துபாய் மெரினா என்று சொல்லப்படும் இடம் அங்கு வெகு பிரபலமான சுற்றுலா தளம். பல நாட்டு மக்கள் துபாயின் குளிர் காலமான டிசெம்பர் முதல் ஃபெப்ரவரி முடிய வந்து குவியும் இடத்தில் இதுவும் ஒன்று. இங்கிருந்து பல படகுகள் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்திற்கேற்ப மீன் பிடிக்க, கடல் மார்க்கமாக துபாயின் வானளாவிய கட்டிடங்களைக் காண, பல் வேறு கடல் சார் விளையாட்டுக்களில் திளைக்க என்று ஏற்றி செல்லும். துபாய் ஸ்கைலைன் புகைப்படங்கள் எடுக்க, கடலையும் வானையும் ரசித்தபடி துணையோடு கைகோர்த்துச் செல்லும் ஜோடிகள், தன்னை சுற்றிச் செல்லும் மாந்தர்களை கவனித்தபடி மதுவோ, காஃபியோ அருந்தியபடியே இலகுவாய் அமர்ந்திருக்கும் வெள்ளைக்கார பெருசுகள், சிறு குழந்தைகளை மேய்த்துச் செல்லும் இளம் தம்பதியர் என்று கலவையாக, பரபரப்பாக இருக்கும் இடம்.
அதனாலேயே கீர்த்திக்கு மிகவும் பிடிக்கும். அவள் தனிமையைை போக்கி ஜனத்திரளின் மத்தியில் இருப்பது போல இருக்கும். வழக்கமாக தனியாக வருபவள் இன்று ஜோவுடன் வந்திருக்கிறாள். ஷட்டில் பஸ்ஸில் இன்னும் சில ஆசிரியர்கள் இருக்கவும், இருவரும் பேசிக்கொள்ளவில்லை. நிறுத்தத்தில் இறங்கி, மெட்ரோ ரயிலில் ஏறும் முன்னர், செல்லும் இடம் கேட்டுக்கொண்டவன் வேறு பேசவில்லை. கூட்ட நெரிசல் அதிகம் பேச விடவில்லை.
மெல்ல நடந்து மெரினாவிற்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய பூங்காவிற்குள் நுழைந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். சற்று இடைவெளி விட்டு ஜோ அமர்ந்தான்.
அவ்வப்போது கீர்த்தியின் முகத்தை பார்த்திருந்தான். இரவு உறங்கவில்லை என்பது அவள் கண்களின் லேசான சிவப்பில் தெரிந்தது. மற்றபடி என்ன நினைக்கிறாள் என்று அவனால் கண்டுகொள்ளமுடியவில்லை. அவள் நினைப்பதை எளிதாக முகத்தில் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது நினைத்து வருந்தினான்.
இரவு கண்டிப்பாய் நிறைய நிறைய யோசித்திருப்பாள். அதன் முடிவில் என்ன செய்வதாய் இருக்கிறாள் என்று தெரியவில்லை. எதுவாகினும் அவள் நேற்று சொன்னதிலிருந்து பின் வாங்க விடக்கூடாது என்பதில் திண்ணமாக இருந்தான். சந்திரனுடன் பேசி ஓரளவு எப்படி இந்த பேச்சை கொண்டு செல்லவேண்டும் என்றும் ஒத்திகை பார்த்து வந்திருந்தான்.
அதன் முதல் படியாக, “என்ன கீர்த்தி? நைட் தூங்கலையா? கண்ணு சிவந்திருக்கு?”, இலகுவாக ஆரம்பித்தான்.
“நீ தூங்கினியா ஜோ?”, என்ற பதில் கேள்வியில் இல்லை என்று தலையசைத்தான்.
“நீ சொன்னதெல்லாம் யோசிக்கவேண்டியிருந்தது அதுனால நான் தூங்கலை. நீ ஏன் தூங்கலை ஜோ?”, முகத்தில் ஒரு உணர்வும் படிக்கமுடியவில்லை.
“நீ என்ன நினைக்கற, என்ன சொல்லப் போறன்ற டென்ஷன் கீர்த்தி”, உண்மையை ஒப்புக்கொண்டான்.
