யசோ சாப்பிட  அமரவும் அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டான் நவீன். அவள் நினைத்தது போல அழவெல்லாம் இல்லை அவன். 

மேலே சென்று விடாமல் அங்கேயே இருந்த கெளதம்,  மீண்டும் கடைக்கு செல்லவிருந்த அப்பாவை  அங்கேயே நிறுத்தினான். 

“இன்னும் எவ்ளோ நாளைக்கு அண்ணனையும் குணாவையும் வீட்ல விடாம இருக்க போறீங்க? அம்மாவை நினைச்சு பார்க்க மாட்டீங்களா ப்பா?” எனக் கேட்டான். 

“அவங்க செஞ்சது சரியா?” 

“நீங்க எனக்கு செஞ்சது கூடத்தான் சரியில்லை, விட்டுட்டு போயும் திரும்ப வரலை நான்?” என்றவன் உணவு மேசை இருக்குமிடத்தை எட்டிப் பார்த்து விட்டு, “வெளில வாங்க நீங்க” என சொல்லி சென்றான். 

யசோவின் காதில் அவன் சொன்னது நன்றாகவே விழுந்திருந்தது. அருணாவும் நவீனும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை. 

கடைப் பையனை அனுப்பி வைத்து விட்டு கடையிலேயே அமர்ந்து கொண்டார் சண்முகம். ஆட்கள் யாரும் வராததால் அங்கே வைத்தே பேசினான் கெளதம்.

 சகோதரர்கள் இருவரும் தவறு செய்யவில்லை என வாதாடவில்லை நான்,  அம்மாவுக்காக  அவர்களை இங்கே வரவையுங்கள் என நல்ல விதமாகவே சொன்னான். 

“நானெல்லாம் கூப்பிட முடியாது, நீ பேசிக்க, இல்லைனா உன் அம்மாவை விட்டு கூப்பிட சொல்லு. எனக்கொன்னும்  பிரச்சனை இல்லை” என்றார் சண்முகம். 

அப்பா இந்தளவு இறங்கி வந்ததே பெரிது என நினைத்தவன் விடுமுறை நாளில் சகோதரர்கள் இருவரிடமும் பேச வேண்டும் என தீர்மானித்துக் கொண்டான். 

“குணா அங்க இருக்கான்னு ஒன்னும் உன்னை அங்க போக வேணாம்னு சொல்லலை. யசோ இங்க வந்து எத்தனை மாசம் ஆகுது? ஒரு தடவ கூட இங்க வந்து எட்டிப் பார்க்கல அந்தம்மா. அங்க ஏன் நீங்க போகணும்னுதான் சொன்னேன்” என்றார் சண்முகம். 

“அதை நல்ல படியா கூட சொல்லியிருக்கலாம்ல ப்பா?”

“உன் அம்மா எதுக்கு அவளா என்னை தப்பா நினைச்சு பேசினா?”

“நீங்க ரெண்டு பேரும்தான் ப்பா உட்கார்ந்து பேசி சரி பண்ணிக்கணும். நவீன் சின்ன பையன், பேச்சுல சத்தம் கூடினாலே என்னவோன்னு நினைக்கிறான். கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க” 

“வாடா வா… ரெண்டு பேரும் இங்க வந்து ஏழு மாசம் ஆகுது? தொரை அப்போல்லாம் எங்க போனீங்க?” 

“என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அவசர கோலத்துல எல்லாத்தையும் பண்ணி வச்சிட்டு இப்ப கேள்வி கேக்காதீங்க ப்பா. இப்ப கூட நான் வரலைனா என்னை என்ன பண்ணியிருக்க முடியும் நீங்க?” என அவன் கேட்க, அவருக்கு கோவம்தான் என்றாலும் எங்கே யசோவை அழைத்து செல்ல மாட்டானோ என பயந்து அமைதி காத்தார். 

அப்பாவிடம் கடுமையாக பேசி விட்டோமே என வருந்தியவனும், “ஸாரிப்பா. குணாவோ கல்யாண் அண்ணாவோ இங்க வந்தா ஏதும் கோவமா பேசிடாதீங்க. அப்புறம்…” என ஏதோ சொல்ல வந்தான். 

