ஆயிரத்தில் அவள் ஒருத்தி -14

அத்தியாயம் -14

திங்கள் கிழமை காலையே பதிவாளர் அலுவலகம் வந்து விட்டனர் கெளதம், யசோ இருவரும். உடன் கல்யாண், கௌதமின் வக்கீல் நண்பன் ஒருவன் மற்றும் அவனது உதவியாளன் என வந்திருந்தனர். 

தாமத திருமணப் பதிவு என்பதால் சில நடைமுறைகள் இருந்தன, அதையெல்லாம் செய்து அபராத தொகை செலுத்திதான் பதிவு முடிந்தது. 

வீடு வர மதியமாகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் யசோவுக்கு செமினார் ஆரம்பிக்கிறது. திருச்சியிலேயேதான் என்றாலும் வீட்டிலிருந்து நல்ல தூரம், தினம் சென்று வர நண்பன் ஒருவனிடம் விசாரித்து ஆட்டோ ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான் கெளதம். 

மதிய சப்பாட்டுக்கு பின் இருவரும் தனிமையில் இருந்தனர். நேற்று வரை ஒன்றும் தெரியவில்லை, இப்போது பிரிவை நினைத்து வருத்தப் பட்டனர். யசோ அழவெல்லாம் இல்லை, இரண்டு வாரங்கள்தானே என கணவனின் கன்னம் பிடித்து சமாதானமாக சொன்னாள். 

எங்கே அழுது விடுவாளோ என்ற யோசனையில் இருந்த கெளதம் அவளின் செயலில் சிரித்து விட்டான். 

“என் தொல்லை விட்டதுன்னு ஜாலியா இருக்க நினைச்சிட்ட… ஹ்ம்ம்…” என்றான்.

“என்ன தொல்லை? சும்மா ஏதாவது சொல்லக்கூடாது. அங்க உங்க வேலைய வெயிட் பண்ண வைங்க, வயிற வெயிட் பண்ண விடக்கூடாது, டைமுக்கு ஒழுங்கா சாப்பிடுங்க, நைட்ல ரொம்ப நேரம் டிவி பார்த்திட்டு தூங்காம இருக்காதீங்க, சீக்கிரம் படுக்கணும்” என்றாள். 

“இவ்ளோ நாள் நீயா கூட இருந்து பார்த்துகிட்ட,  ரொம்ப அக்கறைதான், நீதானே இங்கேயே இருந்துக்கிறேன்னு நேத்து சொன்ன?” என அவன் கேட்டதுக்கு பதில் தராமல் வீட்டு சமையலறையில் இட்லி பொடி, சாதத்துக்கு கலந்து சாப்பிடும் பொடி வகைகள், ஊறுகாய் எல்லாம் எங்கெங்கே இருக்கிறது என சொல்லிக் கொண்டிருந்தாள். 

“ஆத்தி இதெல்லாம் ஃபோன்ல பேசிக்கலாம், இப்ப நேர்ல இருக்கிறப்போ மட்டும் செய்ய முடியறதை செய்யலாம்” என கிறங்கிய குரலில் சொன்னான். 

“ஹையோ இப்பவா?” என அதிர்ந்தாள். 

“இப்பவேதான், இன்னும் ரெண்டு மாசம் போனா ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவெர்ஸரி, நாம வெறும் ரெண்டே ரெண்டு தடவைதான் சேர்ந்து இருந்திருக்கோம். பின்னாடி நம்ம ஹிஸ்டரி டீடெயில்ஸ் நாம அனலைஸ் பண்ணி பார்த்தா நமக்கு அவமானமா இருக்கும்” என்றான். 

“நாமன்னு என்னையும் சேர்க்காதீங்க” என்றாள். 

“ஹை நல்லா சொல்லுவ, உன் ஹஸ்பண்ட்க்கு ஒரு அவமானம்னா உனக்கும்தான் புரிஞ்சுதா? பேசிட்டே இருக்காம நம்ம மானத்தை   காப்பாத்திக்கிற வழிய பார்ப்போம் பூனைக்குட்டி” என சொல்லிக் கொண்டே அவளை சுற்றி வளைத்தவன் அவளோடு பின்னிப் படர ஆரம்பித்தான். 

