ஆயிரத்தில் அவள் ஒருத்தி-10

அத்தியாயம்-10

யசோ பெங்களூரு வந்து இரண்டு மாதங்களாகி விட்டன. போன மாதமே மைதிலி அவளது மகன் அஸ்வந்துடன் கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். கெளதம் அலுவலகம் சென்ற பிறகு யசோ மைதிலியின் குட்டிப் பையனுடன் நேரம் செலவளித்து விட்டு வருகிறாள்

கெளதம் கடந்த மாதம் ஒரே ஒரு முறை யசோவை வெளியில் அழைத்து சென்றிருந்ததோடு சரி. கொலுசு வாங்கிக் கொடுத்து விட்டு ஆடைகள் வாங்கிக் கொண்டிருக்கையிலேயே அவனுக்கு அவசர வேலை வந்து விட, உடனடியாக வீடு திரும்பும் படி ஆகி விட்டது

வெளியில் கூட சாப்பிட முடியாமல் ஆர்டர் செய்துதான் சாப்பிட்டார்கள். அன்றிலிருந்தே கௌதமுக்கு வேலை சரியாக இருக்கிறது. வார இறுதியில் கூட அரை நாள் அலுவலகம் செல்ல வேண்டியதாக இருக்கிறது

யசோவுடன் மனம் விட்டு பேச வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறான், வார நாளாக பார்த்து ஒரு நாள் ஊருக்கு வா திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என அப்பா அழைக்கிறார், நீ வரும் நாளை சொல்லு அப்போதுதான் நானும் வருவேன் என கல்யாண் காத்துக் கொண்டிருக்கிறான், குணா வேறு நேரில் சந்திக்க வேண்டும் என சொல்கிறான்.

அனைத்தையும் விட யசோவும் நவீனும் வேறு ஒருவரை ஒருவர் மிஸ் செய்கிறார்கள், இந்த உடன்பிறப்புகள் ஒன்றாக நேரம் செலவளிக்கவாவது ஊருக்கு செல்ல நினைக்கிறான். எங்கேகௌதமால் நிஜமாகவே விடுப்பு எடுக்க முடியாத நிலை. 

யசோவை தனியாக அனுப்பவும் யோசனையாக இருந்தது. இரண்டு மூன்று முறை தன்னுடைய அழைத்து சென்று அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டால் தைரியமாக அனுப்பலாம் என நினைத்தான்

நவீனை இங்கே அழைத்து வரவும் பேசிப் பார்த்தான். சண்முகம் கடையை விட்டு வர இயலாது என சொல்லி விட்டார். அருணாவுக்கும் தனியாக பயணம் செய்து பழக்கம் இல்லை

இப்படியே நாட்கள் கடந்தன. ஆனால் யசோ அவனிடம் ஊருக்கு செல்வது பற்றி எதுவும் கேட்கவில்லை. தம்பியை காண ஆசைதான், இருப்பினும் கணவனின் நிலை புரிந்து அமைதியாக இருந்தாள்

அதிமுக்கியம் இல்லையென்றால் அலுவலக நேரத்தில் அழைக்க மாட்டாள். சாப்பிட்டீர்களா, கிளம்பி விட்டீர்களா, தாமதம் ஆகுமா எல்லாமே வாட்ஸ் ஆப் செய்திதான்

அவனது வயிறை வாட விடாமல் கவனித்தாள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் போதும் நேரத்துக்கு தேநீர், பழத் துண்டுகள், அவித்த கடலை பட்டாணி என ஏதாவது அவனை தேடி வந்து விடும்.

யசோவின் வரவுக்கு முன் வார இறுதியில் துணி துவைத்து காய வைத்து இஸ்திரிக்கு கொடுத்து வாங்குவான். சரியான நேரத்துக்கு கேட்டு வாங்குவதற்குள் எரிச்சல் அடைந்து விடுவான். இப்போது அந்த கவலையெல்லாம் அவனுக்கு இல்லை. நிம்மதியாக வேலை பார்க்க முடிந்தது.

