சில நாட்களாக யோகிதா உம் எனதான் இருக்கிறாள். வேலை விஷயமாக கௌதமிடம் பேசினாலும் சின்ன புன்னகைக்கும் அங்கே பஞ்சமாகிப் போனது. அவளின் இயல்பே அதுவென்றால் அவனுக்கு பரவாயில்லை, நல்ல கல கலப்பாக பழகக் கூடிய பெண். வேலையில் ஏதாவது சந்தேகம் என்றால் கூட குழுவிலிருக்கும் வேறு ஒருவர் மூலமாகத்தான் அவனை அணுகுகிறாள்.
இங்கு நால்வர் ஒரு குழுவாக வந்திருக்க, அவர்களுக்குள் சிநேக மனப்பான்மை இருந்தால்தான் வேலை செய்யும் போது இலகுவாக இருக்கும், சிறப்பாகவும் செயல்பட முடியும்.
கௌதமை ஆலோசிக்காமல் யோகிதா அவளாகவே செய்த விஷயம் தவறுதான் என்றாலும் அவளுக்கு வேறெந்த உள் நோக்கமும் கிடையாது, ஆர்வக்கோளாறு மட்டுமே என்பதை அறிந்தே இருந்தான் கெளதம்.
யோகிதாவை அவன் திட்டியதிலிருந்து மற்ற இருவரும் கூட இவனிடம் எதுவும் கேட்க வேண்டுமென்றாலோ சொல்ல வேண்டுமென்றாலோ மிகவும் யோசிக்கிறார்கள்.
தங்கள் குழுவுக்குள் நிலவி வரும் இந்த எதிர் மறை மனப்பாங்கை போக்கி புரிதலை உண்டாக்க விரும்பினான் கெளதம்.
ஆகவே அந்த வார ஞாயிற்றுக் கிழமை மூவரையும் வெளியில் அழைத்திருந்தான். கொஞ்சம் போல ஊரை சுற்றிப் பார்த்து விட்டு மதிய உணவை வெளியில் முடித்துக் கொண்டு இரவுக்கு தங்குமிடம் வரலாம் என சொல்லியிருந்தான்.
யோகிதாவை தவிர மற்ற இருவரும் உற்சாகமாக வருகிறோம் என சொல்லியிருந்தனர்.
தனக்கு வேலை இருப்பதாக யோகிதா மறுத்தாள்.
“நிஜமா வேலை இருந்தா ஓகே, பட் அன்னிக்கு நான் பேசினதை மனசுல வச்சுக்கிட்டுன்னா… நல்லா யோசிங்க, என் நிலைமையை நினைச்சு பாருங்க. மிஸ்டேக்ஸ் செய்ய செய்யதான் கத்துக்க முடியும், ஆனா என்ன செஞ்சாலும் எதுவும் சொல்லக்கூடாதுன்னா எப்படி சரி?” எனக் கேட்டான் கெளதம்.
“இல்ல அதனால இல்ல” என வேகமாக மறுத்தாள் அவள்.
“எவ்ளோ ப்ரஷர்ல வேலை பார்க்கிறோம், நம்மள நாமளே ரெஃப்ரெஷ் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம், நம்ம டீம் இன்னும் அண்டர்ஸ்டாண்டிங்கோட ஒர்க் பண்ண இந்த அவுட்டிங் ஹெல்ப் பண்ணும். இருக்கிறதே நாலு பேர் யோகிதா, லெட்ஸ் க்ளியர் தி ஏர்” என்றான்.
அவள் பதிலே சொல்லாமல் நிற்க, “வேறென்ன ஸாரியா?” எனக் கேட்டு மெலிதாக சிரித்தவன், “ஸாரி” தோள்களை குலுக்கி இயல்பாக மன்னிப்பும் கேட்டு விட்டான்.
இவ்வளவு இறங்கி வருவான் எதிர் பார்த்திராத யோகிதாவுக்கு என்னவோ போலானது.
“நிஜமா அப்படி இஸ்யூ ஆகும்னு நான் நினைக்கவே இல்ல. வெரி ஸாரி, அண்ட் என் மிஸ்டேக்கை சரி பண்ணினத்துக்கு தேங்க்ஸ்” என்றாள்.
இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதில் மனக் கசப்பு மறைந்து போயிருந்தது. நாளை தயாராக இரு என அவளிடம் சொல்லியே புறப்பட்டான் கெளதம்.
