கெளதம் பெங்களூருக்கு சென்று விட்டான். தன் முடிவை உறுதியாக சொல்லி வந்து விட்டானே தவிர இயல்பாக இருக்க முடியாமல் யசோ படுத்தி வைத்துக் கொண்டிருந்தாள்.
யசோ தன் தம்பியுடன் தனியாக செல்கிறேன் என சொல்லியும் அதற்கு சண்முகமும் அருணாவும் ஒத்துக் கொள்ளவில்லை.
“மூனு ஆம்பள புள்ளைங்க பெத்தும் ஒருத்தனாலேயும் சந்தோசம் நிம்மதி இல்லை. இவ்ளோ பெரிய வீட்ல நாங்க மட்டும் என்ன செய்ய யசோ. உனக்காக கேட்கல, எங்களுக்காக கேட்கிறோம், இங்கேயே இருடா” என அருணா கேட்க, சண்முகமும் அதையே வழி மொழிந்தார்.
இருவருமே மன வேதனையிலும் அவர்களாலேயே தான் கஷ்ட படுவதாக குற்ற உணர்விலும் இருப்பதை அறிவாள் யசோ. அங்கேயே நிரந்தரமாக இருக்கும் உத்தேசம் இல்லையென்றாலும் ஓரளவு அவர்கள் இயல்பாகும் வரை இருக்கலாம் என முடிவு செய்து இருந்தாள்.
நவீனுக்கு இன்னுமே நடப்பது தெரியவில்லை. மாமாவுக்கு அவரது அப்பாவுடன் ஏதோ சண்டை போல, சீக்கிரமே அக்காவை அழைத்து சென்றிடுவார் என நினைத்திருந்தான். தம்பியிடம் உண்மையை சொல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள் யசோ.
அவள் அங்கு இருப்பதில் கருணாகரனுக்கு குழப்பம். காதம்பரிக்கும் யசோ வாழ்க்கையில் நடக்கும் குழப்பமெல்லாம் தெரிய வந்தது. அருணா குணாவுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார், அவன் ஹேமாவிடம் பகிர, அவள் அப்படியே தன் அம்மாவுக்கு கடத்தினாள்.
யசோவை மீண்டும் வீட்டுக்கு வரவழைக்கலாமா என யோசனை செய்தார் காதம்பரி.
ஏதாவது நல்லது செய்வது போல செய்து நவீனுக்கு கிடைக்க வேண்டிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோரை அடைய வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். இரண்டு மகள்களுக்கும் ஆளுக்கு ஒன்று என கொடுத்தால் நன்றாக இருக்கும்தானே? கணவரிடம் நயந்து பேசிப் பார்த்தார்.
மனைவியின் திட்டம் என்னவென தெரியா விட்டாலும் உள்குத்து உள்ளது என்பதை கண்டுகொண்டார் கருணா. ஆகவே யசோவை தன் வீட்டுக்கு அழைத்து வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் சண்முகத்திடம் மட்டும் பேசினார்.
கருணாவிடம் மகனின் நிலைப்பாட்டை உள்ளது உள்ளபடி சொன்ன சண்முகம், “அதுக்காக வேற கல்யாணம்னு ஆரம்பிக்காதீங்க, ரெண்டு வருஷம் போகட்டும், யசோவும் நவீனும் என் பொறுப்பு” எனவும் சொல்லி விட்டார்.
கருணாவுக்கு கொஞ்சம் குழப்பம், யசோவும் தன் பேச்சுக்கு மறுப்பு சொல்லியிருந்ததால் நடப்பதை தற்காலிகமாக அதன் போக்கிலேயே விட்டிருந்தார்.
நண்பன் யசோவை பிரிந்து விட்டதை நினைத்து தியாகுவுக்கு வருத்தம்தான் என்ற போதும் இனிமேலாவது யசோவுக்கு நல்லது நடக்கும் என நினைத்துக் கொண்டான்.
தியாகு இருந்த அப்பார்ட்மென்ட் வீட்டுக்கு எதிர் வீடு காலியாக, அங்கேயே வந்து விட்டான் கெளதம். இன்னும் மைதிலி வராததால் இருவரும் சேர்ந்து தியாகுவின் வீட்டிலேயேதான் சமைத்து சாப்பிட்டார்கள்.
தியாகு நன்றாக சமைப்பான், கெளதம் உதவிகள் செய்வான். அந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் அப்படித்தான் இருவரும் சேர்ந்து பிரியாணி செய்து கொண்டிருந்தனர்.
