ஆயிரத்தில் அவள் ஒருத்தி -8

அத்தியாயம் -8

 லிஃப்டில் இருந்து மீட்ட யசோவுடன் வீட்டுக்கு வந்த கெளதம் அப்போதுதான் உடலின் அயர்வை உணர்ந்தான். சட்டையை கழற்றி விட்டு படுக்கையில் விழுந்து விட்டான்

முதல் வேளையாக தன் வயிற்றை கவனித்த யசோ, படுத்திருப்பவனை பார்த்து விட்டு, என்னாச்சுங்க?” என பதற்றமாக கேட்டாள்

நீங்க வருவீங்கன்னு நம்பினேன் என அவள் சொன்னது அவனை வெகுவாக பாதித்திருந்தது. 

தன் பக்கத்தில் அவளை அமர செய்தவன், “கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் ஆறு மாசமா ஒரு தடவ கூட உன்கிட்ட பேசல நான். அப்பவும் நான் வருவேன்னு நம்பிட்டா இருந்த?” எனக் கேட்டான். 

அவள் ஆம் என தலையசைக்க, ஆறு மாதங்களுக்கு பின்னர் பட்டென உறவை முறித்துக் கொள்வதாக தான் சொன்ன போது அவளின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என எண்ணியவனுக்கு வருத்தமாக இருந்தது. 

“ஸாரி கேட்கிறது தவிர என்கிட்ட வேற ஆப்ஷன் இல்லை யசோ” என்றான். 

“ஸாரியெல்லாம் வேணாம், அதுக்காக நீங்க ஃபீல் பண்றது எனக்கு தெரியும். அந்த பேச்சை விட்ரலாம்” என்றாள். 

“பின்னாடி குத்தி காட்டி பேச மாட்டியே”

“எனக்கு போய் பயப்படுறீங்களா?” என அவள் கேட்க, ஒருக்கலித்து படுத்து தலையை கையில் தாங்கிக் கொண்டவன், “வீட்டம்மாவுக்கு பயப்படாத வீட்டுக்காரன் எவனும் இல்லை. என் அப்பாவே டெரர் பீஸ், ஆனாலும் என்ன செஞ்சாலும் என் அம்மா என்ன சொல்வாங்கன்னு அவருக்கும் பயம் இருக்கும். என்ன… வெளில காட்டிக்க மாட்டார்” என்றான். 

“அது பயம் இல்லைங்க, அத்தை மாமாக்கு முக்கியம், அவங்க என்ன நினைப்பாங்களோன்னு யோசிக்கிறாங்க” என யசோ சொல்ல, ‘பாருடா இந்த சின்ன பொண்ணை!’ என நினைத்துக் கொண்டான் கெளதம்.  

அலுவலகம் போக வேண்டாமா என யசோ கேட்க, சரியாக அவனது மேனேஜரிடம் இருந்து அழைப்பு வந்தது. 

நடந்த கதையை அவரிடம் சொல்லி விடுப்பு கேட்டான். நீ வந்தால்தான் நடக்கும் என்கிற வேலை காத்துக் கொண்டிருக்கிறது, ஆகவே சாக்குபோக்கு சொல்லாமல் ஒழுங்காக அலுவலகம் வந்து சேர் என சொல்லி விட்டார் அவர்.

வாளி எடுத்துக் கொண்டு வந்த தியாகு என்னுடன் காரிலேயே வா என கௌதமை அழைத்தான். அவனுக்கும் டிராஃபிக்கில் பைக் ஓட்டிச் செல்ல அலுப்பாக இருந்தது. 

மதிய உணவு ஆர்டர் செய்கிறேன், இப்போது ரெஸ்ட் எடு என யசோவிடம் சொல்லி நண்பனுடனே கிளம்பி விட்டான். 

யசோவும் நன்றாக பயந்து போயிருந்தாள். படுத்தவள் அப்படியே உறங்கியும் போனாள். மதிய உணவு வந்த போதுதான் விழித்தாள். 

