ஆயிரத்தில் அவள் ஒருத்தி -9

அத்தியாயம் -9

அன்று சனிக்கிழமை, கடந்த வாரம் வெளியில் போகலாம் என திட்டமிட்டு முடியாமல் போனதால் இன்று எப்படியும் வெளியில் போகிறோம் என யசோவிடம் முதல் நாளிரவே சொல்லியிருந்தான் கெளதம்.

அவன் இன்னும் உறக்கத்தில் இருக்க, அவனை தொந்தரவு செய்து விடாமல் கவனமாகவே எழுந்தமர்ந்தாள்.  பெங்களூரு வந்த அடுத்த நாளிலிருந்து காலையில் இதுதான் அவளுக்கு பெரிய டாஸ்க்காக இருக்கிறது.

பொதுவாகவே அலுவலகத்திலிருந்து கெளதம் வீடு வர இரவில் எட்டு மணிக்கும் மேலாகி விடுகிறது, சில சமயம் இன்னும் கூட நேரமாகிறது. அவள் கவனித்த வரை காலை நேர உறக்கத்தை விரும்புகிறான்.

அவள் இறங்க முற்படுகையில் அவனது கால்கள் அவளின் மடிக்கு வந்து விட்டன.

மெல்ல அவனது பாதங்களை  பிடித்து அகற்றப் போனாள்.  கண் விழித்துக் கொண்டவன், “ஹையோ ஸாரி யசோ!” என பதறிக் கொண்டு எழுந்தான்.

“படுங்க படுங்க, தூக்கத்துல தெரியாம போட்டுட்டீங்க” என்றாள்.

நேரத்தை பார்த்தவன், “அஞ்சரைக்கே எந்திரிச்சு என்ன செய்ய போற, இன்னிக்கும் சீக்கிரம் எழுந்தா லீவ் நாளுக்கு என்ன மரியாதை இருக்கு? அதை விட நான் சரியான சோம்பேறி போலன்னு என்ன நினைக்க வச்சிடுவ போல, படு” என்றான்.

அவள் தயங்க, படுக்காமல் விட மாட்டேன் என்பது போல அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். வேறு வழியில்லாமல் வந்து படுத்து விட்டாள்.  படுத்த சில நிமிடங்களில் அவன் மீண்டும் உறங்கி விட, அவளுக்குத்தான் உறக்கம் வருவேனா என்றது.

எவ்வளவு நேரம் வெறுமனே படுத்திருப்பது. அரை மணி நேரம் சென்று மிகவும் கவனமாக படுக்கையிலிருந்து இறங்கிக் கொண்டு நெஞ்சில் கை வைத்து ஆசுவாசமானாள்.

எல்லா வேலைகளையும் முடித்து கடவுளை வணங்கி விட்டு சாப்பிடவும் செய்து விட்டாள்  யசோ. நேரம் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக அறைக் கதவை திறந்து எட்டிப் பார்த்தாள்.

விழித்துக் கொண்டே படுத்திருந்தவன் கையால் உள்ளே வர சொல்லி அழைத்தான்.

அவள் வரவும் படுக்கையை தட்டிக் காட்டி அமர சொன்னான். அவள் தயக்கத்தோடே அமர, “டிஃபன்… அப்புறம் மத்த எல்லா வேலையும் ஆச்சா?” எனக் கேட்டான்.

வேகமாக தலையாட்டியவள், “பூரியும் கிழங்கும் செய்து வச்சிருக்கேன், நான் கூட ரெடி ஆகிட்டேன், நீங்க எப்ப எழுந்திருப்பீங்கன்னு பார்த்திட்டு இருந்தேன்” என்றாள்.

 “ஒரு நாள் ரிலாக்ஸா இருக்கிறதுல என்ன பிரச்சனை உனக்கு? நாந்தான் வெளில சாப்பிட்டுக்கலாம்னு  சொல்லியிருந்தேன்ல?”என்றான்.

