ஆயிரத்தில் அவள் ஒருத்தி -20(final)

அத்தியாயம் -20

காதம்பரி அவரது பிறந்த வீட்டு சொந்தங்களையெல்லாம் தன் மகளின் விஷேஷத்திற்கு  அழைத்திருந்தார்.

கருணாகரனும் காதம்பரியும் இணையாக நின்று சண்முகம் குடும்பத்தாரை வரவேற்றனர்.

கடைசியாகத்தான் கௌதமும் யசோவும் வந்தனர். கருணாவிடம் மட்டும் தலையசைத்த கெளதம், காதம்பரியின் பக்கம் திரும்பவே இல்லை.

“என்ன யசோ, உன் வீட்டுக்காரருக்கு என்னை அடையாளம் தெரியலையோ?” எனக் கேட்டார் காதம்பரி.

யசோவின் கையை லேசாக இழுத்து அவளை பேச விடாமல் செய்தான் கெளதம்.

ஏற்கனவே கருணா தன் மனைவியை பார்த்து முறைக்க, “உங்களை மதிச்சு வந்திருக்கோம் மாமா” என அவரிடம் சொல்லி தன் மனைவியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் கெளதம்.

“என்ன சொல்லிட்டு போறாருன்னு புரியுதா?  நீ பார்த்து வச்ச வேலைக்கு உன்னை பார்த்து பல்லு காட்டுவாருன்னு நினைச்சியா? ஒழுங்கா வாயடக்கமா நில்லு” என மனைவியை கடிந்தார் கருணா. காதம்பரிக்கு திகு திகு என இருந்தது.

“எதுக்குங்க பிரச்சனை?” என கணவனிடம் சின்னக் குரலில் கேட்டாள் யசோ.

“பிரச்சனை வேணாம்னுதான் அந்த விஷக் கிருமிய கண்டுக்காம வந்தேன் யசோ, நீயும் அப்படியே இரு” என்ற கெளதம் ஆண்கள் அமர்ந்திருந்த பக்கம் சென்று விட, யசோ தன் மாமியாரிடம் சென்றாள்.

கருணாவின் இரண்டாவது மகள் மோனிகா, யசோ மற்றும் நவீன் இருவரையும் தேடி வந்து பேசி சென்றாள்.

காலை உணவு ஆரம்பமானது.

இனி நவீனுக்கு கிடைக்க வேண்டியதை என்ன செய்தும் பெற முடியாது என்பது ஏற்கனவே கணவரின் மூலமாக அப்பட்டமாக காதம்பரிக்கு தெரிந்திருந்தது.

இன்று  கெளதம் காட்டிய அலட்சியம் வேறு பாடாய் படுத்த யசோவை ஏதாவது பேசி கௌதமின் முகத்தில் இருள் பரவ செய்ய வேண்டும் என தீர்மானித்துக் கொண்ட காதம்பரி, யசோவை தன்னிடம் அழைத்தார்.

அனைவர் முன்னிலையிலும் அவரது அழைப்பை எப்படி உதாசீனம் செய்வது என எண்ணி யசோவும் அவரிடம் சென்றாள்.

“நீ இந்த வீட்டு பொண்ணு, பரிமாற கொஞ்சம் ஹெல்ப் பண்ணு, அப்புறம் சாப்பிடலாம்” என சிரித்த முகமாக சொன்னார். அவளால் மறுக்க முடியவில்லை.

மனைவியின் தலை ஆடவுமே, ஏதோ வேலை ஏவுகிறார் இவளும் மறுப்பு சொல்லாமல் சரி என்கிறாள் என்பதை புரிந்து கொண்ட கெளதம்,  “யசோ…” என சத்தமாகவே அழைத்தான்.

அனைவரின் கவனமும் கெளதமிடம் குவிந்தது.  “சாப்பிட கூப்பிடுறாங்க பாரு, நாம சாப்பிட்டாதான் விஷேஷ வீட்டுகாரவங்க சாப்பிட முடியும், வா வா” என மனைவியை தன்னிடம் அழைத்தான் அவன்.

“அப்புறம் வர்றேன்னு சொல்லு யசோ” என்றார் காதம்பரி.

கௌதமின் பார்வையோ ‘ஒழுங்காக என்னிடம் வந்து சேர்!’ என மிரட்டிக் கொண்டிருக்க, கணவனிடம் விரைந்து விட்டாள் யசோ.

