“அவ சொல்ல வேணாம்னு சொன்னா நீயும் ஒத்துக்கிட்ட, அதை கூட விடும்மா. ஃபோட்டோவை எடிட் பண்ணி தந்தது யாரு?” என கருணா கேட்க, ஹேமா அழுது விட்டாள்.
மேடிட்டிருந்த வயிறோடு மகள் அழுவதை காண சகிக்காதவர், “போ போய் படுத்து தூங்கு” என்றார்.
அப்பாவின் கையை பிடித்துக்கொண்டவள், “அம்மா என்ன சொல்லியிருந்தாலும் நான் அப்படி செஞ்சிருக்க கூடாதுதான், யசோ பக்கம் ஸ்ட்ராங்கா பேச அவங்க க்ளோசா இருக்கிறது போல ஃபோட்டோ வேணும்னு கேட்டாங்க அம்மா” என்றாள்.
“அவ்ளோ அப்பாவியாம்மா நீ?” எனக் கேட்டார் கருணா.
“அம்மா அப்படி பேசினாங்க ப்பா என்கிட்ட, அவளுக்கு கெடுதல் செய்ய நினைக்கிறாங்கன்னு தோணாம போயிடுச்சு”
“ஆனாலும் நடந்த தப்புக்கு நீயும் துணைங்கிறது மாறாதேம்மா?”
“தப்புதான் ப்பா, அதான் அவர் என்னை விட்டுட்டு போயிட்டார். நீங்கதான் ப்பா ஏதாவது செய்யணும்” என சொல்லி அழுதாள்.
தான் சரி செய்து தருவதாக உறுதி சொன்னவர் ஆனால் அதன் பின் உன் அம்மாவின் கெட்ட போதனைகளை அறவே கேட்க கூடாது எனவும் கண்டித்து விட்டார்.
சொன்னது போலவே அடுத்த நாள் காலையில் சண்முகத்தின் வீடு சென்றார். இப்போது சண்முகத்துக்கும் எல்லா உண்மைகளும் தெரிய வந்திருக்க, முக மலர்ச்சியே இல்லாமல் “வாங்க” என்றார்.
கருணாவுக்கு சங்கடம்தான். ஆனால் தன் பெண்ணின் வாழ்க்கையை நினைத்து தன்னை திடப் படுத்திக் கொண்டார்.
வங்கி செல்வதற்காக தயாராகி வந்த குணா மாமனாரை பார்த்து விட்டு, “வாங்க மாமா” என உள்ளே போன குரலில் அழைத்தான்.
சற்று முன்னர்தான் கல்யாண், கௌதம் இருவரும் தங்கள் தம்பியின் வாழ்க்கை குறித்து ஆலோசனை செய்திருந்தனர். எப்படியும் ஹேமாவின் அப்பா வருவார் என கணித்திருந்த கெளதம், அவர் வந்தால் என்ன பேச வேண்டும் எனவும் குணாவுக்கு சொல்லிக் கொடுத்திருந்தான்.
ஆனால் இன்றே கருணாவின் வரவை எதிர்பார்த்திருக்கவில்லை கௌதமின் சகோதரர்கள்.
யசோ தேநீர் கொடுத்து சித்தப்பாவை உபசரித்தாள். ஹேமா எப்படி இருக்கிறாள் என விசாரித்த அருணா, “யசோவும் உங்க வீட்டு பொண்ணுதான், அண்ணி இப்படி நடந்திருக்க வேணாம்” என்றார்.
“குணா மாப்ள சட்டுன்னு வெளியேறி வந்திட்டார், ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பனா போயிட்டதால என்னால அப்டி வர முடியலை தங்கச்சி” என வருத்தமாக சொன்னார் கருணா.
அவரின் அந்த பேச்சை கேட்ட சண்முகத்திற்கு என்னவோ போலானது.
“ஹேமா இதுல சம்பந்த படலைனா அவளையும் சேர்த்து அழைச்சிட்டு வந்திருப்பேன் மாமா. அவள்ட்டருந்து நான் இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கல” என அதிருப்தியாக சொன்னான் குணா.
