ஆயிரத்தில் அவள் ஒருத்தி -1

அத்தியாயம் -1

விடியற்காலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை பார்க்க தொடங்கி விட்டார் அருணா. அவரின் கணவர் சண்முகம் வீட்டோடு சேர்ந்து இருக்கும் மளிகை கடையை திறக்க சென்று விட்டார். 

முன் பக்கம் கடை, பின்னால் வீடு, முதல் மாடியில் மூன்று மகன்களுக்கும் படுக்கை அறைகள் என நல்ல வசதியான வாழ்விடம் அது. 

ஒரு பைசா கையில் இல்லாமல் நிராதரவான நிலையில் திருச்சிக்கு வந்தவர்.  கடுமையாக உழைத்து மூன்று மகன்களையும் நன்றாக படிக்க வைத்தார். இன்று மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள். 

இனியும் உழைக்க வேண்டுமா என்பது அவரின் மனைவியின் எண்ணம். சோம்பி இருந்தால் நான் நானாகவே இருக்க முடியாது என சொல்லி விட்டார் சண்முகம். 

கணவருக்கும் தனக்கும் தேநீர் போட்டு எடுத்துக் கொண்டு கடைக்கே வந்து விட்டார் அருணா. அந்நேரமே வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்திருந்தனர்.

“ஸ்டேஷனுக்கு கெளதம் வருவான் கூட்டிட்டு வரணும்னு சொன்னேன்லங்க? இன்னிக்கும் நேரத்தோட கடை தொறந்து வச்சுக்கணுமா?” என குறையாக கேட்டார் அருணா. 

“ஆட்டோ புடிச்சு வந்திட மாட்டானா? போ வேலை கிடந்தா போய் பாரு” என சண்முகம் அதட்டவும் ஒன்றும் சொல்ல முடியாமல் காலி டம்ளரை எடுத்துக் கொண்டு சென்று விட்டார் அருணா.

கடையில் உதவிக்கென பாபு என்ற பையனை வைத்திருக்கிறார்தான், அவன் காலை உணவை முடித்துக் கொண்டு ஒன்பது மணி போலதான் வருவான். 

சண்முகத்திற்கு இயல்பிலேயே சாந்தமாக பேச வராது, குரலும் தொனியும் எதிராளியை பயப்படுத்துவது போலத்தான் இருக்கும். அவர் ஒரு முடிவு எடுத்து விட்டார் என்றால் வீட்டினர் யாரும் எதிர்த்தே பேச முடியாது. 

இரண்டாவது மகன் கெளதம் பெங்களூருவில் மென்பொருள் துறையில் வேலை செய்கிறான். இரண்டு வாரங்களில் ஜெர்மனி செல்லவிருக்கிறான். ஆறு மாத காலம் அங்குதான் வேலை. 

முப்பது வயதாகி விட்டவனுக்கு இரண்டு வருடங்களாகவே பெண் பார்த்து வருகின்றனர். இப்போதுதான் ஒரு இடம் முடிவது போல நெருங்கி வருகிறது. இவன் வெளிநாட்டுக்கு செல்ல போவது பெண் வீட்டினருக்கும் தெரியும், பெண்ணும் பையனும் நேரில் பார்க்கட்டும், பிடித்திருந்தால் எளிமையாக நிச்சயம் செய்து உறுதி செய்து கொள்ளலாம் என சொல்கிறார்கள். 

சண்முகத்திற்கும் அதுவே சரியென பட்டது. இந்த இடம் அமையாது போனால்  மகனுக்கு வேறு நல்ல இடம் கிடைக்காதோ என ஐயம் அவருக்கு. 

இரயில் மூலம் திருச்சி வந்து விட்ட கௌதமின் விழிகள் சரியான உறக்கமின்மையால் சிவந்து போயிருந்தன. 

அலுவலகத்தில் அவன் செய்திருந்த அலுவலை முறையாக வேறு ஒருவனிடம் ஒப்படைக்க வேண்டும், அதற்கான நேரமும் இருந்தது. இப்போது திடீரென நிச்சயம் நடத்தி விடலாம் என அப்பா சொல்கையில்  இவனுக்குமே அதை தள்ளி போட விருப்பமில்லை. ஆகவே கடந்த சில நாட்களாக அதிக வேலைப்பளு. 

டாக்சி பிடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய கௌதமிற்கு வீட்டை பற்றி பல சிந்தனைகள். 

மூத்தவன் கல்யாண் அவனுடன் வேலை செய்த கேரளாவை சேர்ந்த பெண்ணை வீட்டினருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டான். அந்தப் பெண் வேற்று மதம். ஆறு மாதங்கள் கழித்துதான் விஷயமே வெளி வந்தது. காதல் திருமணம் என்பதை தாண்டி தன்னிடம் சொல்லாமல் துரோகம் இழைத்து விட்டான் எனதான் அவன் மீது சண்முகத்திற்கு மிகுந்த கோவம். 

