அம்மா அறைக்கு வரவும் கோவமாக அவரை பார்த்த கெளதம், “அவளுக்கு இருபத்தோரு வயசுதான் ஆகுதா?” எனக் கேட்டான்.
“ஏன் தெரியாதா உனக்கு? உங்கப்பா தாலிய கட்டுடான்னு சொன்னப்போ கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதானே?” என சாதாரணமாக கேட்டார் அருணா.
பற்களை கடித்தவன், “யாரை கேட்டு இங்க அழைச்சிட்டு வந்த நீ? அந்த பையன் இங்கேருந்தே ஸ்கூல்லாம் போறான், என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை நீ” என்றான்.
“சொன்னா என்ன பண்ணியிருப்ப? திரும்ப கொண்டு போய் விடுன்னுதானே சொல்லியிருப்ப?”
“ஆமாம், வெளில விஷயம் தெரியாம இருக்கும்னு நான் நினைச்சிட்டு இருந்தா இந்த வீட்ல கொண்டாந்து வாழ வச்சிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்”
“என்னடா யாருக்கும் தெரியாது? அதெல்லாம் யசோ தாத்தா செத்து போனப்பவே அவங்கபக்கம் எல்லா சொந்தத்துக்கும் தெரியும். என் பொறந்த வீட்டு ஃபங்ஷன் எல்லாத்துக்கும் யசோவை அழைச்சிட்டு போயிட்டிருக்கேன். எதை மூடி மறைக்க பார்க்கிற நீ?”என அருணா கேட்கவும் தலையை பிடித்துக்கொண்டான் கெளதம்.
கருணாகரனின் மனைவி காதம்பரிக்கு யசோ மற்றும் நவீனின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனமே கிடையாது. அண்ணன் மக்களை கருணா விட்டு விட மாட்டார் என்றாலும் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் அவராலும் என்ன செய்ய இயலும்?
ஆதலால்தான் பேத்திக்கு சின்ன வயதாக இருந்தாலும் தான் உயிரோடு இருக்கும் பொழுதே யார் கையிலாவது பிடித்துக்கொடுக்க நினைத்தார் தண்டபாணி.
பெரியவரை பார்க்க சண்முகம் சென்ற போது கருணாகரன்தான் உங்க பையன் என்ன பண்ணிட்டு இருக்கார்? என பேச்சை ஆரம்பித்து வைத்தார்.
அப்படித்தான் அந்த திருமணம் நடந்தேறியது.
பெரியவர் இருந்த போதே அந்த வீட்டில் யசோ மற்றும் நவீனின் நிலைமை சரியாக இல்லை. அவர் இறந்த பிறகு கேட்கவும் வேண்டுமா?
பெரியவர் நன்றாக இருந்த போதே சொத்துக்களை பிரித்து எழுதி வைத்து விட்டார். அவர் மறைந்த பிறகுதான் உயில் பற்றியே காதம்பரிக்கு தெரிய வந்தது.
டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் இரண்டுமே கருணாவின் வசம் இருந்தாலும் நவீன் பெரியவன் ஆனதும் ஒன்று அவனது உரிமையாகி விடும்.
வீட்டிலிருந்து ஆங்காங்கு வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் என அனைத்தையும் மூத்த மகனின் பிள்ளைகளுக்கும் சமமாக பங்கு இருப்பது போலதான் எழுதியிருந்தார்.
தன் மனைவியின் நகைகளை மூன்றாக பிரித்து மூன்று பேத்திகளுக்கும் கொடுத்திருந்தார். யசோவின் அம்மாவின் நகைகளும் யசோவுக்கு சேர்ந்து விட்டது.
தன் கணவர்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறார், ஆகவே அவருக்கே ஸ்டோர்களை கொடுக்கவில்லை என காதம்பரிக்கு காட்டம். தன் மகள்களை விட யசோவுக்கு அதிக ஆபரணங்களா என அதிலும் பொறாமை.
அதில் அந்த பிள்ளைகளை வஞ்சிக்க ஆரம்பித்தார் காதம்பரி. நவீனை படிக்க விடாமல் ஏதாவது இடையூறு செய்வது, அத்தனை வேலைகள் செய்தாலும் யசோவை வார்த்தைகளால் குத்தி கிழிப்பது என குரூரமாக நடந்து கொண்டார்.