உணவு வரும், சாப்பிடு, ஏதாவது என்றால் மெசேஜ் அனுப்பு, நான் பிஸி என செய்தி அனுப்பியிருந்தான் கெளதம். 

உணவு வந்து விட்டதாக இவளும் செய்தி அனுப்பி விட்டு, அடுத்து ‘நீங்க சாப்பிட்டீங்களா?’ என கேட்டிருந்தாள். அந்த செய்தியை அவன் பார்க்கவே இல்லை. 

நான்கு மணிக்கு அவளுக்கு அழைத்தவன் இப்போதுதான் சாப்பிட வந்திருப்பதாக சொன்னான்.

“என்னாலதான் இன்னிக்கு உங்களுக்கு லேட் ஆகிடுச்சு, வேலையும் அதிகமா போச்சு” 

“அதெல்லாம் இல்லை, இங்க உள்ளவங்களுக்கும் என் அருமை புரியும். சாயந்தரம் எப்படி தனியா மாடிக்கு போய் துணி எடுத்திட்டு வந்திடுவியா?” எனக் கேட்டதற்கு ஏற்கனவே எடுத்து வந்து விட்டேன் என்றாள். படிகளிலேயே சென்றிருக்கிறாள். 

அவளுக்கும் பயம் இருக்கும்தானே, கொஞ்சம் கொஞ்சமாக தெளிய வைப்போம் என நினைத்துக்கொண்டே இரவில் தாமதமாக வருவேன் என்பதை அறிவித்து பேச்சை முடித்தான். 

மாலையில் தம்பி அத்தை என காணொளி அழைப்பில் பேசி விட்டு கொஞ்ச நேரம் படித்தாள். பின் இரவு சமையலை செய்தாள். 

கெளதம் வீடு வர பத்து மணியாகி விட்டது. சாப்பிட்டவன் உறங்க சென்று விட்டான். யசோ ஹாலில் படுக்க ஏற்பாடு செய்து விட்டு அவனுக்கு பால் எடுத்துக் கொண்டு சென்றாள். 

வா வந்து படு என அவன் சொல்ல, திரு திரு என விழித்தாள். 

“என்ன யசோ?” என அவன் கேட்கவும் ஹாலில் பாய் போட்டிருக்கிறேன் அங்கேயே உறங்கிக் கொள்கிறேன் என்றாள். 

“நல்ல பெரிய பெட், எனக்கு உருளுற பழக்கம் இல்லை. உனக்கு அப்படி பழக்கம் இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. இன்னோரு பெட்லாம் வாங்கினா இங்க வீட்ல ஸ்பேஸ் குறைஞ்சிடும். ஃப்ளோர்ல பாய்ல படுக்கிறதெல்லாம் இந்த ஊர் க்ளைமேட்க்கு செட் ஆகாது. அதை விட சேர்ந்து வாழ போறதா முடிவெடுத்து வந்திருக்கும் போது ஒரே பெட்ல தூங்குறது தப்பும் இல்லை” என யசோ மறுக்க எந்த காரணமும் இல்லாமல் செய்து விட்டான் கெளதம். 

பாயை சுருட்டி வைத்து விட்டு வந்தவள், எளிதாக கீழே இறங்க வசதியாக சுவர் ஓரமாக இல்லாமல் மற்ற பக்கத்தில் படுத்தாள். 

“நீ விழுந்திடுவியோன்னு தோணிட்டே இருக்கா, அதுல தூக்கம் வர மாட்டேங்குது” என சொல்லி அவளை சுவர் பக்கமாக படுக்க வைத்து விட்டான். 

அடுத்த இரண்டு நாட்களும் நன்றாகவே சென்றது. மதிய உணவையும் பேக் செய்து கொடுக்கிறாள் யசோ. 

காய்கறி, மளிகை எல்லாம் அபார்ட்மெண்ட் வாசலில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிலேயே கிடைக்கிறது. யசோவே சென்று வாங்கிக் கொள்கிறாள். பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் தேவையாக இருந்தது, வெளியில் போகும் போது வாங்கித் தருகிறேன், இப்போது இருப்பதை வைத்து சமாளி என சொல்லியிருந்தான். 