ஏற்கனவே காதம்பரிக்கு யசோவின் மீது பொறாமை உண்டு, இவர்களை பார்த்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்குள் உள்ள பிணைப்பை உணர்ந்து கொண்டவருக்கு ‘இவளுக்கு இப்படியொரு வாழ்வா?’ என பொறாமைத் தீ கொழுந்து விட்டெறிந்தது.

கௌதமோ தன் மனைவியை காதம்பரியின் பக்கம் செல்லவே விடாமல் தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொண்டான்.

காலை உணவு முடிந்ததும் பிள்ளைகள் எல்லாம் வெளியில் விளையாட ஆரம்பித்தனர்.  பதினோரு மணி அளவில் அழைத்து வரப் பட்டாள் ஹேமா. தன் அம்மா சொன்ன படியே புடவை பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை குணா.

வரிசைத் தட்டுக்கள் எல்லாம் வைத்து, தான் தயார் செய்திருந்த மருந்தின் சாறையும் வெள்ளி டம்ளரில் வைத்தார் அருணா.

“எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? இந்த கசப்பெல்லாம் ஹேமாவுக்கு பிடிக்காது, குவாலிடியான குங்குமப் பூ பால்ல கலந்து இருக்கு, அதை கொடுத்தா போதும்” என்றார் காதம்பரி.

அவருக்கு இதை பற்றி தெரியாமல்தான் இப்படி பேசுகிறார் என நினைத்தார் அருணா.

மூக்கரட்டான் வேர், காக்கரட்டான் இலை, தூதுவலை, கருவேப்பலை, துளசி, வேப்பிலைக் கொழுந்து, அருகம்புல் என ஏழு வித மூலிகைகளில் ஒரு கல் உப்பு சேர்த்து அரைத்து பிழிந்து எடுத்திருக்கிறேன்.

 என் அம்மா வீட்டில் இப்படித்தான் பழக்கம், என் மூன்று பிள்ளைகளையும் சுமந்த போது எனக்கு உருண்டை பிடித்து சாப்பிட செய்தார்கள், இப்போது ஹேமாவுக்கு சிரமம் இல்லாமல் திரவமாகவே தயாரித்திருக்கிறேன்.

 சம்பிரதாயத்துக்கு மூன்று சுமங்கலிகள் ஸ்பூனில் தரட்டும், பின் அவளே முழுதையும் குடிக்கட்டும், தாய் சேய் இருவருமே இதனால் பலன் பெறுவார்கள் என விளக்கினார் அருணா.

பாராமுகம் காட்டும் கணவர், தன் சொல் பேச்சு கேளாமல் கணவனோடு செல்ல தயாராகி விட்ட ஹேமா, யசோவை தன்னிடம் அண்ட விடாமல் தன்னை மதிக்காத கெளதம் என ஏற்கனவே ஏக அதிருப்தியிலும் கோவத்திலும் இருந்த காதம்பரிக்கு தன் அரக்க குணத்தை காட்ட அருணா சிக்கி விட்டார். அந்த மருந்து வேண்டவே வேண்டாம் என நின்றார்.

ஹேமாவுக்கும் அது அதிகமாக கசக்குமோ என பயம், எனவே அம்மா சொல் படியே நடப்பது என முடிவு செய்து விட்டாள்.

“ஸ்டார்ட் பண்ணிட்டுடா அந்தம்மா, இவளையும் பாரு… வாயடைச்சு உட்கார்ந்து இருக்கிறத” என எரிச்சல் பட்டான் குணா.

“அடேய் தம்பி, ரெண்டு வழிதான். ஒன்னு ‘ஏய் செய்வியா மாட்டியா? என்ன நினைச்சிட்டு இருக்க நீ?’ இன்னொன்னு ‘கண்ணே மணியே ராஜாத்தி சொல்றத கொஞ்சம் கேளும்மா’. எந்த வழின்னு நீயே முடிவு பண்ணு” என்றான் கெளதம்.

குணா தன் பெரியண்ணனை பார்க்க, “அவன் மட்டும் அவன் வைஃபோட ராசியா இருந்திட்டு உன்னை பங்கமா கோர்த்து விட பார்க்கிறான், ரெண்டாவது வழி ஒன்னுதான் சரி. போ போ” என்றான் கல்யாண்.

