அத்தியாயம் – 9 

சனிக்கிழமை மதியமே ஷீத்தல் அழைப்பின் பேரில் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள் கீர்த்தி. சொதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை பேசிக்கொண்டே ஆரம்பித்தனர். கீர்த்தியின் குக்கர், ஷீத்தலின் குக்கர் என்று இரண்டையும் சேர்த்து வைத்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது. 

ஓரிருவர் என்றால் சமைக்கக்கூடிய அளவில் பாத்திரங்களை வைத்திருந்தார்கள். இப்படி இருபது பேருக்கும் மேலாக செய்ய வேண்டி வரவும் பெரிய பாத்திரங்களில்லாது திண்டாட்டம். 

“வில்லியம்ஸ் சார் அவர் ஸ்டவ் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டார் கீர்த்தி. ஜென்சிகிட்ட எலக்ட்ரிக் ஸ்டவ் ஒன்னு இருக்காம். இரண்டும் வெச்சா, கல்யாண வீட்டு பஃபேல வெக்கற தோசா பாயின்ட் மாதிரி நாம ஒரு ஆப்பம் பாயின்ட் போடலாம்”, காய்களோடு குக்கரை ஏற்றி வைத்தப்படி ஷீத்தல் பேசிக்கொண்டிருந்தாள். 

“ஜோசஃப் சாருக்கு சொதி வேணும்னா நீ அவர் வரைக்கும் செஞ்சு தர வேண்டியதுதான ஷீத்தல்? எதுக்கு பார்ட்டிக்கு பண்ண ஒத்துக்கிட்ட? இதுல என்னை வேற ஆப்பத்துக்கு கோர்த்து விட்டிருக்க. எதோ இரண்டு குலாப்ஜாமூன் பாக்கெட்ட வாங்கி முன்னாள் செஞ்சு ஃப்ரிட்ஜ்ல தூக்கி போட்டிருந்தா, நான் பாட்டு ஃப்ரீயா இருந்திருப்பேன்”, புலம்பியபடியே தேங்காய் பாலை பிழிந்து கொண்டிருந்தாள் கீர்த்தி. 

“அவர் ஆர்டர் பண்ற சப்பாத்திக்கு கூட சொதி தொட்டுக்கலாம்தான், ஆனா ஆப்பம் செம்ம காம்பினேஷன் கீர்த்தி, சொன்னதுமே, ஓஹ் பண்ண முடியுமான்னு கேட்டாரா…”, ஷீத்தல் இழுக்க, 

பல்லைக் கடித்தவள், “மண்டையை ஆட்டிட்டு வந்து, அப்பறமா இவ்வளவு வேலையும் எப்படி ஒருத்தியா பார்க்கறதுன்னு ஏமாளி என்னை இழுத்துவிட்ட அதான?” 

“ஏ…அதுக்கு மட்டுமில்லை கீர்த்தி. மேடம் டெய்லருக்கு நம்ம இந்திய சாப்பாடு ரொம்ப பிடிக்கும் இல்ல? அதுதான் கொஞ்சம் வித்தியாசமா தரலாமேன்னு  ஜோ சர் கேட்கவும்தான் தோணுச்சு”, கொஞ்சம் சுருதி குறைந்து பேசினாள் ஷீத்தல். 

“சரி சரி… அதுதான் பண்றமே, அப்பறம் ஏன் சோக கீதம்?”, என்று அடுத்த வேலையை தொடர்ந்தாள். 

“நான் என் லைட் ப்ளூ சல்வார் போடப் போறேன் கீர்த்தி. நீ என்ன போடற?” 

“ம்ம்… கைல கிடைக்கறதை போடப் போறேன்”, என்று சொல்லும்போதே ஜோவிடமும் சொல்லியிருப்பாளா? அவனும் அதே கலரில் உடை அணிந்து வருவானா என்று தோன்றியது. ஆனால் ஷீத்தலிடம் கேட்கவும் கௌரவம் விடவில்லை. கோலாபூரி செருப்பு மட்டும் போட்டுட்டு வரட்டும் பார்த்துக்கறேன் என்று கறுவினாள். 

