அத்தியாயம் – 8 

வகுப்பு நேரங்கள் தவிர்த்து,  நாட்கள் கடினமாக சென்று கொண்டிருந்தது கீர்த்திக்கு. அவளே கடினமாக்கிக் கொள்கிறாள் என்று புரிகிறது. விட்டு வெளியே வருவதற்கான வழிதான் புரியவில்லை. 

செக்குமாடு கணக்காக மனம் ஒரே விஷயத்தை சுற்றி வந்தது. மூளைக்கும் தெளிவாகத் தெரிகிறது, ஜோவிற்கு ஷீத்தல் அருமையாக பொருந்திடுவாள். ஷீத்தலுக்குமே ஜோவின் அன்பும் அனுசரணையும் கிடைத்தால் அற்புதமாக வாழ்க்கையில் மிளிர்வாள். இருவருக்கும் பிறக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள் என்பது வரை புரிகிறது. ஊஞ்சலாடும் அவளது மனதைத்தான் கீர்த்திக்கு புரிந்துகொள்ள முடியவில்லை. 

ஒரு நேரம் ஜோவிற்காக யோசிக்க, கண்டிப்பாக தான் விலகி நிற்க வேண்டும். அவன் வாழ்வு சிறக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளும் மனம், அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டாலே பொறாமையில் கனலாகக் தகிக்கிறதுு. அல்லது நான் யாருக்கும் தேவையில்லை. என் மனமோ உணர்வுகளோ  ஒரு பொருட்டல்ல என்று கழிவிரக்கத்தில் மூழ்குகிறது.  

இருவரிடமிருந்தும் சில  நாட்களாக விலகியிருக்கிறாள். பாவம் ஷீத்தல், ஒரு கட்டத்தில் அவளது ஜோ புராணம் கேட்க முடியாமல், “ஷீத்தல் உன் ப்ரசனல்ங்கறது மத்தவங்களுக்கு தேவையில்லாதது. இப்படி அவர்கிட்ட பேசினது எல்லாம் எனக்கு தெரிய வேண்டிய அவசியமே இல்லை. எனக்குன்னு இல்லை யாருக்குமே. கொஞ்சம் நாள் நாம தேவைக்கு பேசினா போதும்.”, என்று புண்படுத்திவிட்டாள். 

உணவு நேரமும் இப்போது சேர்ந்து உண்பதில்லை. ஓரிரு முறை அவள் உண்ணும் முன்பு ஷீத்தல்  உண்டு விட்டு, டப்பாவை கழுவ எடுத்துச் செல்ல, உடனே ஜோவும் எழுந்து அவளோடு சென்றுவிடுவதைப் பார்த்தாள். மறு நாள் இவள் வேகமாக உண்டு எழ, இந்த முறை அவன் ஷீத்தல் முடிக்க காத்திருந்ததைப் பார்த்ததும் கொதித்துப் போனாள். வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று புரிந்து மறு நாளிலிருந்து வரவில்லை என்று கூறிவிட்டாள். 

“கீர்த்தி, ஏன் வர மாட்டேங்கற? நானும் ஜோ சாரும் மட்டும் சேர்ந்து சாப்பிட்டா ஒரு மாதிரியா பேசப் போறாங்கன்னு பயமா இருக்கு”, ஷீத்தல் மறு நாள் அழைக்கவும், “உன் போதைக்கு நான் ஊறுகாய் இல்லை”, என்று கடித்துவிட்டிருந்தாள். 

வாடிய முகத்தோடு தனியாக அமர்ந்து உண்ணும் ஷீத்தலைக் காண பொறுக்க முடியாது, அவளுடன் சென்று அமர்ந்தாள் கீர்த்தி.  

“ஷீத்து, பழையபடி நாம இரண்டு பேர் மட்டும் சாப்பிடலாம். உனக்கு ஜோசஃப் சார் கூட பேசணும்னா வேற நேரம் பார்த்துக்கோ. நாம தனித்தனியா உட்கார்ந்து சாப்பிட்டாக்கூட பேச்சு வரும்தான்.” 

