மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருக்க யசோ மேலே வரவே இல்லை. அவளது உடமைகள் எல்லாம் இங்கே இருக்க, பேக் செய்யாமல் என்ன செய்கிறாள் என கௌதமுக்கு யோசனை. ஒரு வேளை வர மாட்டாளோ என அச்சமாக கூட இருந்தது.
கேட்டு தெளிவு பெற்று விட எண்ணி அவனே கீழே சென்றான். சமையலறையில் மாமியாரும் மருமகளும் சமைத்துக் கொண்டிருந்தனர்.
“என்னம்மா இவ எதுவும் எடுத்து வச்சுக்கவே இல்லை போல. என்னதான் சொல்றா உன் மருமக?” என கொஞ்சம் வேடிக்கை பேச்சாகவே பேசினான் கெளதம்.
யசோவின் முகம் சரியில்லை. வானலியில் சட்னிக்கு வதக்கிக் கொண்டிருந்தவள், “போதுமாத்தை, அடுப்பை ஆஃப் பண்ணிடவா?” எனக் கேட்டாள். குரலும் அழுதிருக்கிறாள் என அறிவித்தது.
“ரெண்டு நிமிஷம் கழிச்சு ஆஃப் பண்ணு யசோ. இன்னிக்கு லேட் ஆகிடுச்சு பாரு, அவன் வந்திடுவான்” என அவசர படுத்தினார் அருணா.
“ம்மா நான் இங்கதான் இருக்கேன், காது கண்ணெல்லாம் நல்ல கண்டிஷன்ல இருக்காம்மா உனக்கு?” என யசோவை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே கேட்டான்.
“ஏன் சரியில்லைனு சொன்னா கூடவே இருந்து பார்த்துக்க போறியா?” என அருணாவும் மகனிடம் வம்பு பேசினார்.
கை தட்டி “ஹ ஹா…” என சிரித்துக் காட்டி, “பிரமாதமா பேசுற. என்ன நடக்குது இங்க? இவளுக்கு என்னாச்சாம்? என்னோட வர முடியாதுன்னு சொல்றாளா?” என்றான்.
மகனை சுள் என பார்த்த அருணா, “இன்னிக்கு நாள் சரியில்லை, அதான் நாளைக்கு காலைல எல்லாம் எடுத்து வச்சுக்கன்னு நான்தான் சொன்னேன். நவீனை விட்டுட்டு போறது நினைச்சு ஒரே அழுகை, அதுல சாப்பாடு செய்ய லேட் ஆகிடுச்சு, டியூஷன் முடிச்சிட்டு இப்ப வந்திடுவான். போதுமா விளக்கம்?” என பட படத்தார்.
வாய் திறக்காமலும் இவன் பக்கமும் பாராமலும் வேலையிலேயே கண்ணாக இருந்தவள் மீதே கண் வைத்திருந்தவன், “எதுக்கு அழணும்? இங்க நல்லா பார்த்துக்க மாட்டியா நீ? உன்னை நம்பலையா உன் மருமக?” எனக் கேட்டான்.
இப்போது அவன் பக்கமாக திரும்பி கண்டனமாக பார்த்தாள் யசோ.
“எதுக்குடா வம்பு பண்ற, இடைல வந்து நின்னுகிட்டு கண்டதையும் பேசிக்கிட்டு… எனக்கு வேலை புரிய மாட்டேங்குது, வெளில போ நீ” என அதட்டிய அருணா, இட்லிகள் இருந்த ஹாட்கேஸை உணவு மேசையில் வைக்க சென்றார்.
“ எதுக்கு அத்தைக்கு எம்மேல கோவம் வர்ற மாதிரி மூட்டி கொடுக்குறீங்க? அவங்கள நம்பாம ஒன்னும் இல்லை, அவனை பிரிஞ்சதே இல்லை நான்” என யசோ சொல்லும் போதே மலுக் என கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“எது நான் மூட்டி கொடுத்தேனா? ஒருத்தர் இல்லாதப்போ அவங்கள பத்தி பேசினாதான் மூட்டி கொடுக்கிறது, நான் சும்மா ஜாலியா பேசினேன், அந்த பேச்சுல அம்மாக்கு கோவம் வந்திடுச்சா? நல்ல ஜோக், அதுக்கு அழுகை வேற”
“நீங்க சொன்னதுக்கொன்னும் அழல நான். என் தம்பிய நினைச்சு…”
“எதுக்கா இருந்தாலும் அழுதா எனக்கு பிடிக்காது. இங்க நவீன் நல்லா இருப்பான், அவன்கிட்டேயும் அழுது வைக்காத” என்றான்.
