சனிக்கிழமை விடுமுறை எனவும் நாள் முழுதும் சோஃபாவிலேயே கழித்தாள். அங்கேதான் அவளிடம் அடி வாங்கி மடிந்து அமர்ந்து மூச்சு விடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் ஜோ. அன்றைய நிகழ்வு, அவளே மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் மறக்காது லூப்பில் ஓடியது.
காதலர்களுக்கு நடுவில் எதோ பிணக்கு என்பதாக அர்த்தம் செய்துகொண்ட ஷீத்தலின் நினைப்பை மாற்ற முயலவில்லை.
ஸ்டீபனுடன் பேசிவிட்டு, சந்தோஷமாக அழைத்த ஷீத்தலிடம் அன்று கீர்த்தியால் சரியாகபேசக்கூட முடியவில்லை. சமாளிப்பாக பேசி வைத்தாள். சற்று நேரத்தில் ஷீத்தல் நேராகவே வந்திட, கீர்த்தியின் அழுது வீங்கிய முகத்தைப் பார்த்து “ஜோசஃப் சாரோட சண்டையா?”, என்று ஆரம்பித்த ஷீத்தலிடம் தலையாட்டுவதே எளிதாகப் பட்டது.
“என்னாச்சு? அவர் கிட்ட கேட்கவா?“ என்று வருந்துபவளைப் பார்த்து சோபையாக புன்னகைத்தவள், “எதுவும் கேட்க வேணாம் ஷீத்து. நீ ஃப்ரீயா விடு. ஸ்டீஃபனோட பேசினியா?”, என்று திசை திருப்பினாள்.
“ம்ம்… இன்னொரு வாட்டி பேசலாம்னு சொல்லவும், இந்த சனிக்கிழமைக்கு ஓகே சொல்லியிருக்கேன். ஆனா கண்டிப்பா அவ்வளவுதான்”, சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்பவள் அவளுக்கே சொல்லிக்கொள்வதாகத்தான் பட்டது கீர்த்திக்கு.
ஒரு மென் புன்னகையோடு, “ஹ்ம்ம்… பேசின வரை பிடிச்சுதா?”
“அது…. நல்லாத்தான் பேசறாங்க. நீயும் கேக்கெல்லாம் நல்லா செய்வாங்கன்னு சொன்னதும் கேட்டனா, கேக் மட்டுமில்லை , பிஸ்கெட், மாக்கரூன் எல்லாம் கூட நல்லா செய்வாங்களாம்.”, என்றவளைப் பார்த்து புன்னகை இன்னும் விரிய, “தின்னிப்பண்டாரம், அதுக்காகவே பிடிச்சிருக்குன்னு சொன்னியோ?”, என்று கிண்டல் செய்தாள்.
“ஏய்… சரின்னு எல்லாம் சொல்லலை. கொஞ்சம் வளைச்சு வளைச்சு கேட்டுப் பார்த்தாங்க. அதெல்லாம் பெரியவங்க பார்த்து பேசி கேட்கும்போது சொல்லிக்கறேன்னு சொல்லிட்டேன். ஆனாலும் விடாம, எனக்கு இன்னொருக்க பேசணும். அடுத்த வாரம் கூப்பிடுவேன்னு சொல்லிட்டு வெச்சிட்டாங்க.”
இப்போது நினைக்கவும் கீர்த்தியின் முகம் புன்னகை பூசியது.
சனிக்கிழமை காலையில் அழைத்த ஷீத்தல், “ நீ பார்த்துக்குவியா? நான் ட்யூஷனுக்கு போகணும். இல்லை நீயும் கூட வரியா?” என்று அழைக்க, தற்காப்பு வகுப்புக்கு தான் செல்லப்போவதாகக் கூறிவிட்டு இதோ சோஃபாவில் உருண்டுகொண்டிருந்தாள்.
