தம்பிக்கு மட்டும் வீட்டில் இலகுவாக போட்டுக் கொள்ள ஆடைகள் வாங்கியிருந்தாள் யசோ, அதுவும் எண்ணி நான்கு. நவீன் தன் மாமனுக்கு என எடுத்த ஒரு சட்டை.
“என்னடா இவ்ளோ நேரத்துக்கு பை பையா வச்சுக்கிட்டு நிப்பீங்கன்னு பார்த்தா, ஒத்த பையை சுமக்க முடியாம வச்சிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டான் கெளதம்.
“இது மாதிரி நாங்களே வந்து எதுவும் எடுத்தது இல்லை மாமா, என்ன எடுக்கன்னே தெரியலை” என்றான் நவீன்.
“இல்லையில்லை, அத்தை நாலஞ்சு தடவ என்னை அழைச்சிட்டு வந்திருக்காங்க. இது போதும், தேவைக்கு அதிகமா வாங்கி என்ன பண்றது, அடுத்த வருஷம் இவன் இன்னும் வளர்ந்திடுவான்” என்றாள் யசோ.
கௌதமுக்கு என்ன சொல்லவென தெரியவில்லை. ஆனால் மனம் ஏதோ போலானது.
பில்லை வாங்கிக் கொண்டு பணம் செலுத்த போனான் கெளதம்.
“உங்க ஷர்ட் இவன் வாங்கிக் கொடுக்கிறான், அதுக்கு மட்டுமாவது பணம் வாங்கிக்கோங்க” என்றாள் யசோ.
அவளை உற்றுப் பார்த்தான். “இல்லை, அவன் கிஃப்ட் பண்றேன்னு ஆசை பட்டான், அதான்…” என்றாள்.
“பணத்தை என்கிட்டேயே கொடு” எனக் கேட்டு வாங்கிக் கொண்டான். பணம் செலுத்தி வாங்கியவற்றை யசோவின் கையில் கொடுத்து காருக்கு போகும் படி சொன்னவன் நவீனை அழைத்துக் கொண்டு மீண்டும் கடைக்குள் சென்று விட்டான்.
மச்சானுக்கு பார்த்து பார்த்து நிறைய எடுத்துக் கொடுத்துதான் அங்கிருந்து கிளம்பினான்.
பெரிய உணவகத்தில் திருப்தியாக மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்கையில் மாலையாகி விட்டது. நவீனுக்கு மாமாவை மிகவும் பிடித்துப் போனது.
கெளதம் அறைக்கு வர, யசோவும் பேக் செய்வதற்காக அறைக்கு வந்தாள். அவன் இருக்கவும் தயக்கத்தோடு அவனை பார்த்தாள்.
“என்ன?” என அவன் கேட்கவும் சொன்னாள்.
“நீ பொட்டிக்குள்ள எல்லாம் எடுத்து வைக்க தனிமை வேணுமா?” என கிண்டலாக கேட்டவன், “கொஞ்ச நேரம் நான் ரெஸ்ட் எடுக்கணும். நைட் டிராவல் வேற பண்ணனும்ல, நீ நாளைக்கு வீட்ல தூங்கலாம், எனக்கு வேலைக்கு போகணும். நான் இங்க இருக்கிறத அட்ஜஸ்ட் பண்ணிக்க” என சொல்லி விட்டான்.
இரண்டு டிராலிகளில் தன் உடைமைகளை அடுக்கினாள் யசோ. கப்போர்ட்டில் அவர்கள் சேர்ந்து இருந்த புகைப்படம் இருந்தது. அதை கையில் எடுத்தவள் மீண்டும் அங்கேயே வைத்து விட்டாள்.
எதேச்சையாக அதை பார்த்தவன், “அதை கொடு” எனக் கேட்டுக் கொண்டே எழுந்தான்.
எடுத்து தராமலே அவள் அவனை பார்க்க, அவனே சென்று எடுத்துக் கொண்டான்.
“யார் ரெடி பண்ணி தந்தா இதை?” என விசாரித்தான்.
முதலில் அவள் சொல்லவில்லை. அவன் விடாமல் கேட்கவும் அத்தையோடு வெளியே சென்ற சமயத்தில் அவளே செய்ததாக ஒப்புக் கொண்டாள்.
“ஷ்ஷப்பா! மாமியார்கிட்டேயே கேட்டு செய்ற அளவுக்கு துணிச்சல் காரியா நீ?” எனக் கேட்டான்.
அவளை கடுப்பாக ஒரு பார்வை பார்த்தானே தவிர எதுவும் திட்டவில்லை. நாற்காலி எடுத்துப் போட்டு பழைய படி சுவரில் மாட்டப் போனான். கை தவறி புகைப்படம் கீழே விழுந்து விட்டது.
அவனுடைய உருவத்தில் தெறிப்பு விழுந்து விட்டது. அதை கையில் எடுத்தவள் கலங்கிப் போனாள். உன்னால்தான் என குற்றம் சாட்டியது அவளின் பார்வை.
“தெரியாம விழுந்திடுச்சு, வேற ரெடி பண்ணிக்கலாம்” என சமாதானம் செய்தான் அவன்.
