சிவந்த கண்களுடன் கலங்கியவாறு தனது தாயுடன் செல்லும் இளவஞ்சியை பார்த்த சக்திக்கு ஏனோ மனதுக்குச் சரியாக தோன்றவில்லை.
வசந்தா இளவஞ்சியிடம் பேசியதை கேட்டிருந்தானே! அவளின் விருப்பமில்லாமல் பெண் பார்க்கும் ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள் என்பது வரை புரிந்தது அவனுக்கு. ஆயினும் முதன் முதலாக பார்த்த பெண்ணிடமும் அவளின் தாயாரிடமும் இவன் என்னவென்று பேச முடியும்.
ஏன் தனக்கு இந்த பெண்ணின் கவலை முகம் இத்தனையாய் வேதனை அளிக்கிறது என்று தான் புரியவில்லை அவனுக்கு.
இதனை யோசித்தவாறு தனது வீட்டின் முகப்பறையில் அமர்ந்திருந்த சக்தியை நோக்கி வந்த அவனின் தாய் மகேஸ்வரி,
“என்னப்பா சத்தம் காட்டாம வந்து உட்கார்ந்திருக்க? இன்னிக்குச் சீக்கிரமே கோவிலுக்குப் போய்ட்டியாமே! அப்பா இப்ப தான் போன் செஞ்சி சொன்னாங்க. கம்பெனி அடைக்கிற நேரத்துக்கு அங்கே போகாம வீட்டுக்கு வேற வந்திருக்க! என்னாச்சுப்பா?” மகனை அறிந்த தாயாய் அவனருகில் அமர்ந்தவாறு கேட்டார்.
“ஏற்கனவே காரணமே இல்லாம மனசு சரியில்லைனு தான் அப்பாவை கம்பெனிய பார்த்துக்கச் சொல்லிட்டு மேனேஜர்கிட்டயும் சொல்லிட்டு கோவிலுக்குப் போனேன்மா. ஆனா அங்கே அமைதிக்குப் பதிலா குழப்பம் தான் அதிகமாச்சு. அதான் வீட்டுக்கு வந்துட்டேன்” என்றான்.
“அது நீ வேலை வேலைன்னு ரெஸ்ட் எடுக்காம சுத்தினதுனால அப்படி ஆகிருக்கும். சொந்த வீடு கட்டி வந்து பத்து நாள் ஆகுது. ஒரு நாள் முழுக்க இந்த வீட்டுல இருந்திருக்கியா நீ? விடியறதுக்கு முன்னாடி வீட்டுல இருந்து கிளம்புறவன் நடுராத்திரி தான் வர்றது. அப்புறம் அப்படி தான் இருக்கும். நல்லா ரெஸ்ட் எடுத்து தூங்கி எழுந்தா சரியாகிடும்” என்றவராய் அடுக்களைக்குள் சென்றார்.
“நான் ஏற்கனவே சொல்லிருந்தேன்லமா, ஒரு பெரிய ஜவுளி கடைக்கு ஸ்டாப் (staff) யுனிபார்ம் (uniform) ஸ்டிச் செய்ற ஆர்டர் நம்ம கார்மெண்ட்ஸ்க்கு வந்துச்சுனு. அது செய்ய தான் இவ்வளோ நாள் ஆகிப் போச்சு. இன்னிக்கு அந்த ஆர்டர் டெலிவரி செஞ்சிட்டு உட்காரும் போது, இவ்வளோ நாள் நைட்டும் பகலுமா செஞ்ச வேலைக்கு மனசு எவ்ளோ ரிலாக்ஸ்ஸா சந்தோஷமா ஃபீல் ஆகிருக்கனும். ஆனா அதுக்கு ஆப்போசிட்டா மனசு முழுக்க கவலை. என்னமோ சரியில்லைனே தோணிட்டு இருந்துச்சு. அதான் கோவிலுக்கு போகலாம்னு அப்பாகிட்ட சொல்லிட்டு போனேன். ஆனா அங்கே போய்ட்டு வந்த பிறகு இன்னும் அதிகமா தான் கவலையா இருக்கு. நீ சொன்ன மாதிரி தூங்கி எழுந்திரிச்சா சரியாகிடுமோ என்னவோ”
மனதின் உணர்வுகளை தாயிடம் அவன் பகிர்ந்து கொண்டிருக்க, அவன் கூறியதைக் கேட்டவாறே தேநீர் தயாரித்து அவன் கையில் கொடுத்தார் மகேஸ்வரி.
