துபாய் வந்து இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது. ப்ரீத்தி அவள் வீட்டை காலி செய்து, பெற்றோருடன் வந்துவிட்டாள். அவளோடு ஓரிரு முறை மட்டுமே கீர்த்தியால் பேச முடிந்தது.
“அவ பாட்டு விட்டத்தை பார்த்து ஓஞ்சுபோய் உட்கார்ந்திருக்காடி. ஹர்ஷி எதாவது கேட்டா மட்டும் செய்யறா. மத்தபடி பேச்சே இல்லை. பாவம் குழந்தையும் வாடி கிடக்கு. அங்க இருந்த ஸ்கூல்ல விஷயம் சொல்லி அப்பாதான் டி.சி வாங்கிட்டு வந்தார். மிச்ச ஆறு மாசத்துக்கு கட்டின காசு கூட இவ நிலைமை பார்த்து ஸ்கூல்ல திருப்பி குடுத்துட்டாங்க கீர்த்தி. இப்போதைக்கு இங்க பக்கத்துல இருக்க ஒரு ஸ்கூல்ல சேர்த்திருக்கோம்.”
அன்னை சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டாள். தேவைகளுக்கு இருக்கட்டும் என்று அவள் தந்தை கேட்டதை விடவும் அதிகமாகவே அனுப்பியிருந்தாள்.
“வேலைக்கு எதாவது போகட்டும்மா. வெளிய போயிட்டு வந்தாலே கொஞ்சம் மாறுவா.”
“ம்ம்… மூணு மாசமாவது ஆகட்டும்டி. உடனே போனா அதுக்கும் ஊர் எதாவது பேசும். ஆண்டவன் நம்மளை நிம்மதியா விடவே கூடாதுன்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்கான் போல.”
வருந்தும் சரோஜினியை ,”மா ! நீயும் இப்படில்லாம் பேசி அவளை இன்னும் டவுன் ஆக்காதே மா. கொஞ்சமாவது அவளோட சகஜமா பேசு. நடந்துபோனதையே நினைச்சிட்டு இருந்தா எப்படின்னு நீதான் அவளை அடுத்து யோசிக்க வைக்கணும். ஹர்ஷிக்காக தேறிக்கணும்னு சொல்லு. அப்பாவும் இல்லாம, அம்மாவும் பேசாம இருந்தா அந்த குழந்தை என்ன நினைக்கும்? அவ ஸ்கூலும் மாத்தியாச்சு. எல்லாம் புதுசுன்னா அவளுக்கும் கஷ்டம்தான? “
“ஹ்ம்ம்… வாஸ்தவம்தான். நீ கூட இருந்தாலும் பரவாயில்ல. அப்பாவும் வேலைக்கு போயிடறார். நானும் அவளும்தான். என்னன்னு பேச?அவளும் சரி, குழந்தையும் சரி சரியா சாப்பிடறது கூட இல்லைடி. இது போறாதுன்னு அவ மாமியாக்காரி பணம் வந்துடுச்சா வந்துடுச்சான்னு போன் போட்டு போட்டு புடுங்கறா! இரகுவுக்கு பதிலா இந்த பொம்பளை போய் சேர்ந்திருக்கலாம். எல்லாருக்கும் நிம்மதியா போயிருக்கும்.”, கோபத்தில் சாபம்விட்டார் சரோஜினி.
போன் பேசி முடித்து, கீழே சற்று வருத்தமாக அமர்ந்திருந்தவளை சொடக்கிட்டு திசை திருப்பினான் ஜோ. ஜிம் செல்ல வந்தவன், பக்கவாட்டு ஹாலில் அமர்ந்திருந்தவளைக் கண்டு, அருகில் வந்திருந்தான்.
“ஹே..ஜோ… “
“என்ன சோகம்? வீட்டுக்கு பேசினியா?”
