கருவறையில் சாமி தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டவாறு வெளியே வந்த போது, தன் வாழ்வின் இன்னல்கள் யாவையும் எம்பெருமான் பார்த்துக் கொள்வான் என்கின்ற நம்பிக்கை அவளையும் மீறி அவளுக்குள் உருவாகி நிம்மதி அளித்திருந்தது.
ஈஸ்வரனின் கருணையைத் தாண்டி இது அந்த குரலின் மகிமையாக உணர்ந்தவள் அவசரம் அவசரமாக அந்த குரலுக்கானவரை சந்திக்க ஸ்தல விருட்சம் அருகே சென்றாள்.
“எங்கடி போற?” எனக் கேட்டவாறு அவள் பின்னேயே ஜானகியும் செல்ல, ஸ்தல விருட்சத்தின் அருகே சிவலிங்கத்தையும் நந்தி எம்பெருமானையும் தவிர வேறு எவரும் இல்லை.
நந்தியின் அருகில் சென்ற வஞ்சி, சிறு வயது நினைவுகள் வந்தவளாய், “நந்தியாரே நந்தியாரே! யாரது இவ்ளோ நேரம் பாட்டைப் பாடிட்டு இருந்ததுனு தெரியுமா?” என நந்தியின் காதில் கேட்டு விட்டுச் சிரித்தாள்.
தனது தோழியின் சிரித்த முகத்தை கண்டதில் மகிழ்ந்த ஜானகி, “என்னடி நீயா தனியா சிரிக்கிற? என்னனு என்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன்ல” எனக் கேட்டாள்.
“சின்ன வயசுல இப்படி தான் இந்த நந்தி காதுல நான் பேசுவேன். அந்த ஞாபகம் வந்துடுச்சு” என்றாள்.
“யாரது ஜானு பாடியது? அவரைத் தேடி தான் வந்தேன்” என்று கேட்டவாறு சுற்றுப்புறத்தை வஞ்சி பார்க்க,
“தெரியலையே! ஆனா குரல் செம்மயா இருந்துச்சுல” என்றாள் ஜானகி.
பேசியவாறே இருவரும் சற்று தள்ளி தரையில் அமர்ந்தனர்.
வஞ்சியின் கைப்பையில் இருந்த கைபேசி அதிர்வுற (வைப்ரேட்), “தம்பி போன் செஞ்சிட்டே இருக்கான் ஜானு. நான் இங்க இருக்கிறது மட்டும் தெரிஞ்சிது, என்னைக் கையோட கூட்டிட்டுப் போய்டுவாங்க” என்று அஞ்சியவாறு வஞ்சி உரைக்க,
“இப்ப எதுக்கு நீ தேவையில்லாம பயப்படுற? அப்படியே கூட்டிட்டுப் போனாலும் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு அந்தாளுக்கிட்டயே சொல்லிடு வஞ்சி” என்றாள் ஜானகி.
“இவங்கலாம் பொண்ணு விருப்பம் கேட்டு மேரேஜ் செய்ற ஆளுங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறியா நீ?” விரக்தியுடன் வஞ்சி கேட்க,
“உன் வாழ்க்கை உன் கையில் தான் வஞ்சி! உன்னை மீறி யாருக்கும் உன்னை அவங்களால் கட்டி வைக்க முடியாது. முடிஞ்ச வரைக்கும் போராடு வஞ்சி! போராடாம விட்டுடாத” வஞ்சியின் கையைப் பிடித்துக் கொண்டு தைரியமளித்தாள் ஜானகி.