மனைவியை அழைத்துக் கொண்டு கல்யாண் வீடு வந்த போது ரகளை செய்து விட்டார் சண்முகம். கடுமையான வார்த்தைகளை உபயோகித்து விட்டார். அன்று வெளியேறியவன் நான்கு வருடங்களாகியும் இங்கு வரவில்லை. இப்போது சென்னையில் வசிப்பவனுக்கு இரண்டு மகன்கள்.

 பேரன்களின் வரவு கூட சண்முகத்தை மாற்றவில்லை. தவறு செய்து விட்டு சென்றவன் பெற்றோரை சமாதானம் செய்ய எந்த முனைப்பும் காட்டாமல் இருக்கும் போது தானாக அவனிடம் செல்ல மாட்டேன் என வீராப்போடு இருக்கிறார். 

அப்பாவுடன்தான் பேசுவது இல்லை கல்யாண். அம்மா மற்றும் சகோதரர்களுடன் கைப்பேசி வாயிலாக தொடர்பில் இருக்கிறான். 

ஜாதக பொருத்தம் இல்லாமல் போவது, கௌதமின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல பெண் அமையாதது என கௌதமின் திருமணம் தள்ளி செல்ல சில காரணங்கள் இருந்த போதும் கல்யாணின் கலப்புத் திருமணம்தான் முதன்மையான காரணமாக இருந்தது. அதனால் மூத்த மகன் மீதான கோவம் சண்முகத்திற்கு பல மடங்கு கூடி விட்டது. 

பிள்ளைகளின் படிப்பு செலவு, குடும்ப செலவு போக ஒரு இடத்தை மட்டும்தான் சண்முகத்தால் வாங்க முடிந்தது. வீடு கட்ட மூன்று பிள்ளைகளுமே லோன் எடுத்து கொடுத்திருந்தார்கள். 

கல்யாணை தள்ளி வைத்த பிறகு அவன் கொடுத்த பணத்தை கடன் வாங்கி கொடுத்து விட்டார் சண்முகம். கடைக்குட்டி குணாளன் அந்த கடன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அம்மா வாயிலாக சொல்லி விட்டான். 

யாரும் பார்க்க தேவையில்லை, என்னாலேயே பார்த்துக் கொள்ள முடியும் என சண்முகம் வீம்பு பாராட்டிய போது கெளதம்தான் அப்பாவுக்கு தோள் கொடுத்தான். 

“கடனை அடைக்கிறேன்னு வேலைய ரொம்ப இழுத்து விட்டுக்காம வயசுக்கு ஏத்த அளவு மட்டும் உழைங்க ப்பா. கஷ்டத்துல இருந்து முன்னுக்கு வர்றத விட, அந்த நேரம் நீங்க நல்லாருக்கணும் எங்க கூட இருக்கணும் அதுதான் முக்கியம்” என கெளதம் சொன்ன போது, சண்முகத்தின் மனம் நிறைத்து போய் விட்டது. 

தன் வாழ்க்கைத் துணை விஷயத்தில் அழகு, படிப்பு என இரண்டிலுமே கௌதமிற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. வெளிப்படையாகவே நவ நாகரீக மங்கைதான் எனக்கு வேண்டும் என வீட்டிலே சொல்லவும் செய்திருந்தான். அதற்கேற்றது போலத்தான் அவனது பெற்றோரும் பெண் தேடினார்கள். 

இப்போது பார்த்திருக்கும் பெண் யோகிதா, கௌதமின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தாள். திருச்சியிலேயே அவளது பெற்றோர் இருக்க, சென்னையில் பணி புரிகிறாள். திருமணத்துக்கு பின் பெங்களூருவுக்கும் வேலை மாற்றம் செய்து கொள்ளலாம், கெளதம் வெளிநாட்டில் செட்டில் ஆக விருப்ப பட்டாலும் அவளுக்கு பூரண சம்மதமாம். 

புகைப்படத்தில் பார்த்த உடனேயே இருவருக்கும் பிடித்திருந்தது. நேரில் பார்ப்பது வெறும் சம்பிராதயம் மட்டுமே. கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலைதான். 

இரண்டு நாட்கள் கழித்துதான் யோகிதா திருச்சி வருகிறாள், நெருங்கிய நண்பனின் திருமணம் நாளை நடக்க இருப்பதால் இன்றே வந்து விட்டான் கெளதம். 

அம்மாவிடம் கேட்டு யோகிதாவின் கைப்பேசி எண்ணை பெற்று விட வேண்டும் என நினைத்துக்கொண்டான். 