“அதான் யசோவை பிரிஞ்சிட்டியே, இன்னும் என்ன பேய் அடிச்ச மாதிரியே சுத்திட்டு இருக்க? வேற பொண்ணு பார்க்க வேண்டியதுதானே டா, உன் அப்பா பார்க்க மாட்டாருன்னு கவலை படாத, என் அப்பாட்ட சொல்றேன், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க, ஆனா உண்மைய சொல்லி செஞ்சுக்க” என்றான் தியாகு.
“ப்ச்… இன்னொரு கல்யாணம் பத்திலாம் நினைக்க கூட முடியலைடா. அவ பாவம், அவளை நினைச்சாலே ரொம்ப உறுத்தலா இருக்கு தியாகு” என்ற கெளதம், கைவேலையை விட்டு விட்டு தளர்வாக நின்றான்.
“என்ன சிம்பதியா?”
“கில்ட்”
“பரவாயில்லை, அதாவது இருக்கே”
“அவ செட்டில் ஆகாத வரை என்னால வேற நினைக்கவே முடியாதுடா”
“லூசு மாதிரி பேசாத, அந்த பொண்ணுக்கு இருபத்தியொன்னுதான் ஆகுதுன்னு சொன்ன, உன் வயசுக்கு அவ செட்டில் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணினா கிழிஞ்சிடும்”
“என்ன செய்யன்னு தெரியலை. பாதி தூக்கத்துல அவ அழற மாதிரியே கனவு வருது”
“நீதான் வெளில வரணும். கொஞ்ச நாள் அமைதியா இரு, போக போக சரியாகிடும்”
“அவளை ஒரு தடவ பார்த்து பேசினா பெட்டரா இருக்குமாடா?” எனக் கேட்ட கௌதமை முறைத்தான் தியாகு.
“இல்லடா, அவ தைரியமா இருக்கா அவளை பார்த்துப்பான்னு எனக்கு ஸ்ட்ராங்கா தோணிட்டா இவ்ளோ கஷ்டமா இருக்காதுல்ல”
“எனக்கு அந்த பொண்ணு உன் வீட்ல இருக்கிறதே கரெக்ட்டா படல. பாதுகாப்புதான்னாலும் ஃபியூச்சர்ல அதை வச்சு அவளுக்கு பிராப்லம் வருமோன்னு பயமா இருக்கு”
“இப்போதைக்கு ஒரே நிம்மதி அவ அங்க இருக்காங்கிறது மட்டும்தான் தியாகு. இருக்கட்டுமே, என்ன பிராப்லம் வர போகுது?” என சந்தேகம் கேட்டான் கெளதம்.
யசோவுக்கு உடனே இல்லா விட்டாலும் திருமணம் நடக்கும்தானே, கௌதம்தான் கணவன் என அங்கே ஊரில் தெரிந்திருக்க, பிரிவு என்றாகி விட்ட பிறகு அங்கேயே இருப்பது கண்டிப்பாக பிரச்சனை ஆகும் என விளக்கினான் தியாகு.
அதை கற்பனை செய்து பார்த்த கௌதமிற்கு நெஞ்சம் கலங்கியது. “என்னடா செய்றது?” என நண்பனிடமே கேட்டான்.
தியாகுவிற்கும் நல்ல யோசனையாக ஏதும் தோன்றவில்லை. பெரியவர்கள் துணை இல்லாமல் யசோ தனியாக போவது நல்லதல்ல என்றே நினைத்தான்.
ஏதோ யோசனையாக இருந்த கெளதம் கட்டாய கல்யாணம் என முன்பே சொல்லியிருக்கலாம் என யசோ சொன்னதை கூறி, “ஏன் அப்படி சொன்னாடா? அப்பவே தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பா? என்கிட்ட சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டா. ரொம்ப யோசிச்சிட்டேன், ஒரு மண்ணும் புரியலை” என்றான்.
“சரியான தத்திடா நீ. எனக்கு யசோவை நினைச்சு ரொம்ப வருத்தமா இருக்கு” என்ற தியாகுவின் கைகளை பற்றிக் கொண்டான் கெளதம்.
“அவ என்ன சொல்லியிருப்பான்னு உனக்கு தெரியுதா?” என அவசரமாக கேட்டான்.
“என்ன பெரிய ரகசியம். உனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சிருந்தா தேவையில்லாம உன்னை மனசுல நினைச்சிருக்காது யசோ. கல்யாணம் செல்லாதுனு சொல்லிட்ட, மனசுல நினைச்சதை எப்படி மறக்க முடியும்? பாவமில்லையா யசோ?” எனக் கேட்டான் தியாகு.
என்ன சொல்வதென கௌதமுக்கு தெரியவில்லை. இப்போது யோசிக்கையில் தியாகு சொல்வது போலதான் தன்னை கணவனாக நினைத்து விட்டதை தவிர்த்திருக்கலாம் எனதான் தன்னிடம் அவள் அப்படி சொன்னாள் என்பது புரிந்தது.