அவன் பேசும் தொனியே அவளுக்கு பிடிக்கவில்லை. மாலையில் மாடியில் பேசும் போது இளக்கமாக பேசியிருந்தான், இப்போது வேறுபாட்டை உணர்ந்தவளுக்கு இவருடன் எப்படி தனியாக வசிக்க போகிறோம் என பயமானது.
அடுப்பை அணைத்தவன், “என்ன யோசனை, இங்க வடை சட்டி தீய ஆரம்பிச்சிடுச்சு” என்றான்.
வானலியை பார்த்தவள், “அச்சோ!” என சொல்லி அடுப்பிலிருந்து வேகமாக இறக்கி வைத்தாள்.
“ஹேஹேய் மெதுவா, அந்த சட்டி கூட என்ன சண்டை?” என அவன் கேட்க, “என்ன வாடை யசோ? தீய வச்சிட்டானா இவன், எனக்கு தெரியும் இவன் இங்க நிக்கும் போதே” என சொல்லிக் கொண்டே வந்தார்.
இடுப்பில் கை வைத்து அம்மாவை முறைத்தவன், “ரொம்ப வேலை வாங்குறியாம், இவளுக்கு காது வலி வர்ற வரைக்கும் வாய் ஓயாம பேசுறியாம், உன்னை பத்தி குறை சொல்லிட்டே அடுப்பை பார்க்காம விட்டுட்டா, நீ என்னடான்னா என்ன சொல்ற?” என தீவிரமான தொனியில் சொன்னான்.
“அப்படியா சொன்னா?” எனக் கேட்டார் அருணா.
“நான் கொஞ்சம் பாலிஷ் பண்ணி சொல்றேன், இன்னும் மோசமா சொன்னா. என்ன ஏதுன்னு நல்லா கவனி” என சொல்லிக் கொண்டே அகன்றான்.
திகைத்து போய் நின்றிருந்த யசோவின் தோளில் தட்டிய அருணா, “இவன் அப்பாதான் ஒரே சீரியஸா பேசுவார், எம் புள்ளைங்க மூனுமே சிரிக்க சிரிக்க பேசுவானுங்க. அடிதடி வேற நடக்கும், அப்பா வர்ற சத்தம் கேட்டா ஆளுக்கொரு மூலைக்கு ஓடிடுவானுங்க” என பழைய கதை பேசினார்.
யசோ புன்னகைத்தாள்.
“கூடவே சுத்திட்டு நின்னுட்டியா, எனக்கே ஒரு மாதிரிதான் இருக்கு. ஹ்ம்ம்… அதுக்குன்னு எங்கிட்டேயே வச்சுக்க முடியுமா? நீ அவன் கூட வாழறத பார்த்தாதானே நிறைவா இருக்கும். அவ்ளோ சீக்கிரம் கோவமெல்லாம் பட மாட்டான், நான்தான் அவனை பத்தி நிறைய சொல்லியிருக்கேனே, அவனை கண்டு மிரளாத யசோ” என அவர் சொல்ல தலையாட்டிக் கொண்டாள்.
கெளதம் டிவியை போட்டுக் கொண்டு அமர, நவீனும் உள்ளே நுழைந்தான். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி, “வாங்க மாமா” என வாய் நிறைய அழைத்தான்.
குட்டி மச்சானை அருகில் அமர வைத்து நன்றாக பேசினான் கெளதம். எட்டிப் பார்த்த யசோவுக்கு தம்பியை காணவும் கண்ணீர் பெருகியது.
முன்னரே திட்டமிட்டிருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரிவை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். திடீர் என முடிவானதால் இப்போது கஷ்டம்தானே?
யசோவின் பெற்றோர் இறந்த போது நவீனுக்கு நான்கு வயது, இவளுக்கு பதினோரு வயது. பாட்டியும் ஒரு வருடத்தில் தவறிப் போனதால் யசோதான் அவனுக்கு அம்மாவாகிப் போனாள். அப்படித்தான் தம்பியை பார்த்துக் கொண்டாள்.
