“நான் வருவேன்னு தெரியுமா?” என அவன் கேட்டதற்கு மறுப்பாக தலையாட்டினாள்.
“சும்மா நீ போட்டது என் சைஸ்ல இருக்கவும் சரிதான் வச்சுக்கடான்னு தர்றியா?” என அவன் வம்பாக கேட்கவும் அவளுக்கு கோவம் வந்ததோ என்னவோ. அவனுடன் சேர்ந்து நடக்காமல் இரண்டு அடி வேகமாக எடுத்து வைத்து அவனுக்கு முன் நடந்தாள்.
“வழி தெரிஞ்ச மாதிரி நீ பாட்டுக்கும் போற, அங்க போக கூடாது, இப்படி போகணும்” என அவன் சத்தமிட, உடனே அவன் பக்கத்தில் வந்து நின்று விட்டாள்.
“சேர்ந்து நட” என நல்ல விதமாக சொல்லி அழைத்து சென்றான்.
அவர்களை கூப்பிட்டு செல்ல கார் எடுத்துக் கொண்டு வந்திருந்தான் தியாகு. கெளதம் அறிமுகம் செய்து வைக்கும் முன் தானே யசோவிடம் அறிமுகம் ஆகிக் கொண்டான்.
நண்பனை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டான் தியாகு.
“என்னடா இது புதுசா, தள்ளுடா தப்பா நினைக்க போறா” என தியாகுவின் காதில் மட்டும் கேட்கும் படி சொன்னான் கெளதம்.
நண்பனுக்கு செல்லமாக அடி வைத்த தியாகு, “யசோவை நீ அழைச்சிட்டு வந்ததுல எனக்குத்தான் ரொம்ப சந்தோஷம்டா. நீயெல்லாம் என் ஃப்ரெண்ட்டான்னு ஃபீலிங்ஸ்ல இருந்தேன். இப்பதான் நிம்மதியா இருக்கு” என கௌதமுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.
“சந்தோஷம் நிம்மதிங்கிற வேர்ட்ஸ்லாம் ஓகே. அந்த பீலிங்ஸ் டிபார்ட்மென்ட் பத்தி தனியா இருக்கப்போ டிஸ்கஸ் பண்ணிக்கலாம்” என மிரட்டினான் கெளதம்.
யசோ எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்..
அப்பார்ட்மென்ட் வந்த பிறகு காலை சாப்பாடு தானே செய்து தருவதாக சொன்னான் தியாகு.
“அவங்களுக்கு ஏன் சிரமம், நானே ஏதாவது செய்றேங்க” என கௌதமிடம் சின்ன குரலில் சொன்னாள் யசோ.
“அவனே கொண்டு வரட்டும், பதிலுக்கு நாளைக்கு நீ செஞ்சு கொடுத்திடு” என கெளதம் சொல்ல, “அதென்னடா நாளைக்கு மட்டும், ஏன் மைதிலி வர்ற வரைக்கும் சாப்பாடு போட மாட்டியா?” எனக் கேட்டான் தியாகு.
“அப்படிலாம் என் வீட்டம்மாவை அதிகமா வேலை வாங்க முடியாதுடா” என்றான் கெளதம்.
“நீ என்னடா ராஸ்கல் அதை சொல்றது?” என்றான் தியாகு.
நண்பர்கள் இருவரையும் அவள் சுவாரஷ்யமாக பார்க்க, அவர்களே விளையாட்டு பேச்சை கைவிட்டு விட்டனர்.
கெளதம் வீட்டின் கதவை திறக்கவும், “யசோ கையை புடிச்சு உள்ள கூட்டிட்டு போடா” என்றான் தியாகு.
“ஆரத்தி எடுக்கலாம்தானே நீ?” என கேட்டாலும் நண்பன் சொன்ன படியே செய்தான் கெளதம்.
உள்ளே நுழைந்த பின் யசோவின் கையை அவன் விட்டு விட்டாலும் அவன் ஸ்பரிசம் உணர்ந்த மணிக்கட்டு அவளுக்கு கொஞ்சம் குறு குறுப்பை கொடுத்தது.
கெளதம் கேட்டுக் கொண்டதன் படி பால், காய்கறி என எல்லா சாமான்களும் முதல் நாளே வாங்கி வைத்திருந்தான் தியாகு.
“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லைனு புரியுது, செஞ்சுக்கம்மா” என சொல்லி கிளம்பி விட்டான் தியாகு.
“காஃபி போட்டு தர்றியா?” என கெளதம் கேட்டதற்கு சரி என்றவள் பேஸ்ட், பிரஷ் எடுத்தாள்.
