யசோ தன்னிடம் சொல்லாமல் அவளது சித்தியுடன் சென்றது தெரிய வரவும் கௌதமுக்கு கட்டுக்குள் அடங்காத கோவம்.
“முடியாதுன்னு சொல்லாம எதுக்காக போன யசோ?” என மனைவியிடம் காட்டமாக கேட்டான்.
“எனக்கு அப்படி சொல்ல வரலை” என பாவமாக சொன்னாள்.
காணொளி அழைப்பில் இருந்தவன் அவளை உக்கிரமாக பார்க்க, “கோச்சுக்காதீங்க” என கெஞ்சினாள் யசோ.
இறங்கி வந்தவன், “உன் சித்தப்பா, என் அப்பா யார்கிட்டயாவது பேசுறேன், உடனே நீ நம்ம வீட்டுக்கு போக ஏற்பாடு பண்றேன்” என்றான்.
வேண்டாம் என்றாள் யசோ. சித்தப்பா அழைத்த போதே ஏதாவது சொல்லி மறுத்திருந்தால் அது வேறு, இப்போது வந்து விட்டு திடீரென கிளம்பி சென்றால் இரு குடும்பங்களுக்குள்ளும் மீண்டும் மனக் கசப்பு ஏற்படுமோ என பயந்தாள்.
குணா ஹேமாவுடன் தன் வீட்டிற்கு வர எவ்வளவு ஆவலாக இருக்கிறான் என அவளுக்கு தெரியும். இந்த நேரத்தில் தன்னால் எந்த கலகமும் வேண்டாம் என நினைத்தவள் கணவனிடமும் அதையே சொன்னாள்.
“நான் அங்க வந்ததும் அவனுக்கு என்ன செய்யணுமோ செஞ்சு அவன் லைஃபை சரி பண்ணுவேன். அதுக்காக நீ அங்க கஷ்ட பட விட மாட்டேன்”
“நீங்க இங்க வரும் போது சிட்டிவேஷன் சாதகமா இருந்தாதானே குணா மாமாக்கு சப்போர்ட் பண்ணி பேச முடியும்? கொஞ்ச நாள்தானே நான் இருந்துப்பேன்”
“ஹேய்! உனக்கென்ன பெரிய தியாகின்னு நினைப்பா?” என மீண்டும் கோவப்பட்டான் கெளதம்.
“இங்க ஏதாவது தப்பா ஆச்சுன்னா அப்ப பார்க்கலாம், என் ஹெல்ப் வேணும்னு சொல்லித்தான் சித்தப்பா அழைச்சிட்டு வந்திருக்கார், ஃபங்ஷன் முடிஞ்சதும் கிளம்பிட போறேன், அப்படி என்ன பண்ணிட போறாங்க என்னை?”
“உன்னை என்ன பண்ணவும் அங்க யாருக்கு தைரியம் இருக்கு? உன் சித்திட்ட சொல்லி வை, எந்த விதத்திலாவது உன்னை ஹர்ட் பண்ணினா பதிலுக்கு என்ன வேணா செய்வேன் நான்” என்றான்.
அறைக் கதவு அடைத்திருப்பதை உறுதி செய்து கொண்ட யசோ, “மெதுவா பேசுங்க” என்றாள்.
“அச்சோ… நான் சமாளிச்சுக்கிறேன்ங்க” என சமாதானமாக சொன்னாள்.
அத்தனை எளிதாக ஒத்துக் கொள்ளவில்லை கெளதம், பேசி பேசியேதான் அப்போதைக்கு அவனது கோவத்தை இளக வைத்தாள் யசோ.
மனைவியிடம் பேசிய பிறகு அப்பாவுக்கு அழைத்து அவரிடம் எகிறினான்.
“அந்த புள்ளைக்கும் பொறந்த வீடுன்னு இருக்கணும்லடா, பெரிய மனுஷன் வீடு தேடி வந்து கூப்பிடும் போது மூஞ்சுல அடிச்ச மாதிரியா பேச முடியும்? என்ன பண்ணிடுவாங்க என் மருமவள? இதே ஊர்லதான் நானும் இருக்கேன், ஏதாச்சும்னா உடனே போயிட மாட்டேனா? அங்க உட்கார்ந்துகிட்டு குதிக்காத, ஊர் வந்து சேர்ந்திட்டு அப்புறம் பேசு” என சண்முகமும் பதிலுக்கு எகிறி பேசினார்.
“நாந்தான் பார்த்திட்டு இருக்கேன், இப்ப இல்லை மாசக்கணக்கா நீ எதுவும் கண்டுக்காம இருந்தப்போவும் நாந்தான் பார்த்துகிட்டேன்”
“பழசையே சொல்லாதீங்க, இப்ப உள்ளதை பார்க்க மாட்டீங்களா? அந்தம்மா திடீர்னு பாசமா பேசுதுன்னா சந்தேகம் வராதா உங்களுக்கு? உங்ககிட்ட பேசுறதே வேஸ்ட் ப்பா, நான் வைக்கிறேன்” என கோவமாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்.
சண்முகத்துக்கு யோசனையானது. கையோடு மருமகளுக்கு அழைத்து நலன் விசாரித்துக் கொண்டவர், “நான் வேணும்னா காலைல வந்து கூப்பிட்டுக்கவாடா ம்மா?” எனக் கேட்டார்.
கணவனின் வேலை என புரிந்து கொண்டவள், “என்னன்னு சொல்லி அழைச்சிட்டு போவீங்க மாமா? எனக்கு சங்கடமாகுற மாதிரி ஏதாவது நடந்தா உடனே உங்களுக்கு சொல்றேன், அப்ப பார்த்துக்கலாம் மாமா” என்றாள்.