திருமண உறவே முறிந்து போகும் நிலை வந்த போதும் மிச்ச காலத்தை தம்பிக்காக வாழ்ந்து விடலாம் என தேறிக் கொண்டவள். தன் மாமனார் மாமியார் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்பதில் அவளுக்கு சந்தேகமே இல்லை.
நவீன் கல கலப்பான ரகம் இல்லை, எண்ணி எண்ணிதான் பேசுவான். உடல் உபாதை என்றால் கூட முகம் பார்த்து இவள்தான் கேட்டு அறிந்து கொள்வாள்.
அவனுக்கு ஏதாவது தேவை என்றால் அக்காவிடம்தான் வாய் விட்டு கேட்பான், அவனை விட்டு செல்வது அவளுக்கு கடினமாகத்தான் இருந்தது. அதை விட அவனுக்கு சொல்லி அவனை ஏற்றுக்கொள்ள செய்ய கூட அவகாசம் இல்லையே என நினைத்து வருந்தினாள்.
யசோவை நாளை தன்னுடன் அழைத்துப் போகும் விவரத்தை கௌதமே நவீனிடம் சொன்னான்.
“நாளைக்கேவா?” எனக் கேட்ட நவீனின் குரலில் வருத்தம் எட்டிப் பார்த்தது.
அக்காவை தேடிய அவனை தோளோடு அணைத்துக் கொண்ட கெளதம், “உன் படிப்ப என்னடா செய்றது? அதனாலதான் உன்னை எங்க கூட அழைச்சுக்க முடியலை. வீடியோ கால்ல பேசிக்கலாம். உனக்கு பார்க்கணும்னு தோணினா சொல்லு, நேர்ல அழைச்சிட்டு வர்றேன். நீயும் அங்க வரலாம்” என சமாதானமாக சொன்னான்.
தலையாட்டிக் கொண்டவன் தன் அக்காவை தேடுவதை மட்டும் நிறுத்தியிருக்கவில்லை.
“வேணும்னா அவளை விட்டுட்டு நான் மட்டும் போகவாடா?” எனக் கேட்டான் கெளதம்.
“வேணாம் வேணாம், அக்கா உங்க கூடதான் இருக்கணும் மாமா” என வேகமாக சொன்னான்.
“நாளைக்கு ஸ்கூலுக்கு லீவ் போடுறியா?”
“மேத்ஸ் டெஸ்ட் இருக்கே”
“கிளாஸ் டெஸ்ட்தானேடா? மிஸ்கிட்ட பெர்மிஸன் வாங்கிடலாம். நீ லீவ் போடுற” என்ற கெளதம் அம்மா என குரல் கொடுத்து அவரை வரவழைத்தான். நாளை மதிய உணவுக்கு வெளியில் செல்லலாம் என அறிவித்தான்.
சண்முகம் வரவும் ஆண்கள் சாப்பிட்டனர், சேர்ந்து சாப்பிடலாம் என அம்மாவையும் மனைவியையும் அழைத்தான் கெளதம்.
“ஏன் சித்தின்னா உன் அக்காக்கு ஸ்பெஷலா?” என கெளதம் கேட்டுக் கொண்டிருக்க,
“டேய் எதுக்கு தேவையில்லாத ஆளை பத்தி பேசுற? குடும்பம் நடத்த தேவையானது எல்லாம் வீட்ல இருக்கா? ஏதாவது பணம் வேணும்னா சொல்லு. நாளைக்கு பகல்ல கருணாகரனை நேர்ல பார்த்து சொல்லிட்டு வந்திடு, யசோவையும் கூட்டிட்டு போ. வீட்டுக்கு இல்லை, ஸ்டோருக்கு போ” என்றார் சண்முகம்.
“ஏன் வீட்டுக்கு போனாதான் என்ன?” என்றான் கெளதம்.
“எங்கேயாவது போ” என கோவப்பட்டார் சண்முகம்.
“அங்க உன் தம்பி இருக்கானாம்” என நொடித்தார் அருணா.
நவீன் மிரண்டு போய் பார்த்திருக்க, பேச்சை வளர்க்காமல் சாப்பிட மட்டும் செய்தான் கெளதம்.