ஆயிரத்தில் அவள் ஒருத்தி -13

அத்தியாயம் -13

காலை எட்டு மணிக்கு எழுந்து குளித்து மனைவியை தேடிக் கொண்டு கீழே சென்றான் கெளதம். ஜோஷ்னா ஹாலில் அமர்ந்து பூண்டு உரித்துக் கொண்டிருந்தாள்.

“சண்டே கூட சீக்கிரம் எழுந்திப்பீங்களா அண்ணி?” எனக் கேட்டான் கெளதம்.

“குழந்தைங்க வந்திட்டா லீவ் நாளே கிடையாது தம்பி, சீக்கிரம் நீயும் தெரிஞ்சுப்ப” என அவள் சொல்ல, புன்னகையுடன் சமையலறை சென்றான். தமிழ் பேச வந்தாலும் மலையாள வாடை தெரியும் அவளின் பேச்சில்.

சமையலறையில் யசோவுக்கு உதவிக் கொண்டிருந்தார் அருணா. கடைக்கண் பார்வையில் மனைவியை தழுவிக் கொண்டான் கெளதம்.

கணவனை கண்ட யசோ அவன் முகத்தை பாராமல் தலை தாழ்த்திக் கொண்டாள்.

நேற்றே அதிக வேலை செய்து கால் வலியை இழுத்துக் கொண்டாய், ஒழுங்காக உட்கார்ந்து செய்யும் வேலையாக பார், நான் என் மனைவிக்கு உதவி கொள்வேன் என அம்மாவை அப்புறப்படுத்த பார்த்தான் கெளதம்.

“உனக்கென்னடா தெரியும்?” என நகர மறுத்தார் அருணா.

“அதெல்லாம் அவகிட்ட கேட்டு கேட்டு  செய்துக்குவேன்” என்றவன் அம்மாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஹாலில் விட்டான்.

வெளியில் பிள்ளைகளுக்கு  சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த பெரிய மகனிடம் சென்று விட்டார் அருணா. நவீனும் அங்குதான் இருந்தான்.

கணவனுக்கு காஃபி கலந்து கொண்டிருந்த யசோவை பின்னாலிருந்து அணைத்துக் கொண்ட கெளதம், “சொல்லிட்டு வர மாட்டியாடி என் கொத்தமல்லி கொழுந்தே, இப்படியா காலையிலேயே ஏமாற விடுவ?” எனக் கேட்டான்.

“எனக்கு எப்பவும் போல முழிப்பு வந்திடுச்சு, நீங்க விடுங்க, இது நம்ம ரூம் இல்லை” என பாவமாக சொன்னாள்.

அணைப்பை விட்டாலும் அவளை நெருங்கி நின்று கொண்டே காஃபி பருகினான். அவளும் அடிக்கடி அவனை பார்த்து சிரித்துக் கொண்டே பூரி போட்டு எடுத்து வைத்தாள்.

நைட்டியில் இருந்தவள் தலைக்கு குளித்து முடியை க்ளிப் செய்திருந்தாள். அடுப்புக்கு அருகில் நின்றதில் கழுத்தின் பின் பக்கம் கச கசவென ஆக, தோள் பட்டை கொண்டு துடைக்க முயன்றாள்.

அவளுக்கு பின்னால் வந்து நின்று முடியை ஒரு கையால் தூக்கிக் கொண்டவன் இன்னோரு கையால் அவளின் கழுத்தை துடைத்து விட்டு வாயை குவித்து ஊதி விட்டான். கை வேலையை விட்டு விட்டவள் உடம்பு நெளிய நின்றாள்.

“என்ன பண்ணிட்டேன் யசோ, இன்னும் கூச்சம் விட்டு போகலையா உனக்கு?” என அவன் கேட்கும் போதே அவனது கையை ஒதுக்கி விட்டாள்.

“என்ன யசோ?” குழைந்து வந்தது அவனது குரல்.

“அது என்னமோ வெட்கமா வருது, தானா வருது, நான் என்ன பண்ணுவேன்?” எனக் கேட்டுக் கொண்டே வேகமாக பூரிக்கு மாவை தேய்த்தாள்.

பின்னால் திரும்பி பார்த்து யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டவன் அவளை அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு பின் விட்டான்.

சில நொடிகள் செய்வதறியாமல் நின்றிருந்தாள். அவளை ரசனையாக பார்த்தவன், “ஏய் செல்லாட்டுக்குட்டி! வேலைய பார்” என்றான்.

“கிட்ட வரக்கூடாது” என்ற செல்ல மிரட்டலோடு வேலையை தொடர்ந்தாள்.

அதன் பின் அவனும் அவளை சீண்டாமல் நல்ல பிள்ளையாக அவளுக்கு உதவினான்.

