தண்டபாணியின் வீடு நல்ல பெரிதாக இருந்தது. நகரின் இரண்டு மையப் பகுதிகளில் இரண்டு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் இருக்கின்றன. 

சண்முகம் இள வயதில் இவரது மளிகை கடையில்தான் வேலை செய்தார். சண்முகம் முன்னுக்கு வர பல வகைகளில் உதவி செய்தவர், யாரும் இல்லாதவருக்கு பெண் தர மாட்டேன் என அருணாவின் பெற்றோர் சொன்ன போது தண்டபாணியின் மனைவிதான் பேசி திருமணம் வரை கொண்டு வந்தார். 

பதினோரு மணி போலத்தான் காலை உணவுக்காக கீழிறங்கி வந்தான் கெளதம்.

“வந்திட்டியா, உன்னை எழுப்பி விடத்தான் நானும் நினைச்சேன்” என்ற அருணாவின் முகமே சரியில்லை. என்னவென மகன் விசாரித்தும் மழுப்பலாக எதையோ சொன்னவர் அவனுக்கு பரிமாறி விரைவாக சாப்பிட சொன்னார். 

அவன் சாப்பிட்டு முடிக்கவும் அவனது கையை பிடித்தவர், “நீ உடனே ஊருக்கு கிளம்பிடுடா” என்றார். 

புரியாமல் குழம்பிய கெளதம், “யோகிதா வீட்ல எதுவும் சொன்னாங்களா ம்மா?” எனக் கேட்டான். 

மகனை நெருங்கியவர், “இல்லடா, இது வேற… உங்கப்பாக்கு மூளை பிசகி போச்சு, உன்னை சிக்க வைக்க பார்க்கிறார், விவரமா சொல்ல நேரமில்லை. பசியோட இருக்கிற உன்னை வெறும் வயித்தோட எப்படி அனுப்பன்னுதான் சாப்பிடற வரை காத்திருந்தேன். நீ சீக்கிரம் கிளம்பேன், போற வழில போன்ல சொல்றேன் எல்லா விவரத்தையும்” என பட படப்பாக பேசினார். 

“இவ்ளோ பேசின நேரத்துக்கு என்னென்னே நீ சொல்லியிருக்கலாம்” என்ற கெளதமுக்கு அம்மாவின் வார்த்தைகளில் இருந்த தீவிரம் புரியவில்லை, அமர்ந்தே இருந்தான்.

“அடேய் உனக்கு அந்த தண்டபாணி ஐயாவோட…” அருணா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, “அருணா…” என அழைத்துக் கொண்டே உள்ளே வந்து விட்டார் சண்முகம். 

அருணாவுக்கு பக் என்றானது. மகனையும் கணவரையும் மாறி மாறி பார்த்தார். 

“என்னப்பா… என்னை உடனே ஊருக்கு கிளம்ப சொல்லுது அம்மா, என்ன பிரச்சனைன்னு நீங்களாவது சொல்லுங்க” என்றான் கெளதம். 

சண்முகம் தன் மனைவியை  பார்த்த பார்வையில் உள்ளே ஓடி சென்று விட்டார் அருணா. 

“பேசுறதுக்கு நேரமில்லைடா, உடனே புறப்படு, இந்த ஷார்ட்ஸ் மாத்திட்டு பேண்ட் போட்டுக்கிட்டு வா, கார் நிக்குது” என மகனிடம் சொன்ன சண்முகம், “ஏய் உள்ள என்ன பண்ற? ரெடியா இருக்கணும்னு சொல்லலை நான்?” என மனைவியிடம் சத்தம் போட்டார். 

“எங்கப்பா?” எழுந்து கொண்டே கேட்டான் கெளதம். 

“தண்டபாணி ஐயா சீரியஸா இருக்கார். இன்னிக்கு நைட் தாண்டுறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. போடா கிளம்புடா” சண்முகம் பரபரத்ததில் கௌதமும் மாடிக்கு விரைந்தான். 

தண்டபாணியின் வீட்டு காரில் அவரது டிரைவரோடுதான் இங்கு வந்திருந்தார் சண்முகம். 

தைரியத்தை கூட்டிக் கொண்ட அருணா வெளியில் வந்து, “நீங்க செய்றது தப்புங்க. அவனுக்கு இதுல துளியும் விருப்பம் இருக்காது. இவனுக்கு யோகிதா மேல விருப்பம் போலங்க, இந்த ஏற்பாடு வேணாம்ங்க” என்றார். 

