அத்தியாயம் 2

இளவஞ்சியும் ஜானகியும் கல்லூரித் தோழிகள். மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இருவரும் படித்து முடித்து பல மென்பொருள் நிறுவனங்களில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டும் தேர்வாகாமல் இருந்தனர்.

அதன் பின்பு கண்டிப்பாக ஒரு வேலையில் சேர்ந்தே ஆக வேண்டிய குடும்ப சூழலில் இருவரும் விரிவுரையாளராக பாலிடெக்னிக்கில் சேர்ந்தனர். இங்கே பணியில் சேர்ந்த இந்த ஐந்து வருடத்தில் உதவித்தொகை பெற்று முதுகலை பட்டத்தையும் முடித்திருந்தனர் இருவரும்.

அடுத்து முனைவர் பட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டுமென்ற முனைப்பில் இருக்கின்றனர்.

ஜானகிக்கு திருமணமாகி இரண்டு வயதில் மகள் இருக்கிறாள். அவளின் கணவர் மென்பொறியாளராய் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

இளவஞ்சியின் குடும்பத்தைப் பற்றிய முழு விவரத்தை அறிந்த ஒரே நபர் ஜானகி மட்டுமே. இளவஞ்சிக்கு அத்தனை நெருக்கமான தோழி அவள்.

மாலை வேளையில் இருவரும் கல்லூரியிலிருந்து கிளம்புவதற்காகத் தங்களது பையினைத் தயார் செய்து கொண்டிருக்க, “ஆமா இப்ப உன்னோட ரூட் பஸ்லயே நான் வரவா? இல்ல நாம வேற எங்கேயும் போக போறோமா?” எனக் கேட்டாள் வஞ்சி‌.

“இல்ல உன்னோட ரூட் பஸ்ல நான் வரேன்” என்றாள் ஜானகி.

“என்னது என் பஸ்லயா? அடியேய் என்னை ஏமாத்தி கூட்டிட்டு போய் எங்க வீட்டுல விட்டுடலாம்னு பிளான் செய்றியா?” என முறைத்தாள் இளவஞ்சி.

“ச்சே ச்சே இல்லடி! நான் அப்படி செய்வேனா சொல்லு! டைம் ஆகிடுச்சு வா” என்று வஞ்சியை அங்கிருந்து நகர்த்திச் சென்றாள் ஜானகி.

சென்னை ஆவடியில் இருந்து திருநின்றவூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அவர்களின் கல்லூரிப் பேருந்து.

“என்ன பிளான் செஞ்சி என்னைக் கூட்டிட்டு போற நீ? திரும்ப நீ எப்படி உங்க வீட்டுக்கு போவ?”

“ஹப்பிக்கிட்ட சொல்லிட்டேன்! அவங்க வந்து என்னை பிக்கப் செஞ்சிப்பாங்க! மத்தபடி பிளான் என்னனு உன்னோட ஸ்டாப்ல இறங்கினதும் சொல்றேன்”

“என்னது என் ஸ்டாப்ல இறங்கனுமா? அடியேய் நிஜமாவே என்னை வீட்டுல கொண்டு போய் விடுறதுக்கு தான் பிளான் செய்றியா நீ? என் தம்பி உனக்கு போன் செஞ்சி எதுவும் கெஞ்சினானா?” வீட்டிற்கு செல்ல வேண்டும் என யோசித்தாலே பயந்து வந்தது இளவஞ்சிக்கு.

“இல்லை” என தலையசைத்தவளாய், “கண்டிப்பாக உன் வீட்டுக்குப் போகலை” என்றாள் ஜானகி.

“நான் இறங்குற பஸ் ஸ்டாப்லருந்து ரொம்ப பக்கம்டி எங்க பூக்கடை. அங்க இறங்கி கொஞ்ச தூரம் நடந்தாலே எங்க பூக்கடைல இருக்க அம்மாவோ அக்காவோ என்னைப் பார்த்துட மாட்டாங்களா?”