*****
இளவஞ்சியின் வீட்டில் மாப்பிள்ளை வீட்டினர் சூழ்ந்திருக்க, அவர்கள் முன் பட்டு புடவை உடுத்தி குனிந்த தலையுடன் நின்றிருந்தாள் இளவஞ்சி.
இளவஞ்சியின் தாய் வசந்தாவின் தற்கொலை பேச்சில் பயந்து தான் இவ்வாறு அலங்கரித்துக் கொண்டு நிற்கிறாள் இளவஞ்சி.
தனது வாழ்க்கைக்கு இந்த மாப்பிள்ளை மூலம் கிடைக்கப்பெறும் நன்மை கருதி அக்காளை எவ்வாறேனும் மணம் முடித்து வைத்துவிட வேண்டுமென்ற தீவிர சிந்தனையில் நின்றிருந்தான் தம்பி திருச்செல்வம்.
மாப்பிள்ளையாக வந்திருந்த மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது என்று கூறினால் நம்ப முடியாத அளவுக்கு இளவட்ட ஆண் மகனாய் இருந்தான்.
முப்பத்தைந்து வயதில் நரைத்த மீசையுடன் அல்லது சொட்டை தலையும் தொந்தியுமாய் ஒருவனை எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு இவனைப் பார்த்ததும் பரம திருப்தி. இந்தச் சம்பந்தத்தை தவற விட்டுடக் கூடாதென உறுதியாக இருந்தனர் அன்னை வசந்தாவும் தம்பி திருச்செல்வமும்.
இவள் குனிந்த தலையை நிமிர்த்தி பார்த்தால் தானே அவனைக் காண முடியும். தலையைத் தாழ்த்தியவாறு பூமியைப் பார்வையால் ஓட்டைப் போட்டுக் கொண்டிருந்தவளை கலைத்தது அவனின் குரல்.
“பொண்ணுக்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்” என்றான் மணிகண்டன்.
‘அதெல்லாம் எதற்கு?’ என்கின்ற கண்டனப் பார்வையை அவனின் தாய் தந்தையர் வழங்கியிருக்க, திருதிருத்து விழித்தார் அவளின் தாய் வசந்தா.
பேசுகிறேன் என்று எங்கே தனது மகள் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறிவிடுவாளோ என்று பயந்தார்.
“நீங்க பேசுங்க அண்ணா!” என்று பெரிய மனிதனாக அவளின் தம்பி திரு கூற, முறைத்தார் வசந்தா.
அதற்குள் மணிகண்டன் பேசுவதற்கு தயாராக எழுந்து நிற்க, கண்டிப்பாக பேச அனுப்பியே ஆக வேண்டுமென்ற சூழலுக்குள் தள்ளப்பட்டார் வசந்தா.
சிறிய வரவேற்பறையும் அதனோரத்தில் சமையலறையும் அதனை ஒட்டியே இரு சிறிய படுக்கையறைகள் கொண்ட அந்த வீட்டில் அவர்களை எங்கு சென்று பேச சொல்வது என்றும் புரியவில்லை அவருக்கு.
அவளின் தம்பியே, “அக்கா கூட்டிட்டு போங்க. அந்த ரூம்ல வச்சி பேசுங்க” என்றான்.
அறைக்குள் இருவரும் நின்றிருக்க, கதவு சற்றுத் திறந்திருக்க வாசலில் நின்று கொண்டான் திருச்செல்வம்.
“உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா வஞ்சி?” எவ்வித தயக்கமும் இல்லாமல் பட்டெனக் கேட்டான் மணிகண்டன்.
நிமிர்ந்து அவனை பார்த்தாள். இல்லையெனத் தலையசைத்தவாறு அப்பொழுது தான் அவன் தோற்றத்தைக் கவனிக்கிறாள்.
‘நிஜமாவே இவருக்கு இது இரண்டாவது கல்யாணமா?’ மனதிற்குள் நினைத்ததை சற்றுச் சத்தமாக அவளையும் மீறி வாய்விட்டே கேட்டிருந்தாள் இளவஞ்சி.
அவளின் கேள்வியில் மென்னகை புரிந்தவனாய், ஆமாம் என தலையசைத்தான்.
