அவளின் அழுகையை நிறுத்தும் அந்த போராட்டம் அவனது மனதை கரைய விட, மென்மையாக தன்னோடு அணைத்துக் கொண்டான்.
வேகமெடுத்து விட்டது அவளின் அழுகை. வெகு காலமாக அடக்கி வைக்கப் பட்டிருந்தது அத்தனை எளிதில் நின்று விடுமா என்ன?
டன் டன்னாக பொதி சுமந்தவளை சிறு மயிலிறகு வருடப் போய், அதை தாள முடியாமல் சுமைகளை தள்ளி விட்ட கதையானது அவளின் நிலை.
‘செல்லம்மா’ என்ற அவனது ஒற்றை அழைப்பு அவளின் சுமைகளை தள்ளி விட வைத்து விட்டது.
“சரி சரி போதும்” என்றான் கெளதம்.
அவன் மார்பில் சாய்ந்திருப்பது உணர்ந்து தள்ளி அமர்ந்தவள், இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள். அதற்குள் இமைகள் வீங்கி விட்டன.
“முகம் கழுவிட்டு வா, கேரம் கன்டினியூ பண்ணலாம்” என அழைத்தான்.
தனிமை வேண்டுமாக இருந்தது அவளுக்கு. இப்போது இயல்பாக விளையாட முடியும் எனவும் அவளுக்கு தோன்றவில்லை. அவள் சொல்லவும் சரியென வெளியேறி விட்டான்.
தியாகுவுக்கு அழைத்து வர சொன்னான். இருவருக்குமே ஸ்ட்ரெஸ் பஸ்டர் இந்த கேரம் விளையாட்டுதான். யசோ எங்கே என கேட்ட நண்பனிடம் உறங்குவதாக சொல்லி விட்டான்.
கௌதமால் விளையாட்டில் ஒன்ற முடியவில்லை. அறைப் பக்கம் அடிக்கடி பார்த்தான். இருடா வர்றேன் என சொல்லி இரண்டு முறை அவளை பார்த்து வந்தான். அவள் உறங்கிக் கொண்டுதான் இருந்தாள்.
“என்னடா விஷயம்? யசோ கூட சண்டையா?” என சந்தேகமாக கேட்டான் தியாகு.
“உனக்கு என் அப்பாக்கெல்லாம் என்னை பத்தி நல்லதாவே நினைக்க வராதாடா?” எனக் கேட்ட கெளதம் நடந்ததை சொன்னான்.
தியாகுவுக்கும் வருத்தமாகி விட்டது.
“பதினோரு வயசுலேருந்து சேர்த்து வச்ச அழுகைடா. வேதனையை எல்லார்கிட்டேயும் சொல்லி அழ முடியாது. உன்கிட்ட சொல்லி அழுதுச்சுன்னா உன்னை எப்படி நினைக்குதுன்னு புரிஞ்சுக்க. நீயாவது அழ விடாம பார்த்துக்கணும் யசோவை” என கட்டளையாக முடித்தான் தியாகு.
“அடேயப்பா சாமி! ஏற்கனவே ஒரு உடன்பிறப்பு இருக்கான்டா அவளுக்கு. ஏதோ மனசு வச்சு என் கூட அனுப்பி வச்சிருக்கான். நீ அவ கூட பொறக்காமலே எனக்கு மச்சான் ஆகிட்டியா? இப்படி செய் அப்படி செய்னு ஆர்டரை பாரு! நான் பாவம்டா” என்றான் கெளதம்.
“யசோவுக்காவது ஒரே ஒரு சின்ன தம்பி, மைதிலிக்கு ரெண்டும் அண்ணனுங்க. அவ வீட்ல ஒரே பொண்ணு வேற, என் நிலைமைய நினைச்சி பார்த்தியா? என் மகன் பொறந்து மூனு மாசத்துக்கு மேல ஆச்சே, அனுப்பி வைங்கடான்னா குளிர் ஒத்துக்காது ஆறு மாசம் போகட்டுமாம். விட்டா என் புள்ளைக்கு முத பொறந்த நாள் கொண்டாடிட்டுத்தான் என்கிட்ட அனுப்பி விடுவாய்ங்க போல” என தியாகு புலம்ப, கௌதமுக்கு ஒரே சிரிப்பு.
யசோ உறங்கி எழுந்து தெளிந்து வரும் போதும் நண்பர்கள் இருவரும் கேரம்தான் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மழை இன்னுமே விட்டிருக்கவில்லை. “வாங்கண்ணா” என தியாகுவை அழைத்தவள் தேநீர், வெங்காய போண்டா என அந்த மழை நேரத்தை சுவையாக்கினாள்.
தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு இரண்டு மூன்று முறை அவளை விளையாட வைத்தான் கெளதம். அவள் போதுமென சொல்லி விட்டாள்.