“பரவாயில்லை, இது கூட நிஜமா நாம சேர்ந்து நிக்கலதானே? இருக்கட்டும்” என்றவள் அந்த புகைப்படத்தை மீண்டும் கப்போர்ட்டில் வைத்தாள்.
நாற்காலியிலிருந்து இறங்கியவன், “நிஜத்துலேயே நாம சேர்ந்து நின்னு ஃபோட்டோ எடுத்துக்கலாம் யசோ. பெங்களூர் போனதும் எடுக்கலாம் சரியா?” என தாஜாவாக கேட்டான்.
“ஃபோட்டோலாம் ஆசையா எடுக்கணும், அனுதாபத்துல எடுக்க கூடாது” என முறுக்கிக் கொண்டு சொன்னாள்.
“நீ ஆசையா எடுத்த ஃபோட்டோவா இது? சரி சொல்லு, எவ்ளோ ஆசைல இது ரெடி பண்ணின?”
“அதெல்லாம் இல்லை, அது… ஏதோ… அத்தை ஃபோட்டோ போட்டுக்கோன்னு சொன்னாங்க, அதனால…” என திணறினாள்.
இரு கைகளையும் மேலே உயர்த்தி, “ஓகே ஓகே, நீயும் ஆசைல இது போடலைனு நான் நம்பிட்டேன், நீ இவ்ளோ நெளியாத” என்றான்.
அவளுக்கு என்ன எதிர்வினை ஆற்ற என சங்கடமாக இருந்தது.
“வேற எடுத்துக்கலாம், பேக்கிங்க முடி” என சொல்லி பழைய படி படுத்துக் கொண்டான்.
எல்லாம் முடித்து கீழே சென்று விட்டாள். அருணா வேறு தனியாக ஒரு பை கட்டி வைத்திருந்தார்.
காலையில் வந்திருந்த காருக்கே சொல்லியிருந்தான் கெளதம், எட்டு மணிக்கெல்லாம் கார் வந்து விட்டது. யசோவுக்கு சாப்பாடே இறங்கவில்லை.
தம்பியின் முன் அழுது விடக்கூடாது என உறுதியாக இருந்தாள். மாமியார் மாமனாரிடம் காலில் விழுந்து வணங்கிக் கொண்டாள். அவளை பார்த்து கௌதமும் அப்பா அம்மா காலில் விழ போக, “சேர்ந்து ஆசி வாங்குடா” என்றார் அருணா.
“எத்தன தடவ உன் கால்ல விழணும் அவ?” என கிண்டல் செய்தாலும் அவளுடன் சேர்ந்தே ஆசி பெற்றுக் கொண்டான்.
அடுத்த முறை வரும் போது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும், ஏற்பாடு செய்து விடுங்கள் என அப்பாவிடம் சொன்னான் கெளதம். மகனை சற்று தள்ளி அழைத்து சென்ற சண்முகம், “ரெஜிஸ்டர் பண்ணினாதான் முறையா டைவேர்ஸ் வாங்க முடியும்னு இப்படிலாம் செய்றியாடா?” என பயத்தோடு கேட்டார்.
தம்பியிடம் வாய் திறந்து சொல்லிக் கொள்ள முடியாமல் தலையசைத்தாள் யசோ. அவனுக்கு கண்கள் உடைப்பெடுத்தக் கொண்டது. புறங்கையால் கண்களை மூடிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
யசோவுக்கும் கேவல் வருவது போலாக வேகமாக காரில் ஏறி விட்டாள். கௌதமுக்கு நவீனை அப்படியே விட மனம் வரவில்லை. அவனருகில் சென்று அணைத்துக் கொண்டான். முதுகை தட்டிக் கொடுத்து அரை நிமிடம் அழ விட்டான்.
“இப்படி அழுதாடா அவளை அனுப்பி வைப்ப? போ மூஞ்சு கழுவிட்டு வந்து நல்ல படியா பை சொல்லு” என கராறாக கெளதம் சொல்லவும் நவீனும் அப்படியே செய்தான்.
தம்பி காரை நோக்கி வருவது கண்டு துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டாள் யசோ.
“போயிட்டு வாக்கா” என அழாமல் சொன்னான் நவீன்.
காரின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான் கெளதம். பின்னிருக்கையில் இருந்தவள் தன் மடி மீது தலை சாய்த்துக் கொண்டாள். அவளை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டான்.
இரயில் நிலையம் வரவும் இறங்கிய யசோவின் கண்கள் சிவந்து காணப் பட்டன. போர்ட்டர் யாரும் கிடைப்பார்களா என கெளதம் பார்க்க, இரண்டு டிராலிகளிலும் அத்தை கொடுத்த பைகளை வைத்து இழுத்து செல்ல ஏதுவாக வைத்து ஒன்றை தன் கையில் பிடித்துக்கொண்டு இன்னொன்றை கெளதம் பக்கம் வைத்து விட்டு அவனது முகத்தை பார்த்தாள்.
“இழுத்திடுவியா யசோ?” என்றான்.
“ம்ம்…” என இலகுவாக சொன்னாள்.
இரயில் ஏறிய பின் கெளதம் சொன்ன பக்கவாட்டு இருக்கையில் அமைதியாக அமர்ந்து கொண்டாள். பயணப் பொதிகளை பத்திர படுத்தினான் அவன். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்திருந்தாலும் அவளின் மனமெல்லாம் தம்பியே.