எண்ணம் அவள் தாயாருடன் பேசியதற்கு தாவியது. இஷ்டமில்லாதுதான் அழைப்பை ஏற்றாள். எடுக்கவில்லை என்றால் மீண்டும் அழைப்பார். பேச்சு சற்று நேரம் வரை சுமூகமாகவே சென்றது. அதாவது கல்யாணப் பேச்சு ஆரம்பமாகும் வரை.
“லட்சுமி அத்தையோட கடைசி மகனுக்கு கல்யாணம்னு சொல்லியிருந்தேனே, அதுக்கு போயிட்டு வந்தோம்டி”
“ம்க்கும். அதுக்கென்ன நல்லாத்தான் நடந்துச்சு. கீர்த்திக்கு எப்ப முடிக்கப் போறீங்கன்னு கேட்காத ஆளு இல்லை. அதும் அந்த அகிலாண்டம், என்னவோ நீ சம்பாரிச்சு கொடுக்கறதை வெச்சு குடும்பம் ஓடறதனாலதான் உன்னை கட்டி குடுக்காத மாதிரி பேசறா. கால் வயித்துக் கஞ்சிக்கு பத்து பாத்திரம் தேச்சாவது பொழைச்சக்க மாட்டியா? காலா காலத்துல பொண்ணை கட்டி குடுக்க வேணாமா? அவ கல்யாணத்துக்கு சம்பாதிக்கத்தான போனா. இன்னேரம் சேர்த்து வெச்சது தாராளமா காணணுமேன்னு மூஞ்சுக்கு நேரா கேட்கறா”, என்னும்போதே அழுகையில் சரோஜினியின் குரல் தேய்ந்தது.
“அவ கிடக்கறா விடுமா. என் பொண்ணுக்கு எப்ப பண்ணணும்னு எனக்கு தெரியும், மூடிகிட்டு போன்னு திருப்பி குடுக்காம இங்க வந்து அழற?”
“அவ முகத்துல கரிய பூசற மாதிரி அடுத்த மாசமே உன் கல்யாணத்த வெக்கணும்னு ஆத்திரம் வருது. பணத்துக்கும் பிரச்சனையில்லை. நீதான் சரின்னு சொல்லாம நடந்ததையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்க. ஊர்ல எங்க மானம் போவுது”, சரோஜினி சற்று நிதானம் இழந்து கத்திவிட்டார்.
ஒரு நொடி உறைந்தாள் கீர்த்தி. நேற்று ஜோவை அடித்த ரணம் வேறு வலித்துக்கொண்டிருக்க, சரோஜினி இப்படிப் பேசவும்,
“குடும்ப மானம் போகாம இருக்க நான் கூட அவமானப்பட்டு நின்னிருக்கேனேமா. இப்ப உனக்குன்னா மட்டும் வலிக்குதா?”, என்றாள் நிறுத்தி நிதானமாக.
“இப்ப இல்லைமா. உன் குடும்ப மானமும், உன் பெரிய பொண்ணு குடும்ப மானமும் போகக்கூடாதுன்னு, நான் எவங்கூடவோ படுத்து வயித்துல புள்ளையை வாங்கிட்டு வந்துட்டேன்னு டாக்டர் கிட்ட சொல்லி, அவங்க என்னை பார்த்த பார்வையும், குடுத்த அறிவுரையும் மறந்துடுச்சோ? வாய் கூசாம என் மேல பழியை போட்டப்போ, தப்பே செய்யாம அவமானத்தை ஏத்துக்கிட்டேனே? இப்பவும் உன் குடும்ப மானம், உன் பொண்ணு குடும்ப மானம் போகாம இருக்க, பொண்ணு சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறன்ற சின்ன பழியை சுமக்க முடியலையோ? அப்படின்னா கேட்கறவங்க கிட்ட உண்மையை சொல்லு.“
நறுக்குத் தெரித்தார்போல கேட்கும் சின்ன மகளின் கேள்விகளுக்கு சரோஜினியால் பதில் கூறமுடியவில்லை.
