தயாராகி கீழே வந்தான். உணவு மேசை காலியாக இருந்தது. அம்மாவை அழைக்க நினைப்பதற்குள் அவனது பெற்றோர் அறைக்கு பக்கத்து அறையிலிருந்து வெளி வந்தாள் யசோ. அது இப்போது நவீனின்  அறை. 

“சாப்பாடு வைக்கட்டுமா?” எனக் கேட்டு அவனது தலையசைப்பை பெற்றுக் கொண்டு சென்றவள் உணவை சூடு செய்து கொண்டு வந்து வைத்தாள். 

“நானே போட்டுக்கிறேன்” என அவன் சொல்லவும் தொந்தரவு செய்யாமல் சென்று விட்டாள். 

அவன் பொறுமையாக சாப்பிட்டு முடித்து அம்மாவிடம் சொல்லிக் கொள்ள சென்றான். அருணா நல்ல உறக்கத்தில் இருக்க, பக்கத்து அறையை எட்டிப் பார்த்தான். 

ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்த யசோ சட்டென எழுந்து நின்றாள். 

“வெளில போறேன், அம்மாட்ட சொல்லிடு” என அறிவித்து விட்டு வேகமாக சென்று விட்டான். 

கருணாகரணை சந்திக்கத்தான் அவரது ஸ்டோருக்கு சென்றான். சுற்றி வளைக்காமல் தன் நிலைப்பாட்டை சொல்லியும் விட்டான். ஒரு மணி நேரம் பேசினார்கள் இருவரும். அண்ணன் மகளை கை விட்டு விடாதீர்கள் என அவரும் எங்கள் இருவரின் நல்லத்துக்காகவும் தான் சொல்கிறேன் என இவனும் என பேச்சு இருந்தது. 

இறுதியில் ‘பிறகு ஏன் தாலி கட்டினாய்?’ என கோவப்பட்டு விட்டார் கருணாகரன். அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. என் மேல் தவறுதான் என மன்னிப்பு கேட்டான். 

வாதம் செய்தால் எதிர்வாதம் செய்யலாம், மன்னிப்பு கேட்டால் அவர் என்ன சொல்வார்? 

“என் பொண்டாட்டி அடிக்கடி சொல்வா, ‘உன் அண்ணன் பசங்க அதிர்ஷ்டம் கெட்டவங்க’ன்னு, உண்மைதான் போல” என்றார் கருணாகரன். 

கௌதமுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை. எதிர்த்து ஏதாவது சொன்னால் யசோவுடன் சேர்ந்து வாழ் எனதான் பேச்சு வரும் என நினைத்து, “சொல்ல வேண்டியது சொல்லிட்டேன்” என்றான். 

தன் அம்மாவிடம் சொன்னது போலவே வக்கீல் பார்க்கலாம், எழுதி கொடுக்கிறேன் என்பதையெல்லாம் சொல்லி விட்டு வெளியேறியும் விட்டான். 

அவன் வீடு வந்த போது கோவத்தோடு அவனை வரவேற்றார் சண்முகம். கருணாகரன் அனைத்தையும் இவரிடம் சொல்லிவிட்டார். அப்பாவின் கோவத்துக்கும் அவன் அஞ்சவில்லை. கருணாவிடம் சொன்னதையே இவரிடமும் சொல்லி விட்டு படிகள் ஏறினான். 

நவீன் டியூஷன்சென்றிருக்க, அறையிலிருந்து கேட்டிருந்த யசோவுக்கு அழுகை பொங்கியது. இது கட்டாய கல்யாணம், என்னை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொண்டாள். 

ஏமாற்றம், பயம் இரண்டும் அவளை சுருட்டிக் கொள்ள பார்த்தது. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அப்படியெல்லாம் உன்னை விட்டு விட மாட்டான் என ஆறுதல் சொன்னார் அருணா. 

தம்பி வரப் போகும் நேரத்தை உணர்ந்து அவளாகவே அழுகையை நிறுத்திக் கொண்டாள். அப்போதும் அழுத அக்காவின் முகத்தை கண்டு விட்டு நவீனின் முகம் சுணங்கி விட்டது. “என்னக்கா?” என அவன் கேட்கவும் அவளுக்கு மீண்டும் அழுகை வருமோ என பயமானது. 