மனைவியின் வரவுக்கு பின் கெளதம் கொஞ்சம் சுகவாசியாகத்தான் மாறி விட்டான். ஆனால் அவனுமே யசோவுடன் சீண்டி விளையாடுவதை நிறைய மிஸ் செய்கிறான்.

வீட்டுத் தேவைக்கு இது வேண்டும் அது வேண்டும் என கணவனிடம் எதுவும் கேட்பதில்லை யசோ. அப்பார்ட்மென்ட் வளாகத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் அவளுக்கு போதுமானதாக இருந்தது. வீட்டு செலவுக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை அவளது கணக்குக்கு போட்டு விடுகிறான். செலவு போக மிச்சம் கூட பிடித்து விடுகிறாள்

அசைவம் வேண்டுமென்றாலும் தியாகு அவனுக்கு வாங்கும் போது இங்கேயும் வேண்டுமா என கேட்டு வாங்கி கொடுத்து விடுகிறான்

உல்லன் நூல் மட்டும் இங்கே கிடைக்கவில்லை என ஒரு நாள் காலை காஃபி நேரத்தில் அவள் பேச்சுவாக்கில் சொல்ல, உடனே ஆன்லைன் வழியாக ஆர்டர் போட்டு வாங்கிக் கொடுத்து விட்டான்

இப்படி வேலை வேலை என ஓடிக் கொண்டிருக்கிறாரே என யசோவுக்கு கணவன் மீதான கவலைதான்

மைதிலி மகனுக்கு இப்போதுதான் திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்திருந்தாள். ஊட்டுவதற்குள் அரும்பாடு படுகிறாள். யசோ குழந்தையை அழகாக கையாள்கிறாள். குளிக்க வைக்க, உணவூட்ட என எல்லாமே அவளுக்கு நன்றாக வந்தது. குழந்தை கூட அவளின் முகம் அடையாளம் கண்டு அவள் கைகளில் இருந்தால் சமத்தாக இருந்து கொண்டான்

மைதிலியின் அண்ணன் மகன் இந்த குட்டி பையனுக்கு இஜ்ஜு என செல்லப் பெயர் சூட்டியிருக்கிறான். யசோவுக்கு இஜ்ஜு கண்ணா, இப்போது இஜ்ஜு கண்ணாவின் ஃபேவரைட் யசோதான்.

அன்று வெள்ளிக்கிழமை, அதிசயமாக மாலை ஐந்துக்கே வீடு வந்து விட்டான் கெளதம். இஜ்ஜுவை கால்களில் வாகாக படுக்க வைத்துக்கொண்டு சத்து மாவு கஞ்சி கொடுத்துக் கொண்டிருந்தாள் யசோ

கதவை திறந்து வைத்து விட்டு வெளியில் இருந்த கிரில் கேட்டை தாழ் போட்டிருந்தாள். வெளியில் இருந்த படியே கேட்டை திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தான் கெளதம்

குழந்தையோடு மனைவியை பார்க்கையில் அவனுக்கு நன்றாக இருந்தது

, சாப்பிடுங்க, மாமா வந்திட்டார் பாருங்கஎன சொல்லிக் கொண்டே குழந்தைக்கு ஊட்டியவள், “என்னங்க, சீக்கிரம் வந்துட்டீங்க?” எனக் கேட்டாள்

ம்ம்ம்ரியாக்ஷன் ரொம்ப கம்மியா இருக்கு, ஓடி வந்து கட்டிப்பிடிச்சு வரவேற்க வேணாம்?” என அவன் சொல்ல, குழந்தைக்கு ஊட்டிக் கொண்டே ஓரக் கண்ணால் அவனை வெட்கமாக பார்த்தாள்