அதற்காக இப்போது ஹேமா மிகவும் வருத்தப்படுகிறாள் என்றார் கருணா.
“என்ன வேணா பண்ணிட்டு வருத்தபட்டா ஆச்சா? அண்ணி அண்ணனை நம்பினதால போச்சு, இல்லைனா எவ்ளோ பெரிய சண்டை வந்திருக்கும் இவங்களுக்குள்ள?” எனக் கேட்டான் குணா.
கருணா பதில் சொல்ல முடியாமல் இயலாமையோடு பார்த்தார்.
“விடுறா, இவரு என்ன பண்ணுவார்? ஹேமாவை கூட அது அம்மாதான் கெடுக்குது” என்றார் சண்முகம்.
அடுத்து என்னன்னு பார்க்கலாமே என சொல்லி கல்யாண்தான் இந்தப் பேச்சின் திசையை மாற்றினான்.
ஹேமா இனி எந்த தவறும் செய்ய மாட்டாள், அவள் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் அவள் மீது கருணை காட்டுங்கள் மாப்பிள்ளை என கேட்டுக் கொண்டார் கருணா.
“நாம சரி பண்ணித்தான் வைக்க போறோம், கருணை அது இதுன்னு பேச வேணாம். நீங்க சாதாரணமா இருங்க” என்றார் சண்முகம்.
“நீயும் உன் மனசுல உள்ளதை சொல்லுடா குணா, ம்ம்ம்…” என தம்பியை தயக்கமில்லாமல் பேச ஊக்கனான் கல்யாண்.
இனி அந்த வீட்டிற்கு வர மாட்டேன், ஹேமாவை இங்கு கொண்டு வந்து விடுங்கள் என்றான் குணா.
மருந்து கொடுக்கும் விழாவை முடித்து விட்டு இங்கு கொண்டு வந்து விடுகிறேன் என்றார் கருணா.
குணா மறுப்பாக ஏதோ பேசப் போக, சண்முகம் தடுத்து விட்டார்.
“அதுக்குன்னு அந்த பொண்ணு அங்க போக வர இருக்க கூடாதுன்னு ரூல்ஸ் போட போறியா? விஷேஷம் முடிச்சிட்டே இங்க அழைச்சிட்டு வருவோம்” என சண்முகம் சொல்ல, கல்யாணும் தம்பியின் தோளை அழுத்திப் பிடித்து அதற்கு ஒத்துக் கொள்ள செய்தான்.
இனி குணாவும் ஹேமாவும் இங்குதான் இருப்பார்கள் என்பதை தெளிவாக கருணாவிடம் சொல்லி விட்டான் கல்யாண்.
சம்மதம் சொன்ன கருணா, இனியாவது ஹேமாவுடன் பேசுங்கள் மாப்பிள்ளை என குணாவிடம் கூறி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.
குணாவும் ஹேமாவுக்கு அழைத்து மாமனாரிடம் சொன்னதை அவளிடம் சொல்லி, இங்கு இருக்க நீ உடன் பட்டால் நாம் சேர்ந்து வாழலாம் இல்லையென்றால் உன் இஷ்டம் என்றான்.
குணா என்ன சொன்னாலும் தலையாட்ட தயாராக இருந்த ஹேமா உடனே ஒப்புக் கொண்டு விட்டாள்.
இரவில் கௌதமிடம் எல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தாள் யசோ. கொட்டாவி விட்டவன், “உன் அக்கா இங்க வந்தப்புறமும் தள்ளித்தான் இருக்க, புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு தூக்கம் வந்திடுச்சு” என்றாள்.
“பேச்சை மாத்த வேணாம் பப்பிக் குட்டி”
“நான் ஒன்னும் பப்பி இல்ல” என சிணுங்கினாள்.
“ஹையோ அப்டி சிணுங்காதடி என் தோகை மயிலு” என அவன் அவளை போலவே சிணுங்கிக் கொண்டு சொல்ல, அதற்கும் மறுப்பாக தலையாட்டினாள்.
“உன் கன்னத்தை எப்ப கடிச்சு சாப்பிட போறேன் என் செல்லப் பனியாரம்?” எனக் கேட்டான்.
