இடையிடையே எட்டி பார்த்து க் கொண்டே இருந்தான் நவீன். அந்த நேரம் குணா வீடு வரவும் அவனிடம் சென்றவன் தன் சித்தப்பாவிடம் சொன்னதையே சொல்லி, “சித்தப்பாக்கு நான் சொல்றது புரியலை, நீங்க எங்கள இங்கேருந்து அனுப்பி வைங்க மாமா” என்றான்.
என்னவென பார்க்கலாம் என சொல்லி குணா ஓரடி எடுத்து வைக்க, அவனது கையை பிடித்துக்கொண்ட நவீன், “அக்காட்ட நீங்களும் விசாரிக்க போறீங்களா? மாமா சொன்னது உடனே இங்கேருந்து கிளம்பணும்னுதான்” என்றான்.
சின்ன அண்ணனுக்கு அழைத்தான் குணா. இப்போது அழைப்பு செல்லவும் எடுத்து விட்டான் கெளதம்.
“சீக்கிரம் சொல்லுடா” என கெளதம் சொன்ன விதமே அவன் பிஸியாக இருப்பதை சொன்னது.
நவீன் சொன்னதை சுருக்கமாக சொன்ன குணா, “அண்ணிகிட்ட என்னன்னு கூட கேட்கல நான், இப்ப என்ன செய்யன்னு நீயே சொல்லு” என்றான்.
“உன் மாமியார் இல்லாம யாரா இருக்கும் அவ அழுகைக்கு காரணம்?” என சீறிய கெளதம், “ரெண்டு பேரையும் உடனே நம்ம வீட்ல கொண்டு போய் விட்ரு, நைட் அவகிட்ட நானே என்னன்னு விசாரிச்சுக்கிறேன்” என முடிவாக சொல்லி விட்டான்.
யசோ இருந்த அறைக்கு குணா வந்த போது இன்னும் அங்குதான் இருந்தார் கருணா.
எதுவும் சரிவர தெரியாமல் மாப்பிள்ளையிடம் என்ன சொல்லவென அமைதியாகவே இருந்தார் கருணா.
“கெளதம் உங்களை வீட்டுக்கு போக சொல்றான் அண்ணி, நான் கார் எடுக்கிறேன், சீக்கிரம் கிளம்புங்க” என்றான் குணா.
அவள் கேட்ட விதத்தில் அவரால் மறுக்க முடியவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் யசோவையும் நவீனையும் காரில் கொண்டு போய் விட்டான் குணா.
சண்முகம் என்னவென கேட்டதற்கு, “இன்னிக்கு ஃப்ரீயா விடுங்க ப்பா, கெளதம் பேசிக்கிறதா சொல்லிட்டான்” என கூறி விட்டான் குணா.
‘ஏதோ பிரச்சனை போல, ஐயோ இந்த கெளதம் பயலுக்கு என்ன பதில் சொல்வேன்?’ என சண்முகத்துக்கு பயம் தொற்றிக் கொண்டு விட்டது. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
கெளதம் வந்த பிறகுதான் இதை விசாரிக்க வேண்டுமென கருணா அமைதியாக இருந்து கொண்டார். ஆனால் குணா விடுவதாக இல்லை. மனைவிக்கு கிடுக்குப் பிடி போட்டு விசாரித்து அவளிடமிருந்து அரை குறையாக விஷயத்தை கறந்தான்.
கௌதமையும் யோகிதாவையும் தவறாக நினைத்ததுதான் யசோவின் அழுகைக்கு காரணம், வாழ்க்கை பற்றிய பயத்தில்தான் புகுந்த வீடு செல்ல ஒத்துக் கொண்டாள் அண்ணி என நினைத்துக் கொண்டான் குணா.
‘நீ ஃப்ரீ ஆனதும் அண்ணிக்கு கால் பண்றதுக்கு முன்னாடி எனக்கு கூப்பிடு’ என கௌதமுக்கு செய்தி அனுப்பி வைத்தான் குணா.
