மோவாயை சற்றே உயர்த்தி சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தவள், காற்றில் அளைந்த அவ விரல்களை அவன் கைகளுக்குள் அடக்கிப்பிடித்து லேசாய் இழுக்க, ஒரு ஆழ மூச்சுடன், மெல்ல குனிந்து லேசாய் மிக லேசாய் இதழ்களால் அவன் விரல் நுனிகளை உரசினாள். 

அவள் இதழொற்றலை பாதம் வரை உணர்ந்தான் ஜோ. விரல் நுனியிலிருந்து ஜிவ்வென்று மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அவளுமே தலையை நிமிர்த்தி, மற்றொரு கையால் தன் உதடுகளை லேசாகத் தடவிக்கொண்டாள். அவன் விரல்களைப் பிடித்திருந்த அவளது இடது கை இன்னுமே பிடித்துக்கொண்டுதான் இருந்தது. 

“உனக்கும் அன்னிக்கு இப்படித்தான் ஜிவ்வுன்னு இருந்துச்சா கீத்துமா?”, என்றவன் குரல் ஆழ்ந்து வந்தது. 

அனிச்சையாய் உதடுகளை ஈரப்படுத்தியவள், “ஹ்ம்.. அது..”, சட்டென்று மீண்டும் ஒரு முறை இன்னும் கொஞ்சம் அழுத்தி மீண்டும் விரல் நுனிகளில் முத்திரை பதிக்க, அதற்கு மேலும் முடியாமல், கைகளை வேகமாக உருவிக்கொண்டான் ஜோ. 

எதற்கும் பாதுகாப்பாக கைகளை பின் புறம் பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்தவன், “சேட்டை..? ம்ம்?”, என்று கண்கள் சுருக்கி கேட்க, கீர்த்தியின் முகம் முழுதும் புன்னகை. 

“ஹ்ம்ம்… அன்னிக்கு மிதந்துகிட்டுதான் கிளாஸ் போனேன்.” 

“இப்போ…?” 

“ஹ்ம்ம்… கொஞ்சம் …போ ஜோ…”, என்று சிணுங்கி கப்பை கழுவ ஆரம்பித்தாள். 

“சரி… நான் வெளிய இருக்கேன். நீ பஜ்ஜி போட்டு எடுத்துட்டு வா”, என்றவன் சென்றுவிட , தன்னை எண்ணியே ஆச்சரியமானாள் பெண். 

மீண்டும் கல்லூரி நாட்களுக்கே சென்றுவிட்டது போல ஒரு மாயை.  இந்த சிணுங்கல், குறும்பு இதெல்லாம் எப்படி தன்னிடம்? மரத்து மறந்து போன உணர்வுகள், ஜோவைக் கண்டு துளிர்விட அவள் மனதுக்குள் நம்பிக்கை இன்னும் கொஞ்சம் உறுதிப்பட்டது.  

மேலும் எதாவது சீண்டுவான் என்று நினைத்தவள் ஆசையில் மண்ணைப் போட்டு இலகுவாகப் பேசி, பஜ்ஜியை ஒரு கட்டு கட்டிவிட்டு சென்றுவிட்டான். 

‘வேற எதாவது செஞ்சிருக்கணுமா அவன்? கட்டி கிட்டி பிடிச்சிருந்தா நிஜமா தாங்கியிருப்பியா நீ?’, என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தியபடியேதான்   நித்திரை கொண்டாள். 

“நேத்து ஜோசஃப் சார் வந்திருந்தாரா? அப்பறம்?”, ஷீத்தல் கதை கேட்க, “பஜ்ஜி, டீ மொக்கிட்டு நல்லாருந்துச்சுன்னு பாராட்டிட்டு போனார். 

“எனக்கு? ஒரு போன் பண்ணியிருந்தா, நானும் வந்திருப்பேன்ல?” 

கீர்த்தி முறைக்க, “அட, மனுஷன் போனதுக்கப்பறம்தான். மிச்ச சொச்சம் எதாவது இருந்திருந்தா நான் காலி பண்ண உதவியிருப்பேன்”, என்று வேகமாக விளக்கினாள் ஷீத்தல். 

“எல்லாத்தையும் அவரே காலி பண்ணிட்டார்.” 

“சரி போகுது. அப்பறம், எதாவது ஜாலியா நடந்துச்சா?” 