“அதுக்கு நீங்கதான் நாள் குறிக்கணும்” என்றாள்.
“இப்போதைக்கு வாய்ப்பில்ல யசோ, தூக்கம் வருது வைக்கவா?” என கேட்டான்.
ஏக்கமாக அவனது உருவத்தை வருடி விட்டவள் சரியென தலையாட்டினாள்.
இரண்டு நாட்கள் கழித்து முன் மாலை பொழுதில் அறையை விட்டு வெளியில் வந்தாள் யசோ.
வானம் கறுத்துக் கிடந்தது. ஜோஷ்னா குழந்தைகளுடன் கீழே இருந்தாள் போலும், அறை வெளிப் பக்கமாக தாழிட பட்டிருந்தது.
காலையில் தலைக்கு ஊற்றியிருந்தவள் கூந்தலை இன்னும் பின்னலிடாமல் விட்டிருந்தாள். அள்ளி கொண்டையிட்டுக் கொண்டவளுக்கு சிகைக்குள் கை நுழைத்து விளையாடும் கணவனின் நினைவு வாட்டியது.
குளிர் காற்று தீண்ட கைகளை அணைவாக கட்டிக் கொண்டு வானத்தை பார்த்தாள். கரு மேகங்கள் இவள் பக்கமாக நகர்ந்து வந்து கொண்டிருந்தன.
எப்போது வேண்டுமென்றாலும் மழை வரலாம் என நினைத்தவள் துணிகளை எடுத்து ஆரம்பித்தாள்.
இடுப்பில் ஏதோ ஸ்பரிசம் உணர்ந்தவள் பயந்து போனவளாக துள்ளிக் குதிக்க அவளை இழுத்து அணைத்துக் கொண்ட கெளதம், “என் ஜோடிக்குருவி எப்படி இருக்கா?” என அவளின் காது மடலில் உதடுகள் உரச கேட்டான்.
அவளின் இதயத் துடிப்பு தாறு மாறாக துடித்துக் கொண்டிருந்தது. நன்றாக மூச்சு இழுத்து விட்டுக் கொண்டாள்.
“ சரப்ரைஸ் ஆனியா செல்லம்மா?” எனக் கேட்டான்.
அவன் அணைப்பிலிருந்து முகத்தை விலக்கிக் கொண்டவளின் ஒரு கையில் துணிகள் இருக்க, மற்றொரு கையால் அவனை தொட்டு தடவிப் பார்த்தாள்.
“என்ன… கண்ணு காது மூக்கெல்லாம் அந்தந்த இடத்துல கரெக்ட்டா இருக்கா? அப்படியே எல்லா…த்தையும் செக் பண்ணிடு அம்முக்குட்டி” என மயக்கும் குரலில் சொன்னான்.
அவள் இன்னுமே திகைப்பு நீங்காதவளாக இருக்க, அவளின் நெற்றி முட்டியவன், “என் செல்ல பொண்ணே… உன் முன்னாடி நாந்தான் டி நிக்கிறேன்” என்றான்.
கையில் இருந்த துணிகளை தரையில் நழுவ விட்டவள் வேகமாக அவனை அணைத்துக் கொண்டாள். இனி உன்னை விடவே மாட்டேன் என்பது போல கணவனை இறுகப் பிடித்துக்கொண்டாள்.
அவள் அழுவதை உணர்ந்தவன் தலையை அழுத்திக் கொடுத்து, “நீ அழறத பார்க்கவா ஆகாயத்துல பறந்து வந்தேன்?” எனக் கேட்டான்.
“நான் நினைக்கவே இல்ல நீங்க வருவீங்கன்னு” அவனது அணைப்பில் இருந்தவாறே பேசினாள்.
“நான் வேணும்னா திரும்ப ஜெர்மனி போயிடுறேன், நீ என்னை நல்லா நினைச்சதுக்கு அப்புறம் லெட்டர் போடு, அப்புறம் வர்றேன்” என்றான்.
முகத்தை விலக்கி அவனை முறைத்துப் பார்த்தவள் சுற்றம் பார்த்து விட்டு உயர எம்பி அவன் இதழ்களில் முத்தமிட்டாள்.