அவரும் சரிதான் என சொல்ல, “அவர் ஏதும் பேசிட்டாரா மாமா? தப்பா எடுத்துக்காதீங்க மாமா” என தயங்கி தயங்கி சொன்னாள்.
“பய எகிறி குதிக்கிறான் மா, தப்பா எடுக்க ஒன்னுமில்ல, உம்மேல அக்கறையா இருக்கானேன்னு சந்தோஷம்தான் யசோ. நீ எதுக்கும் பயப்படாம கவனமா இரு, மாமா இங்க பக்கத்துலதான் இருக்கேன்” என தைரியம் சொன்னார்.
அருணாவுக்கு செய்தி தெரியவும் அவருக்கு கொஞ்சம் பயம்தான். ஹேமா அக்கா நம் வீட்டிற்கு வர அமைந்த சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள் அத்தை, எனக்கு பிரச்சனை இல்லை என மாமியாரை திடப் படுத்தினாள் யசோ.
கௌதமுக்கு அழைத்த அருணா ‘உன் மனைவி தைரியமாக இருக்கிறாள், ஐந்து பத்து நாட்களில் அவள் அங்கு தங்குவதால் என்ன நடந்து விட போகிறது, கவலை படாதே’ என்றார்.
“நீ இங்க இருந்தா அவ போயிருக்க மாட்டால்ல? உன்னை நம்பித்தானே விட்டுட்டு வந்தேன்?” என அம்மாவிடம் கெளதம் ஒரே கரைச்சல்.
கல்யாண்தான் அம்மாவிடமிருந்து கைப்பேசியை வாங்கி, “அப்படி என்னடா பண்ணிடுவாங்க? யசோவுக்கு அதுதான் பொறந்த வீடு, நவீனுக்கும் அந்த வீட்ல உரிமை இருக்கு, இருந்திட்டு வரட்டும். பார்த்துக்க சொல்லி குணாகிட்ட பேசுறேன் நான்” என்றான்.
“யாரு அவனா? முதல்ல அவன் ஏதும் இழுத்து விடாம இருக்கணும்” என சலிப்பாக சொன்னான் கெளதம்.
“அவனை பத்தி உனக்கு தெரியாதா? நீ ஊர்ல இல்லாதப்ப அவங்கள அப்படியே விட்ருவானா? யசோ கவலைய விட்டுட்டு அங்க வேலைய பாருடா” என்றான் கல்யாண்.
கெளதம் உள்ளே சென்ற குரலில் ம் போட, “எப்பதான் இங்க வர்றதா இருக்க? நாள் அதிகமாகும்னா யசோவை அங்க கூப்பிட்டுக்க, யசோவை அங்க கொண்டு வந்து விடுறதா இருந்தா கூட நான் வந்திட்டு போறேன் டா” என்றான் கல்யாண்.
என்னவென பார்த்துக் கொண்டு விரைவில் சொல்கிறேன் என்றான் கெளதம். மேலும் சில நிமிடங்கள் குடும்ப காரியங்கள் பேசி விட்டு உரையாடலை முடித்துக் கொண்டனர் அந்த சகோதரர்கள்.
கையோடு குணாவுக்கு அழைத்தும் பேசினான் கல்யாண். அதெல்லாம் பயப்படாதே என அவனும் சொல்லியிருந்தான்.
ஆனால் யார் பயந்தது போலவும் யசோவையும் நவீனையும் கீழான முறையில் நடத்தவில்லை காதம்பரி. மாறாக அதீத கவனிப்பு. இதுதான் யசோவுக்கு உறுத்தலாக இருந்தது, ஒருவேளை நிஜமாகவே மாறி விட்டாரோ என கூட நினைத்தாள்.
வேலைக்கு இடையிலும் மனைவிக்கு அழைத்து பேசினான் கெளதம்.
“எதாவதுன்னா நானே கூப்பிடுறேன், நீங்கள் நிம்மதியா வேலைய பாருங்க” என யசோ சொல்லியும் நவீனை அழைத்து அவனிடமும் பேசி விட்டுத்தான் விட்டான் கெளதம்.
கருணாவுக்குத்தான் முதலில் பெண் பிறந்தது. யசோவின் பெற்றோருக்கு தாமதமாகத்தான் யசோ பிறந்தாள். யசோவுக்கு குணம் உருவம் எல்லாமே அவளது அம்மாவை போலத்தான்.
ஹேமா, மோனிகா இருவரும் சிறு பிள்ளைகளாக இருந்த போது யசோவின் அம்மா அவர்களிடம் பாகுபாடு காட்டாமல் பழகுவார், பார்த்துக் கொள்வார். மேலும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தானே?
ஹேமா, மோனிகா இருவருமே அம்மாவின் அதீத செல்லத்தில் சோம்பேறிகளாகவும் நினைத்ததை சாதித்துக் கொள்ள அடம் பிடிப்பவர்களாகவும் இருந்தனர். மற்ற படி அம்மாவின் கபடம், தந்திரம் இதெல்லாம் அவர்களிடம் கிடையாது.
காலையில் குணாவும் கருணாவும் அவரவர் வேலைகளுக்கு செல்ல தயாராகி சாப்பிட வந்தனர். கருணா நவீனையும் அழைத்து தன் பக்கத்தில் அமர வைத்து சாப்பிட சொன்னார்.
படிப்பு, பள்ளி என அவனிடம் பேச்சு கொடுத்தார். முன்னர் போல அளந்து அளந்துதான் பேசுகிறான் என்றாலும் அவனது பேச்சில் முன் இல்லாத உறுதித் தன்மையை உணர்ந்தார் கருணா.