“…” 

“அட முறைக்காதேம்மா. நமக்குத்தான் லவ் பண்ண அதிர்ஷ்டம் இல்லை. சரி நீ பண்றதை பார்த்து, கேட்டு சந்தோஷப்படலாமேன்னு பார்த்தா…”, உதடு பிதுக்கினாள் ஷீத்தல். 

“உண்மைக்கும், உன்னை பத்திதான் பேசிட்டு இருந்தார் ஷீத்து.  நீ ரொம்ப நல்ல பொண்ணாம். உன்னை மிஸ் பண்ணக் கூடாதாம்”, கீர்த்தி சீரியசாக பேச, ஷீத்தல் கண்கள் விரிய, நெஞ்சை பிடித்துக்கொண்டு  

“ஏசுவே…”, என்றாள். 

“அதானால அவர் இல்லாட்டியும் அவர் தம்பிக்காவது உன்னை கட்டிவெக்கலாமான்னு கேட்டார்” என்று கீர்த்தி முடிக்க, ஷீத்தல் முழித்தாள். 

“என்ன?” 

“வருஷக்கணக்கா பார்க்காம, திரும்ப பார்த்து, சண்டை போட்டு, சேர்ந்து இப்ப தனியா உன்னை பார்க்க வந்திருக்காரு, எதாவது ரொமான்ஸ் நடக்கும்னு நம்பி நான் கேட்டதுக்கு, சொல்ல முடியாது போடின்னு சொல்லியிருக்கலாம். இப்படி என்னை பத்தி பேசினதா உருட்ட வேணாம்டி தங்கம்!”, மோவாவை தோளில் இடித்து எழுந்து கொண்டாள். 

“அடி… நிஜம்தான். உட்கார் சொல்றேன். பையன் பேரு ஸ்டீஃபன். கேக் எல்லாம் சூப்பரா செய்வான். வீட்டுக்கு இரண்டாவது பிள்ளை. அப்பா இல்லை அம்மாகூட இருக்கான். டிகிரி படிச்சு, பாங்க் பரீட்சை பாஸ் பண்ணிட்டு ஸ்டேட் பாங்க்ல வேலை பார்க்கறான். நல்ல பையன்.” 

அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவள்,  “கேக் எல்லாம் சூப்பரா செய்வான்னு உனக்கு எப்படி தெரியும் கீர்த்தி? நீ அவனை பார்த்திருக்கியா?” 

“சாப்பிட்டிருக்கேன். நான் பார்த்ததில்லை. எல்லாம் அவர் சொல்லும்போது கேட்டதுதான். சரி. நீ என்ன சொல்ற?” 

“எனக்கு நானே மாப்பிள்ளை பார்க்கறேன்னு தெரிஞ்சா எங்கம்மா வகுந்துடும்.” 

“அட. நீங்க இரண்டும் பேரும் பார்த்து ஓகே பண்ணதுக்கப்பறம், இவர் மூலமா அவங்க அம்மாகிட்ட போய், அங்கிருந்து முறையா பொண்ணு கேட்க போவாங்க. நீ தெரியாத மாதிரியே இருந்துக்கோ. ஸ்டீஃபன் போட்டோ கேட்கவா? நீ குரூப்புல டூப்பா பார்ட்டில அவரோட ஒரு போட்டோ எடுத்து அனுப்பினியே, அதை அவங்க வீட்டுக்கு அனுப்ப சொல்றேன். அது ஓக்கேன்னா  நம்பர் தரோம். பேசுங்க.” 

“ஹ்ம்ம்…சரி. ஆனா பேசி பார்த்தப்பறம் அவர் நம்பர் ப்ளாக் பண்ணிடுவேன். அதோட அம்மாவா எங்கிட்ட பேசுன்னு நம்பர் தரும்போதுதான் பேசுவேன்.  நமக்கெல்லாம் கடலை போட்டு கனவை வளர்த்து கஷ்டப்படல்லாம் முடியாது”, கறாராக பேசுபவளைப் பார்த்து, 

“விவரம்தான்“, என்று நொடித்தாள் கீர்த்தி. 

