வெளிப்படையாக சொல்லவும் செய்த கருணா, “இப்படித்தான் இருக்கணும் குட்டி, படிப்பு முடிஞ்சதும் தொழிலை பார்க்கணும், துணிச்சலா இருக்கணும்” என்றார்.

தனக்கு வழங்கப்பட்ட பாராட்டில் சிரித்த நவீன், “மாமாவும்  சொல்லிருக்காங்க சித்தப்பா, மனசுல பட்டத பேசவோ செய்யவோ தயங்க கூடாதுன்னு” என்றான்.

“ம்ம்… வேறென்னலாம் சொல்லி கொடுத்திருக்கார் உன் மாமா?” என சுவாரஷ்யத்தோடு கேட்டார் கருணா.

“நமக்கு அநியாயம் நடந்தப்புறம் ஹையோ பேசாம போயிட்டோமேன்னு ஃபீல் பண்ணாம, நல்லா பேசிட்டு அப்புறம் இப்படி பேசிட்டோமேன்னு ஃபீல் பண்ணிக்கிறது பெட்டெர்னு சொல்லி கொடுத்தாங்க” என்றான் நவீன்.

“அட்ரா சக்கை! உன்னை சண்டியராக்கி விடுறாராக்கும் உன் மாமா?” என கிண்டலாக கேட்டார் கருணா. அதற்கு நவீன் சின்னதாக சிரித்து வைத்தான், அவ்வளவுதான்.

“அண்ணன் அப்படித்தான் மாமா, எப்ப நல்லாருப்பான் எப்ப கோவப்படுவான் எதுவும் சொல்ல முடியாது, எவ்ளோ இறங்கிப் போவானோ அவ்ளோ ஏறியும் நின்னுப்பான்” என்றான் குணா.

இப்படியே பேசிக் கொண்டு சாப்பிட்டு முடித்தவர்கள் கிளம்பி விட்டனர்.

நவீனுக்கு விடுமுறையில் செய்யவென ப்ராஜக்ட் கொடுத்திருந்தார்கள். தேவையானது எல்லாம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தாள் யசோ. வெளி வராண்டாவில் அமர்ந்து அதை செய்ய ஆரம்பித்து விட்டான்.

ஹேமாவுக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் செய்து தருகிறேன் என சொல்லி சமைத்து கொடுத்தாள் யசோ. விரும்பி சாப்பிட்ட ஹேமாவும் அவளுக்கு நன்றி சொன்னாள்.

அன்றைய நாள் சுமூகமாகவே முடிந்தது.

அடுத்த நாள் மதிய வேளையில் யசோவை தனியாக அழைத்து சென்றார் காதம்பரி.

ஏசி விஷயத்திற்கு குணா பேசியதை சுட்டிக் காட்டியவர், இனி கல்யாண் குடும்பமும் அங்கு வர போக இருக்கும், நீயும் பெங்களூரு சென்று விடுவாய், நவீனை அங்கு விட்டு வைப்பது நல்லதல்ல என்பது போல பேசினார்.

அப்படியெல்லாம் இல்லை, அங்கு நவீன் நன்றாக இருக்கிறான் என்றாள் யசோ.

எல்லாமே நடிப்பு என்ற காதம்பரி கைப்பேசியை எடுத்து காட்டினார். குழுவாக இருந்த புகைப்படத்தைதான் முகநூலில் பதிவிட்டிருந்தாள் யோகிதா. ஹேமாவை கொண்டு எடிட் செய்து கௌதமும் யோகிதாவும் மட்டும் சேர்ந்து இருப்பது போல மாற்றியிருந்தார் காதம்பரி.

குழப்பமும் திகைப்புமாக சித்தியை பார்த்தாள் யசோ.