அயர்ந்து போன யசோ அவனது வெற்று மார்பில் உறங்கிக் கொண்டிருந்தாள். எதிப்பக்கம் இருந்த முழு நீள கண்ணாடியில் அவளை பார்த்திருந்தவன் அவளின் முகத்தை வருடி விட்டான். அசைவில்லாமல் ஆழ்ந்த உறக்கம் அவளிடம். 

என்னவோ அவனுக்கு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டது போன்ற தோற்றம். இவளுடனான நீண்ட தூர வாழ்க்கை பயணத்தை அனுபவித்து ரசிக்க ஆவலாக இருந்தான். இந்தக் கணம் நிம்மதியாக இருந்தது.  

மாலையில் யசோ விழிக்கும் போது அவனும் விழித்திருந்தான். சட்டென அவனிடமிருந்து விலகப் போனவளை பிடித்துக்கொண்டவன், “இவ்ளோ நேரம் நான்தான் உன்னை தாங்கிட்டு இருந்தேன், கூட ஒரு செகண்ட் தாங்காம போயிடுவேனா, மெல்ல எழும்புறது” என்றான். 

“எவ்ளோ நேரம் இப்படி படுக்க வச்சிப்பீங்க, உடம்பு வலிக்க போகுது, தள்ளி படுக்க வைக்க என்னங்க?” எனக் கேட்டாள். 

அவள் காதில் சின்னக் குரலில், “என்னை தாங்குறவளை நானும் தாங்கணும்ல?” எனக் கேட்டான். 

வெட்கம் சிந்தும் புன்னகையுடன் அவனிடமிருந்து விலகி சென்றாள். 

சற்று நேரத்தில் கீழே செல்ல ஏதுவாக தயாராகி விட்டனர் இருவரும். திடீரென அவனை பார்த்தவள், “ஏங்க, எல்லாமே நல்ல படியா நடக்குதே, இப்படியே எல்லாம் நிலைக்குமா எனக்கு?” என கண்கள் கலங்க கேட்டாள். 

இத்தனை அன்பும் காதலும் அவளை மிரள வைக்கிறது. சிறு வயதிலிருந்து வேதனையை மட்டுமே கண்டிருந்தவளுக்கு இப்படி சந்தேகம் எழுவது இயல்புதான் என்பதை புரிந்திருந்தான். 

“நம்ம எண்ணங்களுக்கு வலிமை இருக்கு யசோ, நல்லதே நினைச்சா நல்லது மட்டும்தான் நடக்கும். உன்னை போல ஒருத்திக்கு நான் கிடைச்சதெல்லாம் சாதாரணம், நீ எனக்கு கிடைச்சதுக்குதான் நான் தகுதியானவனான்னு தெரியலை. இப்படியெல்லாம் யோசிக்க கூடாது” என்றான். 

அவள் தலையாட்டிக் கொள்ள,  அவளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான். அவளின் பின்னால் அணைவாக நின்று கொண்டு வானத்தை சுட்டிக் காட்டினான். 

“இந்த ரெண்டு வாரம் நாம தனி தனியா இருந்தாலும் ஒரே வானத்துக்கு கீழதான் இருக்கப் போறோம், டிஸ்டன்ஸ் நம்ம உடலுக்குத்தான் யசோ, நம்ம சோல்ஸ்க்கு(souls)  இல்லை” என்றான். 

ஒத்துக் கொள்வதாக அவள் தலையாட்ட, “நாம சேர்ந்து வாழ்ந்த இந்த கொஞ்ச காலத்துலேயே நினைச்சு நினைச்சு பார்க்க அவ்ளோ இருக்கு. டூ வீக்ஸ் ஓட்டுறது ஒன்னும் அவ்ளோ கஷ்டம் இல்லை யசோ. சீக்கிரம் வந்து கூப்பிட்டுக்கிறேன்” என்றான். 

அவன் பக்கமாக திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள். அழுகையை உள் இழுத்து தன்னை தானே நிலைப் படுத்திக் கொண்டுதான் விலகினாள். 

வாஞ்சையாக அவளின் கன்னம் தட்டிக் கொடுத்து கீழே அழைத்து சென்றான். பின் யசோ சாதாரணமாக இருந்து கொண்டாள். நவீனை கடைக்கு அழைத்து சென்று அவனுக்கு தேவையானது எல்லாம் வாங்கிக் கொடுத்து அழைத்து வந்தான் கெளதம். 

