வீடு வந்ததும் கெளதம் படுத்து விட்டான். துணி எடுக்க மாடிக்கு செல்வதாக சொன்னாள் யசோ. உடனே அவனும் எழுந்து விட்டான்.

இடத்தை அடைக்காமல் பால்கனியிலேயே துணி காய வைக்க ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறான், நேரம்தான் கிடைக்கவில்லை.

லிஃப்டில் தனியே செல்ல பயந்து படிகளில்தான் சென்று வருகிறாள் யசோ.

சோர்வாக இருப்பவள் படி ஏறி இறங்க வேண்டுமா என நினைத்து, “நானும் வர்றேன் லிஃப்ட்ல போலாம்” என்றான்.

அவளின் மறுப்புகள் செல்லுபடி ஆகவில்லை. இருவரும் மொட்டை மாடிக்கு சென்றனர். நல்ல பெரிய மாடி. ஆளை தள்ளும் அளவுக்கு நல்ல காற்று வேறு. துணிகள் எடுத்து முடித்த பிறகு, சற்று நேரம் இருக்கலாம் என அவன் சொல்ல அவன் பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டாள்.

அவனுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. யாருமில்லாத அந்த இதமான சூழலில் அவளுடன் நிற்பது பிடித்திருக்க, அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

துணிகளை மடித்து வாளிக்குள் வைக்க ஆரம்பித்து விட்டாள்.

“என்ன செய்ற யசோ?”

“சும்மாதானே நிக்கிறேன், மடிச்சா ஒரு வேலை ஆச்சு” என்றாள்.

துணிகளை அப்படியே வாளிக்குள் திணித்தவன் அவளை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் நெருக்கமாக நிற்க வைத்துக்கொண்டான்.

“என்னங்க?”

“என்ன என்னங்க? சும்மா நில்லு, எதுவும் பண்ணக்கூடாது” என்றான்.

அவனது மனவோட்டம் புரிந்தால்தானே இவளிடம் எதிர்வினை இருக்கும்? அவனை புரியாமல் வேடிக்கை பார்த்தாள். அவ்வப்போது அவனையும் பார்த்தாள்.

அவனது சட்டைக் காலரில் நீளமான தலைமுடி தென்பட, அதை எடுத்து விட்டாள்.

என்ன என பார்த்தவன், “உன்னோடதா?” எனக் கேட்டான்.

“அப்படித்தான் இருக்கணும், இங்க நல்ல காத்து. எப்படியோ உங்ககிட்ட வந்திடுச்சு” என்றாள்.

முடிக்கற்றைகள் அவளது முகத்தில் வந்து மோதிக் கொண்டிருந்தன. ஒதுக்கி விட கையெடுத்து போனான். சட்டென பின்னால் விலகி நின்றாள்.

அவன் என்ன என பார்வையால் கேட்க, சங்கடமாக பார்த்தாள். புன்னகையை வலிய வரவழைத்துக் கொண்டாள்.

“என்ன யசோ, பிடிக்கலியா?” என ஆதங்கமாக கேட்டான்.

என்ன சொல்லவென தெரியாமல் நின்றாள்.

தாடை இறுக முகத்தை திருப்பிக் கொண்டவன், “கீழ போ நான் வர்றேன்” என்றான்.

சில நொடிகள் தயக்கமாக பார்த்தவள், “கோச்சுக்காதீங்க” என்றாள். அவன் அவளை பார்க்க மறுத்து நின்றான்.

பயந்து பயந்து அவனது கையை பிடித்தவள் அவளது முடிகளை ஒதுக்கி விட வைத்தாள். அடக்கப் பட்ட சிரிப்புடன் அவள் பக்கம் திரும்பியவன், அவளது கையிலிருந்து தன் கையை விலக்கி அவளது கன்னத்தை சற்றே வலிக்க கிள்ளி கொஞ்சினான்.

“பாரு என் முடி கூட நெத்தியில புரளுது, ஒதுக்கி விட மாட்டியா?” எனக் கேட்டான்.

அவளும் ஒதுக்கி விட, அந்தக் கையை பிடித்து நெற்றியில் வைத்து அழுத்திக் கொண்டான். அவள் திகைக்க, கண்கள் மூடிக் கொண்டவன் அவளின் கையை கன்னத்துக்கு இடம் மாற்றி தோள் பட்டையாலும் அவளின் கையை உணர்ந்தான்.

யசோவினுள் மெல்லிய நடுக்கம் பிறக்க ஆரம்பித்தது. பெண்ணின் ஸ்பரிசம் உணர்ந்திராத முப்பது வயது ஆண் மகனின் அருகில் அவனை விரும்பும் பெண் அதிலும் உரிமை பட்டவள் தனிமையில் கிடைத்தால் என்ன கட்டுப்பாடு இருக்கும்?

அவளின் உடல்மொழியை உணராமல்  சட்டென இழுத்து அணைத்துக் கொண்டான். கௌதமின் உடல் முழுதும் உணர்வின் பேரலைகள். இறுகிய அணைப்பு, வசமிழந்து விட்டான்.

அவனை அவளுக்கு பிடிக்காமல் இல்லை. இன்னும் மனதில் தான்  அவன் எதிர்பார்த்த பெண் இல்லை என்ற நினைப்புதான். இப்போது கெளதமின் அணைப்பு கூட அவள் எதிர்பார்த்திராதது. கடையில் எல்லாம் அவன் பார்த்து பார்த்து வாங்குவதிலேயே மனம் சுணங்கியிருந்தாள். கொஞ்சம் குழப்பம் என்றும் சொல்லலாம்.