“என்னடா என்ன பண்ணுவ? யசோவை வச்சு வாழ மாட்ட, அதானே? எனக்கு தெரியும்டா, அதைத்தான் சொல்லி மிரட்டுவன்னு. தினம் தினம் அந்த புள்ளைய பார்க்கையில  நெஞ்சு பதறுது. உன் கூட பொறந்தவனுங்கள வர சொல்லு, வேணும்னா நானே அவனுங்க கால்ல விழுந்து கூட்டிட்டு வந்து உன் அம்மாட்ட விடுறேன். அந்த புள்ளைய மட்டும் விட்றாதடா” என்றார். 

சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார் என மனதிற்குள் அலுத்துக் கொண்டே அவன் திரும்ப, இருவருக்கும் பால் எடுத்துக் கொண்டு வந்து நின்றிருந்தாள் யசோ. 

அப்பா சொன்னதை கேட்டு விட்டாளோ என சந்தேகமாக பார்த்துக் கொண்டே, “எப்ப வந்த?” எனக் கேட்டான். 

“இப்பதான்” என்றவள் பால் டம்ளர்களை அவர்களுக்கு கொடுத்து விட்டு சென்று விட்டாள். 

“தப்பு தப்பா யோசிக்காதீங்கப்பா. யசோவை அழைச்சிட்டு போறேன்னா என் வாழ்க்கையும் இருக்கு இதுல. எதை சொல்லியும் பிளாக் மெயில் பண்ணி அவளை கூட்டிட்டு போகல. திரும்ப இப்படிலாம் பேசாதீங்க. அவ காதுல விழுந்தா என்ன நினைப்பா?” என கெளதம் கேட்க, அவருக்கும் சங்கடமாகி விட்டது. 

“யசோக்கு கேட்ருக்காது, நான் பேசினதுக்கு அப்புறம்தான் வந்துச்சுடா” என சமாதானமாக சொன்னார் சண்முகம். 

“ஆளே இல்லாத கடைய எவ்ளோ நேரம் தொறந்து வச்சிருப்பீங்க? அடைச்சிட்டு வாங்க” என்றான். 

“இல்லையில்ல  பத்து மணி வரைக்குமே ஆளுங்க வருவாங்க. நீ போ” என அவர் சொல்ல, அவன் சென்று விட்டான். 

உறங்குவதற்கு அறைக்கு வந்த கெளதம் யசோ வருவாளா, வந்தால் எங்கு படுப்பது என்ற சிந்தனையுடன் இருந்தான். 

அழைத்து செல்ல முடிவெடுத்து விட்டான், அவளிடம் பேசி சம்மதிக்கவும் வைத்து விட்டான், தான் நன்றாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே அம்மாவின் முன்னிலையில் கல கலப்பாக தன்னை காட்டிக் கொள்கிறான். நிஜத்தில் மனதிற்குள் ஆயிரம் தடுமாற்றங்கள். 

சிறிது நேரம் நடை போட்டான். அவள் வரவே இல்லை. மீண்டும் அழுகிறாளோ என நினைத்து கீழே சென்றான். 

நவீனின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரியவும் வெறுமனே சாத்தியிருந்த கதவை திறந்தான்.  நவீன் உறங்கியிருக்க, தம்பியின் காப்போர்டை ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள் யசோ. அறை வாயிலிலேயே நின்று அவளை வெளியில் வரும்படி அழைத்தான். 

அவள் வரவும், “எப்ப தூங்குறதா உத்தேசம், லைட்டையும் போட்டு வச்சுக்கிட்டு அவனை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான். 

“இல்லை இப்ப தூங்கிடுவேன்” என்றாள்.

“இங்கேயா?” என அவன் கேட்டதற்கு ஆமாம் என்றாள். 

தன்னுடன் தங்க விரும்பாமல் இப்படி செய்கிறாள் என நினைத்துக்கொண்டவன், “நாளைக்கு விடு, டிராவல் பண்ணிட்டு இருப்போம். நாளான்னிலேருந்து என்ன செய்றதா இருக்க?” எனக் கேட்டான். 