வெள்ளைகொடி காட்டி பேசுபவளை பார்த்த ஷீத்தல், “அவர் கூட இருந்தா உனக்கு என்ன கீர்த்தி? நாங்க ஒன்னும் உன்னை சேர்க்காம தனியா பேசலையே, பொதுவாத்தான பேசறோம்.” 

அவள் கேட்பது நியாயம்தான். உதட்டைக் கடித்து, கண் மூடி ஒரு சில நொடிகள் நிதானப்படுத்திக்கொண்டவள், “எனக்கு உங்க ப்ரைவசிக்கு  நடுவுல அதென்ன சொன்ன…ஆங்… கரடி ..கரடி மாதிரி ஃபீல் ஆகுது. இதுக்கு மேல என் கூட சேர்ந்து சாப்பிடறதும் சாப்பிடாததும் உன் இஷ்டம்”, என்று  நகர்ந்து விட்டாள். 

இருவரும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதற்கே தாங்கவில்லை. இதில் ஜோ ஷீத்தலை விரும்பித் தொலைத்தால்? அவனது கனிவும், எப்போதாவது அவனையும் மீறி வெளி வரும் அந்த உரிமையும் ரசனையுமான பிரத்யேகப் பார்வையையும் ஷீத்தலிடம் என்று நினைக்கும்போதே கையிலிருந்த தேநீர் கோப்பையை பறக்கவிட்டிருந்தாள். நல்ல வேளையாக வீட்டிலிருக்கவும் யாரும் பார்க்கவில்லை. 

சிதறிக்கிடந்த கோப்பையை பார்த்தவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. தன் வாழ்க்கை இப்படி சிதறிப்போன நொடிகள் தோன்ற உடல் தூக்கிப் போட்டது. 

படபடக்கும் நெஞ்சை நீவிவிட்டு நீண்ட மூச்சுகளை எடுத்து கொண்டாள். ‘இல்லை, எல்லாரும் அவங்க வாழ்க்கையை வாழும்போது நான் மட்டும் தேங்கி இருக்க மாட்டேன். இது என்னை கட்டிப்போடாது. போடக் கூடாது”, என்று சொல்லி, வேகமாக இடத்தை சுத்தம் செய்தவள் மடிக்கணினியை எடுத்து வைத்து, வேறு வேலை தேட ஆரம்பித்தாள். 

பக்கத்து பிளாக்கில் இருந்த ஜோவிற்கு அழைத்திருந்தாள் ஷீத்தல். “ஜோ சர். அடுத்து என்ன செய்யறதுனாலும் என்னை கோர்த்து விடாதீங்களேன் ப்ளீஸ். கீர்த்தி என் மேல செம்ம கடுப்புல இருக்கா. இவ்வளவு கோவம் அவளுக்கு வரும்னு இப்பத்தான் தெரியுது”, கெஞ்சலாக வந்த விண்ணப்பத்தை சிரித்தபடியே நிராகரித்தான் ஜோசஃப். 

“என் காதல் நிறைவேற வாக்கு குடுத்திருக்க ஷீத்தல். இப்படி பாதியில விட்டா எப்படி?” 

“நீங்க சொன்ன காலேஜ் லவ் ஸ்டோரி, ப்ரேக்-அப் ஆன அப்பறமும் இப்படி நாடு விட்டு நாடு அவளை தேடி வந்தது எல்லாம் கேட்டு ஒரு மயக்கதுல வாக்கு குடுத்துட்டேன். மன்னிச்சி விட்டுடக்கூடாதா?” 

“ஹஹாஹா…குடுத்த வாக்கு குடுத்ததுதான். ஆனா உன் கஷ்டமும் புரியுது. கொஞ்சம் பொறு. இன்னும் ஒரு ப்ளான். அது…” 

“யம்மா… உங்க கோலாபூரி செருப்பு ப்ளானுக்கு சத்தியமா  நான் செருப்பாலயே அடி வாங்கியிருப்பேன். ஜஸ்ட் மிஸ். இன்னொரு ப்ளானா?”, அலறினாள். 