‘ஓம் நம சிவாய சிவாய நம ஓம்’
இம்மந்திரத்தை உச்சரித்தவாறு கருவறையை ஒருவர் சுற்றிக் கொண்டிருப்பது அவரது குரலின் மூலம் வெளியே இருந்த இவர்களின் காதினுள் விழவும்,
“ஹே ஜானு! அவர் வாய்ஸ் தான்டி! வா யாருனு போய் பார்ப்போம். இவர் குரல் மனசை அப்படியே ரிலாக்ஸ் ஆக்குது தெரியுமா! கண்டிப்பா அவர் யாருனு பார்க்கனும்” என்றவாறு இப்பொழுது ஜானகியைக் கருவறைக்கருகே இழுத்துச் சென்றாள் இளவஞ்சி.
இவர்கள் உள்ளே சென்றதும் அந்த குரல் நின்றிருக்க, “எப்படியும் பத்து பேர்கிட்ட இருப்பாங்க. இதுல யாருனு நான் கண்டுபிடிக்க?” குழம்பிப் போனவளாய் அனைவரையும் இளவஞ்சி பார்க்க,
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி.
பிரகாரத்தைச் சுற்றி முடித்து இறைவனின் முன்பு இரு கரங்கள் கூப்பி ஆழ்ந்த பக்தியுடன் கூறியவாறு நின்றிருந்தவனைப் பார்த்தாள் இளவஞ்சி.
‘எங்கேயோ பார்த்திருக்கேன் இவரை’ என்பது தான் அவளின் முதல் உணர்வு!
இது எனக்கு நன்கு பரிச்சயப்பட்ட நெற்றியின் திருநீறு என அவளின் ஆழ்மனம் அடித்துக் கூற, அந்த ஆண்மகனின் முகத்தினை இமை சிமிட்டாது பார்த்திருந்தாள் இளவஞ்சி.
உள்ளத்தில் ஏதோ ஒரு பரவசம்! அவரை பார்த்துக் கொண்டிருந்தாலே நிம்மதி என்றொரு உணர்வு!
‘யாரிவர் உனக்கு’ மனசாட்சி கேள்வி எழுப்ப, தெரியாத அக்கேள்விக்கு என்னவென விடையளிப்பாள் அவள்.
கண்களை மூடி வாயில் மந்திரத்தை உச்சரித்தவாறு அவன் நின்றிருக்க, அவனையே பார்த்திருந்த தனது தோழியைப் பார்த்த ஜானகி, ‘என்னாச்சு இவளுக்கு? இவரை ஏன் இப்படி பார்க்கிறா?’ என யோசித்தவாறு அவளின் கையில் இடித்தாள்.
‘என்னது மூனு பட்டையான திருநீறா?’ மனதினுள் நினைத்தவாறு அவனைப் பார்த்த ஜானகி, ‘சின்னதா ஒரு வரியா தானே இவர் திருநீறு வச்சிருக்காரு. வேற யாரையும் சொல்றாளா இவ’ எண்ணியவாறு மற்றவர்களைப் பார்த்தாள். எவரும் மூன்று பட்டையான திருநீறை வைத்திருக்கவில்லை.
இதனை கூற ஜானகி வாயைத் திறந்த நொடி, எவரும் எதிர்பாராத நேரத்தில் இளவஞ்சியின் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றிருந்தார் அவளின் தாய் வசந்தா.
சட்டென யாரோ இழுக்கவும் திரும்பிப் பார்த்தவள் பதறியவாறு, “அம்மா” என்று அழைக்க,
“அங்கே உனக்காக எல்லாரும் காத்துட்டு இருந்தா இங்கே நின்னுட்டு என்னடி செய்ற? அங்கே மாப்பிள்ள வீட்டுல எல்லாரையும் உட்கார வச்சிட்டு வந்திருக்கேன். ஒழுங்கா என் கூட கிளம்பி வா” கருவறை விட்டு வெளியே வந்து கொடி மரத்தினருகே இழுத்து வந்து நிறுத்தியிருந்தார்.
“அம்மா நான் வரலை. எனக்கு அந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலை” என்று தரையில் காலை ஊன்றி இழுத்த இழுப்புக்கு செல்லாது நின்றாள் இளவஞ்சி.
