அவள் முகம் தெரியவுமே, “ரெண்டுக்கும் மேல பேக் சேர்க்காதன்னு சொன்னேன்ல டி, டைம் இருந்தா கூட பரவாயில்லை. வர வர சொல் பேச்சு கேட்க மாட்டேங்குற நீ” என்றான்..

தோளில் கைப்பையை சரியாக மாட்டிக் கொண்டே வேகமாக வெளியே வந்தவள் காலில் இடித்துக் கொண்டாள்.

“ப்ச் பார்த்து யசோ… சீக்கிரம் சீக்கிரம்” என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டுதான் சென்றான்.

தியாகுவிடம் ஏற்கனவே அவன் சொல்லியிருக்க அவன் காரோடு தயாராக இருந்தான்.

அரக்க பறக்க இரயில் நிலையம் வந்து சேர்ந்து தியாகுவின் உதவியோடு லக்கேஜையும் எடுத்துக் கொண்டு கடைசி நொடியில் இரயிலில் ஏறியும் விட்டனர்.

பக்கவாட்டில் கீழே மேலே என இரண்டும் அவர்களின் இருக்கைகள்.

அப்பாடா என அமர்ந்தவன் அப்போதுதான் பசி உணர்ந்தான். அவன் கண்களை படித்தவள் பேக் செய்து எடுத்து வந்திருந்த உணவை எடுத்துக் கொடுத்தாள். அவனுக்கு பிடித்த அரிசி உப்புமா.

இரண்டு வாய் சாப்பிட்ட பிறகுதான் அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

“நீ சாப்பிட்டியா யசோ?” என விசாரித்தான்.

ஆம் என்றவள், “வேலை ரொம்ப கஷ்டமா இருந்தா வேற மாறிக்கலாம்ல?” எனக் கேட்டாள்.

“இங்க எல்லாம் செட் ஆகிடுச்சு யசோ. டீம்க்கு புது ஆள் வர போறாங்களாம். இனி ஓரளவு ஓகேவா இருக்கும்” என்றவன் தளர்வாக மூச்சு விட்டு, “லாஸ்ட் மினிட்ல எனக்கு சாப்பாடு பேக் பண்ணவா கிச்சென் உள்ள போன?” எனக் கேட்டான்.

அவள் ஆமாம் எனவும் எதற்கு இத்தனை லக்கேஜ் எனக் கேட்டான்.

“நீங்கதானே அவ்ளோ சாமான் புள்ளைங்களுக்கு வாங்கினீங்க, நான் ரெண்டு வாரம் தங்கணும், என் புக்ஸ் வைக்கணும், அப்புறம் வராதா?” எனக் கேட்டாள்.

“அப்படியா? நீ முன்னாடியே சொல்லியிருந்தா…”

“டென்ஷன் ஆக மாட்டீங்கன்னுதான் காலைலயிலேயே சொல்றதுக்காக ரூம்க்கு வந்தேன்” என்றவள் அடுத்து எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள்.

அந்த இனிய தருணத்தின் நினைவில் புன்னகைத்தவன், நினைவு வந்தவனாக இடது கையால் அவளது காலை இழுத்து பார்த்தான்.

“இதுல அடி படல, இன்னொரு கால்லதான் அடி பட்டுச்சு, பெருசா ஒன்னுமில்ல” என்றாள்.

இன்னொரு காலையும் அவனே பார்த்து ஒன்றுமில்லை என உறுதி படுத்திக் கொண்டு, “உன்னை டென்ஷன் பண்ணிட்டேன், ஸாரி யசோ” என்றான்.

“கால்ல சக்கரம் கட்டிட்டு நிக்கிறதுனு சொல்றதை இனிக்குத்தான் நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்” என்றாள்.

“ஐயைய என்னடி இது, உன் புருஷனோட சகவாச தோஷமா?” என கிண்டல் செய்தான்.

“ஏன் அவருக்கு என்ன?”

“அவனுக்கெல்லாம் என்ன அவரு இவருன்னு மரியாதை? நீ சாப்பாடு வேற கொடுத்தியா தின்னுட்டு தெம்பா பேசப் போறான். திருச்சி போறதுக்குள்ள உன் காது கத்த போகுது” என்றான்.

“அன்பானவங்க பேசினா மனசு நிறையும், எவ்ளோ வேணும்னாலும் கேட்கலாம்” என்றாள்.

கண்களை சுழற்றி மயக்கம் போடுவது போல செய்து காட்டியவன், “மீ டோடல் ஃபிளாட். சரண்டர் அட் யுவர் ஃபீட்” என்றான். அழகாக சிரித்தாள் அவள்.

சாப்பிட்டு முடித்தவன் உடனே படுக்காமல் சற்று நேரம் தன் பக்கத்தில் அவளை அமர வைத்துக்கொண்டான்.

டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றதும் ஸ்கிரீனை இழுத்து விட்டவன் அவளை படுத்துக் கொள்ள சொன்னான். அவனையும் படுக்க போக சொன்னாள்.

“தாலி செயினை பிடிச்சுக்கிட்டு பயந்திட்டே தூங்குவ. ரிலாக்ஸா தூங்கு. எனக்கு தூக்கம் வரலை” என்றவன் கைப்பேசி பார்க்க ஆரம்பித்தான். அவன் பக்கம் தலை வைத்து படுத்துக் கொண்டவள் அவன் பக்கத்தில் இருந்ததால் பயமின்றி உறங்கி விட்டாள்.