அவள் என்ன சொல்வதென பார்க்க, “ம்ம்…சொல்லு. இனிமே இந்த பிரம்ம ராட்சஷன்கிட்டேருந்து எப்படி தப்பிக்க போற?” எனக் கேட்டான். 

“இப்படிலாம் ஏன் பேசுறீங்க?” 

“அப்புறம் ஏன் நீ மேல வரலை? வாழ்ந்து பார்க்கலாம்னு சொன்னேன்தான். உடனே எல்லா விதத்திலேயும் இல்லை. புரிஞ்சுதா? என்னை பத்தி எவ்ளோ மோசமா நினைச்சிருந்தா அங்க வராம இங்கேயே தூங்க நினைப்ப?”

“நான் எப்படியும் நினைக்கல உங்களை”

“அப்படின்னா?”

“மோசமாவும் நினைக்கல, நல்லாவும் நினைக்கல. அத்தைதான் இன்னிக்கு உங்க கூட தங்க கூடாதுன்னு சொன்னாங்க”

“அம்மாட்ட கேட்க மாட்டேன்னு நீயா கதை சொல்றியா? அவங்கதான் நான் எப்ப உன்னை கூப்பிட்டுப்பேன்னு காத்திட்டு இருந்தவங்க, அவங்க ஏன் அப்படி சொல்ல போறாங்க?” 

“அவங்கள்ட்டேயே கேளுங்க” 

“அப்ப உனக்கு தெரியும்?”

அவள் ஒன்றும் சொல்லாமல் அறைக்கு செல்ல நடந்தாள். அவளது கையை பிடித்துக்கொண்டான். 

அவள் கண்டனமாக பார்க்க, “இந்த உரிமைலாம் இல்லைனு முன்ன சொன்னதானே? இப்ப இருக்கு. ஏன் மேல வரலை நீ? நம்ம உறவை ஸ்மூத்தா கொண்டு போகணும்னு நான் மட்டும் ட்ரை பண்ணினா ஒர்க் அவுட் ஆகாது புரியுதா?” எனக் கேட்டான். 

“நான் பாட்டுக்கும்தான் இருக்கேன்? என்னை குத்தம் சொல்லாதீங்க”

“அப்பா பேசினது எதையும் கேட்டியா?” என அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருந்தாள். 

“அப்ப கேட்ருக்க. அவர் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசினார். நான்…”

“எனக்கு புரியுது” என்றாள். 

“என்ன புரிஞ்சுது?” 

“என்னை அழைச்சிட்டு போறது உங்க குற்ற உணர்ச்சியால மட்டும்தான், அதுக்கும் வேற எதுக்கும் சம்பந்தம் இல்லை”

“இவ்ளோ அறிவாளியா இருக்க வேணாம் நீ” 

“கையை விடுங்க”

“ம்ம்ம்… அப்படியே அம்மா என்ன சொன்னாங்கன்னும் தெளிவா சொல்லிடு. மண்டைய குடையுதுல்ல” 

“அது… அத்தை கூட உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல”

“எந்த வகைல?”

“நீங்க நிஜமாவே என் கூட வாழ ஆசை படுறீங்கன்னு. நாள் சரியில்லாததால இன்னிக்கு உங்க கூட நான் தங்க வேணாம்னு…” என்றவள் மேலே சொல்ல தயங்கி அமைதியானாள். 

அவளது முகத்தை பார்த்தான். எந்த உணர்வுகளையுமே பிரதிபலிக்காமல் இருந்தாள். 

‘நான் நினைக்கிறது விட அழுத்தம்தான் இவ’ என நினைத்துக் கொண்டவன் அவளது கையை விட்டு விட்டான். அவனை பார்க்காமலேயே அறைக்குள் சென்று விட்டாள். 

“ஹப்பா எம்மேல எவ்ளோ நல்லெண்ணம் என் அம்மாக்கு!” என வாய் விட்டு சொல்லிக் கொண்டே மாடிக்கு சென்றான் கெளதம்.