சனிக்கிழமை வெளியில் செல்வதாக திட்டம். 

 கிளம்பும் நேரத்தில் அவனுக்கு அவசர வேலை வந்து விட்டது, லேப்டாப்பை திறந்தவன் வேலையில் மும்முரமாகி விட்டான். அவனை தொந்தரவு செய்யாமல் அவள் பாட்டுக்கும் இருந்து கொண்டாள். இடையில் தேநீர் கொண்டு போய் கொடுத்தாள். நன்றியாக பார்த்தான். 

இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பிராஜக்ட் ஹெட் இவன்தான், குழுவில் இருப்பவர்கள் என்ன சொதப்பினாலும் இவன்தான் சரி செய்து தர வேண்டியிருக்கிறது. மற்றவர்களை வேலை வாங்கினாலும் உடனுக்குடன் பார்த்து திருத்தங்கள் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. 

இதற்காகத்தான் ஜெர்மனி சென்று வந்திருந்தான். பிராஜக்ட் எவ்வித சிக்கலும் இல்லாமல் நன்றாக செயல்பட்டால் இவனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்கால முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். அதனால் எந்த நேரம் என்றாலும் சமரசம் செய்து கொள்ளாமல் உழைக்கிறான். 

வேலை இன்னும் நீடிக்கும் என புரிந்து கொண்ட யசோ மதிய சமையலையும் செய்து விட்டாள். 

கெளதம் வேலையை முடித்து நிமிரும் போது மூன்றாகி விட்டது. நல்ல பசி, யசோவை தேடிக் கொண்டு சமையலறை வந்தான். உணவின் மணம் பசியை இன்னும் தூண்டியது. 

மழை பெய்து கொண்டிருப்பதை இடி இடித்து அவனுக்கு உணர்த்தியது. 

அவளின் ‘நீங்க வருவீங்கன்னு நம்பினேன்’ என்பதை விட்டு அவன் இன்னும் வெளி வந்திருக்கவில்லை. முடிந்ததை ஒன்றும் செய்ய முடியாது, இனியாவது சரியாக நடந்து கொள்ள தீர்மானித்திருந்தவன் அவளை வெளியில் கூட்டிச் சென்று அவளுடன் நேரம் செலவிட வேண்டும் என  ஆர்வமாக காத்திருந்தான்.  முடியாமல் போனதில் அவனுக்குமே ஏமாற்றம். 

யசோ பால்கனியில் இருந்தாள். உணவை இரண்டு தட்டுக்களில் தானே பரிமாறிக் கொண்டு அங்கு எடுத்து வந்தான் கெளதம்.

மழையை பார்த்துக் கொண்டு தரையில் அமர்ந்திருந்த யசோ, “கூப்பிட வேண்டியதுதானே?” எனக் கேட்டாள். 

“கஷ்ட பட்டு சமைச்சு வச்சிருக்க, தட்டுல போட்டுக்கிறது பெரிய வேலையா?” எனக் கேட்டுக் கொண்டே அவளுக்கு எதிரில் அமர்ந்தான். 

“அங்க உட்கார்ந்தா சாரல் அடிக்கும்” என்றாள். 

“தெரியும் யசோ, மண்டை காஞ்சு போச்சு, கொஞ்சம் கூல் ஆகட்டும்” என்றான். 

அவள் எழுந்து சென்று குடிக்க தண்ணீர், ஊரிலிருந்து அத்தை கொடுத்தனுப்பிய முறுக்கு, ஊறுகாய் எல்லாம் எடுத்து வந்தாள். 

அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார்கள். யசோவிடம் மன்னிப்பு கேட்டவன்  நாளைக்கு கண்டிப்பாக வெளியில் செல்லலாம் என்றான்.

“முடியறப்போ போலாம்” என்றாள். 