நண்பர்கள் இருவரும் வெறித்தனமாக விளையாடினார்கள். வேடிக்கை பார்த்தாள் யசோ. கெளதம் வெற்றி பெற்று விட்டுத்தான் ஓய்ந்தான்.
மைதிலியை காணொளி அழைப்பில் வரச் செய்து யசோவிடம் பேச வைத்தான் தியாகு. நன்றாக பேசினாள். தன் நான்கு மாத மகனை யசோவுக்கு காட்டினாள்.
அடுத்த மாதம் வந்து விடுவேன் என்றாள். யசோவுக்கு மைதிலியை மிகவும் பிடித்தது. அவள் வருவதற்குள் குழந்தைக்கு ஸ்வெட்டர் போட்டு வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
அடுத்து ஹாலை இருட்டாக்கி விட்டு கதற கதற தரமான ஹாலிவுட் பேய் படம். யசோநிஜமாகபயந்துவிட்டாள். நான்போகிறேன்எனஅவள்சொல்லியும்வம்படியாகஅந்தபடத்தைபார்க்கவைத்தனர்நண்பர்கள்இருவரும்.
மதியம்செய்த உணவே மிச்சமிருக்க, தோசை மட்டும் ஊற்றினாள் யசோ. தியாகுவும் அங்கேயே சாப்பிட்டு விட்டு கிளம்பினான். அவர்களும் சற்று நேரத்தில் படுத்து விட்டனர்.
நடு இரவில் அனத்த ஆரம்பித்து விட்டாள் யசோ. பயந்து போன கெளதம் காய்ச்சல் இருக்கிறதா என பார்த்தான், நன்றாகத்தான் இருந்தாள்.
அவளை எழுப்பி விட்டவன், “கனவு ஏதோ கண்டிருக்க போல யசோ, ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்து படு” என்றான்.
அவள் சென்று வரவும், “தினம் காலைல சொல்றியே ஸ்லோகம், அதுல ஏதாவது சொல்லு கேட்போம்” என்றான்.
நேரம் இரண்டு ஆகியிருக்க, அவனை ஒரு மாதிரி பார்த்தாள். சொல்லு என அவன் அதட்டவும் சொன்னாள்.
“இப்ப வந்து படு, இவ்ளோ பயந்தாங்குளின்னு எனக்கு தெரியாம போச்சு” என்றான்.
படுத்துக் கொண்டவள் நான் உறங்கும் வரை மின் விளக்கை அணைக்க வேண்டாம் என்றாள். முறைத்தாலும் அவள் சொன்ன படியே செய்தான்.
காலையில் யசோவின் முகம் வெளிறிக் கிடந்தது.
தாமதமாக எழுந்த கெளதம் அவளை கண்டு விட்டு அதிர்ந்து போய் விட்டான்.
“நிஜமா பேய் அடிச்ச மாதிரி இருக்க நீ” என்றான்.
“இனிமே இப்படிலாம் பேய் படம் காட்டாதீங்க” என கண்டிப்போடு சொன்னாள்.
சிரித்துக் கொண்டே சரி என்றான். அன்றும் மழை. தியாகுவின் காரில் வெளியில் போகலாமா எனக் கேட்டான். அவன் கேட்ட தொனியே அவனுக்கு வெளியில் போகும் மனநிலை இல்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது.
“அவ்ளோ அவசரமா வாங்க ஏதுமில்லை, அப்புறம் பார்த்துக்கலாம்” என சொல்லி விட்டாள்.
சாப்பிட்டதும் உறங்க செல்வதாக சொல்லி தியாகு சென்று விட்டான்.
“நல்ல ரொமான்டிக் மூவி பார்க்கலாம் யசோ” என அழைத்தான் கெளதம்.
அவள் கையெடுத்து கும்பிட, “நிஜமா பயப்படுற மாதிரி ஏதும் இருக்காது யசோ. நல்லாருக்கும்னு ரிவ்யூ போட்ருக்கு” என்றான்.
ஏதோ தமிழ்ப்படம் என அவள் நினைத்திருக்க ஆங்கில படம். படத்தில் பேசப்பட்ட ஆங்கிலம் அவளுக்கு புரியா விட்டாலும் படம் புரியவே செய்தது. ரசனையான வசனங்கள் வரும் போது படத்தை பாஸ் செய்து விட்டு அவனே அவளுக்கு விளக்கமும் சொன்னான்.
சற்று நேரத்தில் அவளும் படத்தோடு ஒன்றி விட்டாள். விரசமான காட்சிகள் இல்லையென்றாலும் நாயகன் நாயகி அதிக நெருக்கம் காட்டியிருந்தார்கள். அவள் நெளிய ஆரம்பித்து விட்டாள்.
அவளது தலையில் செல்லமாக தட்டியவன், “ஓடு, போய் தூங்கு இல்லை வேற ஏதாவது செய், கம்பெனி கொடுப்பேன்னு கூப்பிட்டா நான் ஏதோ தப்பு பண்றேன் ஃபீல் தர்ற” என்றான்.