“அக்காவுக்கு நல்ல தலைவலி, மாத்திரை போட்டா சரியாகிடும், நீ சாப்பிட்டு தூங்கு, வா” என சொல்லி அருணாதான் அவனை அழைத்து சென்றார். 

கௌதமுக்கு இரவு சாப்பாடு அருணா மூலம்தான் மேலே சென்றது. யசோவையும் வற்புறுத்தி இரண்டு இட்லிகள் சாப்பிட வைத்தார். 

உறங்க எங்கே செல்வது என யசோவுக்கு புரியவில்லை. நவீன் அறைக்கு சென்றால் அவன் கேள்வி கேட்பான், அத்தையிடம் கேட்கவும் சங்கடமாக இருந்தது. 

அருணாவே கௌதமின் பக்கத்து  அறையில் உறங்கு என சொல்லி அனுப்பி வைத்தார். கல்யாணின் அறை அது, யாராலும் உபயோகிக்கப் படாமல்தான் இருந்தது. 

இன்னும் உறங்க செல்லாமல் நடந்து கொண்டிருந்தான் கௌதம். அவனை கண்டதும் பார்வையை தழைத்துக் கொண்டு பூட்டியிருந்த அறையை திறந்தாள் யசோ. அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவள் உள்ளே சென்ற சில நிமிடங்களில் விளக்கு அணைக்க படவும் திரும்பிக் கொண்டான். சற்று நேரம் கழித்து அறைப் பக்கமாக பார்த்தான். கதவு திறந்தே இருந்தது. யோசனையோடே அங்கே சென்றான். மின்விசிறி ஓடுவதற்கான அறிகுறியே இல்லை. 

படுக்கை இல்லாமல் வெறும் தரையில் அவள் படுத்திருப்பது தெரிந்தது. மனைவியாக ஏற்க முடியவில்லையே தவிர, சின்ன பெண், அவளின் தவறு எதுவும் இல்லை என அவனுக்கு புரிந்தே இருந்தது. அப்படியே விட மனமில்லாமல் விளக்கை போட்டு விட்டான். 

இன்னும் உறங்கியிராதவள் எழுந்து அமர்ந்து கொண்டாள். இவன் பக்கம் பார்க்கவும் இல்லை, என்னவென கேட்கவும் இல்லை. அவளின் அழுது சோர்ந்திருந்த முகம் வெகுவாக இவனை பாதித்தது. 

அவனாக மின்விசிறியை போட்டான், அது ஓடவில்லை. 

“என்னாச்சு ரிப்பேரா?” எனக் கேட்டான். 

“தெரியலை, அப்படித்தான் போல” என்றாள். 

குணாவின் அறை பூட்டிக் கிடந்தது. சாவி வாங்க அம்மாவிடம்தான் செல்ல வேண்டும். 

“நீ என் ரூம்ல படுத்துக்க, நான் வெளில படுத்துப்பேன்” என்றான். 

“பரவாயில்லை” என்றவள் படுத்து விட்டாள். 

“ஸாரி… அப்பவே நான் மறுத்திருக்கணும். எப்படி தாலி கட்டினேன்னு இப்ப வரை புரியலை எனக்கு. ஸாரி…” என்றான். 

ம்ம்ம் என அவள் சொன்னதே அழுகிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. 

“ப்ளீஸ் அழாத. உன் சித்தப்பாட்ட சொல்லிட்டேன். அவர் ஏதாவது செய்வார், உனக்கு வேற எந்த ஹெல்ப் வேணும்னாலும் செய்ய நான் ரெடியா இருக்கேன்” என்றான். 

“ப்ளீஸ் நீங்க இங்கேருந்து போங்களேன், நான்…இங்க…” என்றவள் குரலில் கொஞ்சம் வலிமையை கூட்டி “நான் என்னை பார்த்துப்பேன்” என்றாள். 

சங்கடமும் கவலையுமாக அவன் சென்று விட்டான். 

இரண்டு நாட்களாக வீடு சரியில்லை. உங்களால்தான் எல்லாம் என அருணா சண்முகத்திடம் சொல்லி, பதிலுக்கு அவர் கோவப்பட்டு என அவர்களுக்குள் சண்டை. இருவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை. 

யசோவின் மனம் வேதனையிலிருந்து மீளவில்லை என்றாலும் தம்பிக்காக அழுவதை நிறுத்தியிருந்தாள். எதுவோ நடக்கிறது என நவீனுக்கு புரிகிறது, யாரிடம் கேட்டு தெளிவது என்றுதான் அவனுக்கு தெரியவில்லை. 