“உன் புருஷன் உன்கிட்ட நல்லவன் வேஷம் போட்டுட்டு வெளிநாட்டுல என்ன ஆட்டம் பார்த்தியா? யாருமில்லாத பொண்ணுக்கு என்ன நடந்தாலும் யாரும் கேட்க மாட்டாங்கங்கிற தைரியம், ஹேமா ஃபங்ஷன் முடியட்டும், உன் சித்தப்பாவை வச்சு பேச வைக்கிறேன். அவர் கண்டிச்சா சரியாகிடுவார் உன் வீட்டுக்காரர்” என கதை சொன்ன சித்தியை சூனியக்காரி போல பார்த்தாள் யசோ.

சொத்துக்காகத்தான் உன்னை மருமகளாக்கி கொண்டார் சண்முகம், முதலில் வேண்டாம் என்று போன உன் கணவனையும் சொத்து ஆசை காட்டித்தான் வரவழைத்திருக்கிறார்.

உன் வாழ்வுதான் இப்படி என்றால் நவீனையும் அங்கே மாட்டி விட பார்க்காதே. விடுமுறை முடிந்ததும் இங்கிருந்தே பள்ளிக்கு செல்லட்டும் அவன். உன் சித்தப்பாவின் கண்காணிப்பில்  அவன் இருப்பதுதான் அவனுக்கு நல்லது என்கிற ரீதியில் நிறைய சொன்னார்.

யசோவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

ஆறுதல் சொல்வது போல அவளின் தோளை பற்றிய காதம்பரி, “உன் வாழ்க்கைய சித்தப்பா சரி பண்ணி தருவார், அங்க உள்ள யாரையும் நம்பாத, நான் உன் சித்தப்பாலாம் உங்களை விட்ர மாட்டோம்” என்றார்.

மிரட்சியோடு சித்தியை பார்த்திருந்த யசோவுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

நல்லவர் போல இன்னும் சில ஆறுதல் மொழிகள் பேசி, “நீ கொஞ்ச நேரம் படுத்துக்கோ யசோ, நான் காபி கொடுத்தனுப்புறேன்” என சொல்லி அறைக்கு அனுப்பி வைத்தார்.

தனிமை கிடைத்ததும் படுத்துக் கொண்ட யசோவுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. வேலையாள் கொடுத்து சென்ற காபியை அவள் சீண்டவே இல்லை.  ஏதோ எடுக்க அறைக்கு வந்த நவீன் அக்காவை பார்த்து விட்டு என்னவென கேட்டான்.

அவன் முன் அழ வேண்டாம் என நினைத்து கண்களை துடைத்துக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் அவளுக்கு அழுகை வந்தது.

“ஒன்னுமில்லடா, தலைவலி, நீ ப்ராஜக்ட் பண்ணிட்டு இருந்தியே போ அதை பாரு, கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சா எனக்கு சரியாகிடும்” என தம்பியிடம் சொல்லி அவனை அனுப்பி வைத்து விட்டாள்.

அக்கா சொல்வதை நம்பாத நவீன் உடனே கௌதமுக்கு அழைத்தான். அழைப்பு செல்லவில்லை.

உடல் ஏதோ சோர்வாக இருக்க நேரமாகவே வீட்டுக்கு வந்து விட்டார் கருணா. நேராக சித்தப்பாவிடம் போய் நின்ற நவீன், “அக்கா அழுது சித்தப்பா” என்றான்.

பதறியவர் எதற்காக எனக் கேட்டார்.

அக்கா சொன்னதை சொன்னவன், “ஆனா அது நிஜமா இருக்காது. இப்படி ஏதாவது ஆனா உடனே இங்கேருந்து கிளம்பிடணும்னு மாமா சொல்லியிருக்காங்க. உங்ககிட்ட குணா மாமாட்ட யார்கிட்டயாவது சொன்னா வீட்ல கொண்டு போய் விடுவீங்கன்னு சொன்னாங்க” என்றான்.

“என்னன்னு முதல்ல கேட்போம் நவீன்” என்றார் கருணா.

“இல்லை சித்தப்பா, டிலே பண்ணாம இங்கேருந்து போயிடணும்னுதான் மாமா சொல்லியிருக்காங்க. மாமா சொன்னா சரியா இருக்கும்” என அடமாக சொன்னான் நவீன்.