“என்ன சொல்லப்போறேன்னா? நேத்து தப்பா முடிவெடுத்துட்டேன், நீ ஷீத்தலையே கட்டிக்கோன்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தியா?”
அவனை ஏறெடுத்துப் பார்த்தவள், “அந்த முடிவுக்கு நீ என்னை மறைமுகமா தள்ளின. நான் தனிச்சையா எடுத்த முடிவுன்னு நினைச்சது, நீயும் ஷீத்தலும் போட்ட நாடகம்னு தெரிஞ்ச அப்பறம், என் முடிவு நான் திரும்ப கன்சிடர் பண்ணனும் இல்லையா?”
அவன் பயந்தது இதற்குத்தான். அதே கருத்தில் வந்து நின்றாள் கீர்த்தி.
உதட்டை மென்றவன், வார்த்தைகளை மெதுவாக தேர்ந்தெடுத்து பேசினான். “உன்னை ஏமாத்த நாடகம் போட்டிருந்தா நீ சொன்னது சரி. இங்க இது நீ வாய் வார்த்தையா சொன்னதை நடத்திக்காட்டினேன். உனக்கு நிஜமாவே என் மேல காதல் இல்லாம வெறும் அக்கறையா மாத்திரம் இருந்திருந்தா, நீ இத்தனை அவஸ்தை பட்டிருக்க மாட்ட கீர்த்தி. உன் மனசை உனக்கு புரிய வைக்க, எனக்கு தெரிஞ்சிக்க ஒரு வாய்ப்புதான் இது.”
அதைக் கேட்டு அவனை முறைத்தாள். “ஆக நான் கஷ்டப்பட்டதைப் பார்த்து நீ சந்தோஷப்பட்ட?”, என்றவளின் கேள்வியில் கடுப்பானவன்,
“ஷ்… உட்கார். என்ன இப்பல்லாம் இவ்வளவு கோவம் வருது உனக்கு? பேசிகிட்டுதான இருக்கோம்?”, கடிந்தாள்.
முகத்தை தூக்கி வைத்து “இப்படி உன்னை போட்டு படுத்தறேனேன்னு உனக்கு மேல நான் கஷ்டப்பட்டேன்”, என்று கூறியபடியே அமர்ந்தான்.
“ஆனாலும் என்னை கஷ்டப்பட வெச்சதுக்கு தண்டனை தரணுமே?”, மோவாயை கையில் ஏந்தியபடியே யோசித்தாள்.
“கல்யாணம் செய்துகிட்டு பொறுமையா யோசிச்சு தண்டனை தா. ஏத்துக்கறேன்”, என்றான் ஒரு புன்னகையோடு. அதில் முகம் சுருக்கினாள் கீர்த்தி.
“இன்னும் சரின்னு சொல்லலை. எனக்கு இன்னும் இது எப்படி சாத்தியப்படபோகுதுன்னு நிறைய ட்வுட் இருக்கு ஜோ”, அவள் முகத்தில் சற்றே கவலை எட்டிப்பார்த்தது.
இதுதான் அவன் எதிர்பார்த்த வாய்ப்பு, சட்டென பிடித்துக்கொண்டான். “கீர்த்தி, முதல் முறை நம்ம காதல் நமக்கு ரொம்ப சுலபமா கிடைச்சிடுச்சு. இது காதலா இல்லையா? அந்த பக்கம் விருப்பம் இருக்கா இல்லை சொன்னதும் அந்த மாதிரி எண்ணத்துல பழகலைன்னு விலகிடுவாங்களாங்கற சந்தேகம் இல்லை. நம்ம நடுவுல குட்டையை குழப்ப யாரும் இல்லை. அந்த ஒரு புயல் நமக்கு நம்ம காதலையும் காட்டி, அடுத்தவங்க விருப்பத்தையும் தெளிவா சொல்லிடுச்சு. காதலுக்கு ஏங்கவும் இல்லை நடுங்கவும் இல்லை போராடவும் இல்லை. மே பீ அதனாலதான் பிரிவும் சுலபமா நடந்துடுச்சு போல. ஆனா இந்த முறை உங்கிட்ட சம்மதம் வாங்க இத்தனை போராட்டம், சரின்னு நீ சொல்லும் முன்ன உனக்கு அத்தனை யோசனை. வேணும், வேணான்னு மாறி மாறி உனக்குள்ளேயே அவ்வளவு வாக்குவாதம். எல்லாத்தையும் மீறி என்னை பிரிய முடியாதுன்னு உணர்ந்துதான் நேத்து நீ வெடிச்சது, அடிச்சது எல்லாமே. இந்த முறை என்னை அவ்வளவு சுலபமா நீ விட்டுக்குடுத்துட மாட்ட. நம்ம காதல் கைகூட நாம இன்னுமே போராடணும். நம்ம சந்தோஷமா வாழ நமக்காக என்ன செய்யணுமோ செய்யலாம். சைக்காலஜிஸ்ட்ட பார்க்கலாம். கவுன்சலிங், கப்பிள்ஸ் தெரபி எல்லாம் எடுத்துக்கலாம். நம்பிக்கையும், முயற்சியும் இருந்தா போதும் கீத்துமா. நான் இருக்கேன்.”