“அம்மாவோட சொந்தத்துல தான் கல்யாணம் செஞ்சோம். ஆனா ஒத்து வரலை. இரண்டு மாசத்துலயே பிரிஞ்சிட்டோம்” என்றான்.
“நீங்க குடிப்பீங்க, உங்களுக்கு வேற லவ்லாம் இருக்குனு கேள்விப்பட்டேனே” என்று இளவஞ்சி தான் கேள்விப்பட்டதை தயக்கமின்றியே கேட்டாள்.
‘வேண்டாம்னு சொல்றவ எதுக்கு இந்த கேள்விலாம் அவரைக் கேட்கனும்?’ என்று அவளின் மனசாட்சி குட்டு வைக்க,
‘இவரை கல்யாணம் செய்யலைனாலும், கேள்விப்பட்டதை வச்சி ஆயுசுக்கும் இவரைத் தப்பானவரா நினைச்சிட்டு இருக்க கூடாதுல. பார்க்க நல்லவரா தெரியுறாரே! நல்லவரா இருந்து இவரை நான் அப்படி நினைச்சிட்டு இருந்தா தப்பு தானே’ மனசாட்சிக்கு விளக்கம் அளித்தவாறு நின்றிருந்தாள்.
நேரடியாக தன்னைப் பற்றிய புகாரை கேள்வியாய் கேட்டவளைப் புருவம் உயர்த்தி மெச்சிய பார்வை பார்த்தவன், “கண்டிப்பாக என் அப்பா அம்மா இதையெல்லாம் சொல்லிருக்க மாட்டாங்க. அதான் நான் சொல்லலாம்னு தனியா பேசனும்னு சொன்னேன்” என்றவன் மேலும் தொடர்ந்தவனாய்,
“நீங்க கேள்விப்பட்டது உண்மை தான். 21 வயசுல காதலிச்சேன். 23 வயசுல பிரேக் அப். 27 வயசுல கல்யாணம். இரண்டு மாசத்துல பிரிஞ்சி இரண்டு வருஷத்துல விவாகரத்து வாங்கியாச்சு. அதுக்குப் பிறகு தான் தண்ணியடிக்க ஆரம்பிச்சது. ஆனா இரண்டு வருஷத்துல லிமிட் செஞ்சிட்டேன்ங்க. லாஸ்ட் அஞ்சு வருஷமா எப்பவாவது கொஞ்சமா தான் டிரிங் செய்றேன். ஐடில வேலை செய்றேன். நல்ல வேலை சம்பளம் சொத்து எல்லாம் இருக்கு. என்னைப் பத்தி எல்லாம் சொல்லிட்டேன். இப்ப சொல்லுங்க உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையா?” எனக் கேட்டவாறு அவள் முகத்தைப் பார்த்தான்.
‘உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமானம்னு இவர் சொல்றதை ஏத்துக்கிடனுமா இல்ல நமக்குலாம் இதுவே பெரிசுனு அக்சப்ட் செய்யனுமா இல்ல இதெல்லாம் என் கொள்கைக்கு எதிரானதுங்கனு சொல்லி இப்பவே வேண்டாம்னு சொல்லிடலாமா?’
யோசிக்கும் பொழுதே தான் வேண்டாம் என உரைத்ததாக தாயிற்குத் தெரிந்தால் தன்னை ஒரு வழியாக்கி விடுவாள் என்கின்ற பயமும் அவளைப் பீடித்தது.
என்ன கூறவெனத் தெரியாது பலவிதமான சிந்தனையில் இருந்தவளைக் கண்டவன், “உங்களுக்கு டிசைட் செய்ய டைம் வேணும்னாலும் சொல்லுங்க. நான் ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்” என்றான்.
அவன் அவ்வாறு கூறவும், தற்சமயம் இச்சூழலில் இருந்து விடுபட இது தான் சரியான உபாயம் என எண்ணியவளாய், “ஆ.. ஆமா சார். எனக்கு ஒரு டூ டேஸ் இல்ல இல்ல ஒரு ஒன் வீக் டைம் தர்றீங்களா? யோசிச்சுட்டு சொல்றேன்” என்றாள் இளவஞ்சி.
“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு வஞ்சி. சின்ன வயசுலேயே உங்கப்பா மூலமா உங்களை பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். அப்பலாம் உங்க அப்பா கூட கார்ல போகும் போது வஞ்சி வஞ்சினு உங்களைப் பத்தி நிறைய சொல்லிருக்காரு” என்றவனை ஆச்சரிய அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் இளவஞ்சி.