“இல்லையில்ல இருக்கேன்” என்றாள்.
படத்தின் ஒரு காதல் காட்சியில் கௌதம்க்கே தோன்றி விட்டது, இவள் வெட்கப்படுவாள் என. அவன் நினைத்தது போல தலையை குனிந்து கொண்டு சங்கடமாகத்தான் அமர்ந்திருந்தாள்.
டிவியை அணைத்து விட்டான். அவள் அவனை பார்க்க, என்னவென புருவங்கள் உயர்த்தி கேட்டான்.
“நீயும் பார்க்கிறதா இருந்தா பார்க்கலாம். சாதாரண மூவி, பதினாறு வயசுக்கு மேல உள்ளவங்க பார்க்கலாம்னு செர்டிஃபிகேட் கொடுத்திருக்க படம். அதை பார்க்க என்ன கஷ்டம் உனக்கு?” எனக் கேட்டான்.
“பழகிக்கிறேன்” என்றாள்.
“எப்போ?” என அவன் கேட்க, பாவமாக பார்த்தாள்.
அவள் தலையில் கை வைத்து ஆட்டியவன், “நீ டீ போட்டு எடுத்திட்டு வா” என சொல்லி அனுப்பி வைத்து விட்டான்.
அவள் தேநீரோடு வரும் போது படம் முடிவை நெருங்கி விட்டது. சோகமான முடிவு. நாயகன் இறந்து போய் விடுகிறான். யசோவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“இதுக்கு நேத்து காட்டின பேய் படமே பரவாயில்லை” என அவனை கடிந்து கொண்டாள்.
“இப்படி ரெண்டு பேரையும் பிரிக்க எப்படித்தான் மனசு வந்துச்சோ அந்த டைரக்டருக்கு? புடிச்சவங்க போனதும் இருக்கிறவங்க நிலைமை எவ்ளோ மோசமாகுது. வெறும் நினைப்ப மட்டும் வச்சு எப்படி வாழ முடியும்?” கண்கள் கலங்க கோவப்பட்டாள்.
“வேற என்ன செய்ய முடியும்? இதெல்லாம் படத்துக்கு ஓகே. நிஜத்துல அப்படி ஆனா வேற கல்யாணம் பண்ணிக்கிறதுதான் கரெக்ட் முடிவு” என்றான்.
பாதி குடித்திருந்த தேநீர் டம்ளரை அங்கேயே வைத்து விட்டு பால்கனியில் போய் நின்று கொண்டாள்.
என்னவானது இவளுக்கு என யோசனை செய்து கொண்டே அவளிடம் சென்றான். அவளின் பின்னால் நின்று அவளது தோளில் முகம் வைத்துக் கொண்டவன், “இப்ப என்னாச்சாம் இந்த பட்டு ரோஜாக்கு?” எனக் கேட்டான்.
வேதனையாக சிரித்தவள், “என் அம்மாவும் அப்பாவும் இருந்திருக்கலாம்ல? அப்பயி தாத்தான்னு யாருமே என் கூட இல்லை இப்போ, ஏன்?” எனக் கேட்டாள்.
“எல்லாரும் என்னை பார்த்துக்க சொல்லிட்டாங்க யசோ” என அவன் சொல்ல, முகத்தை அவனை பார்க்க திருப்பினாள்.
இருவரின் விழிகளும் நெருக்கத்தில் ஆழமாக பார்த்துக் கொண்டன.
“அந்த படத்தோட முடிவு நிஜத்துல யாருக்கும் வரக்கூடாது” என்றாள்.
“அந்த படத்தையும் நம்மளையும் கனெக்ட் பார்த்தியா யசோ?” என சரியாக கேட்டான்.
பதில் சொல்லாமல் அப்படித்தான் என அவனுக்கு உணர்த்தினாள்.
“அப்படிலாம் பாதில விட்டுட்டு போயிட மாட்டேன், பிராமிஸ்” என சொல்லிக் கொண்டே அவளை தன்னைப் பார்க்க நேராக திருப்பினான்.
அவளின் கண்களில் அவன் மீதான அபரிமிதமான பிரியம் அப்பட்டமாக தெரிந்தது.
காரணங்களே இல்லாமல் தான் ஒருத்தியால் அளவுக்கதிகமாக நேசிக்க படுகிறோம் என்பதை உணர்வது எத்தகைய அழகான உணர்வு?
உள்ளுணர்வு உந்தித் தள்ள அவளை அணைத்துக் கொள்ள போனான்.
அதற்கு அனுமதிக்காமல் அவனிடமிருந்து விலகி உள்ளே சென்று விட்டாள் யசோ.
மழை சாரல் தன்னை நனைக்கும் படி நின்று கொண்டான் கெளதம்.