கருணா மனைவியை கண்டிப்பார்தான், ஆனால் எந்நேரமும் அவரால் வீட்டில் இருக்க முடியாதே. அவர்தான் சண்முகத்தை கூப்பிட்டு விவரத்தை சொன்னார்.
சாதாரணமாக மருமகளை பார்க்க செல்வது போல போனகௌதமின் பெற்றோர் யசோவையும் நவீனையும் தங்களுடனே அழைத்து வந்து விட்டனர்.
“என்னம்மா இது சீரியல் கதை மாதிரி இருக்கு” என்றான் கெளதம்.
“பணம் காசுன்னு வந்திட்டாலே தொண்ணூறு சதவீத மனுஷங்க இப்படித்தான் சீரியல் வில்லன் வில்லியா போயிடுறாங்க. நீயே சொல்லு, இப்படி இருக்கையில அவங்கள அப்படியே விட்ர முடியுமா?” என மகனையே கேள்வி கேட்டார் அருணா.
“ஒன்னும் இல்லாதவங்க இல்லியே, வேற வீடு பார்த்து வச்சா ரெண்டு பேரும் இருந்துக்க மாட்டாங்களா?”
“எப்படிறா இப்படி சொல்ற? வயசு பொண்ணையும் சின்ன பையனையும் எங்க போய் தங்க வைக்க சொல்ற? அவ உன் பொண்டாட்டி டா”
“அம்மா ப்ளீஸ்… அத மட்டும் சொல்லாத”
“அம்மா சொல்றத கேளுடா அருமையான பொண்ணுடா யசோ. இப்பஎம்ஏகரஸ்ல படிக்கிறா, நீ படிக்க வச்சா அதுக்கு மேல கூட படிப்பா டா, சாமி கும்பிடும் போது பாடுவா பாரு… நாளெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம்” என அவளது பெருமைகளை அடுக்கினார்.
“யாரையும் படிக்க வைக்க நானொன்னும் சமூக சீர்திருத்தவாதி இல்லை, கல்யாணம் பண்ணிக்கிறது வாழறதுக்காக. பாட்டு கேட்கணும்னா ஃபோனும் நெட் கனெக்ஷனும் போதும், அதனால நிறுத்துமா உன் பேச்சை” என அலுத்தான் கெளதம்.
“வாரத்துல ஒரு நாள்னு டைம் டேபிள் போட்டு என்கிட்ட பேசுறியே நீ, மத்த நாளெல்லாம் இருக்கேனா செத்தேனான்னு கேட்டு தெரிஞ்சுகிட்டியா? போன மாசம் ஜுரத்துல நான் முடியாம படுத்தப்போ கண்ணும் கருத்துமா என்னமா பார்த்துகிட்டா தெரியுமா?” எனக்கேட்டார்அருணா.
“இந்த கதையெல்லாம் என்கிட்ட சொல்லாத ம்மா. வாரத்துல ஒரு நாள் உன்கிட்ட நான் பேசுறேன், மத்த நாளெல்லாம் நீ பேசினா பேச மாட்டேன்னு சொன்னேனா? உனக்கு உடம்பு முடியாதப்போ நல்லா பார்த்துகிட்டான்னு காலம் முழுக்க வச்சு வாழுன்னா என்ன அர்த்தம்? எனக்கு பிடிக்க வேணாமா?”
“இப்ப என்னதான்டா சொல்ல வர்ற? அந்த பொண்ணு வாழ்க்கைக்கு என்னதான் வழி, எப்பதான் விடி மோட்சம்?” ஆதங்கமாக கேட்டார் அருணா.
“ரெஜிஸ்டர் ஆகாத கல்யாணத்துக்கு டிவோர்ஸ் வாங்க முடியுமா தெரியலை, லாயர் யாரையாவது பார்க்கலாம். ஃப்யூச்சர்ல என் பக்கத்திலேருந்து எந்த தொல்லையும் இருக்காதுன்னு எழுதி கொடுத்திடுறேன். தாலி கட்டிட்டா கல்யாணம் ஆகிடுமா? அவ சித்தப்பாட்ட சொல்லி அவளை மேல படிக்க வைக்க சொல்லு, இல்லைனா அவளுக்கு ஏத்த பையனை பார்த்து…”
“வாயை மூட்றா!” என கோவப்பட்டார் அருணா.