அடுத்த இரண்டு வாரங்கள் மிக இனிமையான நாட்கள். அவள் ஆசைபட்ட படி ஒரு சனிக்கிழமை மாலை படம் பார்த்துவிட்டு, ஹோட்டலில் உணவருந்தி ஆசையை தீர்த்துக்கொண்டாள். இருட்டில் அமர்ந்திருந்தாலும், அவன் கையை பிடித்துக்கொண்டிருந்தாலும், பயமே இல்லாது, காதலும் மகிழ்ச்சியும் மட்டுமே ததும்பிக்கிடக்க தான் தெளிந்துவிட்டதாகவே நினைத்தாள். 

அந்த வெள்ளி மாலை ஜோ கீர்த்தி வீட்டிற்கு வந்திருந்தான்.  அன்றுதான் ஷீத்தலும் ஸ்டீஃபனும் முதன் முறையாக பேசிக்கொள்ள ஏற்பாடு. பேசிவிட்டு அழைக்கட்டும் என்று இங்கே வந்து அமர்ந்திருந்தான். 

சோஃபாவில் அருகருகே அமர்ந்து வேகவைத்த  நிலக்கடலை உரித்து உண்டுகொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.  

“இரு இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரேன்”, என்று கீர்த்தி எழுந்து போக, 

“ஹே… வேணாம்”, என்று தடுத்தவன் அனிச்சையாக அவள் துப்பட்டாவை இழுக்க, அவள் அதை கழுத்தை சுற்றிப் போட்டிருந்ததால், தள்ளாடி பின்னே விழுந்தாள்.  

தடுமாறி விழுந்தவளை எங்கே அடிப்பட்டுவிடப் போகிறதோ என்று  இரு கைகளாலும் அரணாகப் பிடிக்க ஜோ மடியில், அவன் கைகளுக்குள் அவனை நோக்கி பக்கவாட்டில் அமர்ந்திருந்தாள் கீர்த்தி. 

அதே சோஃபா, ஆடவன் மடி, அவனின் அழுத்தமான பிடி என்று உணர்ந்த நொடி  நேரத்தில் அவள் வாழ்க்கையின் இருண்ட பக்கத்திற்கு சென்றுவிட்டாள். நெஞ்சம் படபடக்க , அரை நொடி உறைந்தவள், ஒரு ஆக்ரோஷ கத்தலுடன் அவள் கை முஷ்டியால் ஜோவின் நெஞ்சில் முழு பலத்துடன் குத்திவிட்டு துள்ளி எழுந்தாள். எழுந்த வேகத்தில் சற்று தள்ளிப் போய் விழுந்தாள். 

இங்கே எதிர்பாராத தாக்குதலில், மார்புக் கூட்டில் விழுந்த அடியில் விண்ணென்று வலி பரவ மார்பை அழுத்திப் பிடித்தவன், உட்கார்ந்த வாக்கில் அப்படியே மடிந்து குனிந்தான். அடுத்த மூச்சை இழுக்கக் கூட திராணியில்லை. 

தள்ளி கீழே விழுந்த நொடியே தன்னுணர்வை பெற்ற கீர்த்தி, அதிர்ந்துபோய் திரும்ப, வலியில் முகத்தை சுளித்து, கண்ணில் நீர் வடிய கவிழ்ந்திருப்பவனைக் கண்டாள். 

“ஐயோ…ஜோ… ஜோ… சாரி….”, என்று அருகே அவன் தோள் தொட, அவனையும் மீறி உடல் உதறியது. 

அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் கண்கள் தாரை தாரையாக நீர் வடிக்க, “ஜோ… நான்… சாரி… என்ன பண்ணுது ஜோ?”, என்று தழுதழுக்க,  

“த…ண்..ணி”, என்றான் கமறலாய். விழுந்தடித்து போய் ஒரு கப்பில் நீர் எடுத்து வந்து தந்தாள். 

நிமிர முடியாத நிலையில், மடிந்த வாக்கிலேயே அவள் பிடித்துக்கொள்ள சற்று உறிந்து நீரைப் பருகினான். 

“ஜோ படுத்துக்கறியா? என்ன பண்ணுது?”, என்று தொட, பல்லைக் கடித்தவன், மெல்ல ஒருக்களித்து சோஃபாவில் படுத்தான். ஒரு குஷினை தர, அதை மார்பில் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டான். 