ஆறு மணி அளவில் பஃபே மேசையின் ஒரு பக்கம் ஜென்சி மேற்பார்வையில் ஆப்பம் பாயிண்ட் ரெடி ஆனது. இரண்டு குட்டி கடாய்கள் ஆப்ப சட்டிக்கு பதிலாக அமர்ந்திருந்தது. ஆப்ப மாவு, கரண்டி, எண்ணெய் என்று கைக்கெட்டும் தூரத்தில் அமைத்தாள் கீர்த்தி. ட்ரையல் பார்க்க, இரண்டு கடாய்களிலும் ஆப்பம் ஊற்றி வைத்தாள். 

முதல் ஆப்பம் சற்று கேவலமாக வர, தட்டில் வைத்தாள். “இரு நான் போய் சொதி போட்டு கொண்டு வரேன். ஒரு ரவுண்ட் சாப்பிட்டு வெப்போம். அப்பதான் கொஞ்சம் தெம்பா கூட்டத்துக்கு ஊத்தி குடுத்துட்டு அப்பறமா சாப்பிட முடியும்”, என்று ஷீத்தல் சென்று வந்தாள். 

ஆட்கள் வரத் துவங்க, குளிர் பானங்களோடு பேச்சும் கதைகளும் ஓட ஆரம்பித்தது. ஜோ இன்னும் வரவில்லை.  கேட்க மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு இருந்தாள் கீர்த்தி. 

மேடம் டெய்லர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்னர் அரக்க பரக்க வந்தான். அவனும் நீல கலர் சட்டை அணிந்திருந்தான். அவளை விட சற்று அடர் நீலம். அடுத்து காலைப் பார்த்தாள், ஜீன்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டிருந்தான். ‘நல்லது’ என்று நினைத்து முடிக்கவில்லை, அதற்குள் ஷீத்தல் வேகமாகச் சென்று அவன் கையில் இருந்த பார்சலை வாங்கி மேசையில் வைத்து, அவனுக்கு சில்லென்று ஃபாண்டா ஊற்றி கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு இனிய புன்னகையுடன் வாங்கிக்கொள்ள, ஆதை பார்த்திருந்த கீர்த்திக்குதான் வயிறு காந்தியது. 

மேடம் வந்து, கேக் வெட்டி கொண்டாடி முடித்து, உணவு நேரம் தொடங்கியது. ஆப்பம் வேண்டி சிலர் நிற்க ஆரம்பித்தனர். கீர்த்தி ஒரு ஸ்டவ் முன்னரும், ஷீத்தல் மற்றொன்றின் முன்னும் நின்றபடி ஊற்ற ஆரம்பித்திருந்தனர். 

சற்று நேரம் கழித்து, ஜோ அவர்கள் அருகில் வந்தான். ஷீத்தல் புறம் நின்று “ஆப்பம் கிடைக்குமா?” என்று நின்று அது வேகும் வரையிலும் ஷீத்தல் பக்கமே நின்று சன்னக் குரலில் பேசிக்கொண்டிருந்தான்.  

அவள் புறம் ஒரு ஆப்பம் முடித்து தட்டிற்கு வந்தபின்பும் அதை எடுக்கவில்லை. வில்லியம்ஸ் வந்து கேட்கவும், “ப்ளீஸ் நீ எடுத்துக்கோ. ஷீத்தலோடது இப்ப ரெடியாகும். நான் எடுத்துக்கறேன்”, என்று பெரிய மனது பண்ணி விட்டுக்கொடுத்தான். 

அவனை முறைத்துவிட்டு அடுத்தது வார்த்தாள். அப்போது சென்றவன், மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து அடுத்தது வேண்டும் என்று வந்து நின்றான். இவள் புறம் இருந்ததை எடுக்க, “நீ சுட்டுதா ஷீத்தல்”, என்று புன்னகைத்தான். “பாவம் நீ, ஸ்டவ் பக்கத்துலேயே நிக்கற. கொஞ்சம் டிமாண்ட் குறையவும், அந்த பக்கம் வா. அப்பறமா நீ இங்க வந்ததும் கீர்த்தி  ரெலீஃப் ஆகிக்கட்டும்” 

தோசை திருப்பியினாலேயே நாலு போடலாம் என்று கோவம் வந்தது கீர்த்திக்கு. “சார் ரொம்ப சீண்டாதீங்க சார். சட்டிய தூக்கி என் மண்டைய பிளக்கப் போறா! ஆப்ப சட்டிய விட சூடா இருக்கா”, அவன் புறம் திரும்பி மென் குரலில் கெஞ்சினாள் ஷீத்தல். 