கருணாகரனை இரண்டு மூன்று முறை சந்தித்து வந்தார் சண்முகம். கௌதமும் வக்கீலை சந்தித்து சட்ட சிக்கல் வராமல் இருக்க என்ன செய்வது என பேசியிருந்தான். மறக்காமல் யசோ உறங்கும் அறையின் ஓடாத மின் விசிறியை பழுது பார்த்து ஓட செய்திருந்தான். 

இரண்டு நாட்களில் கெளதம் பெங்களூரு புறப்பட வேண்டும். மகனை காண அவனது அறைக்கு வந்தார் சண்முகம். 

“ஒத்த பைசா கைல இல்லாம இந்த ஊருக்கு வந்தேன். நல்ல நிலைக்கு வந்திட்டேன்னு  நினைச்சும் இருந்தேன். ஆனா அப்பனா தோத்து போயிட்டேன் டா” என்றார். 

கெளதம் அப்பாவை பாராமல் வேறெங்கோ பார்த்தான். 

“என்னால அந்த புள்ள வாழ்க்கை சீரழிஞ்சு போகும் போல. விடோ ஒருத்தருக்கு யசோவை கட்டி வைக்க பேசியிருக்கார் கருணாகரன்” என அப்பா விவரம் சொல்லவும் அதிர்ந்து போய் பார்த்தான். 

“அந்த பையனுக்கு முப்பத்தி ஏழு வயசு, ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்காம். அந்த புள்ளைங்க துணைக்கு வேணும்னு… ப்ச்… எவ்வளவோ சொல்லிட்டேன், நானே பார்த்து வேற நல்ல இடமா யசோவுக்கு செஞ்சு வைக்கிறேன்னு. ‘உங்க பசங்களுக்கே உங்களால எதுவும் அமைச்சு தர முடியலை, யசோ என் வீட்ல கொத்தடிமையா இருக்கிறத விட போற இடத்துல உரிமையானவளா இருந்திட்டு போகட்டும், நான் இருக்கப்பவே செட்டில் பண்ணினாதான் சரி’ன்னு சொல்லிட்டார். வாய பொத்திகிட்டு வந்திட்டேன்” என்றார். 

“உங்களாலதான்ப்பா எல்லாம்!” என கோவமாக சொன்னான் கெளதம். 

பதிலுக்கு எதுவும் வார்த்தையாடாமல் வலி சுமந்த பார்வையோடு சென்று விட்டார் சண்முகம். 

கீழே அம்மாவிடம் விரைந்தான். அறையில் சுருண்டு படுத்திருந்தார் அருணா. 

“அப்பா ஏதேதோ சொல்றாரே, உனக்கு தெரியுமா ம்மா?” எனக் கேட்டுக் கொண்டேதான் வந்தான் கெளதம். 

அவர் அமைதி காக்க, “அவளுக்கு இன்னும் இன்னும் அநியாயம் செய்ய பார்க்குறீங்க எல்லாரும். சின்ன பொண்ணும்மா அவ, நல்லா வாழறதுக்கு எந்த அருகதையும் இல்லாம போயிட்டாளா? எனக்கும் அவளுக்கும் ஒன்பது வயசு வித்தியாசம், அதையே ஏத்துக்க முடியலை என்னால, இப்போ… முப்பதேழு வயசு ஆளை போய்… இதெல்லாம் கேட்க ஆளே இல்லையா?” என ஆதங்கமாக கேட்டான். 

“உனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்தப்போ என்னால என்ன பண்ண முடிஞ்சதுடா? அதே நிலைமைதான் இப்பவும், போ போ அவ தலைவிதி படி நடக்கட்டும்” என்றார் அருணா. 

கோவமாக வெளியே சென்று விட்டான் கெளதம். அன்றும்  அதற்கடுத்த நாளும் யாருடனும் பேசவில்லை அவன். 

அன்று காலையிலேயே வெளியில் சென்றிருந்த கெளதம் மாலை போல மாடிக்கு  வந்தான். துணி துவைத்துக் கொண்டிருந்தாள் யசோ. 

அவனை கண்டவள் கொஞ்சம் வேகமாக துவைத்தாள். நவீனின் பள்ளி சீருடை அது. 

“மெஷின்ல போடாம ஏன் கைல துவைக்கிற?” எனக் கேட்டான். 