ஹாலில் ஆரவாரமான சத்தம் கேட்டது. பிள்ளைகளோடு ஏதோ விளையாட்டு போல என எண்ணிக் கொண்டனர் இந்த இருவரும்.

பர பரப்பாக வந்த அருணா தட்டில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டே, “குணா வந்திருக்கான் டா, பூரின்னா அவனுக்கு இஷ்டம்” என சொல்லி சென்றார்.

“பசங்கள பார்த்தாலே உங்கத்தைக்கு பத்து வயசு கம்மி ஆகிடும்” என்றான் கெளதம்.

“அம்மான்னா அப்படித்தான்” என்ற யசோ அடுப்பை அணைத்தாள்.

“இன்னும் மாவு இருக்கே போடலையா?”

“போட்டதே சரியா இருக்கும்ங்க, மிச்சத்தை ஃபிரிஜ்ல வச்சிடலாம்” என சொல்லி வைத்தவள், “வாங்க, குணா மாமாகிட்ட பேசிட்டு வரலாம்” என அழைத்தாள்.

இருவரும் ஹால் சென்று குணாவை வரவேற்றனர். சோஃபாவில் அமர்ந்தே பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் குணா. பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்திருப்பான் போலும். தர்ஷன் வாயெல்லாம் இழுப்பிக் கொண்டு சுவைத்துக் கொண்டிருந்தான். கெவினின் கையிலும் சாக்லேட் இருந்தது. அம்மாவின் அருகில் தீனிகள் இருந்த சின்ன பை இருந்தது.

அந்த தீனிப்பையை பிரித்து பார்த்த அருணா, அதில் சாக்லேட் இல்லாமல் போகவும் ஜாங்கிரி எடுத்து நவீனிடம் நீட்டினார். வேண்டாம் என அவன் மறுக்க, “சரி பூரி சாப்பிட்டு இது சாப்பிடு, யசோ புள்ளைக்கு சாப்பாடு வை” என மருமகளிடம் சொல்லி அவனை சாப்பிட அனுப்பி வைத்து விட்டார்.

“அவன் என்ன சின்ன குழந்தையாமா?” எனக் கேட்டான் குணா.

“அப்புறம் என்ன, அவன் பெரிய மனுஷனா டா?” எனக் கேட்டான் கெளதம்.

அண்ணனின் பேச்சை கண்டு கொள்ளாமல், “உன் பூரி மசால் ரொம்ப மிஸ் பன்றேன்மா” என்றான் குணா.

“நல்லா சாப்பிடுடா” என அன்பாக சொன்னார் அருணா.

இளைய மகனை தூக்கிக் கொண்டு மாடிக்கு செல்லப் போனாள் ஜோஷ்னா. குழந்தையை இங்கேயே விட்டு விட்டு நீயும் சாப்பிடு என அனுப்பி வைத்தார் அருணா. இப்படி குணா, அருணா தவிர மற்றவர்கள் அனைவரும் உணவு மேசைக்கு சென்று விட்டனர். மாமியாருக்கு தட்டில் எடுத்து வைத்து அவர் இருக்குமிடமே கொடுத்து சென்றாள் யசோ.

“நீ எப்ப சாப்பிடுறதா இருக்க, வா வா நாமளே எடுத்து வச்சுக்கலாம்” என சொல்லி யசோவையும் தன்னுடன் அமர வைத்துக் கொண்டான் கெளதம்.

உணவு மேசை கல கலப்பாக இருந்ததை கண்ட குணாவுக்கு தான் இதையெல்லாம் மிஸ் செய்கிறோம் என ஒரு மாதிரி ஆனது.

சொந்த வீட்டில் நான் மட்டும் விருந்தினர் போல் ஆகி விட்டேன், அண்ணன்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், வேறு வீட்டு பையனான நவீனுக்கு கூட என் அம்மாவின் கவனிப்பு நன்றாக கிடைக்கிறது  என சகோதரர்கள், நவீன் மேல் எல்லாம் அந்த நேரம் சின்ன பொறாமை.

காட்டிக் கொள்ளாமல் அம்மாவிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தான். ஹேமா பற்றி கேட்டறிந்து கொண்டார் அருணா.

அப்பா முன்னரே சாப்பிட்டிருப்பார் என கெளதம் நினைத்திருக்க, இல்லை என்ற கல்யாண், உடனே அப்பாவுக்கு அழைத்து சாப்பிட வருமாறு சொன்னான். கடைப்பையன் இன்று விடுமுறை, இங்கேயே சாப்பாடு எடுத்து வந்து தர சொல்லு என சொல்லி விட்டார் சண்முகம்.

கடையில் நாம் இருப்போம், அப்பா ஆசுவாசமாக இங்கு வந்து சாப்பிட்டு செல்லட்டும் என கெளதம், கல்யாண் இருவரும் குட்டி பசங்களை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றனர். அப்பா இங்கே வரவும் குணாவும் அண்ணன்களிடம் சென்றான்.