“அட நாலு நாள் ஆச்சுன்னா உன்னை புடிச்சுகிட்டு அவன் அம்மாகிட்ட கூட போக மாட்டான்மா” என ஆறுதலாக சொன்னான் தியாகு.

“இந்த படவா கெடக்கான், நீ மருமகளை பெத்து கொடு, நான் அவளை கொஞ்சிக்கிறேன்” என்றான் கெளதம்.

நண்பனின் காதை திருகிய தியாகு, “எனக்கும் மருமக மருமகன் யாரா இருந்தாலும் கொஞ்சணும்னு ஆசை இருக்கும்” என்றான்.

“அதானே, இஜ்ஜுக்கு துணைக்கு விளையாட ஆள் ரெடி பண்ணி கொடு யசோ” என மைதிலியும் சொன்னாள்.

யசோ எதுவும் சொல்லாமல் சமையலறை சென்று விட்டாள்.

“சொன்னது நினைப்பு இருக்கட்டும் அண்ணா, அவ வெட்க படுறா போல, நாங்க போயிட்டோம்னு சொல்லி ஆயிரத்தில் ஒருத்தி, கோடிப் பொண்ணுங்க இருந்தாலும் நீதான் என் சோடி அப்படின்னு அவகிட்ட நாலைஞ்சு பாட்டு பாடுங்க ண்ணா” என கிண்டல் செய்து விட்டே கிளம்பினாள் மைதிலி.

என்ன சொல்கிறாள் மைதிலி அக்கா என யசோ விசாரிக்கவும்தான் அவளுக்கான ரிங் டோன் ஒலிக்க விட்டான் கெளதம்.

யசோவுக்கு நல்ல வெட்கம். அவனும் ரசித்துக் கொண்டே சிரித்தான்.

“இது தேவையா? இன்னும் அங்க வீட்ல யாருக்கும் தெரிஞ்சா நம்மள ஒரு வழி பண்ணிடுவாங்க” என்றாள் அவள்.

“கால்ஸ் வந்தாலே என்ன ஏழரையோன்னு காண்டாகுது, நீன்னு தெரிஞ்சா சட்டுனு ஒரு பிளசன்ட் ஃ பீல். ஆனா நீதான்னு ஸ்க்ரீன் பார்க்காம எனக்கு தெரிஞ்சுக்க முடியாதே, அதான் இப்படி. யார் கிண்டல் பண்ணினா எனக்கென்ன?” என அவன் சொல்ல, அவளும் விட்டு விட்டாள்.

அதன் பின் கெளதம் உறங்கி எழுந்து அலுவலகம் சென்று விட்டான்.

மாலையில் கணவனின் வரவுக்காக காத்திருந்தாள் யசோ. தியாகு  குடும்பத்தோடு வெளியில் சென்றிருந்தான்.

நேரத்தோடு வீட்டுக்கு வந்து விட்டான் கெளதம். மைதிலி இல்லாததால் கிண்டல் கேலி பற்றிய பயமில்லாமல் புடவை கட்டியிருந்தாள் யசோ.

ஊதா நிறப் புடவையில் இருந்தவளை தன்னிடம் இழுத்த கெளதம், “என் சந்தன கட்டை ஏன் உஜ்ஜாலால குளிச்சிருக்கா?” எனக் கேட்டான்.

அவள் சிரிக்க, அவனை வெறுப்பேற்ற என்றே அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. சட்டையின் மேலிரு பட்டன்களை கழட்டிக் கொண்டே பேசியவன் லேப் டாப்பை திறந்து கொண்டு அமர்ந்து விட்டான்.

“என்னங்க கை கால் கழுவிட்டு வர்றீங்களா இல்லை இப்பவே டீ தரட்டுமா?” எனக் கேட்டுக் கொண்டே கணவனிடம் வந்தாள் யசோ.

அவன் ப்ளூ டூத் வழியாக ஆலோசனையில் இருந்து கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருக்க, யசோவுக்கு தெரியவில்லை.

அவனருகில் சென்று மீண்டும் கேட்க, சுள் என பார்த்து வைத்தான். பின்னர்தான் அவளுக்கும் புரிந்தது. பார்வையாலேயே மன்னிப்பு கேட்டவள் சத்தம் செய்யாமல் விலகி சென்று விட்டாள்.

தேநீர், ஸ்னாக்ஸ் எல்லாம் அவனை தேடிக் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அதை கையில் எடுக்காமல் இருக்க, அவனது இடது கையில் டம்ளரை வலிந்து திணித்தாள்.