“இப்படி கோவ படுறதால எதுவும் நடக்க போறதில்லம்மா. இங்க நான் வந்ததே இந்த விஷயத்தை முடிச்சி வைக்கத்தான். ஒத்து வராதுன்னா புரிஞ்சுக்க மாட்டியா நீ?”
“வாழ்ந்து பார்க்காமலே இப்படி சொல்லாதடா”
“அவ மேல பாசமா இருக்கன்னு புரியுதும்மா. கொஞ்சம் யோசிச்சு பாரு, இப்பவே சரியா வராதுன்னு போயிட்டா அவளுக்குதான் நல்லது. வாழ்ந்து பார்த்து… ப்ச்… அவ லைஃப் ரொம்ப சிக்கல் ஆகிடும்”
“என் கைல என்னடா இருக்கு? உன் அப்பாகிட்ட பேசு, இல்லைனா யசோவோட சித்தப்பாட்ட போய் பேசு. மூனு புள்ள பெத்தும் ஒன்னால கூட எனக்கு நிம்மதிய தர முடியாதுன்னு என் தலைல எழுதியிருக்கு, நான் வாங்கின வரம் அப்படி!” கண்கள் கலங்கினார் அருணா.
“ப்ச், அடுத்து நீ கண்ணுல தண்ணி வைக்காத. அண்ணன் கதை தெரியும், குணாக்கு என்னாச்சு? எங்க அவனை காணோம்? எல்லாம் உங்காளுங்களா பார்த்துதானே கல்யாணம் பண்ணியிருக்கான்?” எனக் கேட்டான்.
சின்ன மகன் இங்கு இல்லை, அப்பா சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை சொன்னார் அருணா.
“இவருக்கு என்னதான் பிரச்சனை? எல்லாரையும் ஒதுக்கி வச்சிட்டு என்ன செய்ய போறாராம்? நீ ஏன் என்கிட்ட சொல்லலை?”
“தூரமா இருக்க உன்கிட்ட சொல்லி என்னாக போகுது? நேர்ல வரவும் சொல்லிக்கலாம்னு இருந்தேன் டா” என்றார்.
“நான் சாயந்தரமா போய் குணா மாமனாரை பார்த்திட்டு வர்றேன். சாப்பாடு ஏதும் இருந்தா இங்க கொண்டு வா. சாப்பிட்டு தூங்குறேன்”
“எனக்கே கால் முடியலை எத்தன தடவ மாடி ஏறுவேன்? யசோ எடுத்திட்டு வருவா”
இடுப்பில் கை வைத்து அம்மாவை முறைத்தவன், “நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன சொல்ற?” எனக் கேட்டான்.
“சாப்பாடு கேட்ட”
“ம்மா! அவளை இங்கேருந்து நிரந்தரமா அனுப்பி வைக்கிறது பத்திதான் அவ சித்தப்பாட்ட பேச போறேன். அவளை என்கிட்ட அனுப்பி வைக்கிறேங்கிற”
“அப்ப அவரை பார்க்க போறேன்னு சொன்னது குணாவை இங்க வரவைக்கிறது சம்பந்தமா இல்லையா?” என அருணா கேட்க, ஒன்றும் சொல்லாமல் நின்றான் கெளதம்.
அவனது கையை பிடித்துக்கொண்டவர், “கல்யாண் பசங்க ரெண்டும் எப்படி இருக்காங்க தெரியுமா? ஒரு தடவ அந்த பசங்கள ஆசையா தூக்க கொடுப்பனை இல்லடா எனக்கு. இப்ப இவனையும் வெளில அனுப்பிட்டார்” என்றார்.
“அப்பாட்ட பேசுறேன் மா”
“நீ சொன்னா மட்டும் கேட்டுக்குவாரா?”
“எனக்கு தெரியாது, நானும் என்னதான் பண்றது?”
