ஆயிரத்தில் அவள் ஒருத்தி -6

அத்தியாயம் -6

தம்பியுடன்தான்  இருந்தாள் யசோ. உன் சித்தப்பாவை பார்த்து வரலாம் என யசோவை கிளம்ப சொன்ன கெளதம் நவீனை பார்த்து, “நீயும்தான் டா” என்றான்.

நவீன் தன் அக்காவை பார்க்க வேகமாக வந்து அவனது முகத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டவன், “ஏன் நான் சொன்னாலாம் கேட்டுக்க மாட்டியா, அக்காதான் பெர்மிஸன் தரணுமா? அவளை பார்க்காம எனக்கு பதில் சொல்லுடா” என்றான்.

“விடுங்க அவனை” என யசோ பதற, நவீன் வெட்க சிரிப்புடன், “நீங்க சொன்னாலும் கேட்டுப்பேன் மாமா, வர்றேன்” என்றான்.

“சரி ஓடு, உங்கக்கா மாதிரி அழுது வடியாம சீக்கிரம் ரெடியாகனும்” என சொல்லி அனுப்பி வைத்தான்.

யசோவும் நகர பார்க்க, அவளை விடாதவன் “என்ன பண்ணிட்டேன் அவனை? ஓவர் ரியாக்ட் பண்ற நீ” என்றான்.

“அது… டக்குனு டென்ஷன் ஆகிட்டேன். ஸாரி” என்றாள்.

“ஹையோடா ஏதாவது சொல்லி  சண்டை போடுவேன்ல பார்த்தேன். இவ்ளோ சீக்கிரம் தங்கள் தாழ்மையுள்ள மோட்க்கு வந்திட்ட?”

“அதெல்லாம் இல்லை, நான் நார்மலாதான் இருக்கேன்” என சொல்லி சென்றாள்.

கெளதம் தயாராக மாடிக்கு சென்று விட்டான்.

அத்தைக்கு காலை உணவு தயாரிக்க உதவி விட்டுத்தான் மாடிக்கு சென்றாள் யசோ.

கெளதம் சட்டையை இன் செய்து கொண்டிருக்க, அங்கு வந்த யசோவிடம், “இன்னும் கிளபலையா நீ?” என அதிருப்தியாக கேட்டான்.

“என் ட்ரெஸ் எல்லாம் இங்கேதான் இருக்கு, நீங்க ரெடி ஆனதும் வரலாம்னு இருந்தேன்” என்றாள்.

“முன்னாடியே சொல்லியிருந்தா நீயே ஃபர்ஸ்ட்  கிளம்பியிருக்கலாமே? நான் வெயிட் பண்ணியிருப்பேன்”

“இப்பவும் வெயிட் பண்ணலாமே?” என அவள் சொல்லவும், “நீ சரியான ஆளுதான்” என சொல்லி கீழே சென்று விட்டான்.

வீட்டு பிரச்சனைகள் எல்லாம் விரைவில் சரியாக போகிறது என்ற நினைவில் அருணா உற்சாகமாக இருந்தார். தள்ளி வைத்திருந்த மகன்களை சேர்த்துக் கொள்ள அப்பா தயாராகி விட்டார் என காலையில் காபி குடிக்கும் போதே அம்மாவிடம் சொல்லியிருந்தான் கெளதம்.

 இப்போது கூடுதலாக இன்னோரு நற்செய்தியும் அவரை வந்தடைந்திருக்க அவருக்கு தலைகால் புரியவில்லை.

“கூட இருக்கிறவனை விட்டுட்ட, இல்லாதவங்க உன்கூட சேர போறாங்கன்னதும் றெக்கை கட்டி பறக்கிற போலம்மா” என்றான் கெளதம்.

ஹேமா கருவுற்று இருக்கிறாளாம். இப்போதுதான் அம்மாவுக்கு தகவல் சொல்லியிருந்தான் குணா. அதைப் பகிர்ந்த அருணா, “ஏன்டா ஒரு எட்டு போயி பார்த்திட்டு வரலாமா? உங்கப்பா வர மாட்டார், தனியா போயி பார்க்க ஒரு மாதிரி இருக்கு” என்றார்.