இவர்களின் செய்கையில் கோவிலில் இருந்த அனைவரும் இவர்களை ஒரு பார்வை பார்த்தவாறு தங்களது வேலையில் ஈடுபட்டிருக்க, இன்னுமே கண்களை மூடியவாறு ஆழ்ந்த வேண்டுதலில் இருந்தான் அவன் சக்தீஸ்வரன்.
“அவளுக்கு பிடிக்காத கல்யாணத்தை ஏன் செஞ்சி வைக்க பார்க்கிறீங்க ஆன்டி” என்று ஜானகி கேட்ட மறுநொடி,
“எங்க வீட்டு பிரச்சனைல நீ தலையிடாதம்மா. என் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுனு எனக்குத் தெரியும். ஒரு தாயைத் தவிர பொண்ணோட நல்லது கெட்டது வேற யாருக்குத் தெரிஞ்சிடப் போகுது” என்றவாறு அவளை இழுக்க, வர மாட்டேன் என அடம் பிடித்தவாறு நின்றாள் இளவஞ்சி.
போவோர் வருவோர் எல்லாம் இவர்களைப் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
கண்களைத் திறந்து வேண்டுதலை முடித்தவனாய் கருவறை விட்டு வெளியே வந்த சக்தி, கொடி மரத்தினருகே அமர்ந்தான்.
“வந்திருக்க பெரியவங்க முன்னாடி என் மானத்தை வாங்க தானே இப்படி செய்ற நீ! உன் அக்கா தான் என் பேச்சை கேட்கலைனா நீயும் அப்படித் தானே இருக்க. இப்ப நீ வீட்டுக்கு வரலைனா நான் விஷத்தைக் குடிச்சிடுவேன். அப்புறம் உன் இஷ்டம்” என்று ஆங்காரமாக உரைத்து அவளின் கையை விட்டவராய் விறுவிறுவென்று சென்றார் வசந்தா.
திடீரென்று கேட்ட வசந்தாவின் குரலில் இவர்கள் புறம் திரும்பியவன்,
அன்னையின் பேச்சில் திடுக்கிட்டு அம்மா என்று அழைத்தவாறு குழப்பமாக கையைப் பிசைந்துக் கொண்டு வேதனையில் தொண்டைக் குழி ஏறியிறங்க கண்ணீருடன் நின்றிருந்த இளவஞ்சியைக் கண்டான்.
நெஞ்சில் சுருக்கென ஒரு வலி வந்து போனது. மார்பின் மத்தியில் பாராங்கல்லை வைத்தது போன்ற பாரத்தை நொடிப்பொழுதில் உணர்ந்தான்.
‘அழாதே உனக்காக நானிருக்கிறேன்’ என்று அவளைச் சமாதானம் செய்ய சொல்லி உந்தியது அவனின் மனது.
அவளின் கண்ணீர் அவனின் மனதில் இனம்புரியா வலியை கூட்ட, அந்நிலையிலும், ‘இந்த காலத்துலயும் இவ்ளோ பெரிய மூனு கல் மூக்குத்தி போடுறாங்களா?’ அவளின் முகத்தினில் பார்வையைப் பதித்தவனாய் நினைத்தவன், ‘யாரிந்த பெண்?’ என யோசித்தவாறு பார்த்திருந்தான்.
ஆனால் அவன் பார்வைக்கு மட்டுமே அந்த மூக்குத்தி காட்சி கொடுத்ததை அறியாமல் போனான் அவன்.
வசந்தா விறுவிறுவெனச் செல்லவும் ஜானகியும் இளவஞ்சியும் என்ன செய்வதெனப் புரியாது நின்றார்கள்.
நடப்பது நடக்கட்டும் என மனத்தினைத் திடப்படுத்தி கொண்டவளாய் கண்களைத் துடைத்தவாறு தனது தாயாருடன் இளவஞ்சி செல்ல, கனத்த மனத்துடன் செல்லும் அவளையே பார்த்திருந்தாள் ஜானகி.