என்னவோ இவளுக்குத் தெரியாமல் கொஞ்சுவது போல தோன்றவும் மேலும் முகம் இருண்டாள் கீர்த்தி. அந்த நேரம் மேடம் டெய்லர் வரவும் அவர் புறம் கவனம் திருப்பினார்கள். 

புது தென்னிந்திய வகை உணவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கூறிக்கொண்டிருந்தார் மேடம். உள்ளே புகுந்த ஜோ, ஷீத்தல் ஊரின் மிகப் பிரபலமான டிஷ் என்று சொதியை பற்றியும், அவள் செய்தது அமிர்ந்தமாக இருக்கிறது என்று சிலாகித்து பேசிக்கொண்டிருந்தான். மாவை கடையில் வாங்கியிருந்தாலும், அதை லாவகமாக ஊற்றிக்கொடுக்கும் கீர்த்தியை பற்றி ஒரு வார்த்தை ஒரு முகஸ்துதிக்காகக் கூட பேசவில்லை. 

மேடம் சென்றதும் மீண்டும் வந்து ஷீத்தலிடம் ஆப்பத்தை வாங்கிக்கொண்டவன், கையோடு, “நீயும் ரெடியா இருக்க ஒரு ஆப்பத்தை எடுத்துகிட்டு வா ஷீத்தல்,  பீட்சாவும் , டெசர்ட்க்கு சாக்லேட் ப்ரவுனி எடுத்துட்டு வந்திருக்காங்க ஜான் வைஃப். செம்மையா இருக்கு. காலியாகறதுக்கு முன்ன வா”, என்று அழைத்துக்கொண்டு போனான். 

தன்னை இப்படி ஒதுக்கும் அளவிற்கு என்ன செய்துவிட்டோம்? அவள்தான் உசத்தி நான் மட்டம் என்பது போல நடக்க வேண்டுமா? இந்த ஷீத்தலும் அவன் பின்னாடியே போறாளே? அடுத்த முறை உதவி என்று வரட்டும் ராஸ்கல் என்று தாளித்துக்கொண்டிருந்தவள், ஸ்டவ்வை அணைக்கும்  நேரம், எனக்கு ஒன்று கிடைக்குமா என்று வணிகவியல் வாத்தி ஷர்மா வர, ஒட்ட வைத்த புன்னகையோடு ஆப்பத்தை ஊற்றினாள் கீர்த்தி. 

“ஜோ சார், பாவம் கீர்த்தி. ஏன் இப்படி கஷ்டப்படுத்தறீங்க?”, என்று நண்பிக்காக வாதாடிக்கொண்டிருந்தாள் ஷீத்தல். 

ஒரு வருத்தப் புன்னகை சிந்தியவன், “எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா என்ன?”, என்று கேட்க, 

“ஆமாமாம், நாலு ஆப்பம் உள்ள தள்ற அளவுக்கு கஷ்டம்”, என்று கிண்டல் செய்தாள் ஷீத்தல். 

“என் கீர்த்தி ஊத்தினது சாப்பிட்டிருந்தா பத்து ஆப்பம் உள்ள போயிருக்கும். நீ சுடவும் நாலே கஷ்டப்பட்டு சாப்பிடேன்”, என்று அவளை ஓட்டினான். 

தன் பங்கு ப்ரவுனி கேக்கையும் அவளிடமே தந்து, “அவளை வெறுப்பேத்திட்டு என்னால சாப்பிட முடியாது. அவகிட்ட வாங்கற திட்டுக்கு ஆறுதலா  நீயே சாப்பிடு என்று தர, தூர இருந்து பார்த்தவளுக்கு, என்னவோ ஒரு துண்டை இருவரும் பங்கு போட்டுக்கொண்டிருப்பது போல தோன்ற சுள்ளென்று கோவம் தலைக்கேறியது. அடுப்பை அணைத்தவள், வேகமாக அங்கிருந்து அகல, அவள் செல்வதைக் கண்ட இருவரும் அவளை தொடர்ந்தனர். 