அவனுக்கு அப்படி சொன்ன அம்மாவை  பார்க்க பாவமாகி விட்டது. குணாவிடம் தெரிவித்து கூட அழைத்து செல்ல  சொல்லலாம். ஆனால் அப்படி விட அவனுக்கு மனமில்லை.

அம்மாவையும் தயாராக சொன்னவன், “முதல்ல யசோ சித்தப்பா கடைக்கு போயிடலாம். அப்புறம் உன்னை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்” என்றான்.

அப்பாவிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிடு என அந்தப் பொறுப்பையும் மகனிடமே கொடுத்து விட்டு தயாராக ஓடிச் சென்றார் அருணா.

செய்தி அறிந்த உடனே போக வேண்டுமா எனதான்  கேட்டார் சண்முகம்.

“அம்மாக்கு நகையோ புடவையோ வாங்கி கொடுத்து சந்தோச படுத்த முடியுமா ப்பா, முடியாதுதானே? எதையும் ஆராய வேணாமே, அவங்க விருப்பத்துக்கு விடுங்க” என்றான் கெளதம்.

“சரிதான், ஆனா யசோவை அங்க…”

“அதெல்லாம் நான் பார்த்துகிறேன் ப்பா” என மகன் சொல்லவும் மேலும் ஏதும் சொல்லாமல் விட்டு விட்டார் சண்முகம்.

அப்பாவிடம் சொல்லி வாடகை காருக்கு ஏற்பாடு செய்து கொண்டான். காலை உணவை வீட்டிலேயே முடித்துக் கொண்டு சண்முகத்தை தவிர மற்றவர்கள் புறப்பட்டார்கள்.

காரில் செல்கையில்ஹேமா விஷயத்தை மருமகளிடம் பகிர்ந்த அருணா, “சீக்கிரம் நீயும் நல்ல சேதி சொல்லணும்” என்றார்.

யசோ அமைதியாக இருக்க, “அம்மா… கொஞ்ச நேரம் நீயும் அவளை போலவே அமைதியா இருந்தா எனக்கு நல்லாருக்கும்” என்றான் கெளதம்.

பெரிய மகனின் பிள்ளைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டார் அருணா. அவர்தான் சல சலத்தது, மற்றவர்கள் கப்சிப்.

ஸ்டோர் வந்து விட்டது. இவர்களின் வருகை பற்றி கருணாவுக்கு முன்னரே தெரியாது. ஆனால் கௌதமுடன் யசோ செல்கிறாள் என்ற விவரம் சண்முகம் மூலமாக தெரியும்.

 தன்னிடம் மரியாதையாக சொல்லிக் கொள்ள கெளதம் வந்ததில் அவருக்கு சந்தோசம். அனைவருக்கும் பழச்சாறு வரவழைத்து பருக கொடுத்தார்.

அண்ணனின் பிள்ளைகள் மீது அக்கறை உண்டென்றாலும் அதிகமாக எல்லாம் பேச மாட்டார். அவரது பெண்களிடமே அவர் அப்படித்தான். இருபது நிமிடங்களுக்கு மேல அங்கே இருந்து என்ன செய்வதென்றே அவர்களுக்கு தெரியவில்லை.

ஹேமா கருவுற்றிருக்கும் செய்தி அறிந்ததில் மகிழ்ச்சி, அவளை காண செல்கிறேன் அண்ணா என்றார்  அருணா.

‘அப்படியா நானும் அங்கு போக வேண்டுமா?’ என யோசனையானாள் யசோ.

“இதை சண்முகம் சொல்லவே இல்லையே. குணா மாப்பிள்ளைக்கு தெரியமா?” என விசாரித்தார்.

அவனுக்கு தெரியும், வீட்டில்தான் இருக்கிறான் என அருணா சொல்லவும்,  “சரி,எனக்கு இங்க வேலை அதிகம், அதனால உங்களோட வர முடியாத நிலை, உங்க மருமகளை  நீங்க போய் பாருங்க” என முடித்துக் கொண்டார் கருணா.

அவர்களும் விடைபெற்று கிளம்பி விட்டனர்.

 “நீ உன் அக்காலாம் ஏன் இப்படி அளந்து அளந்து பேசுறீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன் டா, எல்லாம் குடும்ப ஜீன்டா” என நவீனை கிண்டல் செய்தான் கெளதம்.