ஆறு மாதங்கள் சின்ன பெண்ணின் நினைவுகளில் நான் என அவன் எண்ணும் போதே மீண்டும் மீண்டும் யசோ மாடியில் நின்ற உருவம்தான் கண் முன்னால் வந்தது. தனிமை தேவைப்படவும் அவனது வீட்டுக்கு சென்று விட்டான். தியாகு தனியாகவே சமைத்து முடித்து நண்பனை அழைக்க சென்றான்.
கௌதமின் முகமே சரியில்லை. பசியில்லை என சொல்லி சாப்பிட வர மறுத்தவனை இழுத்துக் கொண்டு சென்றுதான் சாப்பிட வைத்தான் தியாகு.
யசோ தன்னை மனதில் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்பதற்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டான் கெளதம். அப்பாவிடம் சொன்னதை அவளிடம் சொல்லியிருக்க வேண்டும், அப்பா கட்டாய படுத்தினாலும் என் கையால் நான்தானே தாலி கட்டினேன் என நினைத்தவனுக்கு நெருப்பு மீது நிற்பது போலானது.
அம்மாவுடன் அடிக்கடி பேசுகிறான். அவராக யசோ பற்றி ஏதாவது சொல்வார், இப்போது அவளை பற்றி கேட்பதற்காகவே அம்மாவுக்கு அழைக்கிறான்.
கெளதம் பெங்களூரு வந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்தான். போக போக சரியாகி விடும் என தியாகு சொன்னது போல இல்லாமல், அவனது நிலைமை இன்னுமின்னும் மோசமாகி கொண்டே இருந்தது.
பாவம் செய்து விட்டது போல உணர்ந்தவனுக்கு அந்த உணர்வை பிடிக்கவில்லை. இதிலிருந்து வெளி வரா விட்டால் நிம்மதி என்பதே இல்லை என புரிந்து கொண்டவன் ஊருக்கு பயணப் பட்டான்.
நடு இரவில் புறப்பட்டு மதியத்தில் வீட்டுக்கு வந்து நின்ற கௌதமை பார்த்து அதிர்ந்து, வாங்க என கூட சொல்ல தோன்றாமல் உள்ளே ஓடிச் சென்றாள் யசோ.
பர பரப்பாக வந்த அருணா, “என்னடா திடீர்னு? நல்லாருக்கியா?” எனக் கேட்டார்.
“உனக்கு எல்லாம் தப்பு தப்பாதான் தோணும். சாப்பிடுறியா?” எனக் கேட்டார்.
காலையிலேயே எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அறைக்கெல்லாம் செல்லாமல் கையை கழுவிக் கொண்டு வந்து விட்டான். அருணாதான் பரிமாறினார். யசோ அவனது பார்வைக்கே படவில்லை.
சாப்பிட்டு அவன் மேலே செல்லப் போனான்.
“இரு இரு சாவி தரேன்” என்றார் அருணா.
“ஏன் என் ரூமையும் பூட்டி வச்சிட்டியா?” எனக் கேட்டான்.
அவனது அறை இப்போது யசோவின் அறை. அவர் தருவதாக சொன்னது குணாவின் அறை சாவி. அதை அம்மா சொல்லவும் நொடி நேரம் யோசித்தவன், “என் ரூம்லதான் தங்குவேன்” என்றான்.
“அங்க யசோவோட சாமான் இருக்கு, நீ வருவேன்னு தெரியாது. குணா ரூம்ல ஏசி வேலை செய்யல, கல்யாண் ரூம்ல ஏசியே இல்லை. நவீனுக்கு எந்த விஷயமும் இன்னும் தெரியாது, உன் ரூம்தான் வசதின்னு யசோவை அங்கேயே இருக்க சொல்லிட்டார் அப்பா. திடீர்னு வந்து நின்னு வம்பு பண்ணாத” என்றார் அருணா.
“என்ன வம்பு பண்றேன், அவளும் அங்கேயே என்கூட தங்கட்டும், என்ன இப்போ?” என வேகத்தில் சொல்லி விட்டவன் அடுத்து அம்மாவை எதிர்கொள்ள பயந்து மாடி ஏறி விட்டான்.
மகன் சென்ற திசையை அதிசயமாக பார்த்திருந்த அருணா கையோடு கணவருக்கு அழைத்தார். கெளதம் பெங்களூரு சென்றதிலிருந்தே இருவருக்குள்ளும் வெகுவாக பேச்சு குறைந்து விட்டது. கைப்பேசி அழைப்புகள் என்பது அறவே கிடையாது. ஏதாவது கேட்க வேண்டும் சொல்ல வேண்டுமென்றாலும் யசோ, நவீன், கடைப் பையன் பாபு வழியாகத்தான்.