அவன் சொன்னதை சற்றே அசை போட்டாள் கீர்த்தி. இதுவரை அவள் கல்லூரிக் கால காதலை இந்த கோணத்தில் நினைத்துப் பார்க்கவில்லை. போராடுவது என்று அவளும் யோசித்திருக்க இன்னும் ஒரு விஷயம் மட்டுமே தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
“ஜோ..எனக்காக நீ பொறுத்துப் போகணும், அட்ஜஸ்ட் பண்ணிப்போகணும்னு நினைக்கும்போது கஷ்டமா இருக்கே..ஒரு வேளை அதனாலேயே உனக்கு ஒரு சலிப்பு வந்தா என்னால தாங்கிக்க முடியும்னு தோணலை..”, அவள் கண்களின் சஞ்சலம் கண்டவன்,
“கீர்த்தி, ஒரு நிமிஷம் இப்படி யோசி. ஒரு வேளை உனக்கு இந்த விபத்து நடக்கலைன்னு வை. நாம பிரிஞ்சு திரும்ப இப்ப இதே மாதிரி பார்க்கறப்ப நான் கல்யாணமாகி, மனைவியை பரிகொடுத்து, ஒரு பிள்ளையோட நிக்கறேன். என்னை கல்யாணம் செய்துக்க கேட்கறேன். நீ என்னை மட்டமா நினைப்பியா?”
தன்னால் கீர்த்தியில் தலை இல்லையென்பதாக ஆடியது. “எனக்கு ஒரு விபத்து, ஒரு கையோ, காலோ போச்சுன்னு வை. உன்னை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்றேன். ஏத்துக்கிட்டு விலகிடுவியா?”
முறைத்தவள் “கண்டிப்பா மாட்டேன்”, என்றாள்.
“உனக்கு நடந்ததும் விபத்துதான் கீர்த்தி. நாம சந்தோஷமா வாழ அது ஒரு தடையே இல்லை. நான் சொன்னதுனால மட்டும் உனக்கு உடனே நம்பிக்கை வராது. பொறுமையா டைம் எடுத்து திரும்ப லவ் பண்ணுவோம். என்னை, என் அருகாமையை பழகிக்கோ. உனக்கே கான்ஃபிடென்ஸ் வரட்டும். அப்பறமா வீட்டுக்கு தகவல் சொல்லி கல்யாணம் செய்துப்போம். அவங்க சம்மதம் இருந்தா நல்லது. இல்லைன்னாலும் முடிவு மாறாது.”, என்றவன் அவள் புறம் கை நீட்ட, அவனை வைத்தகண் விலகாது பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தி, மெல்ல அவன் கை மீது தன்னுடையதை வைத்தாள். ஜோவின் மற்றொரு கை மென்மையாக, அவள் கை மீது மூடியது. அழுத்தாது, அதே சமயம், பாதுகாப்பாக உணர வைத்தது.
“ஷ்…அழுததெல்லாம் போதும் கீர்த்தி, ஒரு கையால் அவளது கையை விடாமல் பிடித்திருந்தவன், மறு கையால், கன்னம் துடைத்தான். கண்கள் சிமிட்டி நீரை விலக்கியவள் அவன் கண்களில் லயித்திருந்தாள்.
