வெளியில் இருந்த சண்முகம் என்னவோ ஏதோவென பயந்து போய்தான் மனைவியின் அழைப்பை ஏற்றார்.
“நாந்தான்…” என ஆரம்பித்தார் அருணா.
“நல்லா தெரியுது, சொல்லு” என்றார் சண்முகம்.
கௌதமின் வரவையும் அவன் சொன்னதையும் அப்படியே ஒப்பித்தவர், “யசோவோட வாழ முடிவு பண்ணிட்டான் போல அவன்” என்றார் அருணா.
சண்முகம் ஒன்றும் மனைவியை போல அக மகிழ்ந்து போய் விடவில்லை.
“நினைச்சு நினைச்சு பேசுவானா அவன்? வீட்டுக்கு வந்து பேசிக்கிறேன் அவன்கிட்ட” என கோவமாக சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார்.
கணவரை முணு முணுப்பாக திட்டியவர் யசோவிடம் சென்றும் விஷயத்தை பகிர்ந்தார். அவள் முகம் இறுக்கமாக இருக்க, “என்ன யசோ, உனக்கு சந்தோசம் இல்லையா?” என உள்ளே சென்ற குரலில் கேட்டார்.
“நீங்க இன்னும் சாப்பிடலையே, நேரமாகிடுச்சு அத்தை” என்றாள் யசோ. அருணாவுக்கு முகம் விழுந்து விட்டது. ஆனாலும் அவளிடம் வேறு பேசாமல் அவளையும் அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றார்.
அறைக்கு வந்த கௌதமுக்கு இப்போதுதான் ஆசுவாசமாக இருந்தது. அம்மா மூலமாக தன் எண்ணத்தை சொல்லியாகிற்று, இந்நேரம் அவரே அப்பாவுக்கும் யசோவுக்கும் சொல்லியிருப்பார். நாளையே அவளை அழைத்துக் கொண்டு சென்று விடலாம் என எளிதாக நினைத்துக்கொண்டான்.
சண்முகம் வீடு வந்த போது கெளதம் நல்ல உறக்கத்தில் இருந்தான். இரவில் பேசிக் கொள்ளலாம் என நினைத்து கடைக்கு சென்று விட்டார் அவர்.
யசோவுக்கு தெரியாமல் கணவரை காண கடைக்கு வந்த அருணா, அவனாக இறங்கி வரும் போது குட்டையை குழப்பி விட வேண்டாம், உங்கள் தலையீடே இருக்க கூடாது என்றார்.
பல வருடங்களாக சண்முகத்தின் முடிவுதான் அந்த வீட்டில். கெளதம், யசோ இருவரது வாழ்க்கையை முன்னிட்டு அருணாவுக்கு கணவரிடம் பேசும் தைரியம் வந்திருந்தது.
“நான் தலையிடல, அது மாதிரிதான் யசோ என்ன சொல்லுதுன்னும் பார்க்கணும்” என சண்முகம் சொல்ல, மருமகளை நினைத்து அருணாவுக்கு கலக்கம்தான். கணவரிடம் தலையாட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
பள்ளி முடித்து வந்த நவீன் ஆடை மாற்றி, சாப்பிட்டு, சைக்கிள் எடுத்துக் கொண்டு டியூஷன் சென்று விட்டான். கெளதம் வந்ததே அவனுக்கு தெரியவில்லை.
மாலை தேநீர் பருக கீழே வந்த கெளதம் கடையிலிருந்த அப்பாவை வீட்டுக்கு வரும்படி அழைத்தான்.
‘பெண் பாவம் பொல்லாதது, நீ எடுத்த முடிவுதான் சரி, என்ன நடந்தாலும் இந்த முடிவிலிருந்து மாறக் கூடாது’ என்ற ரீதியில் மகனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் அருணா.
“அவ எங்க கண்லேயே பட மாட்டேங்குறா?” என விசாரித்தான்.
“ரூம்ல இருக்கா, உன் முன்னாடி வர சங்கட படுறா போல. கோவமா ஏதும் பேசாம நல்ல விதமா பேசுடா” என்றார் அருணா.