நவீன் சிரித்து வைக்க, “அதுக்குன்னு இவ்ளோ சப்புன்னு பேசக்கூடாது அந்த அண்ணா!” என அலுத்துக் கொண்டார் அருணா.

வீட்டை நெருங்கையிலேயே யசோவுக்கு முகம் மாறி விட்டது, நவீன் கூட அடிக்கடி அக்காவை பார்த்தான்.

அங்கிருந்த பெரிய துணிக்கடையில் காரை நிறுத்த சொன்ன கெளதம், “நவீனுக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடு யசோ, உனக்கும் என்ன வேணுமோ வாங்கிக்க. நான் இங்க வந்ததும் கால் பண்றேன்” என்றான்.

எதுவும் வாங்கும் எண்ணமில்லை என்றாலும் சித்தியை காண தேவையில்லாமல் இங்கேயே நேரத்தை ஓட்டி விடலாம் என நினைத்த யசோவிடத்தில் அப்பாடா என்ற பாவம்.

முதல் ஆளாக மலர்ந்த  முகத்துடன் இறங்கிக் கொண்டான் நவீன்.

அந்த வீட்டில் இருந்த வரை யசோவிடம் செலவுக்கென ஏதாவது பணம் தருவார் கருணா. மற்றபடி நவீனின் படிப்பு செலவையும் மற்ற தேவைகளையும் அவரே பார்த்துக் கொள்வார். எனவே யசோவின் கையில் அதிக பணப் புழக்கம் இருக்காது.

மாத வருமானத்தில் இவர்களுக்கு உண்டான பணத்தை வங்கியில் செலுத்தி வருகிறார் கருணா. அவரை பொறுத்த வரை யசோவுக்கு விவரம் போதாது, நவீன் சிறுவன். கௌதமுடன் சுமூகமான உறவுநிலை இல்லாத காரணத்தால் அண்ணன் மக்களின் பங்கு இப்போதும் வங்கிக் கணக்குக்கே செல்கிறது.

யசோ புகுந்த வீடு வந்த பின்னர் எதையும் கேட்கும் படி இல்லாமல் நன்றாகவே பார்த்துக் கொண்டார் அருணா. வெளியில் அழைத்து செல்லும் போது இருவருக்குமே கையில் பணம் கொடுப்பார் சண்முகம். அவள் ஏதாவது செலவு செய்திருந்தால்தானே?

ஆகவே இப்போது கையில் பண்ணமிருக்க, கடைக்கு செல்ல தயங்கவில்லை அவள்.

“கார்டுதான் கைல வச்சிருக்கேன், நீ வாங்கிட்டே இரு, நான் வந்ததும் பில் பண்ணிக்கலாம்” என கெளதம் சொல்ல, பரவாயில்லை அக்கறை இருக்கிறதுதான் என நினைத்துக்கொண்டாள் யசோ.

“என்னடா இது, ஏன் அவங்கள இறக்கி விடுற?” என சத்தம் போட்டார் அருணா.

“மரியாதை இல்லாத இடத்துக்கு இவங்க எதுக்கு? நான் கூட உனக்கு துணைக்குத்தான் வர்றேன்” என்றான் கெளதம்.

“அதுக்கில்லடா, என்ன இருந்தாலும் அவ அக்காதானே ஹேமா? இப்ப ஓர்ப்படி வேற…” என இழுத்தார் அருணா.

“ஹஹான் அதனால? ம்மா… ஹேமாவுக்கும் இவ தங்கைதான், நினைச்சிருந்தா குணா மூலமா இவகிட்ட பேசியிருக்கலாம். இந்த கோசிஸ்டர் கதையெல்லாம் விடாத, அப்படி பார்த்தா யசோதான் ஹேமாவுக்கும் முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்தது.  வழியக்க விழுந்து பிரண்டு இவ எந்த சொந்தத்தையும் பிடிச்சுக்க வேணாம்” என்றான் கெளதம்.

யசோ இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள்.  முன் இருக்கையில் இருந்தவன் நன்றாக பின் பக்கம் திரும்ப, உடனே பார்வையை திருப்பிக் கொண்டாள். கண்டுகொண்ட கௌதமுக்கு ஒரு நொடி என்ன பேச வந்தோம் என்றே மறந்து போனது.