‘அப்பா என்னைப் பத்தி சொன்னாரா? என்ன சொன்னாரு?’ எனக் கேட்கத் துடித்த மனத்தை அடக்கியவாறு நின்றாள் இளவஞ்சி.
இளவஞ்சியின் தந்தை வீரய்யா தற்பொழுது பெண் பார்க்க வந்திருக்கும் மணிகண்டனின் குடும்பத்திற்கு தான் கார் ஓட்டுனராய் வேலை பார்த்திருந்தார். முதலில் சில காலம் ஆட்டோ ஓட்டுனராய் இருந்தவர் இவர்களின் குடும்பத்திற்கு அன்றாடம் சவாரிக்கு செல்வார். மணிகண்டனின் தந்தை மகிழுந்து வாங்கியதும் இளவஞ்சியின் தந்தை மீதுள்ள அபிமானத்தில் அவரையே தங்களது வண்டிக்கு மாத சம்பளத்திற்கு ஓட்டுனராய் நியமித்தார்.
மீண்டுமொரு திருமணமே வேண்டாம் என்றிருந்தவன் அவரின் மூலம் வஞ்சியைப் பற்றி முன்பு தான் கேட்டறிந்த விஷயங்களினால் மட்டுமே இவளைப் பெண் பார்க்க ஒத்துக் கொண்டான்.
இளவஞ்சியின் தந்தை வீரய்யா அவர்களிடம் மகிழுந்து ஓட்ட துவங்கியதுமே இந்த வீட்டை அவருக்கு குறைவான வாடகைக்கு விட்டிருந்தார் மணிகண்டனின் தந்தை. இன்று வரை அதே வாடகைக்கு தான் அந்த வீட்டில் இளவஞ்சியின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
தனது மகனுக்கு இரண்டாம் தாரமாக வேறு பெண்ணைப் பார்ப்பதற்குப் பதிலாக நன்கு அறிந்த வஞ்சியையே கேட்கலாமென மணிகண்டனின் அன்னை தான் முடிவு செய்தார்.
இந்த வீட்டை அவர்களின் பெயரிலேயே எழுதிக் கொடுத்து பெண்ணைக் கேட்டால் மறுக்க மாட்டார்கள் என்கின்ற எண்ணத்தில் அவ்வாறே அவர்கள் கேட்க, உடனே ஒத்துக் கொண்டார் வசந்தா.
“அடுத்து ஒரு கல்யாணம் வேண்டவே வேண்டாம்னு தான் இருந்தேன் வஞ்சி. அம்மா உங்களைப் பத்தி சொன்னதும் உங்கப்பா நினைவு தான் வந்துச்சு. அவர் உங்களைப் பத்தி என்கிட்ட சொன்ன விஷயங்கள் உங்க மேல ஏற்கனவே எனக்கொரு அபிமானத்தை உண்டு பண்ணிருந்துச்சு. அதான் ஓகே சொன்னேன். நீங்க யோசிச்சு சொல்லுங்க வஞ்சி! பாசிட்டிவ்வா இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றவனாய் அவன் வெளியே செல்ல,
‘உங்களை பிடிச்சிருக்கு’ என்கின்ற அவனின் அந்த வார்த்தையிலேயே அப்படியே அதிர்ந்து அங்கேயே நின்று விட்டாள் இளவஞ்சி.
வெளியே வந்தவன் தனது வீட்டினரை அழைத்து கொண்டு கிளம்பி சென்றதையும் உணராதவளாய் அவள் நின்றிருக்க,
“அடியேய் வந்த வரனை விரட்டி விடுற மாதிரி என்னடி சொன்ன? அந்த தம்பி ஒரு வாரம் கழிச்சி சொல்றேன்னு சொல்லிட்டுப் போகுது” என்ற தாயின் ஆங்காரமான குரலில் தான் நிகழ்வுக்கு வந்தாள்.
“ஒரு வாரம் கழிச்சி சொல்றேன்னு சொன்னேன்மா” என்றவளாய் அவர்களின் வீட்டின் முன்னே மிகச்சிறிதாய் ஒருவர் மட்டுமே நிற்க கூடிய அளவில் இருக்கும் தோட்டம் போன்ற இடத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டாள்.
மனச்சோர்வும் குழப்பமும் ஏற்படும் வேளைகளில் அவள் இளைப்பாறும் இடம் அது.