“நன்றி கெட்ட தனமா பேசாத” என இரைந்த சண்முகம், பின் நயமான குரலிலேயே “அந்த பொண்ணு போட்டோதான் பார்த்திருக்கிறான் கெளதம், உடனே விருப்பம் இருக்குன்னு நீயா கற்பனை பேசுறியா? பேச்சுவார்த்தை முடிவான மாதிரி ஆச்சுதேன்னுதான் நானும் குணாவை வர சொன்னேன். என்ன ஏதுன்னு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டு வர முடியாதுன்னுட்டான்” என்றார். 

சற்று முன்தான் குணா தன் அம்மாவுக்கு அழைத்து விவரம் சொல்லியிருந்தான். உடனே வங்கியிலிருந்து கிளம்பி சென்று விடு, இல்லையென்றால் அங்கே வந்து விடுவார் என மகனுக்கு சொல்லிக் கொடுத்ததே அருணாதான். இப்போது கணவர் சொல்வதை அமைதியாக கேட்டிருந்தார். 

 “அந்த பய பேங்க்லேயும் இல்லை, எங்க ஓடினான்னு தெரியலை,  உன் சின்ன மகனை… ம்ம்… அவனை அப்புறம் பேசிக்கிறேன். நீ இப்ப வழில எதுவும் வாய தொறக்க கூடாது சொல்லிட்டேன்” மிரட்டினார் சண்முகம். 

அருணாவுக்கு அழுகையாக வந்தது. கணவரை மீறி எப்போதுமே எதுவுமே செய்திராதவர். அப்படியொன்றும் விவரம் இல்லாதவன் இல்லை கெளதம், அவனை யாரும் கட்டாயப் படுத்த முடியாது என தனக்கு தானே நம்பிக்கை கூறிக் கொண்டு கணவரின் சொல் படி காரில் ஏறினார். 

எப்போதாவது விஷேஷ தினங்களில் தண்டபாணியை பார்க்க பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் சண்முகம். பதின்ம வயது வரவும் அப்படி அவரை காண பிள்ளைகள் முரண்டு பிடிக்க, சண்முகமும் வற்புறுத்தாமல் விட்டு விட்டார். 

 கௌதமுக்கு அப்பாவின் வாய் மொழியாக பெரியவரை பற்றி தெரியும் என்றாலும் நேரில் பார்த்து பழகிய சமயங்கள் குறைவுதான். 

அப்பாவுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதும் கௌதமுக்கு தெரியும். இப்போது அவர் இறக்கப் போகும் தருவாயில் இருக்க, கடைசியாக ஒரு முறை பார்க்க அழைத்து செல்கிறார், வெளிநாடு செல்லப் போகும் இந்த சமயத்தில் துக்க நிகழ்வுக்கு தான் செல்ல வேண்டாம் என அம்மா நினைக்கிறார் போல, அதனால் தான் ஊரை விட்டு கிளம்ப சொல்லியிருக்கிறார் என அவனாகவே நினைத்துக்கொண்டான். 

இடம் வரவும் கார் நின்றது, தண்டபாணியின் இளைய மகன் கருணாகரன் கார் நிற்குமிடம் வந்து வரவேற்றார். கௌதமின் கையை பிடித்துக்கொண்டு நலம் விசாரித்தார், வேலை பற்றி கேட்டார், ஜெர்மனி கிளம்ப எல்லாம் தயாராகி விட்டதா எனக் கேட்டு அறிந்து கொண்டார். 

‘இதென்னடா இவர்! அவர் அப்பாக்கு முடியாம இருக்கும் போது எனக்கு ஏன் இந்த கவனிப்பு?’ என குழம்பிக் கொண்டே அனைத்துக்கும் பதில் சொன்னான் கெளதம். 

பதிமூன்று பதினான்கு வயது மதிக்கத் தக்க பையன் ஒருவன் ஆவலாக தன்னை பார்ப்பதை கண்ட கௌதம் அம்மாவை பார்த்தான். அம்மா தன்னை பாவமாக பார்ப்பதை கண்டு துணுக்குற்றான். 

எதுவோ சரியில்லை என இப்போதுதான் கௌதமின் உள்ளுணர்வுக்கு புரிந்தது. 

கௌதமை அழைத்துக் கொண்டு பெரியவரின் அறைக்குள் சென்றார் சண்முகம். மருந்துகளின் நெடியில் முகம் சுளித்தான் கெளதம். படுக்கையில் இருந்த  பெரியவரை பாவமாக பார்த்தான். அவரின் கையை பிடித்துக்கொண்டு அழுது வீங்கிய முகத்தோடு அமர்ந்திருந்தாள் ஒரு பெண். 