சரி இருடா என்றவர் யசோவிடம் சென்று விசாரித்தார். தம்பியிடம் சொன்னதைதான் சொன்னாளே தவிர உண்மையை சொல்லவில்லை யசோ.

அவருக்கு கோவம் வந்து விட்டது.

“உள்ளதை சொல்லாம இப்படி அழுதா என்னன்னு நினைக்க யசோ?” என அதட்டலாக கேட்டார் கருணா.

அழுகையை நிறுத்தி விட்ட யசோ, “ஒன்னுமில்ல சித்தப்பா” என்றாள்.

தன் மனைவியின் மீது சந்தேகம் கொண்டவர் நேராக காதம்பரியின் அறைக்கு சென்று விட்டார்.

கணவரிடமும் அந்த புகைப்படத்தை காட்டிய காதம்பரி, யோகிதா யார் என்ற விவரத்தையும் சொன்னார். “இத பார்த்துதான் அவ அழறா போல, என்னன்னு விசாரிக்கலாம்னுதான் நான் சொன்னேனே, அப்புறம் எதுக்கு அழறா?” என்றார்.

அந்த புகைப்படம் எப்படி கிடைத்தது என கருணா கேட்க, முகலூல் பக்கத்திலிருந்து எடுத்தது, ஹேமாதான் பார்த்தாள், ஆனால் அவளின் பெயரை இழுத்து விடாதீரகள், கர்ப்பமான பெண்ணை யாராவது கரித்து கொட்டினால் அவளுக்கு நல்லதல்ல என்றார்.

மனைவி குழப்பியதில் கருணாவுக்கும் கௌதமின் மீது சந்தேகம் எழுந்து விட்டது. மீண்டும் யசோவிடம் சென்றவர் நவீனை வெளியில் போக சொல்லி விட்டார்.

“காதம்பரி சொன்னா, ஒரு ஃபோட்டோ வச்சு நாம என்ன முடிவு பண்றது, சண்முகத்துகிட்ட நான் பேசுறேன். அவர் விசாரிப்பார்” என தன்மையாக சொன்னார்.

“சித்தி உங்ககிட்டேயும் அவரை பத்தி தப்பு தப்பா சொன்னாங்களா சித்தப்பா? அவர் அப்படிலாம் இல்லை” என சற்று அழுத்தமான குரலில் சொன்னாள் யசோ.

அவர் கண்கள் சுருக்கி பார்க்க, “அவரை பத்தி எதுக்காக இப்படிலாம் அவதூறா பேசுறாங்க சித்தி?” எனக் கேட்டாள்.

கருணாவுக்கு நெற்றிப் பொட்டு தெறிக்க ஆரம்பித்து விட்டது. “என்னன்னு குழப்பாம சொல்லு” என அதட்டினார்.

சித்தி சொன்னவற்றை அப்படியே கூறியவள், “எம்மேல சித்திக்கு என்ன கோவம்? ஏன் இப்படி செய்றாங்க? நான் என்ன அவங்களுக்கு கெடுதல் செஞ்சேன்னு என் லைஃபை கெடுக்க பார்க்கிறாங்க? என் அப்பாம்மா இருந்திருந்தா இப்படிலாம் நடக்குமா? அதை நினைச்சுதான் அழுகை வந்திடுச்சு” என்றாள்.

“ஆனா காதம்பரி சொல்றதுலேயும் விஷயம் இருக்கு யசோ, இத அப்படியே விட முடியாது, தீர விசாரிக்கணும்” என்றார் கருணா.

“யாரை… என் வீட்டுக்காரரையா சித்தப்பா? அவரை சந்தேக பட்டா என்னை சந்தேக பட்ட மாதிரி சித்தப்பா, அப்படிலாம் செஞ்சிடாதீங்க” என்றாள்.

உண்மை புரியாமல் யசோ அவளது கணவன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறாளா? அல்லது நிஜத்தில் காதம்பரிதான் தவறு செய்தாளா? என யசோவின் பேச்சை வைத்து கருணாவால் சரியாக முடிவு செய்ய முடியவில்லை.