“ஹையோ நானா? மாமாட்ட நான் நாலு வார்த்தை பேசினாலே அதிசயம்”

“ம்ம்… அது போதும். நாலே வார்த்தைல நச்சுனு எனக்காக மாமாவை சேர்த்துக்கோங்க பெரியமாமான்னு சொல்லிடு. உனக்காக செய்வார் அவர்”

“அதுதான் வரட்டும்னு ஏற்கனவே சொல்லிட்டாங்கல்ல?”

“இங்க வர்றதுக்கு முத நாள் நானும் அப்பாவும் கடைல பேசினது எல்லாத்தையும் கேட்டியா?”

“நீங்க ரகசியமா பேசினீங்க, எல்லாம் காதுல விழுந்துச்சு”

அவளின் காதை செல்லமாக திருகியவன், “பல்லு மட்டுமில்ல காதும் ஷார்ப்” என்றான்.

நாசூக்காக அவனது கையை விலக்கி விட்டாள்.

“என்ன நான் தொட்டா பிடிக்கலையா?”

“இல்லை கூச்சமா இருக்கு” மெல்லிய குரலில் சொன்னாள்.

“அப்ப பிடிச்சிருக்கு?” என அவன் கேட்க, “டைம் ஆகிடுச்சு பாருங்க” என சொல்லி கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.

தியாகுவுக்கும் இன்று விடுமுறைதான். நண்பர்கள் இருவரும் ஒரே நிறுவனம் என்ற போதும் வேறு வேறு குழுவில் இருந்தார்கள்.

வார இறுதியில் கெளதம் அழைப்பு விடுத்தால்தான் இங்கு வருவான். வார நாட்களில் இரவு சாப்பாட்டுக்கு வருகிறான், மற்ற படி இந்த தம்பதியினருக்கு தனிமை தேவை என அதிகம் இங்கு தலை காட்ட மாட்டான்.

தியாகுவிடம் வீட்டு சாவி கொடுத்து பிளம்பர் வரும் போது பார்த்துக் கொள் என சொல்லி மனைவியோடு கிளம்பினான் கெளதம்.

கௌதமும் யசோவும் வீட்டிலிருந்து புறப்படும் போதே பதினொன்று ஆகி விட்டது. ஃபர்னிச்சர் கடைக்குத்தான் முதலில் சென்றனர். எளிதில் எதுவும் வாங்கி விடாமல் நிறைய கேட்டு சோதித்து  திருப்தி வந்த பிறகு சற்றே நேரம் எடுத்துதான் வாங்கினான்.

அவளுக்கு இது பற்றியெல்லாம் அதிக விவரம் இல்லை, அவனை கவனித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள். இறுதியில் உனக்கு பிடித்திருக்கிறதா என அபிப்ராயம் கேட்ட போது அரை குறையாக தலையாட்டினாள்.

“பிடிக்கலியா யசோ, சொல்லு வேற பார்க்கலாம்” என்றான்.

“இல்லையில்லை இதையே வாங்கிடலாம்” என்றாள்.

“அப்புறம் என்ன யோசிச்ச, ஏதோ நினைச்ச நீ, என்னன்னு சொல்லு” என்றான்.

“இது வாங்கிடலாம்,  அது வேற யோசனை” என அவன் சொல்லவும் நெற்றி சுருக்கி அவளை பார்த்தவன் மேலும் அவளை தோண்டி துருவாமல் பணம் செலுத்தி வீட்டில் டெலிவரி செய்ய சொல்லி முகவரி கொடுத்தான்.

கடைக்கு வரும் போது நன்றாக இருந்தவளின் முகம் இப்போதுதான் மாறி விட்டது என அவனுக்கு நன்றாக தெரிகிறது. அதை அப்படியே விட முடியாமல் என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தான்.

அடுத்து நகைக்கடை. இங்கு ஏன் என அவள் தயங்க, “ஜல் ஜல் கொலுசு இல்லாம வேற ஏதாவது கொலுசு வாங்கிக்க யசோ” என்றான்.