“ஜஸ்ட்ல மிஸ்சானது நான். வர்தா புயல்  கிளம்பி  நேரா உங்களை தாக்கத்தான் வருதுன்னு நீ வார்னிங் குடுக்கவும்தான் ஜிம்ல அவளை கொஞ்சம் சமாளிச்சேன். நாம ப்ளான் போட்டதுவிட, போடாதப்போ எதேச்சையா அவ கண்ணுல மாட்டினது அவளை எப்படி ரியாக்ட் பண்ண வெச்சுது பாரு!”, ஜோ சிலாகிக்க, 

“பார்க்ல அவ வந்ததும், என்னை அம்போன்னு அவகிட்ட விட்டுட்டு ஓட்டமெடுத்த வீரர் தான நீங்க? பேசுங்க பேசுங்க”, ஓட்டினாள் ஷீத்தல். 

“உனக்கு ஏத்தம் கூடி போச்சு. இரு கீர்த்தி எதிர்க்க  உன்னை ஷீத்துமான்னு கூப்பிட்டு வெக்கறேன்”, மிரட்டினான். 

“பாவம் என் பிரெண்டு. அவ அப்பா அம்மா புரிஞ்சுக்காம வேற மதம்னு ஒத்துக்கலைன்னா, அவளும்தான் என்ன பண்ணுவா? இத்தனை வருஷம் பிரிஞ்சிருந்தும்  அவங்க மனசு மாறலை. இந்த பொண்ணு அவங்களை தூக்கிப்போட்டுட்டு உங்களை கல்யாணம் பண்ணலாம். அதை விட்டுட்டு நீங்க வேற யாரையாவது கட்டிக்கோங்கன்னு சூப் சாங் பாடுது. என்னவோ போங்க. இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் படிக்க, படமா பார்க்கத்தான் லாயக்கு”, அலுத்துக்கொண்டாள் ஷீத்தல். 

அவளிடம் அவ்வளவுதான் கூறியிருந்தான். பெற்றவர்களை மீற முடியாது, தன்னையும் நிராகரித்து, வேறு கல்யாணமும் வேண்டாம் என்று இருக்கிறாள். இனியும் பொறுக்க முடியாது, அவள் முடிவை மாற்ற வேண்டித்தான் துபாய் வந்தேன் என்று சொல்லியிருந்தான். மற்றது ஷீத்தலுக்கு தேவையில்லாதது. 

நல்ல பெண். அவன் குடும்பத்திற்கு ஏற்றவள், அவனுக்கல்ல, அவன் தம்பி ஸ்டீஃபனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது. அவன் கொஞ்சம் கலகலப்பு பேர்வழி. இரண்டாவது மகன் என்பதில் செல்லம் அதிகம் பொறுப்பும் குறைவு. அவன் தந்தை இறந்த பின்தான் ஸ்டீஃபனுக்கு பொறுப்பு கொஞ்சமாவது வந்தது. ஆனாலும், ஷீத்தல் மாதிரி ஒரு பெண் அவன் வாழ்க்கையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அவன் அன்னைக்குமே அவளோடு பொருந்திப்போகும் என்பதில் சந்தேகமே இல்லை. கீர்த்தியோடு தன் வாழ்க்கையே எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாதிருக்கையில், அவன் அன்னையோடு அவள் இணக்கமாக இருப்பாளா என்ற திசைக்கெல்லாம் எண்ணம் செல்லவேயில்லை. 

“ஜோ சார்? இருக்கீங்களா?” 

“ஹான்… இருக்கேன். யோசிச்சிட்டு இருந்தேன். அடுத்த ப்ளான் கேளு. மேடம் டெய்லர் அம்பதாவது பிறந்த நாள் வருது. அடுத்த சனிக்கிழமை எல்லாருமா சேர்ந்து அவங்களுக்கு ஒரு பார்ட்டி தரோம்.” 

“ஓஹ்? இது எப்போ? எனக்குத் தெரியாதே?” 