அவன் முறைக்க, அவனது மோவாயை தாஜாவாக பிடித்தவள் பருகி விடுங்கள் என கண்களால் கட்டளை போட்டாள்.

 அழைப்பில் யாரையோ திட்டிக் கொண்டே தேநீரை பருகினான். அழைப்பை துண்டித்து விட்டு கனிணி திரையில் அவன் மூழ்க, மாற்று உடை நீட்டியவள், “ரெண்டு நிமிஷம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்து பாருங்க” என்றாள்.

“டென் மினிட்ஸ் முடிச்சிட்டு போறேன்” என்றவன் அவள் அங்கேயே நிற்கவும், “எப்டி பத்து நிமிஷம் இங்கேயே நிக்க போறியா? படுத்துற” என அலுத்துக் கொண்டே ஆடையை வாங்கிக் கொண்டு குளியலறை சென்றான்.

அவன் திரும்ப வரும் போது மேசையை நன்றாக ஒழுங்கு படுத்தி, மிதமான அளவில் ஏசி வைத்து விட்டிருந்தாள்.

“இந்த குளிர்ல ஏசியா?” எனக் கேட்டான்.

“அப்போவாவது நீங்க கூல் ஆகுறீங்களான்னு பார்க்கிறேனே” என்றாள்.

“அதுக்கு எதுக்கு ஏசி?” எனக் கேட்டுக் கொண்டே அவளது இடுப்பை பற்றி வளைத்தான்.

அடுத்த அழைப்பு வந்து விட்டது. எரிச்சலுடன் வாயை குவித்து மூச்சு விட்டுக் கொண்டே அழைப்பை எடுத்தான். என்ன செய்தியோ, மீண்டும் ஒரே வசவுகள்.

‘கோவம் வந்தா சகட்டு மேனிக்கு கத்துவார், பாவம் யார் மாட்டுனாங்களோ!’ என நினைத்துக் கொண்டே முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு சென்று விட்டாள் யசோ.

நேரம்தான் சென்றது, அவன் வேலையிலிருந்து எழுவதாக காணோம். கணவனுடன் நேரம் செலவிட எண்ணி முன்னரே இரவு சமையல் எல்லாம் முடித்திருந்தாள்.

படிக்கும் மனநிலை இல்லாததால் கைக்குட்டையில் எம்பிராய்டரி போட ஆரம்பித்தாள்.

இரவு உணவுக்கு நேரமாகவும் ஹாலில் இருந்த படியே அறையை எட்டிப் பார்த்தாள் யசோ.  அதே நேரம் அவனும் இவளை எட்டிப் பார்த்தான்.

அவன் உள்ளே நுழைந்த போதே தன்னை எத்தனை எதிர் பார்த்திருக்கிறாள் என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது. திடீரென வேலையில் சிக்குவோம் என அவனும் நினைத்திருக்கவில்லை.

தள்ளியிருந்த படியே அவனது ஊதாப் பூவை ரசித்தான். கொஞ்சம் ஏனோதானோதான் புடவைக்கட்டு. மாலையில் வைத்த குங்குமத்தை நெற்றி துடைக்கும் போது தெரியாமல் இழுப்பி விட்டிருந்தாள்.

அவள் என்னவென முகம் உயர்த்தி கேட்க, அவனோ தோள்களை குலுக்கி கண்களை சிமிட்டி புன்னகை செய்தான்.

வேலை முடிந்ததா என வாயசைத்தும் சாடை காட்டியும் கேட்டாள்.

கையசைத்து அவளை தன்னிடம் அழைத்தான்.

அவள் வரவும் “உட்காருங்க என் ஆசை கத்திரிப் பூ” என்றான்.

அங்கே அவன் அமர்ந்திருந்த நாற்காலி மட்டும்தான், படுக்கையில் அமரலாம் என அவள் செல்ல, தன் மடியை காண்பித்தான்.

அவள் தயங்க, அவன் பிடிவாதமாக பார்த்தான். உடனே அவளும் அமர்ந்து விட்டாள்.

தன் மடியின் ஓரத்தில் பட்டும் படாமலும் அமர்ந்திருந்தவளை நன்றாக  அமர வைத்துக் கொண்டவன், “உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலை, ஸாரி” என்றான்.

“யார் கூட ஃபோன்ல அப்படி பேசிட்டு இருந்தீங்க, அவங்கள்ட்ட தான் ஸாரி கேட்கணும் நீங்க” என்றாள்.