“எதுக்கு செலவு, வேணாங்க” என மறுத்தாள்.

“ரெண்டு ஆப்ஷன் உனக்கு,  ஒன்னு இங்க வேற வாங்கிக்க, இல்லைனா அந்த ஜல் ஜல்’லையே போட்டுக்கிட்டு என் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணு, நமக்குள்ள சண்டை வரட்டும்” என்றான்.

அவன் சொன்ன தொனியில் மிரண்டவள் கடைக்குள்ளேயே சென்று விட்டாள்.

அதிக நேரம் எடுக்காமல் விரைவாகவே ஒன்றை தேர்வு செய்து விட்டாள். பார்க்க நன்றாக இருந்த போதும், “இன்னும் பாரேன், இத விட பெட்டரா கிடைக்கும்” என்றான்.

“இதுவே நல்லாருக்கு” என அவள் சொல்ல, அவனே பார்த்து இன்னும் மூன்று கொலுசுகளோடு அவள் எடுத்ததையும் சேர்த்து வைத்து, “இப்ப செலக்ட் பண்ணு” என்றான்.

“எனக்கு சொல்ல தெரியலை, நீங்களே பாருங்க” என்றாள்.

“நீதானே போட்டுக்க போற?”

“கொலுசுதானே? எதுக்கும் யாரும் என் அபிப்ராயம் கேட்டது இல்லை. என்ன கொடுக்கிறாங்களோ அதையே எனக்கானதுனு ஏத்து பழகிட்டேன். நீங்கதான் உங்களுக்கு பிடிச்சதா ரொம்ப பார்த்து வாங்குறீங்க, நீங்களே எடுங்க” என்றாள்.

அவளின் முக வாட்டத்துக்கான காரணத்தை கண்டு பிடித்து விட்டான். உடனே அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் கன்னத்தில் கை வைத்து பொய்யாக வியந்தவன், “என்னை ரொம்ப அப்ஸர்வ் பண்ற. இப்ப காலை காட்டு” என்றான்.

கால் வைக்க ஏதுவாக சின்ன ஸ்டூல் கொண்டு வந்து வைத்தான் கடைக்கார பையன். “வச்சு பாரு” என கெளதம் சொல்ல, தயங்கினாள்.

“இதுக்கு ஏன் கூச்ச படுற, எல்லாரும் அப்படித்தான் வாங்குறாங்க” என்றவன் அவளது காலை ஸ்டூலில் வைத்து கொலுசையும் வைத்து பார்க்க போக, “வேணாம் வேணாம் காலெல்லாம் பிடிக்காதீங்க, என்கிட்டேயே கொடுங்க” என அவளே வாங்கிக் கொண்டாள்.

“நீ ரொம்ப ஃபார்மலா இருக்காத என்கிட்ட” என்றான்.

“நீங்களும்தானே காலைல உங்க கால் என் மடில இருந்ததுக்கு டென்ஷன் ஆகிட்டீங்க?”

“ஆமால்ல, இனிமே ஆக மாட்டேன். சின்ன பொண்ணா இருக்கியா, ரொம்ப டீப்பா சொல்ல முடியலை” என்றான்.

மேலும் வார்த்தை வளர்க்காமல் ஒவ்வொன்றாக அணிந்து அவனது முகத்தை பார்த்தாள். நான்கையும் அணிவித்து காட்ட சொல்லி, அதிக சத்தம் வராமல் வேலைப்பாடு கொண்ட ஒன்றை தேர்வு செய்தான்.

மனைவியிடம் அப்போதே அணிந்து கொள்ள அவன் சொல்ல, ‘பில் போட வேண்டும் சார்’ என்றான் கடைக்காரன்.

யசோ முதலில் தேர்வு செய்ததற்கும் சேர்த்து பில் போட சொன்னான். ஒன்று போதும் என அவள் சொன்னாலும் கேட்கவில்லை.