“நான் சத்தம் செய்யாமதான் கிளம்பினேன்,  டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“அதில்ல யசோ. நான் உன்னை சாதாரணமா கேட்கிறேன், ஏன் இன்னிக்கும் சீக்கிரம் எழுந்து எல்லாம் செய்ற? போன வீக் எண்ட் கூட இப்படித்தான் பண்ணின”

“அது பழகி போயிடுச்சுங்க”

“இனிமே லீவ் நாள்ல குறைஞ்சது ஏழு மணி வரைக்கும் தூங்குற, அதிகபட்ச டைம் உன் இஷ்டம்”

“பன்னெண்டு  மணி வரைக்கும் தூங்கினா கூட உங்களுக்கு ஓகேவா?”

“ஒரு மணி வரைக்கும் கூட ஓகே”

“நல்ல பழக்கத்தை மாத்த பாக்காதீங்க. எனக்கு காலைல சீக்கிரம் எழுந்துக்கணும், நைட் நேரத்தோட தூங்கணும்”

“ம்ம்… உங்க கொள்கையை வீக் எண்ட்ல மட்டும் தளர்த்திக்கோங்க தங்க மயிலு” எனவும் அவனது தங்க மயிலில் விழித்தாள்.

“இதுதான் வெளில போக போட்ருக்க ட்ரெஸா?” அவளது தொள தொள சுடிதாரை சுட்டிக் காட்டி கேட்டான்.

“ஏன் நல்லாயில்லையா?”

“எல்லா சுடியும் இப்படித்தான் லூசா வச்சிருக்க” என்றான்.

“புடவையெல்லாம் சுமாராதான் கட்ட வரும். வெளில போனா மேனேஜ் பண்ண சிரமமா இருக்கும்” என்றாள்.

“புடவை சுடிதார் தவிர வேறென்ன வச்சிருக்க?” என அவன் கேட்க, எதுவுமில்லை என மறுப்பாக தலையாட்டினாள்.

“வாங்கிக் கொடுத்தா போட்டுப்பியா? இல்லை சரியா வராது, நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறதுன்னு சொல்வியா?” என அவன் கேட்க, எழுந்து செல்ல எத்தனித்தாள். அவன் விடவில்லை.

“உனக்கு இப்படித்தான் பிடிச்சிருக்குன்னா பரவாயில்லை, சொல்லி தர யாருமில்லாம இப்படித்தான்னு நீயா நினைச்சு போட்டுட்டு இருக்க. நான் சொன்னா கேட்டுக்க மாட்டியா?”

“அத் நல்ல விதமா சொல்லணும், குதர்க்கமா சொன்னா கோவம் வராதா?”

“குதர்க்கமா? எதையும் யோசிக்காம பேசுறேன் யசோ, தப்பா அர்த்தம் கண்டுபிடிக்காத. தப்புன்னு தோணினா டக்குனு சொல்லிடு. அப்பப்ப மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ்  அப்பப்ப கதம் கதம், என்ன? இப்ப என் ஆஃபிஸ் பேக் உள்ள இன்னொரு பேக் இருக்கும், எடுத்திட்டு வா” என சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

இரண்டு டாப் மற்றும் லெக்கிங்ஸ் இருந்தது. எடுத்துக் கொண்டு அவனிடம் வந்து நின்றாள்.

“குத்துமதிப்பா வாங்கியிருக்கேன், அளவு சரியா இருக்கான்னு பாரு. கடைக்கு போய் உனக்கு பிடிச்சா மாதிரி வாங்கிக்கலாம்” என்றான்.

சரி என அவள் சொல்லவும், “இப்ப ஸ்ட்ராங்கா ஒரு பெட் காஃபி ப்ளீஸ்…” என்றான்.

“பிரஷ் பண்ணுங்க, இதோ போடுறேன்” என்றாள்.

“பெட் காஃபினா பெட்லேருந்து  எழறதுக்கு முன்னாடி சாப்பிடறது”

“ஐய!” என முகம் சுளித்தாள்.

“வீக் எண்ட் யசோ”

“இதெல்லாம் அத்தை சொன்னது இல்லை”

“உங்கத்தை கேட்டாலும் தர மாட்டாங்க, அதனால கேட்க மாட்டேன்.  அம்மா நினைச்சிட்டு இருக்காங்க என்னை பத்தி எல்லாம் தெரியும்னு, தெரியாத விஷயத்துல ஒன்னு இந்த பெட் காஃபி. எப்போவாவது குடிப்பேன், ஓடு ஓடு… ஆவி பறக்க காஃபி எடுத்திட்டு வருவியாம்”

“அப்படி சாப்பிட கூடாதுங்க, நல்லது இல்லை. மாத்திக்கோங்களேன்…” என தயங்கி தயங்கி சொன்னாள்.