“பொண்ணு பார்க்க பையன் வீட்டுல இருந்து வரும் போது அவங்க ஏன் கடைல இருக்க போறாங்க. உங்க வீட்டுல தானே இருப்பாங்க” என ஜானகி கூற,

“இல்ல ஜானு. நேத்தே அம்மா சொன்னாங்க. என்னைப் பொண்ணு பார்க்க வரும் போது அக்கா அங்க இருக்க கூடாதாம்!”

“ஏன்? மாப்பிள்ளை உங்க அக்கா அழகுல மயங்கி அவங்களுக்கு ஓகே சொல்லிடுவாருனா.. இப்பவே அக்காவைப் பார்த்ததும் மனசு மாறிடுவான்னு நினைக்கிறாங்களே, நாளைபின்ன கல்யாணம் முடிஞ்சதும் வேற பொண்ணு பார்த்து தாவ மாட்டான்னு என்ன நிச்சயம்? இப்படிப்பட்ட ஆளைலாம் மாப்பிள்ளனு சொல்லி உங்க வீட்டுல பேசுறாங்க பாரு அவங்களை சொல்லனும்” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஜானகி‌.

“இப்ப எங்க போறோம் ஜானு? என் பஸ் ஸ்டாப்னா கண்டிப்பா பூக்கடைல அக்கா இருப்பா! ஆனா அங்க எதுக்கு போகனும்? என்னை வீட்டுல கொண்டு போய் விடுறதுக்கு தான் பிளான் செய்றியா ஜானு?” பாவமாய் கேட்டாள் வஞ்சி.

“அதுலாம் அவங்க பார்க்காத அளவுக்கு நாம இறங்கி போவோம்! நீ சும்மா சும்மா கேள்வி கேட்காம தூங்கு” என்று கூறியவளாய் இருக்கையில் தலையைச் சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள் ஜானகி.

‘என் வீட்டுக்கே என்னை கூட்டிட்டு போற தானே! ஃப்ரண்டுனு நம்பினா நீயும் என்னை அந்த குழில தள்ளி விட தானே பார்க்கிற! இனி என் தலையெழுத்து அவன் கூட தான்னு…’ வார்த்தையை முடிக்க கூட முடியாமல் நினைக்கும் பொழுதே மனம் கசந்து வழிந்தது வஞ்சிக்கு.

தன்னுடன் இணைத்து கூட அவனைப் பேசிட பிடிக்கவில்லை அவளுக்கு.

‘எதையும் யோசிக்காத வஞ்சி! ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ! என்ன தான் நடக்குதுனு பார்த்துடலாம்’ தனக்குத் தானே கூறி மனத்தைத் தேற்றிக் கொண்டவளாய் பார்வையை ஜன்னல் வழியாக வெளியே தொடரவிட்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தனது நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் உறங்கிக் கொண்டிருந்த தோழியை எழுப்பி அவளுடன் இறங்கிய வஞ்சி, நேராக அவர்களின் பூக்கடை நோக்கி நடக்க,

வஞ்சியின் கைப்பிடித்து நிறுத்திய ஜானகி, “ஹே அங்க எங்க போற? உங்க வீட்டுக்கு போக வேண்டாம்னு தானே என்னை கூட்டிட்டு வந்த! அந்த மாப்பிள்ளை வந்து காத்திருந்து பார்த்துட்டு போகட்டும். நாம வேற இடத்துக்கு போவோம்” என்றவளாய் வஞ்சியின் கையினைப் பற்றியவாறு ஒரு சந்தினுள் சென்று மறு சந்தினுள் வந்தவளாய் அவர்களது பூக்கடையின் நேரெதிர் திசையில் பின்பக்கமாக இருந்த கோவிலின் மற்றொரு வாசலில் போய் நின்றாள்.

“வா வஞ்சி! உள்ளே போவோம். அந்த மாப்பிள்ளை பையன் போற வரைக்கும் நீ இங்க இருக்கிறது தான் உனக்கு பாதுகாப்பு” வஞ்சியின் கையைப் பிடித்து கோவிலை நோக்கி அடி எடுத்து வைத்தாள் ஜானகி.

“இல்ல நான் வரமாட்டேன். நான் எந்த கோவிலுக்குள்ளயும் வர மாட்டேன்னு தெரிஞ்சும் ஏன்டி என்னை இங்க கூட்டிட்டு வந்த?” கோபமாக அடிக்குரலில் கேட்டிருந்தாள் வஞ்சி.

