சாருவின் முகம் சற்றே மாறினாலும், இது தான் நிதர்சனம் என்பதை அறிந்தவள், முகத்தை நிர்மலமாக வைத்துக் கொண்டு, “எஸ் சார்…!’’ என்று அவன் சொன்னதை செயலாற்ற விரைந்தாள்.
அடுத்த நாள் ஆரு உற்சாகமாகவே கல்லூரிக்கு கிளம்பினாள். மலர்ந்திருந்த ஆருவின் முகத்தை கண்டு பெல்லாவே ஆச்சர்யம் கொண்டாள். வழக்கம் போல அவளை உணவு மேஜையில் எதிர் கொண்ட லூவிற்கு ஒரு புன்னகையை தந்து அவன் கரத்தில் கொடுத்த வரவேற்பு முத்தத்திற்கு பெரிதாக முகத்தை சுளிக்காமல் அமர்ந்து கொண்டாள்.
நேற்றைய இரவிற்கு பின் லூவின் அருகாமை ஏனோ அத்தனை ஆபத்தானதாக அவளுக்கு தோன்றவில்லை. எப்படியும் இந்த முப்பது நாட்களும் முடியும், சொன்னது போல தன்னை அனுப்பி வைத்து விடுவான், என்று தன்னம்பிக்கை கொண்டவள், அதன் பிறகு இருக்கும் வரை இந்த புதிய சூழலை அனுபவித்து வாழ்வது என முடிவெடுத்துக் கொண்டாள்.
லூ தான் அவளை கல்லூரிக்கு அழைத்து சென்றான். பயணத்தின் போது, “அதிக உற்சாகமாய் தெரிகிறாய். காரணம் என்ன…?’’ என்றான். அவனைப் பார்த்து நன்றாக இதழ் விரிய புன்னகைத்தவள், “இன்னும் 29 நாள்ல நான் மறுபடி என்னோட பழைய வாழ்க்கைக்குள்ள போயிடுவேன். பப்பு பப்புன்னு கூப்பிட்டு என்னையே சுத்தி வர அண்ணாங்க. அடியேன்னு கூப்பிட்டாலும், வெள்ளி செவ்வாய் தலைக்கு எண்ணெய் தேய்ச்சி விடுற அம்மா. நான் பாக்குறது மட்டும் இல்ல… நான் மனசுல நினைச்சாலே அதை என் கையில கொண்டு வந்து கொடுக்குற அப்பா… என்னோட நிழல் மாதிரி என் கூடவே சுத்துற சாரு. சில உறவுகளை விட்டு கொஞ்சம் தள்ளி வரும் போது தான் அதோட அருமை புரியுது இல்ல.’’ என்றவள் லேசாக சீட்டியடித்தபடியே வெளியே வேடிக்கை பார்க்க துவங்கினாள்.
“நீ சரியாணி சாருண்ணி…’’ என்ற லூ நக்கலாக சிரிக்க, ஆரு அவனை புருவம் நெரிய கேள்வியாய் பார்த்தாள். அவளின் பார்வையில் சிரிப்பை நிறுத்தியவன், “நீ எப்போதும் அன்பை ஒருவழியாய் வாங்கிக் கொண்டிருக்கிறாய், அதை யாருக்கும் மறுபடி கொடுப்பதில்லை. அதோடு நீ ஒரு ஆகப் பெரும் சுயநலவாதி. மற்றவர் நலன் குறித்தெல்லாம் நீ ஒருபோதும் வருந்துவதில்லை.’’ என்றான், அவள் புரிந்து கொள்ளக் கூடிய ஆங்கிலத்தில்.
“என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்…? நீயா எதையாவது பேசணும்னு உளறாதே.’’ ஆருவின் வார்த்தைகளை தீக் கங்குகள் போல பறந்தன.
“ஓ…! அப்படியா. இப்போது நான் சொல்லும் தகவல்கள் உனக்கு ஆச்சர்யமாய் இருக்கலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உன் அம்மா சர்க்கரை மாத்திரையில் இருந்து இன்சுலின் ஊசி போடும் அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உன் தந்தையின் இதயம் இயங்கு நிலை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டிருகிறது. அதனால் தான் உன் திருமணத்திற்கு அவசரம் கொண்டிருக்கிறார். உன் மூத்த அண்ணன் வெளியே சொல்ல முடியாத அரசியல் சுழலில் சிக்கி இருக்கிறான். உன் இளைய அண்ணனின் வராக் கடன்கள் அதிகரித்து கொண்டிருகிறது. உன் தோழி சாரு தன்னை உனக்கு ஒரு பணிப் பெண்ணாக கருதி தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறாள். இதெல்லாம் உனக்கு தெரியுமா என்ன…?” என்றான் அதே நக்கல் தொனியில்.