அவள் அப்படி கேட்ட விதமே அவனுக்கு மறுக்க தோன்றவில்லை.

ஆனால் எளிதாக சரி என சொல்லாமல், “சும்மாலாம் ஒரு விஷயத்தை மாத்திக்க முடியாது. ம்ம்ம்… என்ன செய்யலாம்…” சுற்றிலும் பார்த்தவன், “ரெண்டு நிமிஷம்தான் உனக்கு டைம், என்னை பெட்லேருந்து இறக்கி விடு, செஞ்சிட்டா இனிமே நோ பெட் காஃபி” என்றான்.

முதலில் விழித்தாள், சங்கடமாக அவனை பார்த்தாள். அவளது பாவனை அனைத்தையும் ரசித்து பார்த்தான். சின்ன குழந்தைகளிடம் குறும்பு செய்யும் மனோபாவம்தான் அவனிடம்.

இடையூறாக  இருக்க வேண்டாம் என சுடிதாரின் துப்பட்டாவை விலக்கி வைத்தவள் அவனது வலது கையை தன்னிரு கைகளையும் கொண்டு பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுத்து அவனை எழுப்ப முயன்றாள்.

அவனோ தன் பலத்தை பிரயோகித்து அவளை தன் பக்கம் இழுத்தான்.

கண்களை இறுக மூடிக் கொண்டவள் பாதங்களை தரையில் அழுந்த ஊன்றி, பற்களை கடித்துக் கொண்டு அவனை இழுத்தாள்.

அவன் எதிர் பார்க்காத வகையில் இருந்தது அவளின் திடம். இவளிடம் தோற்பதா என வீம்பு பிறக்க அவனும் இன்னோரு கையால் கட்டிலின் தலை மாட்டை பிடித்துக்கொண்டு எழ மறுத்தான்.

லேசாக மூச்சு வாங்க கண்களை திறந்து பார்த்தாள்.

“இன்னிக்கு பெட் காஃபி குடிக்கிறேனா இல்லையா பாரு” என கிண்டலாக கூறி சிரித்தான்.

அவனை முறைப்பாக பார்த்தவள் சட்டென தன் பிடியில் இருந்த அவனது கையை கடித்து விட்டாள். அலறிக் கொண்டு எழுந்து விட்டான் கெளதம்.

எங்கே திட்டு விழுமோ என பயந்தவள் அச்சத்தோடு பின்னால் நகர்ந்து அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.

கையை உதறிக் கொண்டவன், “ஆளும் பல்லும் ரொம்ப ஷார்ப்புதான்” என்றான்.

அவள் தலை குனிந்த படியே புன்னகைக்க, “இன்னிக்கு ஜெயிச்சிட்டதா நினைக்காத. நாளைக்கு கண்டிப்பா உன் கையால பெட் காஃபி குடிப்பேன்” என சொல்லிக் கொண்டே குளியலறை செல்ல நடந்தான்.

“எப்பவும் பெட் காஃபி வேணாம்னுதானே பேச்சு?” எனக் கேட்டாள்.

“அப்படியா சொன்னேன், இல்லியே”

“இல்லையில்லை, அந்த அர்த்தத்துலதான் சொன்னீங்க”

“நீதான் யசோ தப்பா புரிஞ்சிட்டிருப்ப. இன்னியோட பெட் காஃபிக்குத்தான்  இன்னிக்கு கொடுத்த டாஸ்க். நாளைக்கு வேற பிளான் பண்ணி எப்படி உன்னை கவுக்குறேன்னு பாரு” என அவன் சொல்ல, அவளோ அதிராமல் ‘எதற்கும் தயார்’ என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.

“பாருடா! ஸாஃப்ட் மொச குட்டி மொரட்டு பைசன் குட்டி ஆகுறதை” என கிண்டல் செய்து கொண்டேதான் சென்றான்.