“அடியேய் இங்கேயே நின்னுட்டு இருந்தீனா உங்க பூக்கடைல நின்னுட்டிருக்க உன் அக்கா உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போய்டுவாங்க! பரவாயில்லையா? நான் என்ன சாமி கும்பிடவா கூப்பிடுறேன். சும்மா உள்ளே உட்கார தானே கூப்பிடுறேன்” என்றவளாய் இளவஞ்சியை உள்ளே இழுத்தாள் ஜானகி.

நெஞ்சம் படபடக்க உள்ளே வரமாட்டேன் என வஞ்சி நிற்க, வந்தே ஆக வேண்டுமென ஜானகி இழுக்க, அந்த பக்கமாய் வந்த பாட்டி, “என்ன வஞ்சி மழைக்குக் கூட கோவிலுக்கிட்ட ஒதுங்க மாட்ட! என்ன அதிசயமா இங்க நிற்கிற?” எனக் கேட்டார்‌.

‘அய்யோ உள்ளே வரவளையும் கெடுத்துடுவாங்க போலயே இந்தப் பாட்டி’ மனதிற்குள் புலம்பியவளாய்,

“நான் தான்‌ பாட்டி அவளை வர சொன்னேன்‌. நீங்க உள்ளே போங்க நாங்க வரோம்” என்றாள் ஜானகி.

“நான் வர‌ மாட்டேன் ஜானு!”
காலத்தின் ஓட்டத்தில் காயத்தை அளித்திருந்த நிகழ்வுகள் கண் முன்னே தோன்றி கண்களில் நீரை வடிய செய்ய, உள்ளே வர மாட்டேனெனத் திடமாக நின்றாள் இளவஞ்சி.

“உன் வாழ்க்கையை காப்பாத்திக்க நீ வந்தே ஆகனும் வஞ்சி” என்று அவளை இழுத்துச் சென்றாள் ஜானகி.

வஞ்சியின் பாதங்கள் கோவில் வாசலின் உள்ளே தரையைத் தொட்ட நொடி, உள்ளம் குமுறிக் கொண்டு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

‘எங்கப்பா சிவனே கெதினு கிடந்தாரே! ஏன் அவரைக் காப்பாத்தாம போன நீ! என் அப்பாவைக் காப்பாத்த முடியாத இந்தச் சாமி எனக்குத் தேவையில்லை. நான் இனி இவரைக் கும்பிட மாட்டேன். எந்த கோவிலுக்கும் போக மாட்டேன்’ தந்தையைத் தகனம் செய்து விட்டு இந்த வாசலில் நின்று, தான் எடுத்துக் கொண்ட சபதத்தை மூளை மறு ஒலிபரப்பு செய்து கொண்டிருக்க,

“அப்பா” எனக் கதறிக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.

உள்ளே நுழைந்து சுற்றுப் பிரகாரத்தில் அமரக் கூடியவாறு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவளுக்கு நெஞ்சம் வலிக்க அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

நின்றிருந்த ஜானகியின் இடையைக் கட்டிக் கொண்டு அழுகையில் தேம்பியவளாய், “ப்பா! அப்பா! அவர் என்ன பாவம் செஞ்சாரு ஜானு!” என்று அரற்றினாள்.

“நல்லா இருந்தாரு ஜானு. திடீர்னு ஜூரம்னு தான் படுத்தாரு. இரண்டு நாள்ல ஆளே இல்லை. இவரை கும்பிட சொல்லி கொடுத்ததே அவர் தான். அவர் இல்லாத இந்த உலகத்துல எனக்கு சாமினு யாரும் இல்லை” என்று கண்களைத் துடைத்தவாறு நிமிர்ந்தவளின் தலையைக் கோதிய ஜானகி,

