மாமியார் வீட்டில் ஆரம்பத்தில் குணாவுக்கு நன்றாகவே சென்றது. போக போக கணவன் மனைவிக்கு இடையில் காதம்பரியின் தலையீடு அதிகமாக தொடங்கி விட்டது. இவன் எது சொன்னாலும் ஹேமா கண்களை கசக்குவாள், உடனே காதம்பரி வந்து அவள் செல்லமாக வளர்க்க பட்டவள் பொறுமையாக இருங்கள் என அறிவுரை சொல்வார்.
எங்கேயாவது வெளியில் செல்லலாம் என இவன் திட்டமிட்டால் அம்மாவை கேட்டுக் கொண்டுதான் முடிவெடுப்பாள் ஹேமா. அவனை கேளாமலே அவளாக ஏதாவது திட்டம் போட்டால் சரியான காரணம் இருந்தால் கூட இவனால் மறுக்க முடியாது.
மரியாதை குறைவாக ஏதும் நடப்பதில்லை என்றாலும் ஒரு மாதிரி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டது போல அவனுக்கு மூச்சு முட்டுகிறது.
எனக்கும் ஹேமாவுக்கும் இடையில் பிரைவேசியே இல்லை என அண்ணன்களிடம் சொல்லி வருத்தப்பட்டான். மனைவியை அழைத்துக் கொண்டு இங்கேயே வந்து விட விரும்புவதாகவும் சொன்னான்.
“அதுக்கென்னடா நாளைக்கே கூட வாயேன்” என்றான் கல்யாண்.
ஹேமா அப்படியெல்லாம் எளிதாக இங்கு வந்து விட மாட்டாளாம். திருமணம் செய்த சமயத்தில் அப்பா நடந்து கொண்ட விதத்திற்காக அவராகவே அவளிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு வீட்டிற்கு வா என அழைத்தால்தான் வருவாளாம்.
‘நீ சொல்றது நடக்கிற கதையா?’ என கல்யாண் பார்க்க, கௌதமோ தம்பியை நன்றாக முறைத்து வைத்தான்.
குணா வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட சமயத்தில் சண்முகம் கோவப்பட்டு பேசினார்தான், சராசரி அப்பாக்கள் கோவத்தில் பேசுவது போலத்தான், தகாத வார்த்தை என ஏதும் சொல்லியிருக்கவில்லை.
ஜோஷ்னாவை அழைத்துக் கொண்டு கல்யாண் வந்த சமயத்தில் கூட ஓரிரண்டு வார்த்தைகள் விட்டார், அதற்கே இன்னும் மன்னிப்பு கேட்டிருக்கவில்லை அவர். ஜோஷ்னாவும் அதை மனதில் வைத்துதான் மாமனாரிடமிருந்து தள்ளியே நிற்கிறாள். ஆனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் அவள் நிர்பந்திக்கவில்லை.
“ஸாரியெல்லாம் மனசிலேருந்து அவங்களா தானா கேட்கிறது, அப்பாகிட்ட இதை போய் நான் இல்லை அம்மா கூட பேச முடியாது. இன்னும் அவர் உம்மேல கோவத்துலதான் இருக்கார், இப்ப இப்படி சொன்னா கதை வேற மாதிரி ஆகிடும்டா” என்றான் கெளதம்.
“அம்மா மூலமா எல்லாமே எனக்கு தெரியும், ஹேமாவை தப்பாலாம் அப்பா ஏதும் பேசிடல, பொதுவா உன்னைத்தான் திட்டினார், வீட்டுக்குள்ள வராதன்னு சொல்லிருக்கார். அப்பா எப்படி மன்னிப்பு கேட்பார்?” எனக் கேட்டான் கல்யாண்.
“வேணும்னா அப்பா அம்மா ரெண்டு பேரையும் அங்க வந்து கூப்பிட சொல்லி பேசுறேன் டா, அதுக்கே அவர் என்ன சொல்வாருன்னு டவுட் தான். அங்க உன் நிலைமையை சொல்லித்தான் கேட்கணும்” என்றான் கெளதம்.
குணா ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு ஸாரி கேட்பதால் அப்பா குறைந்து போய் விட மாட்டார், இந்த வீட்டிற்கு வாங்கிய லோனில் ஒரு பங்கு நானும் கட்டினேன், என்னால் இங்கு வாழ முடியாத நிலை, நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டு என்னை தள்ளி வைத்து விட்டீர்கள் என ஏதேதோ பேசினான்.
சண்முகம் கடைக்கு வந்து விட, குணா அங்கிருந்து சென்று விட்டான்.