யசோவிடம் பேசுகையில் நாளை வெளியில் போவதை சொன்னான்.
“நல்லா என்ஜாய் பண்ணுங்க” என்றாள்.
“பக்கத்துல நீ இல்லாம என்னத்த என்ஜாய் பண்ண பொன்வண்டு?” என்றவன் எதற்காக வெளியில் செல்கிறோம், முன்னர் யோகிதாவை திட்டியது எல்லாம் சொன்னான்.
“கோவத்தை குறைக்கணும் நீங்க” என்றாள்.
“சொல்லுவடி, அவ பண்ணின தப்புக்கு என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினான் இங்க உள்ள முசுட்டு மேனேஜர்”
“ரொம்ப திட்டினாரா?” என கவலையாக கேட்டாள்.
“பின்ன… யோவ் என்னை என் பொண்டாட்டியே திட்றது இல்ல, நீ என்னய்யான்னு கோவமா போச்சு” என்றவன் “இதெல்லாம் சகஜம் யசோ, தப்பு நடந்தா யாருக்கா இருந்தாலும் கோவம் வரும்தான். அதெல்லாம் நினைச்சு நீ ஃபீல் பண்ணாத. உன் புருஷன் எந்த மேனேஜரையும் சமாளிப்பான்” என சமாதானமாக சொன்னான்.
அவள் சரி என்க, “பாரு நான் ஈஸியா எடுத்துக்கிட்டேன், அந்தாளு ஸாரி கேட்கணும்னு எதிர் பார்த்தேனா? இவ மட்டும் என்கிட்ட மூஞ்ச தூக்கி வச்சிட்டு என்ன அலப்பறைங்கிற?” என்றான்.
“ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி இருப்பாங்க” என அவள் சொல்ல, என்ன சாப்பாடு இன்று என விசாரித்தான்.
அருணா இன்னும் சென்னையில்தான் இருக்கிறார், சண்முகம் அடுத்த நாள் இரவே கிளம்பி இங்கு வந்து விட்டார். இன்று விடுமுறை தினம் என்பதால் மீன், நண்டு, இறால் என வாங்கிக் கொடுத்திருந்தார். இரவுக்கும் சாதம்தான் என சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நாக்கு செத்து போச்சு யசோ, உரைப்பா ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு. உன் சாப்பாட்ட மிஸ் பண்றேன்” என அவன் சொல்லவும் அவளின் முகம் வாடி விட்டது.
“நாளைக்கு நல்ல சௌத் இண்டியன் ரெஸ்டாடாரண்ட் கண்டு பிடிச்சு ஒரு கட்டு கட்டலாம்னு இருக்கேன், ஃபோட்டோஸ் அனுப்புறேன். இப்ப மூஞ்ச நல்லா வை” என்றான்.
இப்படி பேச்சு நீண்டுக் கொண்டே போனது. யசோவுக்கு உறக்கம் வருவது போலிருந்தாலும் அடுத்த நாள் சீக்கிரம் எழத் தேவையில்லை என்பதால் படுக்கையில் படுத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அப்படியே உறங்கி விட்டாள்.
“ஏய் யசோ…” என அழைத்து பார்த்தான். அவளிடம் சலனமில்லை. சில நிமிடங்கள் அவளை பார்ததே இருந்தான்.
இன்னும் அவளின் அறையில் மின் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அறைக் கதவை கூட வெறுமனேதான் சாத்தியிருந்தாள்.
அவளை எழுப்பி விட்டு கதவை தாழிட்டு, விளக்கை அணைக்க வைத்து படுக்க சொல்லலாம்தான், ஆனால் அவளின் உறக்கத்தை கலைக்க அவனுக்கு மனமில்லை.
கொஞ்சம் வேலை இருந்தது அவனுக்கு, அவசரம் இல்லை, பொறுமையாக செய்யலாம்தான், இப்போது லேப்டாப் எடுத்து வைத்துக்கொண்டான். வேலை செய்ய மனம் லயிக்காமல் அவளிடமே பார்வை சென்று கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் லேப்டாப்பை மூடி வைத்து விட்டான். கள்ளம் கபடம் இல்லாத மனையாள் கண்களையும் மனதையும் நிறைத்தாள்.