“நீ ஏம்மா நான் என்னவோ பெரிய கோவக்காரன் ரேஞ்சுக்கே பேசுற?” எனக் கேட்டுக் கொண்டே எழுந்து சென்றான்.
நவீனின் அறையில் அமர்ந்து மும்முரமாக ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள் யசோ.
திறந்திருந்த கதவை தட்டி அவளின் கவனத்தை கலைத்தவன், “கொஞ்சம் வர்றியா பேசணும்” என்றான்.
அவனது வரவு தன்னை பாதிக்காதது போலவே அவனை ஏறிட்டவள், “என்ன சொல்லுங்க” எனக் கேட்டாள்.
“வெளில வா சொல்றேன்” என சொல்லி சென்று விட்டான்.
சண்முகமும் அருணாவும் ஹாலில் ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தனர். ஒரு ஓரமாக வந்து நின்றாள் யசோ.
“நாளைக்கு நைட் டிரெயினுக்கு டிக்கெட் போட்ருக்கேன், நாளான்னிக்கு கண்டிப்பா ஆஃபிஸ் போயாகணும். தியாகு வீட்டு எதிர்லதான் வீடு பார்த்து அங்கதான் இருக்கேன்…” என சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனது பெற்றோர் அசுவாரஷ்யமாக கேட்டுக் கொண்டிருக்க, யசோதான் கவனமாக அவனையே பார்த்திருந்தாள்.
அவளை பார்த்தவன், “பாரேன் யாருக்கு வந்த விருந்தோன்னு ரெண்டு பேரும் உட்கார்ந்து இருக்கிறதை. ம்ம்ம்… என்னை விட நீ முக்கியமா போயிட்ட இவங்களுக்கு” என்றான்.
“நாளைக்கு என் கூட நீயும் வர்ற, ரெடியா இரு” என அவளை பார்த்தே சொன்னான்.
அவள் திகைக்க, “நிஜமாவாடா சொல்ற?” எனக் கேட்டார் அருணா.
யசோவையே பார்த்திருந்த கெளதம், “என்ன என்னோட வர விருப்பம்தானே?” எனக் கேட்டான்.
“என்னடா கேள்வி இது? வராம எங்க போவா? உனக்கு இப்போதான் நல்ல புத்தி வந்திருக்கு” என்றார் அருணா.
“சும்மா இரும்மா!” என அம்மாவை அதட்டிய கெளதம், “என்ன நினைக்கிறேன்னு சொல்லு” என யசோவிடம் சொன்னான்.
அவனது பெற்றோரை தயக்கமாக பார்த்தாள்.
“நீ மேல போ, நான் வர்றேன்” என்றான் கெளதம்.
“என்னம்மா என்ன சொல்லணும் அவன்கிட்ட?” பயத்தோடு கேட்டார் அருணா.
“அவன்தான் பேச போறான்ல? பேசட்டுமே, என் இஷ்டத்துக்கு பண்ணி வச்சேன்னுதான் என்னை தப்பு சொன்ன, இனி நான் மட்டுமில்ல நீயும் வாய தொறக்க கூடாது” என மனைவியை அடக்கினார் சண்முகம்.
யசோ மாடிக்கு சென்று விட்டாள்.
“டேய் டேய் சின்ன பொண்ணுடா, தெரியாம ஏதாவது பேசிட போறா, நீ மனசு மாறிடாத உடனே” என்ற அம்மாவை முறைத்து விட்டு கௌதமும் மாடிக்கு சென்றான்.
துணி துவைக்கும் கல்லை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் யசோ.
“இப்ப சொல்லு, என்ன நினைக்கிற?” எனக் கேட்டான்.
“வீட்ல பிரச்சனையா இருக்குன்னா இப்படி முடிவு பண்ணுனீங்க?” எனக் கேட்டாள்.
“கண்டிப்பா இல்லை”
“என் சித்தப்பா என்னை ரெண்டாம் தாரமா யாருக்கோ கட்டி வைக்க பார்க்கிறாரே அதனால பாவப்பட்டா?”
“நீ நினைக்கிற காரணம் எதுவும் இல்லை”
“ஓ அப்ப எனக்கு தாலி கட்டும் போது உங்களுக்குள்ள ஏதோ பேய் புகுந்ததா சொன்னீங்களே… இப்பவும் அப்படி ஏதாவது…”என்றவள் அவனது திகைத்த பார்வையில் அமைதியாகி விட்டாள்.