நேரம் பறப்பது போலிருந்தது அவனுக்கு. ஒன்பது மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டான். யசோ முகம் வாடித் தெரிந்தாள், ஆனால் அழாமல் வாசல் வரை வந்து வழியனுப்பினாள். அவனுக்கும் மனம் கனத்துக் கிடக்க, எல்லாரிடமும் வெறும் தலையசைப்பு மட்டும்தான். 

அடுத்த நாள் காலையில் பெங்களூரு வந்த கௌதமை யசோ இல்லாத வீடு வரவேற்றது. 

சோர்வாக அமர்ந்தவன் வந்து விட்டதாக மனைவிக்கு செய்தி அனுப்ப, உடனே அழைத்து விட்டாள் யசோ. 

“நைட் நல்லா தூங்குனீங்களா?” எனக் கேட்டாள். 

“ம்ம்… நீ இல்லாம இந்த வீடு நல்லாவே இல்லை” என்றான். 

“நான் வர்றதுக்கு முன்னாடி அந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருந்தீங்க?” என்றாள். 

“நீயா என்னை பார்த்துகிட்டனு நேத்து நான் கேட்டதுக்கு இன்னிக்கு இப்படி பதில் சொல்றியா? பொடிக் குஞ்சு மாதிரி இருந்திட்டு நல்லா பேசுறம்மா” என கிண்டல் செய்தான். அவள் அழகாக சிரித்தாள். 

அதிகமெல்லாம் பேச நேரமில்லை, அவனுக்கு உறங்கி எழ வேண்டும், அவளுக்கு தான் அங்கு இருக்கும் வரை தம்பியை கவனித்து அனுப்ப வேண்டும். 

காலை ஒன்பது மணி போல அழைப்பு செய்து கணவனை எழுப்பி விட்டாள். யசோ வரும் வரை சாப்பிட இங்கு வந்து விடு என தியாகு முன்னரே சொல்லியிருந்தான். தயாராகி மைதிலி சமைத்ததை சாப்பிட்டு அலுவலகம் சென்றான். 

அங்கே அவனது டீமிற்கு புதிதாக சேர்ந்த நபரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் மேனேஜர். யோகிதாவை எதிர்பார்த்திராதவனுக்கு சற்று திகைப்புதான். உடனே தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் நன்றாகவே சமாளித்து விட்டான். 

ஆனால் சற்று நேரம் கழித்து அலுவல் விஷயமாக அவனிடம் பேச வந்த யோகிதா, “என்னை தெரியலையா கெளதம்?” என வெளிப்படையாக கேட்டு விட்டாள். 

அதன் பின் அவனுக்கும் பொய் சொல்ல பிடிக்காமல், “நல்லா தெரியும்” என சொல்லி புன்னகை செய்தான். 

கௌதமை போலவே யோகிதாவுக்கும் இவனை பிடித்துதான் போயிருந்தது, ஆனால் பெண் பார்க்கும் படலம் கூட நடக்காமல் திருமண பேச்சு நின்றதால் அவ்வளவு வேதனை இல்லை. 

யோகிதாவுக்கு ஏற்ற வரன் இன்னும் அமையாததால் இன்னும் மாப்பிள்ளை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்களாம். வெளிநாட்டில் செட்டில் ஆக ஆசைப் படுவதால் அப்படி உள்ள வரனுக்கு முன்னுரிமை கொடுத்து பார்க்கிறார்களாம். இயல்பாக அவளே எல்லாம் பகிர்ந்து கொண்டாள். 

கௌதமிடம் அவனது மனைவியை பற்றி ஆர்வமாக விசாரித்தாள். 

அலுவலகத்தில் கூட சொல்லாமல் திருமணம் செய்து கொண்டாய், விருந்தாவது கொடுக்கலாமே என இங்கு கேட்பதை சொன்னவன், “ரொம்ப டைட்டா போயிட்டிருக்கு, நீங்க வந்ததும்தான் ட்ரீட் கொடுக்கணும்னு இருந்திருக்கு போல. என் வைஃப் இப்ப ஊர்ல இருக்கா, வந்ததும்  உங்களுக்கு இன்ட்ரோ கொடுக்கிறேன்” என்றான். 

