ஆயிரத்தில் அவள் ஒருத்தி -12

அத்தியாயம் -12

தன் மனதை யசோவிடம் கெளதம் சொல்லி விட்ட பிறகு அவளிடம் சீண்டலையும் சேட்டையையும் இன்னுமே உரிமையாக செய்ய ஆரம்பித்து விட்டான்.

அவன் நெருங்கினால் அவள் மறுப்பதில்லை, ஆனால் பயமும் பதட்டமும் இருக்கிறது. தெளிவான பக்குவமான பெண் என்றாலும் கணவன் மனைவியின் அந்தரங்க உறவு குறித்தலான புரிதலோ தெளிவோ அவளிடம் இல்லை. நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும்தான்.

கெளதம் அவசரப் படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறி செல்கிறான். அவனுக்குமே அவள் மீதான ஆசையை கடந்து சின்ன பெண் என்ற பயம் இருக்கிறது.

மெது மெதுவாக தன்னுடனான நெருக்கத்துக்கு அவளை பழக்குகிறான். கணவன் மனைவி உறவு எப்படி இருக்கும் என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வெட்கத்தை தள்ளி வைத்து விட்டு அவளிடம் சொல்கிறான்.

அவர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெரிதாக பிரேம் போட்டு ஹாலில் மாட்டியிருந்தான். இன்னொன்று திருச்சி வீட்டில் தங்கள் அறையில் மாட்டுவதற்காக எடுத்து வைத்திருக்கிறான்.

இந்த புகைப்படத்தை பார்த்த நாளிலிருந்து இருவரையும் கிண்டல் செய்து படுத்தி வைக்கிறாள் மைதிலி. கௌதமாவது திரும்ப வாயடித்து சமாளித்துக் கொள்வான். யசோதான் படாத பாடு படுகிறாள்.

ஒரு முறை யசோவை மைதிலி கிண்டல் செய்கையில் கெளதம் வந்து விட்டான்.  மனைவி விழி பிதுங்குவது காணப் பொறுக்காதவன், அவளை அடக்க பார்க்க அதையும் சேர்த்து ஓட்டினாள் மைதிலி.

“ஆத்தா சாமி, உன் கூட மல்லுகட்டி வாழற என் ஃப்ரெண்ட்டுக்கு சிலை வைக்கணும்” என்றான் கெளதம்.

தியாகு வந்துதான் பெரிய மனது வைத்து இவர்களை காப்பாற்றி மைதிலியை அங்கிருந்து அழைத்து சென்றான்.

“முதல்ல ஃபோட்டோவை ரூம்க்கு மாத்துங்க, பார்க்கிறப்பலாம் அக்கா ஓட்டி எடுக்கிறாங்க” என யசோவும் கணவனிடம் சொன்னாள்.

“அவ ஓட்டுறது இருக்கட்டும், என் வீட்டம்மணி மனசுல ஏதாவது மாத்தம் வந்துச்சா இல்லையா?” எனக் கேட்டான்.

“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். என்ன மாறணும்?” என அவள் கேட்க, “போடி!” என அவளை உள்ளே அனுப்பி விட்டான்.

ஊருக்கு போகும் நாளும் வந்தது. அன்று வெள்ளிக்கிழமை, இரவில் இரயிலில் புறப்படுகிறார்கள். அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் கெளதம்.

இரண்டுக்கு மேல் லக்கேஜ் சேர்க்காதே என முன்னரே கெளதம் சொல்லியிருந்தான். கல்யாணின் பிள்ளைகளுக்கு நவீனுக்கு என நிறைய வாங்கியதில் ஒரு லக்கேஜ் கூடுதலாக வந்து விட்டது.

அதை சொல்வதற்காக “என்னங்க…” என அழைத்துக் கொண்டே கதவை திறந்தாள் யசோ.

அப்போதுதான் குளித்து வந்து ஆடை மாற்றிக் கொண்டிருந்த கௌதமை கண்டு திகைத்தவள் சட்டென ஒன்றும் புரியாமல் தடுமாறி பின் வேகமாக வெளியேறி விட்டாள்.

“இவளோட ரொம்ப கஷ்டம்டா கௌதமா!” என நொந்து கொண்டான் அவன்.

சட்டையை கையில் எடுத்தவனுக்கு இதை அப்படியே விட பிடிக்கவில்லை. உடனே சட்டையை அங்கேயே வைத்து விட்டு அவளை தேடிக் கொண்டு சென்றான்.

அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் போக்கு காட்டியவளை இழுத்து பிடித்துக்கொண்டு படுக்கையறை வந்தான்.

“நிமிந்து பாருன்னு சொன்னா கேட்க மாட்டியா? இப்படியா டிஸ்ஒபே பண்ணுவ? ரொம்ப கோவமா இருக்கேன்” என தீவிர தொனியில் சொன்னான்.

அவள் நிமிர, “என்னையதானே பார்த்த, எதுக்கு அப்படி ஓடின?” எனக் கேட்டான்.

“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை” என அவள் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டவன், “எனக்கு மட்டும் ரொம்ப பழக்கம் பால்கோவா” என்றான்.