“ப்ச்… பரிதாபத்துல எடுக்கிற முடிவெல்லாம் நிலைக்காது, எனக்கும் அப்படிலாம் வாழணும்னு இல்லை. உங்க நிலைமை எனக்கு புரியுது, நீங்க முன்னாடி எடுத்த முடிவுதான் சரி. எனக்கு அதுல சம்மதம்தான். உங்களுக்கு பிடிச்ச மாதிரி…”
இப்போது அவனது கண்டன பார்வையில் அவளது பேச்சு மீண்டும் நின்றது.
“நான் தாலி கட்டினதிலிருந்து என்னையே நினைச்சு வாழ்ந்திருக்க…” என கெளதம் சொல்ல ஆரம்பிக்கவும் விலுக் என நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன இல்லையா? போன முறை இங்க வந்தப்ப உன்கிட்ட கேட்டேனே… கட்டாய கல்யாணம்னு முன்னாடியே உனக்கு தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பேன்னு. அதுக்கான பதில் என்னை மனசுல நினைச்சிருக்க மாட்டேன்ங்கிறதுதானே?” எனக் கேட்டான்.
ரோஷத்தோடு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஏன் உன்னை கூப்பிடுறேனு எனக்கு சரியா காரணம் சொல்ல தெரியலை, நிஜமா தெரியலை. ஆனா கண்டிப்பா பாதியில விட மாட்டேன், சத்தியமா எப்பவும் விட மாட்டேன், அந்த நம்பிக்கையோட வா. வாழ்ந்து பார்க்கலாம், பிடிச்சா சந்தோஷமா வாழ்வோம்”
“பிடிக்கலைனா?” கலங்கிய கண்களோடு கோவமாக கேட்டாள்.
“இப்படிலாம் கேட்டா என்ன சொல்றது நான்?” என்றவன் சற்று நிதானித்து, “பிடிக்கலைனா என்ன… நமக்குள்ள நமக்கு என்னென்ன பிடிக்கலையோ அதை சரி பண்ணிக்கிட்டு அனுசரிச்சு வாழலாம்” என்றான்.
“வேணாம், எனக்காக நீங்க இவ்ளோ பெரிய ரிஸ்க் எல்லாம் எடுக்க வேணாம். யாராவது ஒருத்தராவது பிடிச்ச மாதிரி சந்தோஷமா வாழ்ந்ததா இருக்கட்டும். நீங்க போங்க”
“ஏன் என்னோட வாழறது உனக்கு பிடிக்காதா? சந்தோஷமா இருக்க மாட்டியா?”
“என்னை பிடிக்காதவரோட வாழ முடியாது என்னால”
“அப்ப உனக்கு என்னை பிடிக்கும்?”
அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஹப்பா! சின்ன பொண்ணு அப்பாவின்னு அம்மா சொன்னாங்க. ரொம்ப அழுத்தம் நீ” என்றான்.
அவள் எதிர்வினையே ஆற்றவில்லை.
“எனக்கும் முப்பது வயசாகிடுச்சு, நம்ம கல்யாணம் ஊருக்கெல்லாம் தெரியும். ரெஜிஸ்டர் ஆகாததால லீகலா டிவோர்ஸ் பண்றதுல கூட சிக்கல் இருக்கு. நிறைய ப்ரொசீஜர் சொல்றார் லாயர். இனிமே எவன் பொண்ணு தருவான் எனக்கு? உன்னை விட்டா எனக்கும் வேற வழியில்லை. உன்னை கூப்பிடுறது எனக்காகவும்தான். நீ எம்மேல பாவப்பட்டு வா” என்றான்.
“என்னை விட்டுட்டு போறதா சொல்லிட்டுதானே போனீங்க, திடீர்னு ஏதேதோ காரணம் சொல்லாதீங்க, நான்தான் எனக்கு வருத்தமில்லைனு சொல்றேனே. புருஷன் இல்லாம கூட பொண்ணால வாழ முடியும்”
“சரி… பொண்டாட்டி இல்லாம ஆம்பளையாள வாழ முடியாது. அதனால மனசு வச்சு இறங்கி வா”
தளர்வாக மூச்சு விட்டவள், “என்னங்க ஏன் இப்படி பண்றீங்க?” எனக் கேட்டாள்.
