“அது இருக்கு, தூரமா இருக்கப்போ எப்படி காட்டுறது, நேர்ல வாங்க, பேசிக்கலாம்” என்றாள்.
சில நொடிகள் இமைக்காமல் அவளை பார்த்தான். அவள் என்னவென முகத்தை உயர்த்திக் கேட்டாள்.
ஒன்றுமில்லை என்பதாக தலையாட்டியவன், “தூங்கிடாத, கல்யாண்கிட்ட பேசிட்டு வர்றேன்” என சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அண்ணனிடம் பேசி அண்ணியின் நலனை விசாரித்துக் கொண்ட கெளதம், பணத்தேவை இருக்கிறதா என கேட்டான்.
கல்யாணுக்கு நல்ல சம்பளம் என்ற போதும் கடந்த வருடம்தான் லோன் எடுத்து இடமொன்று வாங்கியிருக்கிறான். மாதா மாதம் வங்கிக் கடனுக்கு பெரும் தொகை சென்று விடுகிறது. கையில் இருந்ததை நேற்றே மருத்துவ மனையில் கட்டி விட்டான்.
இப்போது பணம் செலுத்தி விட்டு பின்னர் அலுவலகத்தில் கிளைம் செய்யலாம் என்ற கல்யாண், “இருந்தா பாருடா, இல்லைனா ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிருக்கேன்” என்றான்.
“ரொம்ப பண்ணாத என்ன? எனக்கு வேணும்னா அடாவடி பண்ணி வாங்கிப்பேன்” என்ற கெளதம், கையோடு அண்ணன் கேட்டதை விட அதிகமாகவே அனுப்பி வைத்தான்.
அடுத்து அம்மாவிடமும் பேசினான். “யசோ மட்டும் இல்லைனா இன்னிக்கு என் பாடு திண்டாட்டம்தான், உன் அப்பா கூட மல்லுக்கட்ட யாரால முடியும் சொல்லு, பக்குவமா பேசி என்னை ஊருக்கு அனுப்பி வச்சிட்டா, ரொம்ப பொறுப்புடா யசோ” என மருமகளை பற்றி சிலாகித்தார் அருணா.
அப்பாவிடமும் ஒரு நிமிடம் பேசி விட்டே மீண்டும் யசோவிடம் பேசினான். அத்தனை நேரமும் கணவனின் அழைப்புக்காக சமையற்கட்டிலேயே காத்திருந்தாள் யசோ.
உறக்கம் வழியும் கண்களோடு தன்னை பார்த்தவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள அவனுள் பெரிய ஆர்ப்பரிப்பு. முடியாமல் போனதில் பெரியதொரு மூச்சை இழுத்து விட்டவன், “நான் கூப்பிட லேட் ஆனா நீ போய் படுக்கலாம்ல யசோ?” என வாஞ்சையாக கேட்டான்.
“டயர்டா தெரியுற, பத்திரமா இரு, போ போய் தூங்கு” என்றான்.
“நாம பேசவே இல்லையே” என்றாள்.
“பேசணுமா?” எனக் கேட்டான்.
அவள் ஆம் எனவும் சொல்லவில்லை, மறுக்கவும் இல்லை. கண்கள்தான் பேசியது.
அதில் அவனுக்கான ஏக்கம் அப்பட்டமாக தெரிய, திரையில் தெரிந்த அவளது உருவத்திற்கு முத்தமிட்டான்.
“சும்மா பேசிட்டுலாம் இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரம் உன்னை பார்த்தா வேலையாவது…”அவன் அடுத்து சொல்லப் போகும் வார்த்தையை கணித்து வாயில் கை வைத்து அதிர்ந்தாள்.
சிரித்தவன், “சத்தியமா வந்திடுவேன் டி உன்கிட்ட” என்றான்.
இரவில் பேச்சை முடிப்பதற்கு முன் எப்போதும் செய்வது போல திரையில் தெரிந்தவனை விரல்களால் வருடினாள் யசோ. கணவனை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என சொல்ல எப்போதுமே அவளுக்கு வார்த்தைகள் தேவைப்படுவதில்லை.
“போதும் போதும் என் கன்னம் வலிக்குது” என தாடையை தடவிக் கொண்டு சொன்னான்.
“ஒழுங்கா சாப்பிட்டு தூங்குங்க” என சொல்லி அழைப்பை துண்டிக்க போனாள்.
“ஹேய் ஹேய்… இரு இரு” என்றவன், “உன் கோவத்தை நேர்ல வந்தப்புறம் பேசிக்கிறேன்னு சொன்னியே, இப்பவே பேசு. அட ஒன்னு ரெண்டு வார்த்தை கூட குறைச்ச ஆனாலும் பரவாயில்லை, கோச்சுக்க” என்றான்.
அவளோ பற்கள் தெரிய சிரித்தாள்.
“நல்லாருக்குடி கருவண்டு உன் கோவம்!” என்றான்.
அவள் முகம் சுருக்க, “சுழட்டி சுழட்டி பார்க்கிற உன் கண்ண சொன்னேன் யசோ. உன் கலரை இல்ல” எனக் கூறி சிரித்தான்.
“சொல்லிக்கோங்களேன், உங்களை விட நிறம் கூடத்தான் நான்” என்றாள்.
“ஏய்…” என ராகம் இழுத்தான்.
“ஏன் வெளுப்பா இருந்தாதான் நிறம் கூடன்னு சொல்லணுமா? நிஜத்துல என் நிறத்தைத்தான் நிறம் கூடன்னு சொல்லணும்” என்றாள்.
“கூட குறைச்சல்லாம் எனக்கு தெரியாது. நீதான் என் கண்ணுக்கு குளிர்ச்சி” என சொல்லி, அவளை ஆழ்ந்து பார்த்தவன், “யுவர் டஸ்கி கலர் ஓன்ஸ் த நைட், அண்ட் யூ ஓன் ஆல் மை லைட்ஸ் (உன்னுடைய நிறம் இரவுக்கு சொந்தமானது, நீயோ என்னுடைய எல்லா விடியலுக்கும் சொந்தமானவள்)” என்றான்.
அவனை பார்வையால் விழுங்கினாள் பெண்.
குரலை செருமிக் கொண்டவன், “தனியா இருக்க நல்ல பையன் மனசை கெடுக்காதடி கண்ணம்மா” என்றான்.
“கல்யாண் மாமாட்ட பேசினீங்களா?” என அவளே பேச்சை மாற்றினாள்.
மேலும் கால் மணி நேரம் அவளிடம் பேசி விட்டுத்தான் “பை தங்கப் பூச்சி” என்றான்.
அவள் கையசைத்து விடை பெற, மீண்டும் அவனது முத்தம் அழுத்தமாக அவளின் திரை உருவத்தை தழுவிக் கொண்டது.