“நீயாவது குடும்பமா வாழுடா, ஒரு புள்ள வாழ்க்கையையாவது ஆசை தீர பார்த்துக்கிறேன். யசோ ஒவ்வொரு வேலை செய்யும் போதும் எப்படி செய்றா தெரியமா? காலைல முட்டைகோஸ் நறுக்கினா பாரு… அப்படியே பூ மாதிரி கொட்டுது. அவ வீடு சுத்தம் பண்ணினா…”
“சுத்தி வளைச்சு அவகிட்டேயே வராத. ஆமாம் அதென்ன அவ சித்தி வேலை வாங்கினாங்கன்னு குறை சொல்லிட்டு நீயும் அதே மாதிரிஅவகிட்ட வேலைதான் வாங்கிட்டு இருக்கியா?”
“நான் எதுவும் சொல்றது இல்லடா, எல்லாம் அவளே செய்யுறா. இந்த வீட்டு பொண்ணுடா அவ”
“நீ கீழ போம்மா, எனக்கு சாப்பாடே வேணாம்” என்றவன் படுத்து விட்டான்.
“தூங்கிடாத டா” என சொல்லிக் கொண்டே சென்றார் அருணா.
அவன் அவ்வளவு சொல்லியும் யசோதான் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாள். கொலுசு சத்தத்திலேயே அவளின் வரவை அறிந்து கொண்டவன் தூங்குவது போல பாவனை செய்தான்.
‘அவனை சாப்பிட வைத்து விட்டு வா’ என சொல்லித்தான் அவளை அனுப்பி வைத்திருந்தார் அருணா. எப்படி அவனை எழுப்புவது என தெரியாமல் கைப்பேசியில் பக்தி பாடல் ஒன்றை ஒலிக்க விட்டாள்.
அவன் அசையவே இல்லை. மாமியாருக்கு அழைத்தவள், “நல்லா அசந்து தூங்குறார் போல அத்தை, நான் கீழ வந்திடவா?” எனக் கேட்டாள்.
“எழுப்பி விட்டு சாப்பிட சொல்லு யசோ, வெறும் வயித்தோட தூங்க விடாத” என சொல்லி விட்டார் அருணா.
காதுகளை தீட்டி வைத்துக்கொண்டு கண்களை மூடியிருந்தவனுக்கு சில நிமிடங்களாக எந்த சத்தமும் கேட்காமல் போனது. பசிக்க வேறு செய்யவும் அவள் சென்றிருப்பாள் என நம்பி கண்களை திறந்தான்.
அறையின் நிலை வாசலில் சாய்ந்து கொண்டு வெளியே பார்த்திருந்தாள் யசோ. குளித்து வேறு புடவை அணிந்து திருத்தமாக இருந்தாள்.
மீண்டும் உறங்குவது போல நடிக்க மனம் வராமல், “என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான்.
வேகமாக திரும்பியவள், “உங்களை எப்படி எழுப்புறதுன்னு தெரியலை. அதான்… நீங்க சாப்பிடுங்க, நான் வெளில இருக்கேன்” என சொல்லி நிற்காமல் சென்று விட்டாள்.
ஒரு வாய் உணவு கூட அவனுக்கு இறங்கவில்லை. அப்பா தலையிடாமல் போயிருந்தால் இவளுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைதிருக்குமே என ஆதங்கமாக இருந்தது.
வெளியே வந்தவன், “நீ போ, நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன், காலி பாத்திரம் எல்லாம் நானே கீழே கொண்டு வருவேன்னு அம்மாட்ட சொல்லிடு” என்றான்.
அவள் சென்ற பிறகுதான் சாப்பிட்டு படுத்தான்.
அவன் எழுந்த போது முன் மாலை ஆகியிருந்தது. காலி பாத்திரங்கள் எதுவும் இல்லை. குளித்து விட்டு வெளியில் வந்தான்.
மூன்று படுக்கையறைகள் வரிசையாக இருக்க, மற்ற இடமெல்லாம் மேற்கூரை இல்லாமல் இருக்கும். அங்கே துணிகள் காய்ந்து கொண்டிருந்தன.