“இதெல்லாமாடி இன்னும் யோசிக்கற? ஊர் பேர் தெரியாத டாக்டர். திரும்ப அந்தம்மாவை பார்க்கலை. குழந்தையை கலைக்கவும் போகலை. அவ என்ன நினைச்சா என்ன?”, தப்பிக்கப் பார்த்தார்.
“அதேதான், திரும்ப பார்க்கவே போகாத டாக்டர்கிட்ட கூட உங்க மான மரியாதை முக்கியம்னு பொய் சொன்னபோது தெரியலையா? பெத்த பொண்ணு மேல நாமே சேத்தை வாரி பூசறோமேன்னு கூசலையா? இப்ப மட்டும் எங்கருந்து உனக்கு இதெல்லாம் வருதுன்னு கேட்கறேன்!”
சரோஜினியின் அழுகை சத்தம் மட்டுமே கேட்டது.
“இங்க பார், நீயும், உன் பெரிய பொண்ணு குடும்பமும் உங்க குற்ற உணர்ச்சியை போக்கிக்க என் கல்யாணத்தை ஒரு வாய்ப்பா பார்க்கறீங்க. கடந்து வரணும்னு நான் நிஜமாவே முயற்சி பண்ணாலும், எனக்குள்ள இருக்கற கோபத்தோட அளவு எனக்கே அதிர்ச்சியாத்தான் இருக்கு. எவனையாவது கல்யாணம் செஞ்சேன்னா, அனேகமா அவனை அடிச்சே கொன்னுடுவேன். சின்ன பொண்ணு கொலைகாரியா ஜெயில்ல இருக்கறதை மறைக்கறதைவிட கல்யாணம் செஞ்சிக்காம கன்னியாஸ்திரியா மாறிட்டான்னு இன்னொரு பொய்யை சொல்லிடு.”
விசும்பல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே இணைப்பை துண்டித்தவள் அடுத்து அரை மணி நேரம் அழுகையில் கரைந்தாள். பெற்றவளைக் காயப்படுத்திவிட்டாலும் அதில் ஒரு திருப்தியும் வந்துவிடவில்லை. வயதான காலத்தில் இப்படி சொல்லால் நோகடிக்கின்றோமே என்ற கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கீர்த்திக்கு மேலும் மன உளைச்சலைத்தான் கொடுத்தது.
சில மணி நேரம் கழித்து தந்தைக்கு அழைத்து, பேசியதற்கு மன்னிப்பைக் கேட்டு, “கொஞ்ச நாள் அம்மாவை எனக்கு கூப்பிட வேணாம்னு சொல்லுங்கப்பா. வீணா நானும் கஷ்டப்பட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தறேன். யோசிக்காம பேசிடறாங்க. அந்த நேரம் என் கோவத்தையும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை.”, என்று சொல்லும் மகளுக்கு என்ன ஆறுதலைக் கூறுவார் வேணுகோபால்?
“நான் பார்த்துக்கறேன் மா. நீ கவலைப் படாத. இந்த கல்யாணத்துக்கு போகாமலேயே இருந்திருக்கலாம். இவதான் போகணும்னு அடம்பிடிச்சா. ம்ப்ச். விடு. ப்ரீத்தி சாயந்தரம் குழந்தையோட வரேன்னிருக்கா. சரியாகிடுவா. நீ அங்க தனியா இருக்க. இதெல்லாம் போட்டு மனச உழப்பிக்காதடா.”
தந்தையின் ஆறுதலை நினைத்து விரக்தியோடு புன்னகைத்தாள். “சொல்றது ஈசி. ஆனா மனச போட்டு உழப்பிக்காம இருக்க என்ன பண்றதுன்னு தெரியலையேப்பா”, என்று முணுமுணுத்தவளின் கவனத்தை கலைத்தது கைப்பேசியின் அழைப்பு மணி.
ஷீத்தல்தான் அழைத்திருந்தாள். “ஹலோ?”
“என்ன கீர்த்தி? இன்னும் டல்லாவே இருக்க? நான் வரட்டுமா?”
