ஆயிரத்தில் அவள் ஒருத்தி -11

அத்தியாயம் -11

வெளியிலிருந்து உணவகத்துக்குள் கெளதம் வரவும் “எனக்கு மீன் பிடிக்கும், இங்க எது நல்லாருக்குமோ அது சொல்லுங்க” என்றாள் யசோ.  மீன் வகையிலேயே ஆர்டர் கொடுத்தான்.

உணவு வர நேரமெடுக்கும் என்பதால், “வெஜ் சூப் ஒன் பை டூ” என ஆர்டர் செய்தான்.

சர்வர் சென்றதும், “ஒரே பவுள்ல ரெண்டு பேரும் சாப்பிடணுமா?” எனக் கேட்டு விழித்தாள்.

“ஆமாம், இங்க அப்படித்தான் யசோ, நீ எனக்கு ஸ்பூன்ல கொடுக்கணும், நான் உனக்கு கொடுப்பேன்” என வழக்கம் போல தீவிர தொனியிலேயே சொன்னான்.

அவனை நம்பாதவள் சுற்றிலும் பார்க்க, “ஷ் மத்தவங்க சாப்பிடறத வேடிக்கை பார்க்காத” என்றான்.

“விளையாடுறீங்கதானே?”

“ஏன் எனக்கு கொடுக்க மாட்டியா?” என அவன் கேட்க, மாட்டேன் என தலையாட்டினாள்.

“ஏன்?  நாம ஹஸ்பண்ட் வைஃப்தானே?”

“அதெல்லாம் வீட்ல, எல்லார் முன்னாடியும் அப்படி செய்யக் கூடாது”

“நீ ரீல்ஸ்லாம் பார்க்கிறது இல்லையா? பல்லு விளக்குறதிலேருந்து ஃபர்ஸ்ட் நைட் ரூம்க்கு பால் எடுத்திட்டு போறது வரை வீடியோ போடுறாங்க”

அவன்  ‘ஃபர்ஸ்ட் நைட்’ என சொன்னது குறு குறுக்க வைக்க பதில் சொல்லவில்லை அவள். புரிந்தது போல, “அட ஃப்ளோல சொல்ற ஏதோ ஒரு வார்த்தையை பிடிச்சுக்க கூடாது. இப்ப உன் மனசுல தோனினதை மறைக்காம சொல்லணும் என்கிட்ட” என்றான்.

“வீடியோ எடுக்கிறாங்கன்னு கான்ஷியஸோட பண்றது எப்படி ஒரிஜினலா இருக்கும்? எல்லாத்தையும் எல்லாருக்கும் காட்டிட்டா நமக்குன்னு என்ன தருணம் மிச்சமிருக்கும்? அதெல்லாம் எனக்கு பிடிக்காது” என்றாள்.

“தருணம்?”

சில நொடிகள் யோசித்தவள், “மொமெண்ட்” என்றாள்.

“ஓ யசோ நீங்க தமிழம்மால்ல?”

“இல்லை” என்றாள்.

அவன் புருவம் நெறிக்க, “என் ஸ்கூல் மேட் ஒருத்தி இருக்கா அவ பேரு தமிழ், அவங்க அம்மா பேரு வேற” என்றாள்.

மொக்கையாக இருந்தாலும் அவளிடமிருந்து எதிர் பார்த்திருக்கவில்லை அவன். சத்தமாக சிரித்தான். பக்கத்து மேசையில் உள்ளவர்கள் இவனை பார்க்க, “அச்சோ போதும்!” என சொல்லி அவனை அடக்கினாள் யசோ.

சூப் வந்தது. இரண்டு கிண்ணங்கள் இருக்க, அவன் ஏதோ சொல்ல போக, “புரிஞ்சுது எனக்கு” என்றாள்.

“கற்பூர புத்திடி கண்ணம்மா” என்றான்.

“இதென்ன அடிக்கடி குழந்தைங்கள சொல்ற மாதிரி ஏதாவது சொல்றீங்க?” எனக் கேட்டாள்.

“பார்க்க அப்படித்தான் குழந்தை புள்ளையாட்டம் இருக்க, யூனிஃபார்ம் போட்டு விட்டா இருபத்தியோரு வயசுப் பொண்ணுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க”

“அது என் அம்மாக்கு கூட வயசு தெரியாது, அவங்கள போலவே இருக்கேன் போல நானும்”

“அடி லட்டு, வயசு தெரியாம இருக்கிறது வேற, வயசுப் பொண்ணா தெரியாம இருக்கிறது வேற” என்றான்.

“அது உங்க பார்வைலதான் தப்பு. நான் வயசுப் பொண்ணுதான்” என ரோஷமாக சொன்னாள்.

“வாயால சொன்னா ஆச்சா? செயல்ல காட்டணும் செல்ல…” என பேசிக் கொண்டிருந்தவன் கவனமாக செல்லம்மாவை தவிர்த்து, “செல்லக்கிளி!” என்றான்.

“அது என்னவோ அன்னிக்கு அழுதிட்டேன், இனிமேலாம் அழ மாட்டேன்” என்றாள்.

“நீ எப்ப குழந்தை எப்ப குமரின்னு புரிய மாட்டேங்குது. செயல்ல காட்டுறியா நீ வயசுப் பொண்ணுன்னு?”

என்ன கேட்பானோ என அவளுக்கு பயம்.