பின்னர்தான் அவன் மேலேறி படுத்துக் கொண்டான். விடியற்காலையில் அவள் விழித்த போது கெளதமின் மடியில் தலை வைத்திருந்தாள்.

“இன்னும் அரை மணி நேரம் இருக்கு, படு, எழுப்பி விடுறேன்” என்றான்.

“நீங்க தூங்கவே இல்லையா?”

“இப்பதான் கீழ வந்தேன்” என்றான். அவளும் எழுந்து கொண்டாள். அவனுடன் அமர்ந்து வேடிக்கை பார்க்கலானாள். இதமாக இருந்தது அந்த நொடிகள்.

சனிக்கிழமை விடுமுறை என்ற போதும் அக்காவை பார்க்கும் ஆர்வத்தில் சீக்கிரமாகவே எழுந்திருந்தான் நவீன்.

ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து விட்டனர் கெளதம் யசோ இருவரும். அவளின் பார்வையும் தம்பியைத்தான் தேடியது.

கடை திறந்து விட்ட சண்முகம் மகனை கண்டு கொள்ளவே இல்லை. மருமகளைத்தான் நலன் விசாரித்தார்.

“இளைச்சு போயிட்டியேம்மா, இந்த பய கவனிக்கிறானா இல்லையா உன்னை?” என சொல்லி மகனை முறைக்க வேறு செய்தார்.

“ப்பா போதும், எங்கம்மாவை போய் பார்க்கிறேன், போன வாட்டியே வெயிட் செக் பண்ணிட்டுதான் போனேன், இப்ப கா கிராம் குறைஞ்சிருந்தாலும் உங்ககிட்ட வந்து நிப்பேன், பதில் சொல்லணும்” என்றான்.

அப்பா மகனுக்குள் இப்படியெல்லாம் பேச்சுக்களே இருந்தது இல்லை. என்ன பதில் சொல்லவென தெரியாமல் விழித்தார் சண்முகம்.

யசோ சங்கடமாக மாமனாரை பார்க்க, அப்பாவை இப்படி பார்க்கவும் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட கெளதம், “நாங்க வீட்டுக்கு போறோம், கடைய பாருங்க ப்பா” என சொல்லி அவரை சாதாரணமாக்கி விட்டு மனைவியோடு சென்றான்.

வீட்டிற்கு வெளியே ஓடி வந்த குட்டி  மச்சானின் முதுகில் செல்லமாக தட்டிய கெளதம், “என்னடா எப்படி இருக்க?” என விசாரித்ததோடு சரி, சற்று நேரம் அக்காவுக்கும் தம்பிக்கும் தனிமை கொடுத்து விட்டான்.

மகனும் மருமகளும் இணக்கமாக இருப்பதை கண்ட அருணாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி என்றால் சண்முகத்திற்கு பெருத்த நிம்மதி.

நன்றாக விடியும் நேரத்தில் கல்யாண் அவனது மனைவி ஜோஷ்னா, மகன்கள் தர்ஷன், கெவின் என குடும்பத்தோடு காரில் வந்திறங்கினான். சண்முகம் பொதுவாக வா என அழைத்தார்.

கல்யாணின் மகன்களில் மூத்தவனுக்கு மூன்று வயது, அடுத்தவன் ஒன்றரை வயது. ஆசையாக பார்த்தார் சண்முகம், ஆனால் தூக்க கூட செய்யாமல் உடனே கடைக்கு சென்று விட்டார்.

அருணாதான் மருமகளை கை பிடித்து அழைத்து, பேரன்களை கண்ணீர் மல்க அள்ளி எடுத்து கொஞ்சி என உணர்ச்சி வயப் பட்டு போனார்.

கல்யாண் கூட அம்மாவின் கை பிடித்துக் கொண்டு கலங்கினான், கௌதமை அணைத்து விலகினான். சற்று நேரம் அங்கே உணர்ச்சி மயம்தான்.

யசோவும் வந்தவர்களை வாங்க என அழைத்து ஜோஷ்னாவிடம் நட்பாக சிரித்தாள். வீடு அந்நியமாக இருக்க, யசோவின் கையை பற்றிக் கொண்டாள் ஜோஷ்னா.

வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்து கொண்டு கணவன் மனைவியாகவே அனைத்தையும் எதிர் கொண்டிருந்தனர். பெரியவர்களின் உதவியில்லாமல் குழந்தை பெற்று வளர்ப்பதெல்லாம் சாதாரணம் அல்லவே. அதிலும் இரண்டாவது குழந்தை எதிர்பாராமல் சீக்கிரமே உருவாகி விட்டது, நிறைய திண்டாடி விட்டார்கள்.

 வருடங்கள் கடந்தாவது இங்கு இவர்களை ஏற்றுக் கொண்டு விட்டனர். ஜோஷ்னாவின் வீட்டில் அதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலைதான்.

இப்போது கணவன் அவனது குடும்பத்துடன் சேரும் போது தன்னை பிரித்து விடுவார்களோ என்ற பயம் அவளுள் இருக்கிறது. மிரட்சியாகத்தான் இருந்தாள்.