“உன்னோட பதினாறாவது வயசுல போட்ட சபதம். பன்னிரண்டு வருஷம் கழிச்சு இப்ப உள்ளே வந்து அதை உடைச்சாச்சு. உன்னோட வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு இவரை வேண்டிக்கோ‌! உன் வாழ்க்கையை இந்த ஈசனைத் தவிர வேற யாராலயும் காப்பாத்த முடியாது. பிறந்த வீட்டுல எல்லாருமே உனக்கெதிரா நிற்கும் போது நாங்க பேசுறதும் கூட அங்க எடுபடாது. இந்த ஒரு முறை எனக்காக அவரை நம்பி வேண்டிக்கோயேன் வஞ்சி. நீ கேட்டு அவர் செய்யலைனா அடுத்து நான் கண்டிப்பா உன்னை கம்பெல் செய்ய மாட்டேன். நான்‌ இந்த சிவபெருமான் மேல் வச்சிருக்க நம்பிக்கைக்காகவாவது வேண்டிக்கோ வஞ்சி” வஞ்சியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஜானகி.

ஜானகியின் வாழ்வில் அனைத்தும் இறைவனின் செயலென இக்கோவிலில் அவள் வைத்த வேண்டுதல் எல்லாம் நிறைவேறிய வண்ணம் அவளின் வாழ்வும் வண்ணமயமானதாய் மாறியிருக்க, அருகிலேயே இத்தகைய வல்லமை பொருந்திய இறைவனை வைத்துக் கொண்டு, அவரை வணங்க மாட்டேனெனப் பிடிவாதம் பிடித்துக் கொண்டு தனது வாழ்வையும் தொலைக்க முற்படுகிறாளே இந்தப் பேதைப் பெண் என ஜானகியின் மனது வெதும்பியதின் பலனாக இன்று இங்கே அவளை அழைத்து வந்து விட்டாள் ஜானகி.

“எம்பெருமானே ஈஸ்வரா! இவளை உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். இவளோட வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொடுக்கிறது உங்களோட பொறுப்பு” ஜானகி இறைவனிடம் மனதார பிரார்தித்தவாறு வஞ்சியின் கைப்பற்றி கருவறைக்கு அருகே அவளை அழைத்துச் சென்றாள்.

இளவஞ்சியின் கரங்கள் சில்லிட்டது. உள்ளே செல்ல வேண்டாமென ஒரு மனம் முனங்க, ‘எத்தனை நாளுக்கு பின் அவரை காணப் போகிறேன்’ ஆழ்மனம் ஆவலுடன் கூச்சலிட்டது‌.

நெடு நாட்கள் கழித்து உயிர் தோழியைச் சந்திக்கும் போது மனதில் ஏற்படும் அன்பின் நெகிழ்தலை உணர்ந்தவளாய் உள்ளே சென்றாள் இளவஞ்சி.

கருவறையில் லிங்க வடிவமாக இருந்த எம்பெருமானைக் கண்ணாற கண்டு பூரித்தவளின் மனதில் பெருக்கெடுத்த உணர்வுகளோடு கண்களை மூடியவளாய், “அப்பா போனப்பிறகு யாருமே இல்லைனு தான் இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் உங்களை பார்க்கிற இந்த நொடி, உங்களை அப்பானு கூப்பிட தோணுது” மனதினுள் இவ்வாறாக நினைக்கும் போதே தொண்டை அடைக்க, மூடியிருந்த விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“என்னை விட்டுட்டு போன எங்க அப்பாவா என் கூட இருந்து எனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தருவீங்களா?” வேதனையில் தொண்டை இறுக, கதறி அழ எழுந்த நாவை அடக்கி உமிழ்நீரை விழுங்கி சிவந்த கண்களுடன் கண்ணீர் விழியை நிறைக்க கைகளை ஏந்தி அவள் கேட்க,

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே
ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா

ஆழ்ந்த உயிர்ப்பான குரலில் அவளின் செவியைத் தீண்டியது இப்பாடல். அங்கமெல்லாம் புல்லரித்துப் போனது அவளுக்கு.

கோவிலின் ஸ்தல விருட்சத்தின் அருகிலிருந்து எவரோ பாடுவது போன்று கேட்டது அக்குரல்.

கணீரென்ற அக்குரலின் ஓசையில், எம்பெருமானே நேரில் வந்து தனக்கு ஆறுதல் கூறியது போல் சட்டென்று மாறும் வானிலையாக அத்தனை இலகுவாக மாறிப்போனது அவளின் மனது.