தொள தொளப்பான சுடிதாரில் உதடுகள் துடிக்க சிறு வீசும்பலோடு இருந்தவளை காண காண அவனுக்கு இரக்கமாக இருந்தது. 

பெரியவரின் முதல் மகன், மருமகள் இருவரும் பத்து வருடங்களுக்கு முன்னரே விபத்தில் அகால மரணம் அடைந்திருந்தனர். மகன் போன துக்கம் தாளாமல் பெரியவரின் மனைவியும் அடுத்த வருடத்தில் இறந்து விட்டார். இறந்து போன மகனின் இரண்டு பிள்ளைகளும் பெரியவரின் பொறுப்பில் இருக்கிறார்கள். 

இந்த விஷயமெல்லாம் கௌதமுக்கு தெரியும். பெரியவரின் பேத்திதான் இந்த பெண் என சரியாகவே கணித்திருந்தான். 

“இவன்தான் என் ரெண்டாவது மகன் கெளதம்” என சத்தமாக சொல்லி பெரியவருக்கு  மகனை அறிமுகம் செய்து வைத்தார் சண்முகம். ஒரு முறையில் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை, சண்முகம் இன்னும் பெருங்குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். 

“அப்பா அப்பா… அமைதியா இருங்க. என்னை இன்ட்ரொட்யூஸ் பண்றதா இப்போ முக்கியம்?” என்றான் கெளதம். 

“அவருக்கு நான் சொல்லி புரிய வைக்கிறேன் சண்முகம்” என்ற கருணாகரன்  அப்பாவின் காதுக்கருகில் குனிந்தார். 

“சண்முகண்ணன் பையன் வந்திட்டார் ப்பா, உங்க பக்கத்துலதான் நிக்கிறார்” என்றார் கருணாகரன். 

கண்களை திறந்த பெரியவரின் கைகள் உயர்ந்து காற்றில் துழாவியது. கௌதமின் கையை பிடித்து பெரியவரிடம் கொடுத்தார் சண்முகம். அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட பெரியவரின் கண்களில் கண்ணீர். 

விசித்திரமாக பார்த்திருந்த கெளதம் தன் அம்மாவை தேடினான். அருணாவின் முகம் இறுக்கமாக இருந்தது. 

என்ன நடக்கிறது என கெளதம் உணர்ந்து கொள்வதற்குள் அருகிலிருந்த அந்தப் பெண்ணின் கையை பிடித்து கௌதமின் கைகளுக்குள் வைத்து விட்டார் கருணாகரன்.

பேத்தியின் கை என புரிந்து லேசாக புன்னகைத்தார் பெரியவர். கௌதமுக்கு பட படப்பாகி விட்டது. 

அவன் அதிர்ச்சியில் இருக்க, வேக வேகமாக வேலையாட்கள் பெரியவரை அவர் இருந்த கட்டிலை ஹாலில் பூஜை அறைக்கு எதிரில் கொண்டு வந்து போட்டனர்.  

அந்த பெண்ணை நீ மணக்க வேண்டும் என்ற சாராம்சத்தில் மகனிடம் பேசினார் சண்முகம். எதுவும் வாய் திறக்க முடியாத படி மனைவியை பார்வையாலேயே அடக்கி வைத்தார். 

மறுப்பாக ஏதோ சொல்ல கெளதம் வாய் திறக்க, அதற்கெல்லாம் அவகாசமோ அனுமதியோ தரவே இல்லை சண்முகம். 

கருணாகரனின் மனைவி  ஏதோ கடமை போல பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு நகர்ந்து கொண்டார். பெரியவரின் பேரன் தன் அக்கா பக்கத்தில் நின்றிருந்தான். 

கௌதமை யாரோ கட்டி வைத்தது போலிருந்தது சூழல். கட்டாய படுத்துகிறார்கள் என அவனுக்கு தெரிகிறது, ஆனால் எதிர்வினையாற்ற அவனால் முடியவே இல்லை. 

“யசோம்மா… அழாம அப்பாம்மா அப்பயி எல்லாம் மனசுல நனைச்சு வேண்டிக்கோ” என்றார் கருணாகரன். 

யசோத்ராவும் கௌதமை போல அதிர்ச்சியில்தான் இருந்தாள். எதிரில் நிற்பவன் பெயர் கூட அவளுக்கு தெரியவில்லை. கைகளை குவித்து கண்களை மூடிக் கொண்டவளுக்கு மனம் முழுதும் பயம் மட்டும்தான். 

யசோத்ராவின் கழுத்தில் தாலி கட்டி முடித்த பிறகுதான் நடப்பதெல்லாம் நிஜம் என்றே உணர்கிறான் கெளதம்.