தன்னிடமா பேசுகிறார் என்பது போல பார்த்தவள், “நிறைய துணி இல்லை, கைல துவைச்சாதான் காலர் அழுக்கும் போகும். அதான்” என்றாள்.

“உன்கிட்ட உன் சித்தப்பா பேசினாரா?” என அவன் கேட்டதற்கு ஆம் என தலையாட்டினாள். 

“என்ன சொன்னார்?” 

“ஒரு தடவ நடந்த தப்பே எனக்கு போதும், என்னை விட்ருங்கன்னு சொல்லிட்டேன்” என்றவள் துவைப்பதை நிறுத்தவில்லை. 

“அவர் என்ன சொன்னாருன்னு கேட்டா நீ சொன்னதை சொல்ற?” 

“அவர் என்ன சொல்லியிருப்பாருன்னு உங்களுக்கே தெரியும்” 

“ம்ம்…  அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?” 

“ரொம்ப யோசிக்கல. தங்க இடம் பார்த்து தர கேட்டுகிட்டா மாமா ஹெல்ப் பண்ணுவாங்க. ஏதாவது வேலை ரெடி பண்ணிக்கணும். இனிதான் என்னன்னு பார்க்கணும்” 

“எம்மேல கோவம் இல்லையா?” 

“ரொம்ப இல்லை” 

“ஓ அப்ப கொஞ்சமா இருக்கு” 

“அது… அப்பவே…”

“எல்லாரை மாதிரி நீயும் கேட்காத. எந்த பேய் அன்னிக்கு எனக்குள்ள புகுந்துச்சுன்னு தெரியலை, எப்படி நான் உனக்கு தாலி கட்டினேன்னு எனக்குமே இன்னும் புரியலை” என்றான். 

“ஹையோ அது இல்லை. அப்பவே விருப்பம் இல்லாம நடந்த கல்யாணம்னு என்கிட்ட சொல்லியிருக்கலாம்னு சொல்ல வந்தேன்” 

“ஏன் அப்பவே தெரிஞ்சிருந்தா என்ன மாறியிருக்க போகுது?” 

“அது…” என தயங்கினாள். 

அவளின் பதிலுக்காக அவன் காத்திருந்தான். 

 “நாளைக்கு ஊருக்கு கிளம்புறீங்களா? அத்தை மாமாகிட்ட நல்ல விதமா பேசிட்டு கிளம்புங்க. எனக்கு இதெல்லாம்… இப்படி ஆகுறதெல்லாம் பழகி போச்சு” என்றவள் உடனே, “சிம்பதிகாக  சொன்னதா நினைச்சுக்க வேணாம், நிஜமா எனக்கு இப்படி நடக்குறதெல்லாம் பழக்கம்தான். நான் சரியாகிடுவேன். அத்தை ரொம்ப பாவம், அவங்களுக்கு இப்ப நீங்க மட்டும்தானே?” என்றாள். 

ஏதேதோ சொல்ல நினைக்கிறாள், ஆனால் அவளுக்கு கோர்வையாக பேச வரவில்லை. 

“கட்டாய கல்யாணம்னு முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருந்தா  என்ன நடந்திருக்கும்?” என அதிலேயே நின்றான் அவன்.

கை வேலையை அப்படியே விட்டு விட்டு கீழே செல்ல பார்த்தாள். அவளின் கையை பிடித்து நிறுத்தினான். 

“கையை விடுங்க ப்ளீஸ்…” என அவள் சொல்லியும் அவன் விடவில்லை

சொல்லுஎன்றான்

இப்ப இப்படி கேட்கவோ என் கையை பிடிக்கவோ உங்களுக்கு…” என்றவள் திணறலாக, “உரிமை இல்லைதானே, விட்ருங்கஎன்றாள்

 சட்டென அவளின் கையை விட்டவன் அவளுக்கு நேர் எதிரில் நின்றவன்,  “எனக்கு பதில் சொல்லாம நீ போக முடியாது” என்றான். 

சற்றே கடின பாவத்திற்கு அவளின் முகம் மாறியது. அவனை நேராக பார்த்தவள், “உங்கள்ட்ட இப்ப சொல்ல முடியாது, எப்பவும் சொல்ல மாட்டேன்” என்றாள். 

இறுகிய முகத்துடன் விலகி வழி விட்டான். அவள் வேகமாக ஓடிச் சென்று விட்டாள்.