“என்னடா… சின்னதுரை முகம் தொங்கிப் போய் கெடக்கு, என்னவாம் சங்கதி?” என மற்ற இரு மகன்களிடமும் கேட்டார் சண்முகம்.
அவனுக்கு இங்கேயே வர வேண்டும் போல் இருக்கிறதாம், நீங்கள் என்ன சொல்வீர்களோ என பயப்படுகிறான் என அப்பாவின் மனதை அறிய வேண்டி பேசினான் கெளதம்.
“அதான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிட்டேன்ல டா, இதோ பெரியவன் வரலை, அவனை யார் இப்ப தடுத்தது?” எனக் கேட்டார் சண்முகம்.
யோசனையாக மகன்களை பார்த்தவர், “அந்த புள்ள மாசமா இருக்கிறத இந்த பய என்கிட்ட இன்னும் சொல்லலை. நானாதான் தெரிஞ்சுக்கிட்டேன், இன்னிக்கு தேதி வரைக்கும் அந்த வீட்டம்மா யசோவை என்ன ஏதுன்னு எட்டி பார்க்கல, யசோவை விடு வீட்டு மருமக ஆகிடுச்சு, அந்த சின்ன பயல நினைச்சு பார்த்துச்சா?
இப்ப நான் போனா மெல்ல அவனை அந்த வீட்டுக்கு இழுக்கிறது பத்தி பேச ஆரம்பிக்கும் அந்தம்மா, இருக்கிற சொத்து போதாம நவீனுக்கு அநியாயம் செய்ய அவ்ளோ ஆசை. அதுக்கெல்லாம் நான் விட மாட்டேன் திரும்ப பேசிடுவேன்னு வச்சுக்க.
எனக்கு அந்தம்மா மூஞ்சு பார்க்க புடிக்கலடா, இவனுக்கு இங்க வரணும்னா வரட்டும், ஹேமா வந்தாலும் நான் என்ன சொல்ல போறேன், உங்கம்மாதான் போய் பார்த்திட்டு வந்தாளே, அப்புறம் நான் வேற தனியா போகணுமா? நான் அங்க போய் பேசுறதெல்லாம் வேலைக்கு ஆகாது” என தீர்மானமாக சொல்லி விட்டார் அவர்.
அதன் பின் வாடிக்கையாளர் ஒருவர் பின் ஒருவராக வர அதற்கு மேல் எதுவும் அப்பாவிடம் பேச முடியாமல் அவரது பையன்களும் வீட்டுக்கு வந்து விட்டனர்.
மதியத்துக்கு அசைவம் செய்ய திட்டமிட்டிருந்தார் அருணா. என்னென்ன வாங்க வேண்டும் என கேட்டு கடைக்கு புறப்பட்ட கெளதம், நவீனையும் வா என அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
பாத்திரங்களை ஒழித்துப் போட்ட யசோ சோர்வாக தெரிந்தாள். ஆகவே இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், சற்று நேரம் நீ படுத்து எழுந்து வா என யசோவிடம் சொன்னார் அருணா. அவள் சரி எனவும் ஹாலுக்கு வந்த அருணா டிவியை போட்டுக் கொண்டு அமர்ந்தார்.
மதிய சமையல் ஜோஷ்னா செய்வதாக சொல்லியிருந்தாள். நிறைய பாத்திரங்கள் கிடக்க, அத்தைக்கு மீண்டும் கால் வலி வந்து விட போகிறது, நாமே கழுவி வைத்து விட்டு செல்லலாம் என நினைத்து அந்த வேலையை பார்க்கலானாள் யசோ.
குணா உர் எனதான் இருந்தான். கடைக்குட்டியின் தலையை அருணா கோதி விட, சலுகையாக அவரின் மீது சாய்ந்து கொண்டான்.
“கொஞ்ச நேரம் ரூம்ல போய் படேன் டா” என அம்மா சொல்ல, அவனும் மாடிக்கு செல்ல போனான்.
“அங்க உன் ரூம்ல ஏசி இல்லை, கீழேயே என் ரூம்ல படுத்துக்க” என்றார் அருணா.
என் அறை ஏசி என்னவானது என குணா கேட்க, கல்யாணின் அறைக்கு மாற்றப் பட்டதை சொன்னார். அவன் கோவப்பட, “என்னடா இப்போ? நீதான் இப்ப அங்க இல்லல, சட்டுனு புது ஏசி எப்படி வாங்குறது?” என்றார் அருணா.
“அதுக்குன்னு என் ஏசிய கழட்டிவீங்களா? அப்ப மொத்தமா என்னை இங்கேருந்து அனுப்ப பார்க்குறீங்க என்ன?” எனக் கோவமாக கேட்டான் குணா.