“உனக்குன்னு வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளில வர்றோம், நீ செலக்ட் பண்ணின ஃபர்ஸ்ட் பொருள். ஒரு செண்டிமெண்ட் யசோ, இருக்கட்டும்” என அவன் சொல்ல அவளும் மறுக்கவில்லை.

கைப்பையிலிருந்து தண்ணீர் எடுத்து பருகியவள் அவனிடமும் நீட்ட, “வேற என்னென்ன இருக்கு பேக்ல, ஸ்னாக்ஸ் ஏதாச்சும் இருக்கா? லஞ்ச் கூட பேக் பண்ணிட்டியா?” என தீவிர தொனியில் கேட்டான். கிண்டல் என்பது அவளுக்கு புரியவில்லை.

வேகமாக சின்ன டப்பாவை எடுத்தவள் திறந்து காட்டினாள். நறுக்கிய கொய்யா துண்டுகள் மிளகாய் தூள் தடவி இருந்தது.  “லஞ்ச் வெளிலன்னு சொன்னீங்களே, சொல்லியிருந்தா செஞ்சிருப்பேன்” என்றாள்.

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. பழத் துண்டுகளை கையில் படாமல் எடுத்து சாப்பிட சின்ன ஸ்பூன் வேறு. பையை பறித்தவன் உள்ளே வேறென்ன இருக்கிறது என ஆராய, “ஷ்… இது தப்பு” என சொல்லி பிடுங்கிக் கொண்டாள்.

அவள் பார்க்க விடாமல் செய்யவும்தான் பார்த்தே ஆக வேண்டும் என அவனை நினைக்க வைத்தது. சுற்றிலும் ஆட்கள் இருக்க, அப்போதைக்கு அமைதி காத்தான்.

பில் போடுமிடத்தில் நல்ல கூட்டம், டப்பாவை கையில் வாங்கி பழங்களை சாப்பிட்டான்.

“இனி இவ்ளோலாம் சிரம படாத, வெளில போனா எல்லாம் வெளில பார்த்துக்கலாம். குழந்தைங்கள கூட்டிட்டு போனாதான் பாக்ஸ் ஸ்னாக்ஸ் எல்லாம் புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

சின்ன சிரிப்புடன் சரி என்றாள்.

பில் வரவும் பணம் செலுத்தினான். அவன் தேர்வு செய்த கொலுசை அப்போதே அணிந்து கொள்ள வைத்தான். அதிக சத்ததம் வரவில்லையே என சோதிக்க நடந்து பார்த்துக் கொண்டாள்.

“இப்பவும் லேசா சத்தம் வருதே, முத்தெல்லாம் எடுக்க சொல்லிடலாமா?” எனக் கேட்டாள்.

“வேணாம், போக போக நல்லாருக்கேன்னு தோணிடும்”

“கொலுசு சவுண்ட்டா?”

“என்னையவே ஒருத்தி சுத்தி சுத்தி வர்றது?”

“நான் ஒன்னும் அப்படி சுத்தல”

“புது கொலுசு வாங்கி கொடுத்திருக்கேன், நல்லா வேலை செய்யுதான்னு எனக்கு தெரியணும். நீ என்னை சுத்தி வராம எப்படி தெரிஞ்சிக்கிறது?”

“என்ன!” என அவள் விழி விரித்துக் கேட்கையில் அவனுக்கு அவளின் கன்னங்களை பிடித்துக் கொண்டு கொஞ்ச தோன்றியது.

தன்னை சமாளிக்க, “போதும் என்னை கண்ணால முழுங்கினது, விரிஞ்ச கண்ண சின்னதாக்கிட்டு வா போலாம்” என சற்றே அதட்டலாக சொல்லி நடக்க ஆரம்பித்தான்.

“சும்மா என்னை டீஸ் பண்ணிட்டே இருக்கார், அப்படி செய்றதுல என்னதான் கிடைக்குமோ?” என முணு முணுத்துக் கொண்டே வேகமாக சென்று அவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள் யசோ.