ஆமோதித்து சுருக்கமாகக் கூறினாள். அமைதியாகக் கேட்டுக்கொண்டவன், அருகில் அமர்ந்து, கையை தட்டிக்கொடுத்தவன்,
“வேலை எதாவது வேணும்னா சொல்லு கீத்து, நானும் எனக்கு தெரிஞ்ச சோர்ஸ்ல தேடறேன். மொதல்ல ரெசூம் ரெடி பண்ணச் சொல்லு. வருத்தம் தான். இல்லைங்கல, ஆனா நீயும் டவுன் ஆகாதேடா. சாப்பிட்டியா?”, பேச்சை மாற்றியவன், அடுத்து,
“என் தம்பி ஷீத்தல் பத்தி எப்ப அம்மாகிட்ட சொல்லப் போறன்னு அனத்த ஆரம்பிச்சிட்டான். அதுக்கு என் கல்யாணம் பத்தி பேசணும்ங்கறான். ஒரு வழியா நேத்துதான் உன்னைப் பத்தி அவங்கிட்ட சொல்லியிருக்கேன்.” புன்னகைத்தான் ஜோ.
“ஹோ… சொல்லிட்டீங்களா? என்ன சொன்னான்?”,ஆச்சரியம் மிளிர்ந்தது கீர்த்தியிடம்.
“நீயா? லவ்வா? அதுவும் காலேஜ்லர்ந்தா? ஓட்டாதடான்னு முதல்ல நம்பவே இல்லை“, தம்பியோடு பேசியதை நினைத்து லேசாய் சிரித்தான்.
“நியாயமாத்தான் கேட்டிருக்கான்”, அவன் புன்னகையில் இணைந்தாள்.
“அப்பறம்?”
“அப்பறமென்ன? சரி வராதுன்னு பிரிஞ்சிட்டோம். மறக்கலை. மறக்க முடியாதுன்னு புரியவும்,உன்னை தேடி துபாய் வந்தேன். நீயும் அப்படித்தான் இருக்க, திரும்பவும் காதல் தீ பத்திக்கிச்சுன்னு சொன்னேன்”, எனவும்,
“ஐய்ய ! இப்படியா பேசி வெப்பீங்க ?”, என்று அவன் தோளில் தட்டி சிரித்தாள்.
“அவங்கிட்ட கொஞ்சம் பாலிஷ்டா சொன்னேன். அண்ணங்கற மரியாதையை காப்பாத்திக்கணுமே !”
முகம் சற்றே வாட, “ஹ்ம்ம்… அதே பயம்தான் எனக்கும்” என்றாள் கீர்த்தி.
“முடிஞ்சவரை எடுத்து சொல்லலாம் கீர்த்தி. அவங்க பதில் எதுவா இருந்தாலும், முடிவு மாறப் போறதில்லை. கண்டிப்பா என் முடிவுல வருத்தம் இருக்கும், ஏத்துக்க முடியலைன்னாலும், புரிஞ்சுக்குவாங்கன்னு தோணுது. பார்க்கலாம். வீடு கட்டி முடியற ஸ்டேஜ்ல நேரா போயிட்டுதான் பேசணும்.”
“இந்த ஆனுவல் லீவ்ல போறீங்களா? “
“ஹ்ம்ம்… ஜூலைக்குள்ள வீடு முடிஞ்சுரும்னு சொல்றான் தம்பி.”
