குளியலறையில் தண்ணீர் வரவில்லை. யசோவை அழைத்துக் கேட்டான். அவள் தான் உபயோகிக்கும் போது தண்ணீர் வந்ததாக சொன்னாள். போன வாரம் பிரச்சனை இருந்த போதே ப்ளம்பர் வந்து சரி செய்து விட்டுத்தான் சென்றிருந்தான்.
இன்றும் அவன் பிளம்பரை அழைக்க, அவன் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறானாம், மதியத்திற்கு மேல்தான் வர முடியும் என்றான். செயலாளருக்கு அழைத்து வேறு ப்ளம்பர் அனுப்பி விட சொன்னான். அந்தந்த பிளாக்குக்கு என உரியவர்கள்தான் உடனே வருவார்கள், மற்றவர்கள் அவர்கள் பிளாக் கம்பளைண்ட்கள் பார்த்து விட்டுத்தான் வருவார்கள், சிரமத்திற்கு மன்னிக்கவும் என்றார்.
காலையிலேயே சண்டையிட்டு மனநிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாத கெளதம், தியாகு வீட்டிற்கு செல்வதாக என முடிவெடுத்தான். அதற்குள் சமையலறை வாஷ் பேஷின் குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து வந்து ஊற்றினாள் யசோ.
“ஐயாயிரம் யசோ ஐயாயிரம்! வெறும் மெயிண்டனன்ஸ்க்கு மட்டும் கொடுக்கிறோம். எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாது, கேள்வி கேட்க வேண்டிய இடத்துல கேட்கணும், கோவ பட வேண்டிய இடத்துல கோவ படணும், சண்டை போடணும்னு வந்தா…” அவன் சொல்லிக் கொண்டிருக்க,
“அச்சோ சண்டையெல்லாம் வேணாம்” என்றாள்.
“வேணாமா? நல்ல சான்ஸ் வரட்டும் எப்படி சண்டை போடுறதுனு சொல்லி தர்றேன். இப்ப நீ தள்ளு, நானே தண்ணி எடுத்துக்கிறேன்” என சொல்லி அவள் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கினான்.
“வெறும் வயிரோட இருக்கீங்களே, நான் எடுத்திட்டு வரேன், நீங்க பிரஷ் பண்ணுங்க” என்றாள்.
யசோவுக்கு சின்ன வயது என்ற போதே அவளை எப்படி சமாளிக்க போகிறோம் என அவனுள் பயமிருந்தது. 2k கிட்ஸ், டாட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இப்போது பிள்ளைகள் செய்யும் அலப்பறைகள் எல்லாம் அவனுக்கு அலர்ஜி.
யசோ அப்படி இல்லாதது அவனுக்கு பெரும் ஆறுதல். எதற்காகவும் எந்த கம்பளைண்ட்டும் அவள் சொல்வது இல்லை, இது இல்லையென்றால் அது என உடனே அந்த சூழலுக்கு மாறிக் கொள்கிறாள். யசோவின் இந்த குணங்கள் எல்லாம் அவனை வியக்க வைக்கின்றன.
வாளியை நிறைத்தது வரை போதும், குளிக்கவெல்லாம் நான் தண்ணீர் எடுத்துக் கொள்கிறேன் என முடிவாக சொல்லி விட்டே குளியலறை சென்றான்.
அவன் வரும் போது காஃபி தயாராக இருந்தது. குளிக்கவும் அடுப்பில் சுடு தண்ணீர் வைத்திருந்தாள்.
பூஜை மாடத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் இல்லை. இதெல்லாம் பெண்களின் வேலை என கருதுபவனும் இல்லை.
ஆனால் யசோ இப்படி இருப்பது அவளின் மீது மதிப்பை கூட்டியது. வீட்டின் சுத்தமும் அவளின் திருத்தமான உருவமும் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியும் அவனுள் நேர்மறை ஆற்றலை நன்றாகவே கடத்தியது.
கெளதம் உள்ளுக்குள் அவளின் செயல்களை ரசிக்கிறான், இடையிடையே அறியாமையில் குழந்தையாக அவள் பார்க்கும் பார்வைக்கு ரசிகனாக மாறிக் கொண்டிருக்கிறான். பாவம் பையன் எதையும் இன்னும் உணரவில்லை.
கணவனாக யசோவின் மனதில் ஏற்கனவே அழுத்தமாக அமர்ந்து கொண்டவன்தான் கெளதம், ஆனால் இங்கு வரும் போது எப்படி இவருடன் நாட்கள் நகருமோ என நிறைய பயத்துடன்தான் வந்தாள். பழக பழக அந்த பயத்திற்கெல்லாம் அவசியமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.
அவன் அவளை நடத்தும் விதம் அவ்வளவு பிடித்திருந்தது. ஆனாலும் பிடிக்காத வாழ்க்கையை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார், அவருக்கு ஏற்ற பெண் நான் இல்லை, அவர் எதிர் பார்த்தது போல நான் இல்லை போன்ற யோசனைகளும் அவளுள் இருந்தன.