“மம்மீ “ என்று கத்திக்கொண்டு ஒரு குட்டி தேவதை ஓடி வர, பின்னால் அவள் அன்னை துரத்திக்கொண்டு வந்ததில், உணர்வு பெற்று இருவரும் சற்றே விலகி அமர்ந்தார்கள்.
இருவரையும் கண்டு பிரேக் அடித்து நின்ற அந்த வெள்ளைகார குழந்தையின் நீல விழிகள் இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க, அவளது தங்க நிற முடிக் கற்றை நெற்றியில் பறந்தது. தங்களை மீறி இருவரும் குழந்தையைப் பார்த்து புன்னகைக்க, அதற்குள் நெருங்கியிருந்த அன்னை குழந்தையை வாரிக் கொண்டு ஏதோ புரியாத பாஷையில் கொஞ்சியபடி கடிந்தாள். இருவரையும் பார்த்து ஒரு சிறிய புன்னகையை சிந்தியபடி திரும்பிச் செல்ல,
“ஜோ… என்னால ஒரு நல்ல அம்மாவா இருக்க முடியும்னு தோணலை ஜோ. அது பத்தி யோசிச்சியா நீ?”, அடுத்த கவலையை முன் வைத்தாள்.
அவள் தன்னை நோக்கும் வரை காத்திருந்தவன், “என் குழந்தையை உனக்கு பிடிக்காம போயிடுமா கீர்த்தி? என்னோட இரத்தம்ங்கற ஒரே காரணத்துகாகவே உனக்கு பிடிக்கும். எனக்கு சந்தேகமே இல்லை. ஆனா அதுக்கு இன்னும் காலமிருக்கு. அப்போ யோசிப்போம். ஒரு ஒரு படியா கடக்கலாம் சரியா?”, என்று கூற அவன் அருகாமையில் எல்லாம் சாத்தியம் என்றே தோன்றியது.
மெல்ல மெரினா ஓரம் கடலைப் பார்த்தபடியே நடந்தார்கள். அவளோடு கைகோர்த்து நடந்தவன் மனது சில வருடங்களுப்பிறகு இலகுவானது போலிருந்தது. சுற்றுப்புறமே பளிச்சென்று ஆனது போல ஒரு பிம்பம். அவள் கையை கோர்த்த போது, அவன் முகம் பார்த்தாள் பெண்.
“என்னை நீ பழகிக்க…”என்று காரணம் சொன்னவன், “பிடிச்சிக்க ஒரு மாதிரியா இருந்தா கொஞ்ச நேரத்துல விட்டுடு. மெல்ல மெல்ல பார்த்துக்கலாம். சரியா?”, என்று ஒரு பளிச் புன்னகையோடு சொன்னவனின் மனம் கோணக்கூடாது என்று பிடித்தவளுக்கு சற்று நேரத்திலேயே அவனின் கை சூடு பழகிவிட்டது. பழைய நினைவை மீட்டெடுத்தது மனது. இது போல கைகோர்த்து சில நிமிடங்கள் நடப்பதில் ஒரு சுகம். தியேட்டரில் படம் பார்த்த அன்றுதான் முழு நேரமும் கைகோர்த்து அமர்ந்திருந்தார்கள்.
அந்த ஞாபகம் வரவும், “ஜோ… நாம சினிமா போலாமா?”, ஆசையாகக் கேட்டாள்.
“இன்னிக்கா?”, சற்று ஆச்சரியமாகக் கேட்டான்.
“இல்லை, அடுத்த வீக்கெண்ட்? இப்ப யாருக்கும் பயப்படாம பொறுமையா படம் பார்த்துட்டு, சாப்பிட்டுட்டு வரலாம்”, கண்கள் சிரிக்க கேட்பவளை மறுக்கவும் மனம் வருமா ஆடவனுக்கு?
“சரிடா…போலாம்”, தலையசைத்தான்.
“உனக்கு தெரியுமா? அதுக்கப்பறம் நான் தியேட்டருக்கு போய் படமே பார்க்கலை. உன்னோட பார்த்ததுதான் கடைசி”, என்றவளைப் பார்த்தவன் மனம் உள்ளே கரைந்தது. கல்லூரி முடியும் வரை அவளோடு அவன் செல்லவில்லை, அதன் பின் செல்லக்கூடிய நிலையில் அவள் இல்லை என்று புரிந்தது.