“ஹ்ம்ம்… நீங்க முதல்ல பேசிட்டு வாங்க. இப்ப இருக்க நிலைமையில நான் வீட்டுல பேச முடியாது. ஒரு ஏழெட்டு மாசமாவது ஆகட்டும். “
“ம்ம்… நான் சொன்னதும் அம்மா சரின்னு சொல்லிட மாட்டாங்க. அவங்களுக்குமே கொஞ்சம் டைம் ஆகும். பார்த்துக்கலாம் கீத்துமா”
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஜோவின் அருகாமை பழக ஆரம்பித்திருந்தது கீர்த்திக்குமே புரிந்தது. ஒரு வகையில் இரகுவின் இறப்பு ஏதோவொரு தளையை அவளிலிருந்து அகற்றியிருக்கலாம் என்று தோன்றியது. எவரிடமும் வெளியில் பகிர முடியாதெனினும், அவனுக்கான தண்டனையை கடவுள் அதிகமாகவே வழங்கி, அவளுக்கும் இழந்த காதலை மீட்டு சமன் செய்துவிட்டார் என எண்ணிக்கொண்டதில் உள் மனம் ஆறுதலடைந்தது போல இருந்தது.
ஜூலை துவக்கத்தில் துபாயில் கோடை விடுமுறை ஆரம்பிக்கவும் ஜோ ஊருக்கு கிளம்பிவிட்டான். அப்போதுதான் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள் ப்ரீத்தி. குழந்தையும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். கீர்த்தி துபாயிலேயே தங்கிவிட்டாள். கோடை விடுமுறை மாதங்களில் சுட்டெரிக்கும் சூரியனை தப்பிக்க அனேகமாக துபாய் மட்டுமன்றி அமீரகம் முழுதுமே காலியாகிவிடும். இடையில் ரம்ஜான் லீவும் இருக்க வேலைக்கு செல்பவர்கள் கூட அந்த ஒரு மாதம் தாய் நாட்டை பார்க்க சென்றுவிடுவர்.
கீர்த்தி இம்முறையும் செல்லவில்லை. சரோஜினியும் வற்புறுத்தவில்லை. முன்பானால் அவளுக்கு ஒரு திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் வர சொல்லிக்கொண்டிருந்தார். இருக்கும் நிலையில் எதையும் யோசிக்க திராணியற்று மறுப்பு சொல்லவில்லை.
ஜோ தினமும் பேசினான். வீட்டு வேலை முடிந்து புதுமனை புகுவிழாவிற்கான ஆயத்தங்கள் நடந்தேறிக்கொண்டிருந்தது.
ஊர் மெச்ச மகன்கள் இருவரும் தலையெடுத்து இதோ ஒரு மச்சு வீடு , அவர்களின் தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டார்கள். வந்தவர்கள் அனைவருமே கேட்டது ஜோவின் திருமணம் பற்றித்தான். ஜெயராணியும், அடுத்து அந்த விசேஷம்தான் என்று புன்னகை முகமாக பதிலளித்துக்கொண்டிருந்தார். இரண்டொரு வரன்கள் கூட உறவு முறையில் இருந்தவர்கள் சொல்லியிருந்தார்கள்.
புது வீட்டிற்கு குடி வந்து, சாமான்களை ஓரளவு அடுக்கி, தேவையானதை வாங்கி என்று சில நாட்கள் கடந்திருக்க, புன்னகை முகமாக பெரிய மகன் போனுடன் உள்ளே வருவதைப் பார்த்த ராணி,
“தம்பி… வந்து உட்காருப்பா”, என்று புது சோஃபாவில் அருகே தட்ட, புன்னகை மாறாது வந்து அமர்ந்தான் ஜோ. “என்னம்மா?”
ஒரு பெருமூச்சை விட்டவன், “கையில இருக்கறதெல்லாம் வழிச்சு போட்டு வீட்டை கட்டியாச்சும்மா. இன்னும் கொஞ்சம் கடன் அடைக்கணும். அப்பறம்தான் சேர்க்கணும்”, விஷயத்தை சொல்லி அவரின் மகிழ்ச்சியை கெடுக்க மனம் வராதவனாக வேறு காரணங்களை அடுக்கினான்.
“அட என்னப்பா. உடனேயேவா கல்யாணாம் பண்ணப்போறோம். இப்ப பார்த்துட்டு போனா, அடுத்த வருஷம் வெச்சிட்டா போகுது. உனக்கும் வயசாகுது, உன் தம்பிக்கும் செய்யணுமே”, மகனின் பொறுப்பில் பூரித்துக் கூறினார்.