ஒற்றைப் படுக்கையறை கொண்ட சின்ன வீடுதான் அது. அடுத்து என்ன என எதுவும் புரியாமல் இருந்த கௌதமுக்கு தியாகுதான் சற்றே ஆறுதலாக இருந்தான். ஆகவேதான் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அவன் வீட்டுக்கு எதிர் வீடு என்ற ஒரே காரணத்துக்காக இந்த வீட்டுக்கே குடி வந்து விட்டான்.
அபார்ட்மெண்ட்டின் உள்ளேயே நீச்சல் குளம், ஜிம் போன்ற வசதிகள் இருக்கின்றன. ஆதலால் சிறிய வீடாக இருந்த போதும் மெயிண்டனன்ஸ் உடன் சேர்த்து வாடகை சற்று அதிகமான தொகைதான்.
“நமக்கு இந்த வீடே போதும், தியாகுவோட வைஃப் வந்திட்டா உனக்கும் துணைக்கு ஆள் கிடைச்சிடும். கொஞ்ச நாள் போகட்டும் உனக்கு மாறணும்னு இருந்தா மாறிக்கலாம்” என அவனாகவே சொன்னான்.
கேட்டுக் கொண்டேன் என்பது போல அவள் பார்க்க, “ஆனா இங்கேயே வாடகை ஜாஸ்தி, வேற இடம் போனா இன்னும் அதிகமாகும்” என வாடகை பணத்தையும் சொன்னான்.
வாயில் கை வைத்து திகைத்தவள், “நிஜமா இவ்ளோவா?” எனக் கேட்டாள்.
“பிராமிஸ் பண்ணவா?”
“வேணாம் வேணாம்”
“என் சேலரி தெரியுமா?”
“தெரியாது”
“தெரிஞ்சுக்கிறியா?”
“காஃபி கேட்டீங்களே, ட்ரெஸ் மாத்த போக விடாம பேசிட்டே இருந்தா காஃபி கிடைக்க லேட் ஆகிடும்” என சொல்லி குளியலறை சென்று விட்டாள்.
அவன் தன்னை மனைவியாக பார்க்கவில்லை என்ற எண்ணம்தான் அவளின் மனதில் படிந்திருக்கிறது. ஆகவே அவளுக்கும் மனைவியாக உரிமை காட்டவெல்லாம் இயல்பாகவே வரவில்லை. சம்பள விஷயங்கள் எல்லாம் கேட்பது அதிகப்படியாகவே பட்டது.
அது அவனுக்குமே புரிந்துதான் இருந்தது. அவள் வந்த பின் அவன் குளியலறை சென்றான்.
அடுப்பில் பால் வைத்து விட்டு நைட்டிக்கு மாறிக் கொண்டாள். அவள் காஃபி கலந்து கொண்டிருக்க சமையலறைக்கே வந்து விட்டான்.
ஒரு டம்ளரை அவன் எடுக்க, “அது எனக்கு, இதுதான் உங்களுக்கு” என்றாள்.
“உனக்கு மட்டும் ஸ்பெஷல் காபியா?”
“இல்லை நீங்க குடிக்கிற மாதிரி இதான் ஸ்ட்ராங்கா போட்ருக்கேன், அது மைல்டா இருக்கும்”
“அம்மா வேற என்னெல்லாம் என்னை பத்தி சொல்லி கொடுத்தாங்க?” எனக் கேட்டுக் கொண்டே அவனுக்கான காஃபியை எடுத்துக் கொண்டான்.
பதிலாக அவளிடமிருந்து ஒரு புன்னகை.
“நைட் நல்லா குறட்டை விடுற” என்றான்.
“எனக்கு குறட்டைலாம் வராது… சும்மா சொல்றீங்க”
“நல்லா தூங்கினேன்னு சொன்னேன். எங்க விழுந்திட போறியோன்னு உன்னை பார்த்து பார்த்து எனக்குதான் தூக்கம் இல்லை. இதுல தாலி செயினை வேற கெட்டியாக பிடிச்சு வச்சுக்கிட்ட? நைட்டி கழட்டும் போதுதானே கழண்டு வரும், தூங்கிட்டே இருக்கும் போது கூட வந்திடுமா?”
“ஐயைய… இது கொஞ்சம் என்னை டேமேஜ் பண்ற மாதிரி இல்லை? சரி அப்புறம்?”
“ரொம்ப பேசிட்டே இருந்தா நல்ல மூட்ல இருக்கீங்கன்னு அர்த்தம். மூட் சரியில்லைனா யார் கூடவும் பேச மாட்டீங்க. சில சமயம் நீங்க சொல்றது விளையாட்டு பேச்சா சீரியஸ் பேச்சான்னு கண்டு பிடிக்க முடியாது. அதனால நீங்க என்ன சொன்னாலும் நல்லா யோசிச்சு எந்த மாதிரி பேச்சுன்னு நானே கண்டுபிடிச்சுக்கணும்னு சொன்னாங்க”