முதலில் சிரித்து விட்டவள் பின் பாவமாக பார்க்க, “நடிக்காத, வா வந்து உட்கார்” என சொல்லி படுக்கையில் அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு எதிரில் அவள் அமர, “பெட் ரூம்ல உன் புருஷன் ஆசையா உட்கார சொன்னா இங்க உட்காரணும்” என தன் மடியை காண்பித்தான்.

அவள் தயங்க, அவன் முறைக்க  மெதுவாக எழுந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.

அவளின் பின்னாலிருந்து கட்டிக் கொண்டவன், “நீ சின்ன பொண்ணா இல்லையாங்கிற விவாதத்துக்கே போக வேணாம். உன் புருஷன் பெரிய பையன். இந்த விஷயத்துல என்னையும் நீ கொஞ்சம் நினைச்சு பார்க்கணும்” என்றான்.

“நான் ஏதும் சொல்லலை… நீங்க என்ன பண்ணினாலும் சரிதான்” என்றாள்.

“யாருடி இவ, ஒரு கை தட்டினா ஓசை வராது”

“ம்ம்… நீங்க சொல்லி கொடுங்க” என்றவளின் குரல் கிணற்றிலிருந்து ஒலித்தது.

“எல்லாத்தையும் சொல்லி தர்ற அளவுக்கு எனக்கும் இதுல ஞானம் இல்லியே. தெரிஞ்சதெல்லாம் ஏற்கனவே உனக்கு சொல்லிட்டேன், இனிமே நாம சேர்ந்து தெரிஞ்சுக்க வேண்டியதுடா மானுக்குட்டி. நீ இவ்ளோ பயந்தா நான் பிளாங் ஆகிடுவேன்”

“போக போக சரியாகிடும்” என்றாள்.

“எங்க இப்ப நீயா…” என்றவன் அவளின் கழுத்து வளைவில் முத்தமிட்டு “இப்படி ஒன்னு கொடு” என்றான்.

நாணத்தில் குளித்திருந்தவள் லேசாக அவன் முகம் பார்த்தாள். “இடம் உன் சாய்ஸ்” என அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னான்.

அவன் பக்கமாக வாகாக திரும்பியவள் குனிந்து அவனது வெற்று மார்பில் முத்தமிட்டு நிமிர்ந்தாள். நொடி நேரம் அவனை பார்த்தவள் பின் விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

“இன்னும் நிறைய வேணும் போல இருக்கே யசோ” என்றான்.

அவனது கைகளை பிடித்து விரித்து உள்ளங்கைகளில் முத்தமிட்டு அந்த கைகளை அப்படியே  எடுத்து வந்து தன் கன்னங்களில் பதித்துக் கொண்டாள். அவன் என்ன செய்தாலும் சம்மதம் என்ற விதத்தில் இருந்தது அவளின் முகபாவமும் உடல் மொழியும்.

அவளோடு அப்படியே படுக்கையில் சாய்ந்தான். அவன் அவளின் ரகசியங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட, “ஆஃபிஸ் போக வேணாமா?” என நினைவு வந்தவளாக கேட்டாள்.

அவனது பொங்கி வந்த உணர்வில் தண்ணீர் ஊற்றி அணைத்தது போலானது.

“நைட் ஊருக்கு கிளம்பனும், இப்ப ஆஃபிஸ் போகணும். ஏன்டி ஏன்?”

“நான் என்ன செய்றது?”  எனக் கேட்டுக் கொண்டே எழப் போனவளை பிடித்து இழுத்து கட்டிக் கொண்டான்.

 கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை அடைந்தவன் அவளை விலக்கி, “நீ என்ன செய்றதுன்னு ஊருக்கு போய் சொல்றேன்” என்றான். அவள் தலையாட்டிக் கொள்ள,  அவளின் மூக்கு நுனியை செல்லமாக கடித்து பின் அவளை விட்டான்.

என்ன முயன்றும் அலுவலகத்தில் வேலை இழுத்து விட்டது. டிராஃபிக்கில் சிக்கி அவன் வீடு வந்து சேர, எல்லாம் பேக் செய்து தயாராக இருந்தாள் யசோ. ஆடை மாற்றக் கூட அவனுக்கு நேரமில்லை, கிளம்பு கிளம்பு என அவன் பர பரக்க, “நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

“நேரமில்லை யசோ, வீக் எண்ட் வேற, இந்த ட்ரெயின் விட்டா பஸ்ல கூட டிக்கெட் கிடைக்குமான்னு டவுட்தான். இந்த லீவை விட்டுட்டா ஊருக்கு போறது ரொம்ப கஷ்டமாகிடும். பேசிட்டு இருக்காத” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, வேகமாக சமையலறை சென்றாள்.

டிராலி பேகை வெளியில் வைத்துக்கொண்டே, “சொல்றது புரிஞ்சுதா இல்லையாடி, தியாகுட்ட வீட்டு சாவி கொடுத்தா நீ விட்ட வேலையெல்லாம் மைதிலி செஞ்சிடுவா. டென்ஷன் பண்ணாம சீக்கிரம் வா” என சத்தம் போட்டான்.