“ம்மா…அது வந்து… நான் சொல்றது கொஞ்சம் பொறுமையா கேட்கணும்.”, என்று ஆரம்பித்தவன், கல்லூரிக் காலத்தில் காதல் வயப்பட்டதும், தந்தை இறந்த நேரம் இது சரி வராது என்று புரிந்து பிரிந்த வரையில் கூறி நிறுத்தினான். அவள் பிரிந்தாள் என்றால் பல கேள்விகள் வரும் என்பதாலேயே இந்த சிறு பொய்.
விழி விரித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் ராணி. வீீட்டு நிலைமை கருதி, பிரிய முடிவெடுத்தேன் என்ற பிள்ளையை கண்டு மனம் நெகிழ்ந்தது.
“சரிப்பா. அந்த பொண்ணுக்கு இன்னேரம் முடிச்சிருப்பாங்களே. நீ அப்படியேவா இருக்க முடியும்?”, என்ன சொல்லப்போகிறானோ என்று பயந்தபடியே கேட்டார்.
அவர் கையை தன் இரு கையில் பிடித்துக்கொண்டவன், “இத்தனை வருஷமாகியும் மறக்க முடியலைம்மா. நானும் அவளுக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னுதான் நினைச்சேன். அப்பறம்தான் தெரிஞ்சுது. அவளும் கல்யாணம் செஞ்சுக்காமத்தான் துபாய்ல இருக்கான்னு தெரியவும், வேலை தேடி அங்க போனேன்.”
“கர்த்தரே!”, மறு கையை நெஞ்சில் வைத்தவர் “என்னப்பா சொல்ற?”
லேசாய் உதடு கடித்தவன், “துபாய்ல எங்க வேலை கிடைச்சாலும் பரவாயில்லைன்னு நினைச்சேன். அவ வேலை பார்க்கற அதே ஸ்கூல்ல நல்ல வேலையா அமைஞ்சது கர்த்தர் கிருபைதானோ என்னவோ. அவளுக்கு நான் வரப்போறது தெரியாது. ஒரு வேளை அவள் மறந்து கடந்து போயிருப்பாளோன்னு நினைச்சுதான் போனேன்”, அவர் கண்களை நேராக சந்தித்தவன், “என் நிலைமையிலதான் அவளும் இருந்தா” இரத்தினச் சுருக்கமாய் விவரித்துவிட்டான்.
தளர்ந்துபோய் அமர்ந்துவிட்டார் ராணி. விடலைப் பருவக் காதலோ, திடீர் காதலோ இல்லை. பிரிய நினைத்தும் இப்படி இருவருமே இருந்ததே அவர்களின் நேசத்தின் ஆழத்தைப் புரிய வைத்தது அவருக்கு.
“அவங்க வீட்டுல தெரியுமா? எங்க இருக்காங்க?”
“தெரியாதும்மா. அவ பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான். கெமிஸ்ட்ரில மேல்படிப்பு படிச்சு, அங்க டீச்சரா இருக்கா. நல்ல பொண்ணுமா. கீர்த்தியை உனக்கு ரொம்ப பிடிக்கும்மா.”, மென்மையான குரலில் கூறினான் ஜோ.
“கீ.கீர்த்தின்னா? “ அவர் அடுத்து பயந்ததும் நிஜமாகப்போகிறது என்பது போல, ஆதரவாக அணைத்த ஜோ, “ம்ம்… இந்து மா” என்றான்.
அவனை உதறி எழுந்துவிட்டார் ஜெயராணி.
“ஜோ…. எப்படிடா முடியும்? “, கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டார். ஜோவிற்குமே கடினமான நொடிகள். வேறு வழியில்லை, கடந்துதான் வரவேண்டும்.