“அவன் வேலையும் சேர்த்து நான் பார்த்திருக்கேன், என் பொண்டாட்டி நேரத்தை அவன் எடுத்துக்கிட்டான். அதெல்லாம் கேட்க முடியாது”

“ரொம்ப கோவ பட்டீங்க”

“ம்ம்ம்…” என்றவன் அவளது நெற்றிக் குங்குமத்தை சரி செய்து விட்டான்.

“சாப்பிடலாமா?” என அவள் கேட்க, அவளின் பின்னாலிருந்து கட்டிக் கொண்டவன் அவளின் முதுகில் முகம் புதைத்துக் கொண்டான்.

இன்று பகலில் மாமியாரிடம் பேசியது, அவர் சொன்ன கெவினின் சேட்டை, நவீன் அரையாண்டுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண் என அவள் கதைகள் சொல்ல, வழக்கத்துக்கு மாறாக கெளதம் பேசாமல் அவளின் பேச்சுக்கு காது கொடுத்திருந்தான்.

“என்னாச்சுங்க, ஏதும் பேச மாட்டேங்குறீங்க?” எனக் கேட்டவள் திரும்பிப் பார்த்தாள்.

அணைப்பை விட்டவன், “மேரேஜ் லைஃப் எப்படி இருக்கணும்னு ஒரு ட்ரீம் இருக்கும்ல யசோ? மண்டைக்குள்ள பெரிய பிரம்மாண்ட படமே ஓட்டியிருக்கேன். சத்தியமா இப்போ இருக்க மாதிரி இமாஜின் பண்ணினது இல்லை. நான் நினைச்ச ஆர்ப்பாட்டமான  அந்த கனவை விட இந்த ரியாலிட்டி ரொம்ப பிடிச்சிருக்கு, நீ பக்கத்துல வரவும் டென்ஷன் எல்லாம் ஓடிப் போய் உன் அமைதி வந்திடுது எனக்கு. லைஃப் எந்த கலப்படமும் இல்லாம ரொம்ப ஆர்கானிக்’கா இருக்குடி.  உனக்கெப்படி இருக்கு செல்லம்மா?” எனக் கேட்டான்.

அந்த ‘செல்லம்மா’ அவளுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான். அவனும் எப்போதாவதுதான் அப்படி அழைப்பான்.

“நான் எதையுமே எதிர் பார்த்தது இல்லைங்க.  நல்லதும் சரி கெட்டதும் சரி எல்லாமே திடீர் திடீர்னுதான் எனக்கு நடந்திருக்கு. எனக்கு உங்களை மாதிரி சொல்ல தெரியலை, இதோ இப்படி உங்க மடில நான் இருக்கேனே… இது போதும், இது நிலைச்சா போதும் எனக்கு” என்றவளுக்கு  மகிழ்ச்சி மிகுதியில் வலது கண்ணோரம் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.

யசோவிடம் கடந்த கால வருத்தங்களும் இல்லை, வருங்காலத்துக்கான எதிர் பார்ப்புகளும் இல்லை. நிகழ் கால நொடியில் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

“என் பட்டு நிலா… க்யூட் ஸ்டார்… மின்னல் குட்டி… சாரல் சிட்டு…” மனைவியை விதம் விதமாக கொஞ்ச ஆரம்பித்தான் கெளதம்.

“போதும்… போதும் டாடி!” என அவள் சிரித்துக் கொண்டே சொல்ல, அவனா நிறுத்துவான்?

தன் கொஞ்சல் மொழியை வேறு விதமாக சொல்ல ஆரம்பித்தான். அவளால் தடை போட முடியவில்லை.

சில சமயங்களில் எதிர்பாராமல் நமக்கு ஏதாவது நடக்கும். நாமே திட்டமிட்டு நடத்திக் கொண்டிருந்தால் கூட அவ்வளவு சிறப்பாக, அற்புதமாக அமைந்திருக்காது.

 கெளதம், யசோத்ரா இருவருமே எதிர் பாராமல் ஒரு உன்னத உறவுக்குள் சிக்கி, மற்றவருக்கு தங்களை விட  மிகப் பொருத்தமான துணை வேறு யாருமில்லை என்பதை உணர்ந்து கொண்டவர்கள்.

அவர்களின் வாழ்க்கை புத்தகத்தில் இனி வரும் எல்லா பக்கங்களும் புரிந்துணர்வு, நம்பிக்கை, அன்பு, காதல், இனிமை என எல்லாம் சேர்ந்து நிரம்பி வழியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அவர்கள் இனிதே வாழட்டும் என நாமும் மனமார வாழ்த்துவோமாக!