வேலையை முடித்த கௌதமுக்கு நல்ல பசி, ‘வீட்டிற்கு வந்து விட்டோம், மாமா கடையிலிருந்து உணவு வாங்கித் தந்தார், நான் அக்கா இருவருமே சாப்பிட்டு விட்டோம்’ என எல்லாம் மாமனுக்கு அப்டேட் செய்திருந்தான் நவீன்.
ஆகவே கவலை குறைந்தவனாக முதலில் சாப்பிட சென்றான் கெளதம். அவனது குழுவிலிருந்த பையனும் அவனுடம் இணைந்து கொண்டான்.
சாப்பிடும் நேரத்தில் பேச்சு வாக்கில் பூங்காவில் யோகிதாவும் இன்னொரு பெண்ணும் பேசிக் கொண்டதை சொல்லி விட்டான் அவன்.
கௌதம் அதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்கவில்லை. அறைக்கு திரும்பியதும் தம்பிக்கு அழைத்தான்.
முகநூல் புகைப்படம் குறித்து சொன்னான் குணா. அதை தனக்கு அனுப்பி வைக்குமாறு சொன்னான் கெளதம்.
“அது… ஃபோட்டோ பத்தி ஹேமா சொன்னா, ஆனா அதை நான் பார்க்கல”
“அவ்ளோ நம்பிக்கையா ஹேமா மேல?”
“கண்டிப்பா என்கிட்ட பொய் சொல்ல மாட்டா. யசோவை நினைச்சு கூட கவலை படுறா”
“அப்ப விசாரிக்க வேண்டியது ஹேமாவைத்தான்” என கோவமாக சொன்னான் கெளதம்.
“ப்ளீஸ் கெளதம் நீ ஹேமாவை இதுக்குள்ள கொண்டு வராத, அவ ஏதோ எதேச்சையா ஃபோட்டோ பார்த்திருக்கா”
“நீ சொல்றது போலவே இருக்கட்டும். யசோவுக்கு எப்படி தெரியும் அந்த போட்டோ பத்தி? அவளுக்கு எஃப் பி அக்கவுண்ட் கிடையாது” என அண்ணன் சொல்ல, குணாவும் யோசித்தான்.
ஆனாலும் மனைவியை விட்டுத் தராமல், “அவ அம்மா ஃபோன்லதான் ஃபோட்டோ இருக்குன்னு சொன்னா. அவங்கதான் ஏதாவது பண்ணியிருக்கணும். அந்த ஃபோட்டோ நாளைக்கு உனக்கு அனுப்ப ட்ரை பண்றேன்” என்றான்.
கௌதமுக்கு ஏற்கனவே உடல் சோர்வு, இப்போது காதம்பரியின் செயல், அந்த வீட்டில் இருக்கும் தன் தம்பியின் எதிர்காலம் என எல்லாம் நினைத்து மனமும் சோர்ந்தது.
“உன்னை டவுட் பட்டுத்தான் அண்ணி அழுதிருக்கணும். அவங்கள்ட்ட நீ பேசுற முன்னாடி நான் இதை சொல்லிட்டா அவங்கள சமாளிக்க உனக்கு ஹெல்ப்பா இருக்கும்னுதான் ஃபர்ஸ்ட் என்கிட்ட பேச சொன்னேன்” என்றான் குணா.
“உன்னை நினைச்சு பரிதாபமா இருக்குடா தம்பி, ஹேமாவுக்கு இதுல என்ன பங்குன்னு தெரிஞ்சுக்க, அப்படி இருந்தா அவளை இப்பவே நீ சரி பண்ணனும். இல்லைனா ஒரு நாள் உனக்கு என்ன கொடுமை வேணும்னாலும் நடக்கும்” என என்றான் கெளதம்.