காரிடாரில் வேகமாக சென்றவளை ஷீத்தல் “கீர்த்தி… எங்க போற…”, என்று குரல் தர, திரும்பிய கீர்த்தி கண்டது ஷீத்தலையும் அவள் பின்னே வேகமாக வந்ததில் மோதி நின்ற ஜோவையும்தான். 

எச்சரிப்பது போல் ஒரு விரல் நீட்டியவள், “அவ்வளவுதான் உனக்கு மரியாதை. போயிடு”, என்று சீறினாள். 

ஷீத்தலை தாண்டி அவள் முன் வந்து நின்றான் ஜோ. “என் மேல இருக்கற கோவத்தை எதுக்கு அவ மேல காட்டற கீர்த்தி? அவ என்ன தப்பு பண்ணா?” என்று கேட்கவும், முகம் கசங்கிய கீர்த்தி, “ஹ்ம்.. அவ தப்பில்லை. நீ தப்பில்லை.  நாந்தான். எல்லாமே என் தப்புதான். போதுமா”, இரு கைகளையும் அடித்து கும்பிடு போட்டவள், “நீ கேக்கை பிச்சுகுடு… ஊட்டி  விடு…”, என்றவள், “ஏய்…இன்னொரு வாட்டி ஜோ சார்ன்னு வந்துடாத எங்கிட்ட”, என்று பின்னாலிருந்து எட்டிப் பார்த்த ஷீத்தலிடம் உறுமிவிட்டு பக்கத்திலிருந்த அறைக்குள் சென்று கதவை படாரென்று சாற்றினாள். 

“ஜோ சார்…. “ , பயந்து  நின்ற ஷீத்தலிடம், “நீ உள்ளே போ ஷீத்தல், யாராவது கேட்டா, அவளுக்கு தலை வலி, வீட்டுக்கு கொண்டு போய் விட, கூட நான் போயிருக்கேன்னு சொல்லி சமாளி. கீர்த்தியை நான் பார்த்துக்கறேன்”, என்று தைரியம் கூறி அனுப்பினான். ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்து விட்டு  நிதானப்படுத்திக் கொண்டவன், கதவை திறந்து உள்ளே செல்ல, அவனை நோக்கி பாஸ்கெட் பால்  ஒன்று  பறந்து வந்தது. ஜோ சட்டென்று விலக கதவில் பட்டு திரும்பி விழுந்தது. 

அடுத்து எதை எடுத்து வீசுவது என்று பார்த்திருந்தவள் கையில் பேஸ்பால் மட்டை படவும் அதை தூக்கியிருந்தாள். 

“கீர்த்தி… பாட்டை கீழ போடு!”, என்ற அவன் அழுத்தமான குரலில் இன்னும் வெகுண்டாள். மட்டையை லேசாக ஒரு கையால் சுழற்றி… “எதுக்கு? இன்னிக்கு உன்னை அடிச்சு உடைக்கப்போறேன்” என்று கடித்து துப்பினாள். கோவத்தில் முகமே சிவந்திருந்தது. 

“ஹாஸ்பிட்டல்ல சேர்ந்தா, இன்னும் நெருக்கமா ஷீத்தல் என்னை கவனிச்சிப்பா. நீதான் இந்த ஊர்  ஜெயிலுக்கு போவ. அதுதான் வேணுமா?” 

“எட்டி வந்தவள் பாட்டை போட்டு அவன் சட்டையை கொத்தாகப் பிடித்து, நீ… நீதான் வேணும். உனக்கெல்லாம் பரிதாபப்பட்டேன் பாரு. என்னை சொல்லணும். நான் கைகாட்டினா, உடனே அவகூட லாலி பாடுவியா நீ? கொன்னு புதைச்சிடுவேன்.” குரலில் இரௌத்திரம் தெரித்தது.