கெளதம் குளித்து தலை துவட்டிக் கொண்டே வந்தான். அவன் வாங்கிக் கொடுத்திருந்த ஆடைக்கு மாறியிருந்தாள். மிகவும் கச்சிதமாக இருந்தது.
அவனை கண்டவள், “சரியா இருக்கா?” எனக் கேட்டாள்.
“அழகா இருக்க” என்றான்.
“இதெல்லாம் ஓகே, வேற போட்டுக்க சொன்னாலும் ட்ரை பண்றேன், எக்ஸ்போஸ் பண்ற மாதிரிலாம் போட சொல்லாதீங்க” என தன் பயத்தையும் வெளிப்படுத்தினாள்.
“ட்ரெஸிங் ஸ்டைல் மாத்தலாம்னு நினைச்சேன் யசோ, அதுக்காக ரொம்ப கற்பனை பண்ணாத. உன் கன்சென்ட் இல்லாம எதுக்கும் கம்பெல் பண்ண மாட்டேன்” என்றவன் நெருங்கி வந்து, “எக்ஸ்போஸ் பண்ற ட்ரெஸ் கூட போட்டுக்கலாம், என் முன்னால மட்டும்” என கண்களை சிமிட்டி சொன்னான்.
அவன் சொன்ன வேகத்திற்கு துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஓட ஆரம்பிக்கும் ரேஸ் குதிரை போல அங்கிருந்து ஓடிச் சென்று விட்டாள் அவள்.
‘அடேய் அடேய் சின்ன பொண்ணுடா, நீ சொல்றதே ஒழுங்கா புரியுதோ என்னவோ, அடங்குடா!’ என தன்னை தானே கண்டித்து கொண்டான் கெளதம்.
ஹால் சின்னது, சோஃபா உணவு மேசை இரண்டில் ஏதாவது ஒன்று வாங்கிக் கொள்ளலாம் என்ன வேண்டும் உனக்கு என சாப்பிடும் போது யசோவிடமே கேட்டான்.
இரண்டுமே இல்லாமல் கூட இருக்கலாம் என்றவளை செல்லமாக முறைத்தவன், “சோஃபா வாங்கலாமா? நீ நல்லா ஜம்முனு கால் நீட்டிட்டே உட்கார்ந்து ஸ்வெட்டர் போடலாம், படிக்கலாம், டிவி பார்க்கலாம். எதுவும் பிடிக்கலைனா அதுலேயே படுத்து தூங்கவும் செய்யலாம். என்ன?” எனக் கேட்டான்.
அவள் தலையாட்டிக் கொள்ள, அவன் கண்டனமாக பார்த்தான். உடனே தலையில் தட்டிக் கொண்டவள், “சரிங்க” என்றாள்.
“எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லாத யசோ, எதிர்த்து ஏதாவது பேசேன்”
“நீங்கதான் சோஃபான்னு முடிவு பண்ணிட்டீங்களே”
“அது நீ மாத்தி சொல்லு, நான் கன்வின்ஸ் பண்ணி உன்னை ஒத்துக்க வைக்கிறேன், உடனே சரின்னா சப்புன்னு போகுதுல?”
“அப்படி சும்மாவாலம் எதிர்த்து பேசக்கூடாது. சரின்னு பட்டா சரிதான். ஒரு சென்டர் டேபிள் வாங்கிக்கலாமா? சாப்பிடுற நேரத்துல யூஸ் ஆகும்” என்றாள்.
கட்டை விரலை உயர்த்திக் காட்டி சரி என்றான்.
நேற்று இரவே அண்ணனிடம் பேச அவனுக்கு அழைத்திருந்தான். பிஸியாக இருப்பதாக செய்தி அனுப்பியிருந்த கல்யாண் இப்போது தம்பிக்கு அழைத்தான்.
பரஸ்பர நலன் விசாரித்துக் கொண்டனர். யசோவை அழைத்து சென்றதில் தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான் கல்யாண்.
இப்போது அப்பா மாறியிருக்கிறார், அண்ணி மற்றும் பசங்களை அழைத்துக் கொண்டு நீ வீட்டுக்கு வா என அண்ணனிடம் சொன்னான் கெளதம்.
அவன் ஊருக்கு வந்து நான்கு வருடங்களாகி விட்டன. அம்மாவை பார்க்க ஆசைதான் என்றாலும் அப்பாவை எதிர்கொள்ள தயங்கினான்.
தான் திருச்சிக்கு வரும் சமயத்திலேயே நீயும் வா, நான் பார்த்துக் கொள்கிறேன் என கெளதம் தைரியம் சொன்னான். அவனும் ஒத்துக் கொண்டான்.
யசோவின் முன்னிலையில்தான் பேசியிருந்தான். அவளும் ‘வர ஒத்துக் கொண்டாரா மாமா?’ என கேட்டாள்.
“நாம போறப்போ வருவாங்க. நீதான் உன் மாமனாரை சமாளிக்கணும்” என்றான்.