“ம்ப்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்லை ஷீத்து. மறுபடி அம்மாவோட சண்டை. அதே கல்யாண டாபிக். அப்படியே படுத்து தூங்கிட்டேன். அதான் குரல் கட்டியிருக்கு”, கனைத்து சரி செய்தாள்.
“ அச்சோ… இவங்களுக்கும் விவஸ்தையே இல்லை. வாரா வாரமா படுத்துவாங்க? விடு. நாளைக்கு நீ சண்டே மாஸ் வருவியாமாம். ஜோசஃப் சார் ஆர்டர்”, என்று ஒப்பித்தாள்.
“அதென்ன உங்கிட்ட சொல்றது? ஏன் என்னை நேரா கூப்பிட மாட்டாராமா?”, சடைத்தாள்.
“நானும் கேட்டேனே? அது, அவர் பேசினா நீ திரும்ப பேசுவியா, கால் கட் பண்ணுவியான்னு சந்தேகமாம். அதான் நான் தூது போகணுமாம். பாவம் அவரே சரண்டர் ஆகத்தான் ரெடியாகறார். நீ இன்னமும் சண்டையை இழுக்காதே. அவர் கூட சண்டை போட்டு, அந்த கோவத்தை வீட்டுல காட்டி, மொத்தமா எதுக்குடா மூட் அவுட் ஆகற? இல்லாட்டி என் வீட்டுக்கு வாயேன்?”, அவள் அக்கறை நிஜமாகவே நெகிழ்த்தியது.
“நீ டயர்டா இருப்ப ஷீத்து. போய் சாப்பிட்டு படு. நான் இனிதான் வீட்டை ஒழுங்கு செய்யணும், மெஷின்ல துணி போடணும்.”, காரணம் அடுக்கினாள்.
“ஹ்ம்ம்… சரி. ஆனா நாளைக்கு மாஸ் வர இல்லையா? நான் கரெக்டா ஒன்பதுக்கு உன் வீட்டு வாசல்ல இருப்பேன். எதுவும் சாக்கு சொல்லக்கூடாது“, எச்சரிக்கவும், தயாராக இருப்பதாக வாக்கு கொடுத்தாள்.
ஜோ ஏன் தன்னை அழைக்கவில்லை? ஷீத்தலிடம் சொன்னது போல பேசமாட்டேன் என்று நினைத்தானா? அவனை அழைக்க கைப்பேசியை எடுத்தவள், ‘அப்படி போட்டு அடிச்சிட்டு எந்த முகத்தை வெச்சிட்டு இப்ப பேசுவ? இன்னும் சாரி சொன்னா மட்டும் வலி போயிடுமா? இல்லை அடுத்து எப்ப உனக்கு பேய் பிடிக்கும்ன்ற பயம் போயிடுமா?’ என்ற மனசாட்சியின் கேள்வியில் பதில் வரவில்லை விசும்பல்தான் வந்தது.
ஞாயிறு காலை ப்ரேயர் முடிந்தது. அனேகப் பாடல்கள் அவளுக்கு தெரியாவிடினும், வில்லியம்ஸ் மனைவியின் பியானோ வாசிப்பில், அனைவரும் இணைந்து பாட கேட்பது ஆறுதலாக இருந்தது. அது முடிந்து செர்மன் ஆரம்பித்தது. வாரம் எதாவது ஒரு விஷயத்தை பேசு பொருளாக எடுத்துக்கொண்டு, நடக்கும் நிகழ்வுகள், வரலாற்று நிகழ்வு, பைபிள் கூற்று, அதுதரும் படிப்பினை என்று அரை மணி நேரம் வரை பேசுவார் பாஃதர் ஃப்ரான்சிஸ்.
இன்று மன்னிப்பு என்ற தலைப்பில் பேசப்போவதாக அறிவிக்க, கண்கள் அனிச்சையாக ஜோவை தேடியது. அவளுக்கு இரண்டு வரிசை பின்னால் இருக்க, தெரியாமல் பார்க்க முடியாது என்று முயன்று திரும்பாமல் இருந்தாள்.