அவளின் பாவனையை ரசித்துக் கொண்டே சோஃபாவில் தளர்வாக அமர்ந்தான்

இஜ்ஜுக்கு சாப்பாடு கொடுக்க சொல்லிட்டு மைதிலிக்கா குளிக்க போயிருக்காங்கஎன அவனுக்கு விவரம் சொல்லிக் கொண்டே குழந்தையின் வாய் துடைத்து விட்டாள்

குழந்தையை அங்கே விளையாட விட்டு விட்டு கணவனுக்கு தேநீர் போட சென்றாள். அதற்குள் மைதிலி வந்து விட்டவள், “என்னண்ணா நீங்க வந்துட்டீங்க, இன்னும் அவரை காணோம்?” எனக் கேட்டாள்

டெய்லி சீக்கிரம் வர்றான்தானே? ஒரு நாள் நான் சீக்கிரம் வந்ததுதான் உன் கண்ணை உறுத்துதாம்மா?” என அவளிடம் வம்பாக கேட்டான்

உங்களை யார் லேட்டா வர சொல்றது? உங்க ஃப்ரெண்ட் லேட்டா வந்தா நடக்கிறதே வேற, யசோ சரியில்லை, அவளுக்கு விவரம் போதல, இருங்க உங்களை எப்படி வழிக்கு கொண்டு வர்றதுன்னு நான் சொல்லித் தர்றேன் அவளுக்குஎன மைதிலியும் வம்பு பேசினாள்

மைதிலியின் குரல் கேட்டு அவளுக்கும் சேர்த்து தேநீர், முன்னரே செய்திருந்த அவல் உப்புமா கொண்டு வந்தாள் யசோ

நீ இந்தப் பொண்ணு கூட சேராத யசோ, உனக்கு தப்பு தப்பா சொல்லி தந்து நமக்கு நடுவுல பிரளயம் ஏற்படுத்த பார்க்குதுஎன உப்புமாவை சாப்பிட்டுக் கொண்டே யசோவிடம் விளையாட்டாக குறை சொன்னான் கெளதம்

சேச்ச மைதிலிக்கா அப்படிலாம் இல்லைஎன்றாள் யசோ

ஆமாம் உனக்கு எல்லாரும் நல்லவங்க. தியாகு உன்னை தங்கச்சின்னு சொல்றதாலேயே இவ நாத்தனாருங்ககிட்ட செய்ய முடியாத சேட்டைலாம் உன்கிட்ட செய்வா, டேஞ்சரஸ் அண்ணி இவ, கவனம் யசோஎன்றான் கெளதம்

எங்கே மைதிலி தவறாக எடுத்துக் கொள்வாளோ என யசோ பார்க்க, அவளோ, “எனக்கு என் நாத்தனார் ஹஸ்பன்டஸ் மேலதான் காண்டுஸோ என் டார்கெட் நீங்கதான் அண்ணா. உங்க காலேஜ் லவ் ஸ்டோரிலாம் யசோக்கு தெரியாதில்ல, நாளைக்கு சாவகாசமா சொல்லிக் கொடுக்கிறேன்என மிரட்டி விட்டு குழந்தையுடன் சென்று விட்டாள்

அக்கா தவறாக நினைத்திருப்பார் ஏன் இப்படி பேசினீரகள் என கணவனை கடிந்து கொண்டாள் யசோ

அவ உன்னை மாதிரி கேட்டுட்டா இருக்கா, எப்படி திருப்பி தர்றா? நாங்க அப்படித்தான், நீ கண்டுக்காதஎன்றவன், “அவ சொல்றான்னு எதாவது நினைச்சுக்காத, அப்படிலாம் எனக்கு லவ் ஸ்டோரி கிடையாதுஎன்றான்

அது எனக்கே தெரியும், இருந்திருந்தா அந்த பொண்ணை யாருக்கும் விட்டு கொடுத்திருப்பீங்களா என்ன?” எனக் கேட்டாள்

ஹேய் சத்தியமா முடியலைடி பட்டர்ஃபிளை, பாரு புல்லரிக்குது!” 