“என்ன…” என்றாள் ஆரு அதிர்ச்சியில் விரிந்த முகத்துடன். “என்றைக்காவது ஒரு நாள் தட்டு தடுமாறி எதையேனும் சமைத்து உன் பெற்றவர்களை அமர்த்தி பரிமாறி இருகின்றாயா…? உன் அண்ணன்கள் தங்கள் பணி சுமையை பகிரும் அளவுக்கு தொழில் குறித்து எப்போதேனும் அவர்களோடு அளவளாவி இருக்கிறாயா..? எங்கேனும் வெளியே கிளம்பும் முன் உன்னுடைய விருப்பம் என்ன என்று உன் தோழியிடம் முதலில் கேட்டு இருக்கிறாயா…? இதுவரை செய்ததில்லை தானே. எனில் நான் சொன்னதில் தவறு என்ன இருக்கிறது.’’ என்றவன் வாகனம் கல்லூரியை அடையவும் நிறுத்தியிருந்தான்.
அதிர்வோடு சேர்ந்து குழப்பத்திலும் ஆருவின் முகம் சுருங்கி இருக்க, “தவறு உன் மேல் மட்டுமல்ல. உன்னை சுற்றி இருப்பவர்களின் பேரிலும் இருக்கிறது. அதை குறித்து பிறகு யோசிக்கலாம். உன்னை குறித்து நான் கொஞ்சமேனும் பெருமிதமாக எண்ணும் ஓரிடத்தில் நிற்கிறாய். இப்போதைக்கு உன் கவனத்தை அங்கு மட்டும் செலுத்து. முடிந்தால் மாலை அழைத்து செல்ல வருவேன். அல்லது என் உதவியாளனை அனுப்பி வைக்கிறேன். இந்த நாள் இனிய நாளாகட்டும் ஏஞ்சல்.’’ என்றவன் விடை பெற்று கிளம்ப, அதே குழம்பிய மனநிலையோடு கல்லூரிக்குள் நுழைந்தாள்.
ஆனால் அந்த நிலையை நீடிக்க விடாமல், அவளை சூழ்ந்து கொண்டனர் எரிக்கும், ரென்னும். “ஹாய் ஆரு…’’ என்று இருவரும் கல்லூரி முகப்பில் நின்று வரவேற்க, மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த சஞ்சலங்களை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, ஒரு உற்சாக புன்னகையோடு அவர்களை எதிர் கொண்டாள் ஆரு.
காலை வகுப்பில் உலக அளவில் ஆடை வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர்களின் சிறப்பு வகுப்புகள் இருக்க, மதிய இடைவேளைக்கு பிறகு, “பழமையில் புதுமை…’’ என்ற தலைப்பில் ஆதி கால உடைகளில் புதுமையை புகுத்தி ஆடைகளை வடிவமைப்பை வரைய சொல்லி போட்டிகள் நடந்தினர்.
ஆரு பாரம்பரிய ராஜஸ்தானிய ஆண்களின் உடையில் தலைப்பாகட்டையும், தொளதொள கீழ் சாராயையும் எடுத்துக் கொண்டு, மேலுடையில் இரண்டு கிளிகளின் அலகுகள் உரசிக் கொள்வதைப் போல மார்க்கச்சையை வரைந்து, அதன் இறகுகள் போல கைப்பகுதி உடையை வரைந்து முடிக்க, அருகில் வரைந்து கொண்டிருந்த எரிக் இவளின் வரைபடத்தை பார்த்துவிட்டு, “வாவ்..’’ என்றான்.
அன்றைக்கு போட்டியில் ஆப்ரிக்க மாணவி ஒருத்தி முதல் பரிசை தட்டி சென்றாள். ஆயினும் போட்டிக்கு நடுவராய் இருந்த ஆடை வடிவமைப்பாளர் ஆருவின் கலை நுணுக்க வேலைப்பாடமைந்த ஆடை வடிவமைப்பு வரைபடத்தை பாராட்டி விட்டே சென்றார்.