“சிக்ஸ்டீன் பிளஸ் படம் பார்க்க முடியலை, இவங்க வயசு பொண்ணாம். அப்படி ஒரு படம் என் பக்கத்துல உட்கார்ந்திட்டு நெளியாம ஷை ஆகாம பாரு. நீ வயசு பொண்ணுன்னு ஒத்துகிறேன்” என அவன் சொல்லவும் முகம் சின்னதாகி விட்டது.

“அச்சச்சோ! சர்க்கரை கட்டி நீ வயசு பொண்ணுதான், நார்மல் ஆகு” என்றான்.

“நீங்க ஒதுக்கிட்டாலும் இல்லாட்டாலும் நான் வயசு பொண்ணுதான்” என வேகமாக சொன்னவள், சற்றே குரலை தாழ்த்தி, “அதெல்லாம் பார்க்கும் போது சங்கோஜ படுறேன், நெளியுறேன்னா வயசு பொண்ணுன்னு அர்த்தம் இல்லாம என்னவாம்?”  எனக் கேட்டாள்.

மோவாயில் கை வைத்து பொய்யாக அதிசயித்தவன், “நீங்க வயசு பொண்ணுதான் போல ஜாமூன்” என்றான்.

“நீங்க என் டாடிய ஞாபகப்படுத்துறீங்க, டாடியும் அம்மாவை பேர் சொல்லி கூப்பிட மாட்டார், தங்கம் கண்ணு இப்படித்தான் கூப்பிடுவார்” என்றாள்.

“கட்டின புருஷன் டாடி! போடி” என்றான்.

அவனை நோக்கி நெருங்கியவள் சின்ன குரலில் ரகசியமாக, “நீங்களும் எப்பவாவது வாம்மா போம்மான்னு என்னை சொல்றீங்க, அப்ப நான் என்ன உங்களுக்கு அம்மாவா? என்ன சென்ஸ்ல சொல்றீங்கன்னு எனக்கு தெரியும். அப்படித்தான் நீங்களும் எனக்கு டாடி, அதுக்கு என் அப்பான்னு அர்த்தம் இல்லை” என்றாள்.

“வாயாடி கழுதை, உனக்கு பேச வராதுன்னு எல்லாரும் நம்பிட்டு இருக்காங்க. நல்லா ஏமாத்தி வச்சிருக்க எல்லாரையும்” என சொல்லி சிரித்தான்.

“டாடி இவ்ளோ செல்லப் பேர் சொல்ல மாட்டார், நீங்க நிறைய சொல்றீங்க”

“எனக்கு தெரிஞ்ச எல்லா செல்ல பேரும் உனக்கே உனக்குத்தான்” என சொல்லி அவளை திக்குமுக்காட வைத்தான்.

கெளதம் பேசினான் என்றால் ஆச்சர்யமில்லை, அவளை பேச வைத்தான். அவளுக்கும் அவனிடம் நன்றாக பேச வந்தது.

கம கம மணத்துடன் ஆவி பறக்க சாப்பாடு வந்தது. நாசூக்காக சாப்பிட்டாள். அடிக்கடி அவனை பார்த்து புன்னகை செய்தாள். இது நல்லாருக்கு சாப்பிட்டு பாரு என பார்த்து பார்த்து அவளுக்கு எடுத்து வைத்தான்.

ஏதோ மேசையில் ஒரு குழந்தை அழுது கொண்டே இருந்தது.

“பாவம் குழந்தைக்கு என்னாச்சோ, அந்த அம்மாவாலேயும் சாப்பிட முடியலை” என பாவப்பட்டாள்.

“நீ போய் சமாதானம் பண்ணிட்டு வாயேன்” என அவன் சொல்ல, உடனே எழுந்து விட்டாள்.

“ஹேஹேய் உட்காரு!” என  அதட்டி அமர வைத்தான்.

“சரியான…” வார்த்தை சிக்காமல் அவன் தேட, “அவசரகுடுக்கை” என அவளே எடுத்துக் கொடுத்தாள்.

“ம்ஹூம்… வேற ஏதாவது சொல்லணும். ம்ம்… பாப்கார்ன்” என்றான்.

அவள் முகத்தை சுருக்கி பார்க்க, “எக்ஸ்பெக்ட் பண்ணாத நேரத்துல ஏதாவது செய்யுற. நீ கேட்டதும் புள்ளைய தூக்கி கொடுத்திடுவாங்களா அவங்க? அங்கதான் அத்தனை பேரு இருக்காங்களே, நமக்கெதுக்கு வம்பு? வெளில வந்தா நீயா ஏதாவது பண்ணக்கூடாது, என்கிட்ட கேட்கணும்” என்றான்.

முகத்தை உர் என வைத்துக் கொண்டுதான் சாப்பிட்டாள்.

“தொட்டாசிணுங்கி!” என்றான்.

“நீங்கதான் சர்க்கஸ் மாஸ்டர்” என்றாள்.

“உன்னோட மாஸ்டர்னு வேணும்னா சொல்லிக்க” என்றான். இப்படி பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டனர். அந்தக் குழந்தையும் அழுகையை நிறுத்தி விட்டது.

மாலை நான்காகி விட்டது. களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது. அவனுக்குமே சக்தி வடிந்திருந்தது.

அப்பார்மென்ட் வந்ததும் தியாகுவிடம் கார் சாவி கொடுக்க போனார்கள். மைதிலி தேநீர் போட்டு கொடுத்தாள். இருவருமே களைத்து காணப் படுகிறீர்கள்,  இரவு சாப்பாட்டுக்கு இங்கே வந்துவிடுங்கள் என கட்டளை போட்டு விட்டாள் மைதிலி.