அவளும் அதற்கு மேல் அவனுடைய சொந்த வாழ்க்கை பற்றி விசாரணை போடாமல் வேலை சம்பந்தமாக பேச ஆரம்பித்து விட்டாள். 

மாலையில் தியாகுவிடம் யோகிதா பற்றி சொன்னான் கெளதம். 

“நல்லா போயிட்டிருக்க உன் லைஃப்ல இதென்ன புது இடைஞ்சல், யசோகிட்ட மட்டும் இவளை பத்தி மூச் விடாத” என அறிவுரை சொன்னான் தியாகு.  அப்போது நண்பனை பார்த்து சிரித்தானே தவிர வேறெதுவும் சொல்லிக் கொள்ளவில்லை கெளதம். 

இரவில் மனைவியிடம் பேசுகையில் மறக்காமல் யோகிதா பற்றி சொல்லி விட்டான். 

“உலகம் ரொம்ப சின்னதுதான் போலங்க” என்றாளே தவிர யோகிதா பற்றி வேறெதுவும் கேட்டுக் கொள்ளவில்லை யசோ. அதன் பின் அவர்களுக்கு அவர்களை பற்றி பேசவே நேரம் சரியாக இருந்தது. 

காணொளி அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே கொட்டாவி விட்ட மனைவியை முறைத்தவன், “நல்லா மிஸ் பண்றடி என்னை, போ போய் தூங்கு” என்றான். 

“சரி சரி, பேசுங்க” என நிமிர்ந்து அமர்ந்தாள். இப்போது கெளதம் கொட்டாவி விட்டான். இருவருக்கும் ஒரே சிரிப்பு. 

விடிய விடிய பேசிக் கொள்வதெல்லாம் தங்களுக்கு ஒத்து வராது என புரிந்த கெளதம், “நமக்குள்ள எதுவோ  டிஃபெக் போலடி கண்ணம்மா”என்றான். 

“எல்லாம் நல்லாத்தான் இருக்கு, தூங்குவீங்களாம் இப்போ” என அவள் சொல்ல அவனும் பேச்சை முடித்துக் கொண்டான். 

திருச்சி வீட்டின் அறையிலும் அவர்களின் புகைப்படத்தை மாட்டியிருந்தான் கெளதம். காலையில் கண் விழித்ததும் பார்வையில் படும் படி இருக்கும் அதை பார்த்த படிதான் யசோவுக்கு அன்றைய நாள் தொடங்குகிறது. 

யசோவுக்கு செமினார் ஆரம்பித்த முதல் நாளே அலைச்சலில் சோர்ந்து விட்டாள். காலையில் எனக்கு உதவுகிறேன் என வராதே, நன்றாக தூங்கி எழுந்து வந்தால் போதும் என கண்டிப்போடு சொல்லி விட்டார் அருணா. 

அந்த வாரம் கல்யாண், ஜோஷ்னா இருந்ததால் அருணாவுக்கு உதவினார்கள். அவர்கள் சென்ற பிறகு முதல் நாள் இரவே காயெல்லாம் நறுக்கி வைத்து விடுவாள்  யசோ. 

தினமும் மனைவியுடன் பேசுவது போலவே  நவீன் உறங்கப் போவதற்கு முன் அம்மாவின் கைப்பேசி வாயிலாக அவனிடமும் பேசுகிறான் கெளதம். இருவரும் என்னதான் பேசுவார்களோ, மாமாவின் அழைப்பு வந்தால் வைக்க நவீனுக்கு குறைந்தது கால் மணி நேரமாவது ஆகும். 

அந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் தியாகுவின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அங்கேயேதான் இருந்தான் கெளதம். இன்றும் யசோவுக்கு அரை நாள் செமினார் உண்டு.

மைதிலியும் தியாகுவும் கேரம் விளையாடிக் கொண்டிருக்க, படம் பார்த்துக் கொண்டிருந்த கெளதம் அதில் லயிக்காமல் டிவியை அணைத்து விட்டான். இஜ்ஜு விளையாட ஹாலில் பாய் விரிக்கப் பட்டிருந்தது. அதிலேயே படுத்து விட்டான் கெளதம்.