வீடு வந்தவன் காபி மட்டும் பருகி விட்டு படுக்க மேலே உள்ள தன் அறைக்கு சென்று விட்டான். 

வங்கியில் பணி புரியும் குணா தயாராகி சாப்பிட வந்த போது சண்முகமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். 

கெளதம் வந்து விட்டதை சின்ன மகனிடம் சொன்ன அருணா, இரண்டு நாட்கள் கழித்து விடுப்பு எடுத்து விடு எனவும் சொன்னார். 

“கௌதமுக்கு கண்டிப்பா இந்த இடம்தான் முடிய போகுதாம்மா?” என குணா விசாரித்துக் கொண்டிருக்க, சண்முகத்திற்கு ஏதோ அழைப்பு வந்தது. பேசியவர் பர பரப்பாகி விட்டார். பாதி உணவிலேயே எழுந்தும் விட்டார். 

பயந்து போன அருணா என்னவென கேட்க, குணாவும் அப்பாவைத்தான் பார்த்திருந்தான். 

“தண்டபாணி ஐயாவுக்கு ரொம்ப முடியலையாம், அவர் பேத்தி கூப்பிட்டு சொல்லுச்சு” என்றார் சண்முகம். 

“அதானே, நானும் என்னவோ ஏதோன்னு பயந்திட்டேன்” என்றஅருணாவை முறைத்து வைத்தார் சண்முகம். 

கணவர் திட்டுவாரோ என பயந்தாலும், “எண்பது வயசான மனுஷர், மூனு வருஷமா படுக்கைல விழுந்து விழுந்து எந்திரிக்கிறார். போன மாசமும் இப்படித்தான் சீரியஸ்ன்னு போய் பார்த்திட்டு வந்தீங்க” என்றார் அருணா. 

“எல்லாம் சரிதான், அவரை நம்பி ரெண்டு சின்ன புள்ளைங்க இருக்கே, அதை நினைக்க மாட்டியா?” என ஆதங்கமாக கேட்டார் சண்முகம். 

“ஏன் ஐயாவோட ரெண்டாவது புள்ள கருணாகரன் அண்ணன் இல்லையா? சொந்த அண்ணன் புள்ளைங்கள அவர் பார்க்காம போயிடுவாரா?” எனக் கேட்டார் அருணா.

 “என்னத்த பார்க்கிறாரு? அவர் பொண்டாட்டி அதுக்கும் மேல” சலித்துக் கொண்டே வெளியே சென்றார் சண்முகம். 

“ஏம்மா… கருணாகரன் அங்கிள் அவர் வைஃப் கூடல்லாம் அப்பாக்கு சண்டையா ம்மா?” என விசாரித்தான் குணா.  

“இதென்ன புதுசா கேட்குற? அவங்களுக்கும் இவருக்கும் என்ன முன் பகையா? கருணா அண்ணன் அவர் அண்ணன் பசங்கள கருத்தா பார்க்கலைன்னு உங்கப்பாக்கு வருத்தம். காசு பணம் இருந்தா போதுமா? இப்பதான் ஸ்கூல் படிக்கிறான் அந்த பையன், பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு அதுக்கப்புறமும் கட்டி சுமக்கணும்? பொண்டாட்டி ஒத்துழைப்பு இல்லாம அவர் என்ன செய்வார் பாவம்? அந்தம்மாவுக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்கையில எப்படி மூத்தாரு புள்ளைங்கள பார்க்கும்? இதெல்லாம் உங்கப்பாக்கு புரியாது, கடமை பொறுப்புன்னு ஏதாவது பேசுவாரு” என்றார் அருணா. 

“அதானே பிரச்சனை மத்தபடி அவங்கள புடிக்காம ஒன்னும் இல்லியே?” என மீண்டும் கேட்டான் குணா. 

“இப்ப என்னதுக்குடாஅதையே கேட்குற? ஏன் கருணா அண்ணன் பொண்ண கட்டிக்க போறியா என்ன? வந்திட்டான் புடிச்சிருக்கா புடிக்கலையான்னு…”

குரலை செருமிக் கொண்டவன், “அப்படிதான்னா என்னம்மா செய்வ?” என்றான். 

அருணா திகைக்க, அவர் அடுத்து கேள்விகள் கேட்க சந்தர்ப்பம் வழங்காமல் நேரமாகி விட்டது என வேகமாக கிளம்பி விட்டான் குணா.

பாபுவிடம் கடையை பார்த்துக் கொள்ளும் படி சொல்லி விட்டு தன் டி வி எஸ் எடுத்துக் கொண்டு புறப்பட்டிருந்தார் சண்முகம்.