“நீ என்னால கஷ்ட படுறத ஏத்துக்க முடியாது, அந்த குத்த உணர்ச்சியோட எப்படி நிம்மதியா வாழ முடியும்? நான்தான் வான்னு சொல்றேன்ல? சும்மா ஏன் ஏன்னு கேட்டுகிட்டு. கீழ போ, என்னோட வர சம்மதம்னு அப்பாம்மாகிட்ட சொல்லு. நான் டின்னருக்கு வரேன்” என அதட்டலாக சொன்னான்.
“அப்படிலாம் சொல்ல மாட்டேன். நானும் நவீனும் இங்கேருந்து போயிடுறோம். டிவோர்ஸ் வாங்குறதுல சிக்கல்னா என்ன? நீங்க முன்னாடி சொன்னீங்களே, ‘என்னால பிரச்சனை வராதுன்னு எழுதி தர்றேன்’னு. நான் எழுதி தர்றேன் அப்படி”
“அதெல்லாம் சொன்னேன்னு கோவமா எம்மேல?”
“இல்லை, அப்ப நீங்க பேசினதுதான் உண்மை. நீங்க நல்லவங்க, உங்களுக்கு என்னை நினைச்சு கஷ்டமா இருக்கு, பாவ படுறீங்க, அதனால என்னை கூப்பிடுறீங்க. அப்படிலாம் ஒருத்தரை பிடிக்காம நல்லா வாழ முடியாது, ரெண்டு பேருக்குமே கஷ்டம்”
“நல்லா யோசிச்சுதான் வந்திருக்கேன் நான்”
“நானும் நல்லா யோசிச்சுதான் சொல்றேன்”
“கழுத்துல நான் கட்டின தாலி இன்னும் போட்ருக்கியே?”
“இதுவா? நைட்டி கழட்டும் போது நாலைஞ்சு தடவ நைட்டியோடயே வந்து அப்புறம் எடுத்து மாட்டியிருக்கேன். இது இப்ப நானே என் கழுத்துல போட்டுக்கிட்டது”
அத்தனை தீவிரமான பேசிக் கொண்டிருக்கையிலும் அவனுக்கு லேசாக சிரிப்பு வந்தது.
“முடிச்சு நான் போட்டதுதானே?”
“நீங்க கட்டின கயிறை மாத்தி செயின்தானே போட்ருக்கேன். அந்த கயித்த அத்தை என்ன பண்ணினாங்களோ?”
“சரி கழட்டி கொடு அதை” என்றான்.
கௌதமை தீவிரமாக ஒரு பார்வை பார்த்தாள். கால் நிமிடத்தில் செயினை கழட்டி அவனது கையில் கொடுத்து விட்டாள். அவனும் அதிர்ச்சி அடையவில்லை.
பட்டென மீண்டும் அவளது கழுத்தில் அணிவித்து விட்டவன், “எப்பலாம் கழண்டு வருதோ சொல்லு, என் கையாலேயே போட்டு விடுறேன்” என்றான்.
அவள் அவனை பாவமாக பார்க்க, “முன்னாடி நான் பேசினத மறந்திடு, அதுக்கெல்லாம் ஸாரி” என்றான்.
அவளுக்கு அழுகை வந்தது. புறங்கையால் கன்னத்தை துடைத்துக் கொண்டாள்.
“பெங்களூரு வர எல்லாத்தையும் பேக் பண்ணு, போ அம்மாட்ட போய் சொல்லு” என்றான்.
அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என தெரியாமல் கீழே சென்று விட்டாள் யசோ.
துணி துவைக்கும் கல்லை பிடித்துக்கொண்டு மேலே வானத்தை பார்த்தான். இப்போது மனதை அழுத்திக் கொண்டிருந்தது விலகியிருந்தது. ஆனாலும் இவளுடன் தன் வாழ்க்கை எப்படி செல்லும் என்ற யோசனை கொஞ்சமாக கலவர படுத்தியது.