“அந்த ஃபோட்டோ உண்மைதானே கெளதம்? நீ ஃப்ரெண்ட்டா கூட யோகிதாட்ட பழகியிருக்கலாம், நார்மல் ஃபோட்டோவா கூட இருக்கலாம். அண்ணிக்கு கார்ப்பரேட் கல்ச்சர்லாம் தெரியாது, அதனால அவங்க உன்னை தப்பா நினைச்சி…”
“நிறுத்துடா! அவ என்னை தப்பா நினைச்சான்னு உன்கிட்ட வந்து சொன்னாளா? சொல்லுடா சொன்னாளா?” என ஆத்திரமாக கேட்டான் கெளதம்.
“இல்லை… ஆனா…”
“இந்த அனா ஆவன்னாலாம் வேணாம். நான் கேட்டதுக்கு பதில் இல்லைதானே?”
“ஆமாம்”
“ம்ம்… நல்லா தெரிஞ்சுக்க, நானே என் வாயால இப்படின்னு சொன்னா கூட அதை நம்ப மாட்டா அவ, என்ன விளையாட்டு பேச்சு இதுன்னு என்கிட்ட கேட்பா. என்னடா தெரியும் அவளை பத்தி உனக்கு? ஒரு ஃபோட்டோ காட்டினா என்னை சந்தேக பட அவ சாதாரண பொண்ணு கிடையாது, அவ என் வைஃப் யசோத்ரா. அவளுக்கு தெரியும் என்னை, என்கிட்டருந்து எந்த விளக்கமும் அவளுக்கு தேவையில்ல. உன்னை சுத்தி என்ன டிராமா நடக்குதுன்னு உன் கண்ண தொறந்து பாரு” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் கெளதம்.
குணா ஸ்தம்பித்து போய் நிற்க, அப்போதுதான் யசோவும் நவீனும் கிளம்பி விட்டனர் என்பது தெரிந்து கணவரிடம் ஏதோ வழக்காடிக் கொண்டிருந்தார் காதம்பரி.
வேகமாக யோகிதாவின் முகநூல் பக்கத்திற்கு போய் பார்த்தான் குணா. அங்கே எல்லாமே குழுவினராக இருக்கும் புகைப்படங்கள்தான்.
விரைவாக நடந்து மாமனார் மாமியாரிடம் போய் நின்றவன், “அத்தையோட ஃபோன் வாங்கி தாங்க மாமா” என்றான்.
சத்தம் கேட்டு ஹேமாவும் வந்து விட்டாள்.
காதம்பரி தயங்க, அவருக்கும் பின்னால் டீ பாய் மீதிருந்த அவரின் கைப்பேசியை எடுத்துக் கொண்ட குணா, மனைவியை பார்த்து, “அன்லாக் பண்ணு” என கட்டளை இட்டான்.
அம்மாவை பார்த்தாள் ஹேமா. இப்போது கருணாவுக்கும் மனைவி மீது சந்தேகம் முளைக்க அவரும் மகளிடம், “ஓபன் பண்ணும்மா” என்றார்.
சில நிமிடங்களில் தன் மாமியார் பார்த்து வைத்த வேலையை மாமனாரிடம் அம்பல படுத்தி விட்டான் குணா.
“இத செய்ய உங்க பொண்ணும் துணை” என ஹேமாவை கோவமாக பார்த்துக் கொண்டே சொன்னான் குணா.
கருணாவின் முகம் கோவத்தில் இறுகிப் போனது.
“இவங்க சரியான ஓநாய்! இவங்களோட ஹேமா இருந்தா இவளும் அப்படித்தான் மாறுவா, என் குழந்தை… மை காட்! இதுக்கு மேல இங்க இருக்க முடியாது என்னால” என தலையை பிடித்துக் கொண்டான் குணா.
“என்னங்க…” என பதறிக் கொண்டு கணவனின் கையை பிடித்தாள் ஹேமா.
அவளின் கையை உதறி விட்ட குணா வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
தான் ஒன்று நினைக்க அது வேறெப்படியோ முடிந்து போனதில் செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தார் காதம்பரி.