அவளும் எதையும் யோசிக்கவில்லை, இயல்பாக அவனது அணைப்பில் லயிக்க முடியாமல் அவனிடமிருந்து விலக முயன்றாள்.

அவளின் எதிர்ப்பில் கண்களை திறந்தவன் அவளை விட்டு விலகி நின்றான். சிவந்து போன முகமும் கலங்கிய விழிகளுமாக அவனை ஏறிடாமல் நின்றிருந்தவள் அவனை பாதிக்க செய்தாள், பயப்படுத்தினாள்.

“யசோ…” என மெல்லிய குரலில் அழைத்தான்.

இப்படி அவளிடம் நடக்க அவனுள் எந்த திட்டமும் இல்லை, சொல்லப் போனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம், மற்றதெல்லாம் மெதுவாக எனதான் நினைத்திருந்தான். அவனை மீறி நடந்து விட்ட நிகழ்வு.

என்ன சொல்லி விளக்கவென தெரியாமல் சங்கடமாக பார்த்தான்.

“அது ஸாரி… எனக்கு… ஸாரி…” தன் மனதை சொல்லத் தெரியாமல் ஆசையாக நெருங்கியவனுக்கு அநீதி செய்து விட்டதை போல நினைத்தவள் மருண்டு போய் திக்கி திணறினாள்.

அவனுக்குமே அவளின் நிலை புரியவில்லை.

“வா போலாம்” என சொல்லி அவன் நடக்க, அவன் பின்னால் மெதுவாக சென்றாள் அவள்.

வீடு வரும் வரை பேசிக் கொள்ளவில்லை. வீடு வந்தபின் அமைதியாக படுக்கை அறைக்கு சென்று விட்டான். அவள் பால்கனியை தஞ்சைமடைந்தாள்.

உறங்கிக் கொண்டிருந்தவனை தியாகுவின் அழைப்பு எழுப்பி விட்டது. சாப்பிட அழைத்தான். யசோவை தேடிக் கொண்டு சென்றான் கெளதம்.

பால்கனியில் அப்படியே சுருண்டு உறங்கிப் போயிருந்தாள். சிறு பெண்ணிடம் அதிகப்படியாக நடந்து கொண்டோமோ என வருத்தப்பட்டான்.

அவளைத் தொட்டு எழுப்பி விட்டான். எழுந்ததும் அவனை கண்டு விட்டு பாவமாக பார்த்தாள்.

“தியாகு சாப்பிட கூப்பிடுறான் யசோ, அவன் கூட பொறக்காத தங்கச்சிய கூட்டிட்டு போகலைனா எனக்கும் சோறு போட மாட்டான். சீக்கிரம் வா” என எதுவுமே நடக்காதது போல சொன்னான்.

அப்படி அவன் நடந்து கொண்டதே அவளுக்கு ஆசுவாசமாக இருந்தது. அவளும் இயல்பாகவே தன்னை காட்டிக் கொண்டாள்.

தியாகுவின் வீட்டில் உணவை முடித்துக் கொண்டு வந்த பின் சற்று நேரத்தில் யசோ படுக்க சென்று விட்டாள். கெளதம் ஏதோ படம் பார்த்து விட்டு தாமதமாகத்தான் உறங்க வந்தான்.

அதன் பிறகு இருவருமே மாடியில் நடந்ததை பற்றி பேசிக் கொள்ளவில்லை. அவளுக்கு என்னை பிடித்திருக்கும் போது ஏன் இப்படி விலகுகிறாள் என அவனுக்கு ஆதங்கமாக இருந்தது. உட்கார்ந்து பேச வேண்டும் என நினைத்துக் கொண்டே இருக்கிறான், சந்தர்ப்பம்தான் வாய்க்கவில்லை.

இப்போதெல்லாம் அவளின் அருகில் இருக்கும் போது தள்ளியிருக்க முடியாமல் தவிக்கிறான். அலுவலக நேரத்தில் கூட நினைவுக்கு வந்து இம்சை கூட்டுகிறாள். அவளது முகம் காணும் ஆர்வத்தில்தான் வீட்டுக்கு வருகிறான்.

தன் மனதை மெல்ல மெல்ல புரிந்து கொண்டு விட்டான் கெளதம். ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாக இருந்தே ஒருத்தி மனதில் நிறைந்து விட்டாளே என மனைவியை நினைத்து பெருமை வேறு.

வேலையில் கவனம் வைக்க முடியாமல் பகலில் படுத்துகிறாள் என்றால் இரவுக் கதையை கேட்கவே வேண்டாம்.

இரவின் குளிரும் அவளது வாசமும் அவனை சுற்றி வளைக்கும் போது, பொங்கி வரும் உணர்வுகளை அடக்க வழி தெரியாமல் இமைகள் மூடி விழி பிதுங்குகிறான்.

வெறும் காம உணர்வென சொல்ல முடியாது, யசோவை ஆட்கொள்ள துடிக்கும் ஆசை, அவளுக்குள் அடங்கிப் போக ஆவல், அவளுடன் எல்லா வகையிலும் வாழ்ந்து பார்க்க உள்ளத்தில் ஒரு தீவிரமான வேட்கை. அணுவெங்கும் அவளே.

அவளும் பச்சைக் கொடி காட்டுவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான். யசோவுக்கு அவனது செயல்களின் பின் உள்ள சைகை புரியாமல் இல்லை. அவனுக்கு ஈடு நான் இல்லை என்ற அவளது எண்ணம்தான் அவனிடம் அவளை நெருங்க விடாமல் தடையாக நிற்கிறது.