அரிச்சா சொறிஞ்சுக்கோங்க. இப்ப உங்க வேலை பரவாயில்லையா? கஷ்டம் குறைஞ்சிருக்கா?” என விசாரித்தாள்

எங்க யசோ, நல்லா போய்ட்டு இருக்கும் போதே ஏதாவது டெக்னிகல் இஸ்ஸு ஆகிடுது. இப்போதைக்கு ஓகே, எப்ப என்னாகுமோங்கிற நிலைமைதான். டீம்ல ஸ்பெஷலிஸ்ட் இன்னொரு ஆள் தேவைப்படுது, வந்தா சமாளிச்சிடலாம். ரெக்ரூட் பண்ணி ஆள எடுங்கடான்னு சொல்லிருக்கோம், பார்ப்போம்என்றான்

சீக்கிரம் ஆள் வந்திடுவாங்க, உங்களுக்கும் சிரமம் குறையும்என்றாள்

என் வீட்டம்மா அருள் வாக்கு சொன்னா நடந்த மாதிரிதான்என சொல்லிக் கொண்டே கை நீட்டினான். அவனருகில் வந்தவள் கையை கொடுக்க சற்று வேகமாக இழுத்து பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான்.

மத்த கதையை விடு, சொல்லுஎன் கண்மணி எப்படி இருக்காங்க? படிக்கிறாங்களா இல்லையா? எல்லாம் ஓகேவா அவங்களுக்கு?” எனக் கேட்டான்

ம்ம்அடுத்த மாசம் செமினார் போகணும், ரெண்டு வாரம் நடக்குது. போகலைனாலும் பிரச்சனை இல்லை, போனா ஏதாவது கத்துக்கலாம்என்றாள்

நான் கேட்ட பிறகுதான் சொல்ற, கேட்கலைனா இப்பவும் சொல்லியிருக்க மாட்ட, டிக்கெட்லாம் போட வேணாமா யசோ?” என கடிந்து கொண்டான்

நீங்க பிஸியா இருந்தீங்க, அத்தைகிட்ட சொல்லியிருந்தேன். அந்த நேரம் உங்களால முடியலைனா எப்படியாவது மாமாவை மல்லுகட்டி அனுப்பி விடுறேன், வந்து கூட்டிட்டு போவாங்கன்னு சொல்லியிருந்தாங்க. நீங்க ஃப்ரீ ஆனதும் உங்ககிட்ட சொல்லிக்கலாம்னு இருந்தேன்என்றாள்

தேதி கேட்டுக் கொண்டவன் உடனே மேனேஜருக்கு அழைத்து பேசி விடுப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டான். நாம் இருவருமே செல்லலாம், ஊரில் பார்க்க வேண்டிய வேலைகளை முடித்து விடலாம் என்றான்

ரெண்டு வாரமும் நீங்களும் இருப்பீங்களா?” என வேகமாக கேட்டாள்

இருக்கணுமா?” அவள் என்ன சொல்கிறாள் என அறிய வேண்டி கேட்டான்

இருந்தா நல்லாருக்கும்” 

யாருக்கு?” 

முகத்தை சின்னதாக்கிக் கொண்டவள், “நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?” எனக் கேட்டாள்

உன் வாய்லேருந்து நான் நினைக்கிற வார்த்தையை வாங்க முடியாதுடி. சரியான அழுத்தக்காரி!” என அலுத்தவன், “அவ்ளோ நாள் நான் லீவ் போடுறது கஷ்டம், உன்னை விட்டுட்டு வந்திடுறேன், உன் செமினார்லாம் முடிஞ்சதும் அப்புறம் வந்து கூப்பிட்டுக்கிறேன்என்றான்

அவளும் மறுப்பாக ஏதும் சொல்லவில்லை