“அதுதான் நாளைக்கு எல்லாருக்கும் சொல்வாங்க. மேடம்க்கு தெரியாம சர்ப்ரைஸ் பண்ணலாம்னு ஐடியா. அவங்க அசிஸ்டென்ட் ஜென்னிதான் ஐடியா குடுத்தாங்க. இங்க நம்ம ஸ்கூல் பார்ட்டி ஹால்லயே வெச்சிக்கலாம். வீட்டுலர்ந்து பாட் லக் மாதிரி செய்து எடுத்துட்டு வரவங்க வரலாம். வெளிய ஆர்டர் பண்ண விருப்பப்படறவங்க பண்ணலாம்னு சொல்லப் போறாங்க” 

“ஹ்ம்ம்… நானெல்லாம் வீட்டுலதான் செய்துட்டு வரணும். மசால் வடை போடறேன். முன்னாடி ஒரு தரம் பண்ணது, எல்லாருக்கும் பிடிச்சிருந்தது”, என்று சொன்னவளை இடைமறித்து, 

“நோ. நீ உங்க திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி பண்ணப்போற. அதுவும் நான் விருப்பப்பட்டு கேட்டதால சொதி பண்ணப் போற. அதுக்கு காம்பினேஷனா, கீர்த்தியை ஆப்பம் பண்ணச் சொல்லப் போற”, திட்டத்தை அடுக்கினான் ஜோ. 

“கர்த்தரே…காப்பாற்றும்”, வேண்டினாள். 

“ஆமென்… “ 

“இது எப்படி இருக்குத் தெரியுமா? சந்திரமுகி படத்துல தலைவர் சொல்லுவாரே… சொல்லு சொல்லிப் பாரு அப்ப தெரியும்னு. அந்த மாதிரி  இருக்கு. இந்த ஆப்பம் சொதி காம்பினேஷனுக்கு எதாவது ஃபளாஷ் பேக் இருக்கா? அதுவும் சொல்லிடுங்க. கோலாப்பூரி செருப்புக்கு அவகிட்ட உங்க கால் அழகை வர்ணிக்க சொன்னீங்க. இதுக்கு எப்படி, விரலழகா? அந்த ஆப்பத்தை பிச்சி சொதியில தொட்டு சாப்பிட அந்த விரல் மடியும்போது மனச மடிச்சிட்டீங்கன்னு எதாவது டையலாக் அடிச்சிவிடணுமா நானு?”, சற்றே ஆர்வமும், லேசான கிலியுமாக வந்தது ஷீத்தலின் குரல். 

அதில் அடக்கமாட்டாது சிரித்தான் ஜோ, “ஷீத்தல் நிஜமா நீ அல்டிமேட். நான் இப்படி சிரிச்சு பல வருஷமாச்சு.” 

“இதெல்லாம் பின்னாடி கீர்த்திக்கு தெரிய வரும்போது என்னை புர்ஜ் கலிஃபாலர்ந்து தள்ளிவிட்டாலும் விட்டுருவா. புதைக்கறதுக்கு எலும்பு துண்டு கூட கிடைக்காது”, வருத்தமாக வந்த ஷீத்தலின் குரலில், தன்னை கட்டுப்படுத்தியவன், 

“எல்லா பழியும் என் மேல போட்டுக்கறேன். அது அப்பறம். இப்ப சொதிக்கு வருவோம். இதுல ஒன்னும் ப்ளாஷ் பேக் எல்லாம் கிடையாது. நீ செய் மிச்சம் அப்பறம் பார்ப்போம்.  அண்ட் இந்த முறை நீ என்னைப் பத்தி எதுவும் வர்ணிக்க வேணாம். ஆனா கண்டிப்பா கலர் மாட்ச் பண்ணி ட்ரெஸ் பண்ணனும். சோ என்ன போடப்போறன்னு டிசைட் பண்ணிட்டு சொல்லு. பிங்க், பர்பிள்னு எதுவும் சொல்லிடாதம்மா. கொஞ்சம் நான் போடற மாதிரி இருக்கட்டும்” என்று வேண்டுகோள் வைத்து அழைப்பை துண்டித்தான்.