மேல் மூச்சுகள் மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தான் ஜோ. ஓரளவு வலியின் அதிர்வும், திகைப்பும் குறைய, “போய் ஐஸ் கட்டிங்க துணியில சுத்தி எடுத்துட்டு வா”, என்றான். 

அதை வாங்கி நெஞ்சின் மத்தியில் வைத்தவன், மெல்ல கீர்த்தியை ஏறிட்டான். “என்னாச்சுடி? எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்? விழுந்துடப்போறன்னுதான் பிடிச்சேன்.” 

அவன் கஷ்ட்டப்பட்டு பேசவும், நின்றிருந்த கண்ணீர் மீண்டும் சுரக்க ஆரம்பித்தது. முகத்தில் அறைந்துகொண்டவள், “நான் சரியாக மாட்டேன் ஜோ. அந்த டெவில் என்னை விட்டு ஒழிய மாட்டான்.  இதுல உன்னை எதாவது செஞ்சிட்டா… வேணாம் ஜோ…  நீ போயிரு… கண்காணாத இடத்துல நல்லபடியா வாழு. நான் வேணாம் உனக்கு” என்று கேவினாள். 

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லை.”, இன்னமும் அவனால் சத்தமாகப் பேச முடியவில்லை. குரலிலேயே வலி தெரிந்தது. 

“இரு… சட்டையை கழட்டு. பார்க்கலாம். ரிப்ஸ் உடைஞ்சிருக்கப்போது. ஸ்கூல் நர்ஸ்கிட்ட போவோம்”, என்றவளை அமைதியாகப் பார்த்திருந்தான். அவளே அவன் சட்டை பட்டன்களை கழற்றிப்ி பார்க்க, மார்பின் நடுவில் வட்டமாய் கன்றிச் சிவந்திருந்தது அவள் முட்டியால் குத்தியிருந்த இடம். நடுங்கும் விரல்களால் லேசாக சுற்றிலும் தடவினாள். உடல் வலிக்குமோ என்ற உணர்வில் இறுக்கினான் ஜோ. 

“டாக்டர்கிட்ட போலாம் ஜோ”, கலங்கும் குரலில் கீர்த்தி சொல்ல, மீண்டும் ஐஸ் பேக்கை வைத்தவன், “ஒரு இரண்டு நாள்ல  சரியாகிடும் கீர்த்தி. என்ன ஆச்சு? ஏன் திடீர்னு ஆக்ரோஷம்?”, என்று திரும்பக் கேட்டான். 

தரையில் அமர்ந்து முட்டிக்கால்களிடையில் முகம் பதித்தவள், “அன்னிக்கு அவன் அப்படித்தான் நைட்டி பிடிச்சு இழுக்கவும் , சோஃபால அவன் மேல விழுந்தேன். எழுந்துக்க விடாம டைட்டா பிடிச்சு…”, மேலே சொல்லாமல் அழுது குலுங்கவும் நெஞ்சில் சற்றுமுன் அடித்த வலியை விடவும் உள்ளே அதிகம் வலித்தது. 

“நான் வேணும்னு செய்யலை ஜோ. ஒரு செகண்ட் மறுபடி அந்த சுழல்ல மாட்டிகிட்ட மாதிரியே இருக்கவும், இந்த முறை தப்பிக்க என்ன செய்யணும்னு தெரியவும் அதை செஞ்சுட்டேன். அவன் மேல இருந்த கோவம் குடுத்த வேகம், அவன் கைகளை லேசாக தடவியவள் “உன்னைப் போய்…”, என்று திரும்பவும் அழத் தொடங்கினாள். 

“கீர்த்தி… அழாத. விடு, தெரியாம நடந்துச்சு. அதுக்கு…”, என்று ஆரம்பித்தவனை, 

“ஜோ… உனக்கு புரியலையா? எவ்வளவு கோவம் எனக்குள்ள இருந்திருந்திருந்தா இப்படி ஒரு வேகம், ஆக்ரோஷம் வந்திருக்கும்?  கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சதுக்கே இப்படின்னா, நாள பின்ன கல்யாணமாகி இன்னும் நெருக்கமானா… உன்னை கொன்னே போட்டாலும் போட்டுருவேன். வேணாம் ஜோ… நான் உனக்கு வேணாம்”, கையெடுத்துக் கும்பிடுபவளை என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்திருந்தான்.