மாலை வேளை வழக்கமாக தோழர்களுக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு, கல்லூரி வாயிலுக்கு வந்தாள் ஆரு. அங்கே லூ இவளுக்காய் காத்திருந்தான். அவனை ஓரப் பார்வை பார்த்துக் கொண்டே, “இன்னைக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையோ…?’’ என்றுவிட்டு வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.
தன் பசியக் கண்களால் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “இதுவும் ஒருவகையில என்னோட வேல தான் .’’ என்றான். உதட்டை அலட்சியமாக சுழித்துக் கொண்டவள், வெளிப்புறம் வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
“என் மேல ரொம்ப கோபமா இருக்க போல இருக்கு. சில நேரத்துல உண்மை கசக்க தான் செய்யும்.’’ என்றான். அவனை நோக்கி கோபமாக திரும்பியவள், “ஆமா…! நான் ஒரு செல்பிஷ்… சோம்பேறி… சுயநலம் பிடிச்சவ… எல்லாமே போதுமா. ஆனா ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியாது. அதனால சும்மா அதையே சொல்லி காட்டிட்டு இருக்காத.’’ என்றாள்.
“ம்…! உன் பக்கம் தப்பு இருக்குன்னு ஒத்துகிட்ட நீ. நல்ல விஷயம் தான். ஆனா உன் விசயத்துல நீ இப்படி ஆனதுக்கு காரணமே உன்னை சுத்தி இருந்தவங்களும் தான். முக்கியமா உங்க அப்பா. நீ பிறந்ததுக்கு அப்புறம் அவரோட அரசியல் வாழ்க்கை உச்சத்துக்கு போச்சு அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக உன்னை தங்க கூண்டுல அடைச்சி வளர்க்க ஆரம்பிச்சிட்டார். உன் அண்ணனுங்களுக்கு அவரை பாலோ செஞ்சி, கூண்டுக்குள்ள உனக்கு பிடிச்சதை எல்லாம் கொண்டு வந்து குமிச்சி இருக்காங்க. உங்க அம்மா, அவங்க பாவம். அவங்க வாழ்கையும் அப்படித் தானே. இதுல ஹை லைட் காமெடி என்னன்னா, அந்த கண்ணாடி வாழ்கையில உனக்கு போர் அடிக்க கூடாதுன்னு, உள்ள அப்பாவியா வெளிய சுத்திட்டு இருந்த சாருங்கிற இன்னொரு பறவையையும் பிடிச்சிட்டு வந்து போட்டுட்டாங்க.” என்றான்.
அவனை உறுத்துப் பார்த்த சாரு, “என்னது கூண்டு வாழ்க்கையா…? நிஜமான கூண்டு வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா உனக்கு.” என்றாள்.
தற்சமயம் வாய் விட்டு சிரித்தவன், “சரி இப்போ நான் கேக்குற கேள்விக்கு முடிஞ்சா உண்மையா பதில் சொல்லு. சின்ன வயசுல உன் வயசு குழந்தைகளோட ஒண்ணா ஸ்கூல் வேன்ல ட்ராவல் செஞ்சி இருக்கியா. ஹை ஸ்கூல் படிக்கும் போது சைக்கிள்ல ஸ்கூலுக்கு போய் இருக்கியா. டீன் ஏஜ்ல நீ இருக்கும் போது ஏதாச்சும் ஒரு லவ் ப்ரோபோசல்… ஜஸ்ட் ஒரு க்ரஷ் லுக் இதெல்லாம் உனக்கு கிடச்சிருக்கா. உங்க அப்பா அவரோட அரசியல் கூட்டத்துக்கு உன்னை கூட்டிட்டு போய் இருக்காரா…? உங்க அப்பா இருக்க கட்சியில அவரோட இடம் எதுன்னு உனக்கு தெரியுமா…? உங்க வீட்ல இருக்க மத்த மூணு பேரோட போட்டோ மேகசின்ல வந்த அளவுக்கு உன் போட்டோ வந்ததே இல்ல… உன்னோட நிச்சய போட்டோ தவிர… அதெல்லாம் ஏன்னு உனக்கு தெரியுமா. இதை விட முக்கியமான விஷயம் உன்னோட லைப் பார்ட்னரை சூஸ் பண்ற ப்ரீடம் உனக்கு இருந்துச்சா…?’’