அரை மணி நேரத்தில் அறையின் வெளிச்சத்தில் யசோவுக்கு விழிப்பு வந்து விட்டது. கண் எதிரில் கைப்பேசி இருக்க, திரையில் கெளதம் உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. காணொளி அழைப்பை துண்டித்து விட்டு அவனுக்கு சாதாரண அழைப்பு செய்தாள்.
அவன் எடுக்கவும், “ரெண்டு பேரும் பேசிட்டே தூங்கிட்டோம் போல, லைட் ஆஃப் பண்ணிட்டு படுங்க” என்றாள்.
அவள்தான் அவனுக்கு முன்னர் உறங்கி விட்டாள் என்பதை சொன்னவன், “உன்னை பார்த்திட்டே படுத்தேன், இப்பதான் நான் தூங்கியிருக்கணும். நீயும் உன் ஆணழகு புருஷனை கொஞ்ச நேரம் என்னை பார்க்கலாம்ல?” எனக் கேட்டான்.
“அது கண்ண மூடினா தானா தெரிவீங்க” என்றாள்.
“ம்ஹூம்! எப்படி எந்த ரூபத்துல தெரிவேன், உன் ஹேண்ட் பேக்ல முன்ன வச்சிருந்தியே ஒரு குட்டி கெளதம் அந்த மாதிரியா?” என கிண்டலாக கேட்டான்.
“அதெல்லாம் சொல்ல மாட்டேன், ஒழுங்கா தூங்குங்க” என்றாள்.
“நான் கஷ்ட பட்டு தூங்கினேன், எழுப்பி விட்டுட்ட, நீயே தூங்க வை”
“எப்படி?”
“ஏதாவது பாட்டு பாடேன்” என அவன் கேட்க, அவள் அவளுக்கு தெரிந்த ஸ்லோகம் ஒன்றை சொல்ல, சத்தமாக சிரித்து விட்டான்.
“அடி தேன்சிட்டு! நான் பக்கத்துல இல்லாமதான் இப்படி அன்ரொமான்டிக் ஆகிட்ட, சீக்கிரம் வந்து நீ என் கனவுல வந்து என்னென்ன பண்ணுனியோ எல்லாம் நேர்ல செய்ய வைக்கிறேன். இப்ப படு” என சொல்லி விட்டான்.
“ஹையோ நான் எதுவும் பண்ணல” என்றாள்.
“அதான் சொல்றேன், நீ எதுவும் பண்ணல, எல்லாமே கனவு, நேர்ல பண்ணிடு” என அவன் சொல்ல சிணுங்கினாள்.
“இதென்ன உன் கொலுசு கூட போட்டியா?”
“என்னங்க!”
“சரி பொழச்சு போ” என சொல்லி பேச்சை முடித்தான்.
படுத்த பிறகும் அவள் ஸ்லோகம் சொன்னதை நினைத்து அவனுக்கு ஒரே சிரிப்புதான்.
அடுத்த நாள் காலை உணவுக்கு பின் தன் குழுவினருடன் காரில் புறப்பட்டான் கெளதம். அங்கிருந்த மேனேஜர் உதவியுடன் உள்ளூர் கைட் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தான்.
நன்றாக சுற்றிப் பார்த்தார்கள். கொஞ்சம் ஷாப்பிங் செய்தார்கள், நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தென்னிந்திய உணவகம் சென்று நல்ல திருப்தியாக சாப்பிட்டார்கள். அதன் பின் ஆற்றில் படகு சவாரி.
மாலை நேரத்தில் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்தனர். மற்ற மூவரும் சற்று தள்ளி நடை போட்டுக் கொண்டிருக்க, கெளதம் மனைவிக்கு காணொளி அழைப்பில் அந்த இடத்தை காண்பித்துக் கொண்டிருந்தான்.
அவன் மனைவியுடன்தான் பேசுகிறான் என கணித்த யோகிதாவுக்கு யசோவை காண ஆவல். சாதாரணமாக அவனிடம் வருவது போல வந்தவள், “என்ன கெளதம் உங்க வைஃபை எனக்கெல்லாம் காட்டவே மாட்டீங்களா?” எனக் கேட்டாள்.
கேட்ட பின்தான் இவனை இடையூறு செய்து விட்டோம் என அவளுக்கு சற்று அநாகரீகமாக பட்டது. “ஸாரி, ஒரு க்யூரியாசிட்டில…” என சொல்லி விலகப் போனாள்.