நாம்தான் அதுக்கான டைம் ஏற்படுத்திக்கணும் யசோ. டேட் பண்ணினாத்தானே நாம நம்மள புரிஞ்சுக்க முடியும்?” என கண்களை சிமிட்டி கேட்டான்

“எனக்கு படிக்க நிறைய இருக்கு”

“என்ன நிறைய இருக்கு, தமிழ்தானே?”   எனக் கேட்டு விட்டான். 

“அப்படி சொல்லாதீங்க? ஏன் தமிழ் படிப்பு இல்லையா?” என அவள் கேட்ட விதத்தில் தன் காதைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்தான்

சாப்பிட்டு முடித்த உடன் கேரம் விளையாடலாம் என அவளை அழைத்தான். தனக்கு விளையாட தெரியாது  என்றாள்.

எல்லாரும் கத்துக்கிட்டா விளையாடுறாங்க, வா நான் சொல்லித் தர்றேன்” என அழைத்தவன் சொல்லியும் கொடுத்த்தான். எடுத்த உடனே இரண்டு காய்களை பாக்கெட் செய்து விட்டாள். 

“தெரியாதுன்னு பொய் சொன்னீங்களாடா செல்லம்மா?” எனக் கேட்டான். 

உடனே திகைத்து அவனை பார்த்தாள். ஏன் இப்படி பார்க்கிறாள் என யோசித்தவன், “பொய் சொல்றேன்னு விளையாட்டுக்கு சொன்னேன்” என்றான். 

“இல்லை அதில்ல. ஒன்னுமில்ல, நிஜமா தெரியாது. காய்ன் எப்படியோ விழுந்திடுச்சு” என்றாள். 

உண்மைதான், அதன் பிறகு அவள் விளையாடியதை வைத்து அவளுக்கு தெரியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொண்டான். 

எப்படியாவது நன்றாக விளையாட வேண்டும் என்ற தவிப்பும், சரியாக விளையாட வரவில்லை என்ற சுணக்கமும் அவளின் முகத்தில் தெரியவும் உருகிப் போய் விட்டான்.

அவனது கண்களுக்கு குழந்தையாகத்தான் தெரிந்தாள். 

“ஹேய் கன்னுகுட்டி, ரொம்ப ஈஸி, இரு நான் வரேன்” என்றவன் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளின் கையை பிடித்து எங்கிருந்து எப்படி குறி பார்க்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தான். 

மூன்றாவது முயற்சியில் காயின் பாக்கெட் ஆக, “அவ்ளோதான் செல்லம்மா” என்றான். அவளின் கண்களிலிருந்து தர தரவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. 

பயந்து போனவன் என்னவென கேட்க, ஒன்றுமில்லை என்றவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள். 

படுக்கையில் அமர்ந்து தேம்பிக் கொண்டிருந்தவள் இவனை கண்டதும் வேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள். துடைக்க துடைக்க கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. 

“என்ன யசோ, என்கிட்ட சொல்ல மாட்டியா? இப்படி அழுதா என்னன்னு நினைப்பேன். நான் ஏதாவது மிஸ்பிஹேவ் பண்ணிட்டேனா?” எனக் கேட்டான். 

வேகமாக மறுத்தவள், “என் டாடி என்னை செல்லம்மான்னுதான் கூப்பிடுவார், அவர் ஞாபகம் வந்திடுச்சு” என்றாள். 

அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லவென அவனுக்கு தெரியவில்லை. சிறு வயதில் திடீரென பெற்றோரை இழப்பது எத்தகைய கொடுமை என நினைத்தவன், அவளருகில் அமர்ந்து கொண்டான். 

 “அதுக்காக இப்ப அழுவியா? நவீனை அம்மா போல இருந்து வளர்த்திருக்க, எவ்ளோ ஸ்டராங் தெரியுமா நீ? அழக் கூடாது” என்றான்.

“இப்படிலாம் நான் அழுதது இல்லை. இன்னிக்கு என்னமோ…” என்றவள் அழுகையை நிறுத்த முயற்சி செய்கிறாள். அவனை பார்த்து புன்னகை செய்கிறாள். ஆனால் சொல் பேச்சு கேட்க மாட்டேன் என கண்கள் சண்டித் தனம் செய்தன.