சிரித்த கௌதம், “நீதான் குணா ஹேமாகிட்ட எடுத்து சொல்லணும், நூறு மில்லி கூட இல்லை அது, சாப்பிட முடியாதா? போ போய் பேசு” என்றான்.

குணாவும் மனைவியிடம் சென்றான்.  கோவமாக அல்லாமல் பொறுமையாகவே நம் குழந்தையின் நன்மைக்காக என எடுத்து சொல்லி, ஒரு துளி அவளது வாயிலும் தடவி விட்டான். அவளுக்கு பருக முடியும் என்ற நம்பிக்கை வந்து விட உடனே  சரியென சொல்லி விட்டாள்.

 காதம்பரி ஏதோ சொல்லப் போக, “தங்கச்சி தெரியாமையா செஞ்சு கொண்டு வந்திருக்கு? சும்மா நில்லு”  என மனைவியை அடக்கினார் கருணா.

காதம்பரியின் அண்ணிகளும், தங்கள் நாத்தனாருக்கு இதெல்லாம் அறவே தெரியாது, எப்படியோ காலத்தை ஓட்டி விட்டார், பேரன் பேத்தி பிறந்தால் கூட கவனிக்கவும் வராது, நீங்கள்தான் பார்த்து செய்ய வேண்டும், இப்போதும் நீங்களே செய்யுங்கள் என அருணாவிடம் சொன்னார்கள்.

தன்னை ஓரங்கட்டி விட்டார்களே என பொறுமினார் காதம்பரி. ஆனால் அருணாவே, “வாங்க அண்ணி, நீங்களும் கொடுங்க” என நல்ல விதமாகவே அவரையும் அழைத்து கொடுக்க வைத்தார்.

வந்திருந்த மற்றவர்கள் ஹேமாவுக்கு நலங்கு மட்டும் செய்து வாழ்த்தினார்கள். தன் மற்ற இரு மருமகள்களையும் அழைத்தார் அருணா.

 ஜோஷ்னா செய்த பிறகு, யசோ செல்ல, அதற்குள் காதம்பரி வீட்டுப் பக்க பெண்மணி ஒருவர்  முந்தி விட்டார்.

யசோ பொறுமையாக காத்திருந்தாள். அதற்குள் காதம்பரியின் பெரிய அண்ணியே, “இன்னும் யசோ செய்யலையே, வா வா உன் அக்காக்கு நீயில்ல முதல்ல செய்யணும்” என சொல்லி, யசோவின் கையை பற்றி இழுத்தார்.

அவர் இழுத்த வேகத்தில் காதம்பரியின் மேல் அவள் இடித்து விட, தடுமாறி விழுந்து விட்டார் காதம்பரி.

யசோ திகைத்த முகத்தோடு, “ஸாரி சித்தி” என்றாள்.

வேகமாக எழுந்த காதம்பரி, “ஒரு நல்ல விஷேஷத்துல எப்படி நிக்கணும்னு தெரியாது உனக்கு? உன் அதிர்ஷ்டம் என்னன்னு உனக்கே தெரியுமே, ஹேமாக்கு முன்னாடி உனக்குத்தான் கல்யாணம் ஆனது, ஆனா நீ இன்னும் சும்மாதான் இருக்க, நல்லா வந்திட்ட முந்திக்கிட்டு” என சீற்றமாக சொன்னார்.

யசோ அவ்விடத்தில் நில்லாமல் வெளியே சென்று விட்டாள்.  உடனே அவளிடம் விரைந்தாள் ஜோஷ்னா . மனைவியின் முகத்தில் கலக்கத்தை காணாததாலும் அண்ணி அவளிடம் சென்றதாலும் கெளதம் அங்கேயேதான் இருந்தான்.

தன் மனைவியை நோகடிக்க நினைத்தவரை உண்டு இல்லை என செய்ய தலையளவு ஆத்திரம் பெருக அதை அப்படியே காட்டதான் வாயை திறக்க போனான் கெளதம். ஆனால் உலகை காணாத அந்த சின்ன சிசு  நொடி நேரம் அவனது நினைவில் வந்து செல்ல, தன்னை கட்டுக்குள் வைத்துக்கொண்டான்.