“இன்னிக்குத்தான் இப்படியா? எப்பவுமே இப்படிதானா?” என அவள் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை அவன்.
“மதியம் எவ்ளோ பேசினீங்க ஜீவா. அத்தையோட நினைப்பு இருக்கலாம், அவங்க இல்லாம போனதுக்கு நீங்கதான் காரணம்னு நினைக்க கூடாது. அவங்களுக்கு இப்படி ஆகும்னு நினைச்சா அப்ராட் போனீங்க? நடக்க போறது முன்னாடியே எப்படி தெரியும் உங்களுக்கு? சொல்ல போனா அவங்களுக்காகதானே என்னை பிரிஞ்சீங்க? யார் அப்படி செய்வா? உங்கப்பா பத்தி உங்களுக்கு தெரிய வந்தப்போ கூட அவங்கள்ட்ட எதுவுமே கேட்டுக்கலையே நீங்க, எங்கம்மா மேல எந்த தப்பும் இருக்காதுன்னு எந்த விளக்கமும் இல்லாமலே நம்புனீங்களே ஜீவா! சத்தியமா சொல்றேன் நீங்க அவங்களுக்கு அருமையான பையன் ஜீவா” என்றாள்.
“அம்மாக்கு யார் பையனா இருந்திருந்தாலும் அவங்கள நம்பியிருப்பாங்க, அவங்க கூட நீ பழகினது இல்லைதானே? பழகியிருந்தா நீயும் அவங்கள நம்பியிருப்ப”
அவனது கையை எடுத்து தன்னை சுற்றி போட்டுக் கொள்ள செய்து அவனோடு அணைவாக நின்றவள், “பழகாமலே ஜீவாவோட அம்மாவை நான் முழுசா நம்பினேன் ஜீவா” என்றாள்.
“நாம வாழறத அம்மா பார்க்கல. உன்னை ஒருமுறை அவங்கள்ட்ட அறிமுக படுத்தியிருக்கலாம். நீ யாருன்னு நிறைய முறை கேட்ருக்காங்க, அப்புறம் சொல்றேன் அப்புறம் சொல்றேன்னு கடைசி வரை சொல்லவே இல்லை. அம்மா ரொம்ப ஹெல்தியா இருந்தாங்க. கூட உள்ளவங்கள நல்லா வச்சுக்கிட்டாங்க. இல்லைனா சாமி அங்கிள், சரோம்மா, பங்கஜ் ஸார்லாம் என்னை போடான்னு சொல்லிட்டு போயிருப்பாங்க. மணி கூட எனக்கு ஃப்ரெண்ட்ங்கிறத விட அம்மாக்காகதான் என்னை கேர் பண்ணிக்கிறான்”
“இருக்கலாம், ஆனா நான் உங்களுக்காகத்தான் வந்தேன்” என்றாள்.
“நீ வருவேன்னு கனவு கூட கண்டதில்லை மிது”
“தூங்கினாதான் கனவெல்லாம் வரும் ஜீவா. இப்படி ஆந்தை மாதிரி முழிச்சிருந்தா கண்ண சுத்தி கருவளையம்தான் வரும்”
“வேணும்னா முழிச்சிருக்கேன்? டிஸ்டர்ப் ஆகிட்டே இருக்கேன் நான்” என அவன் சொல்லவும் ம் போட்டுக் கொண்டாள். அவளுக்கும் இப்போது உறக்கம் கலைந்து விட்டது.
அந்த குளிர் இரவில் அவனோடு அப்படி நெருக்கமாக நிற்பது பிடித்தும் இருந்தது. ஆழமான மனக் காயங்கள் எளிதாக ஆறி விடாது என்பது புரிந்தாலும் எந்த வழியிலாவது சீக்கிரமாகவே அவனை இயல்புக்கு மாற்ற எண்ணினாள். என்ன செய்யலாம் என யோசித்தாள்.
“ஜீவா…” என தயங்கிய குரலில் அழைத்தாள்.
“தூக்கம் வருதா? போலாம் வா” என்றான்.
“அதில்ல, உங்களுக்கு… எப்படி சொல்ல… நாம வேணும்னா… ம்க்கும்… நீங்க பெட்டரா ஃபீல் ஆவீங்க. நாம இப்போ ஹஸ்பண்ட் வைஃப்தானே? அது வந்து…” எப்படி வார்த்தைகள் போட்டும் அவள் நினைத்ததை அவளால் சொல்ல முடியாமல் திணறினாள்.
என்னதான் சொல்ல வருகிறாள் என குழப்பமாக பார்த்தவன், “புரியற மாதிரி சொல்லு மிது” என்றான்.
“நாம மட்டும்தான் இருக்கோம் மிது, யாரும் கேட்க போறது இல்லை, நார்மலாவே சொல்லு” என்றான்.
“யாருக்கும் கேட்காது, எனக்கு கேட்குமே” என்றவளை முறைத்தான்.
“இப்படி பார்த்தா என்னால எப்படி சொல்ல முடியும்?”
“என்னன்னு ஒழுங்கா சொல்லு” என அவன் அதட்டல் போடவும், “நாம சேர்ந்து இருந்துக்கலாமா?” என வேகமாக கேட்டு விட்டு முகத்தை மூடிக் கொண்டாள்.
“சேர்ந்துதானே இருக்கோம்?”என சொல்லி முடிக்கும் போதுதான் அதன் அர்த்தம் அவனுக்கு விளங்கியது. முதலில் சிரித்து விட்டவனுக்கும் இப்போது வெட்கமாகிப் போனது.
முகம் மூடியிருந்த அவளின் கையை விலக்கி விட்டவன், “போய் தூங்கலாம் வா” என்றான்.
“கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லை”
“எனக்காக இயல்பா இருக்கிறது போல நீ காட்டிக்கிட்டாலும் உன் மனசுல உள்ள கவலை எனக்கு தெரியும். உம்மேல கொள்ளை கொள்ளையா ஆசை இருக்கு, நம்ம மனசுல எந்த உறுத்தலும் இல்லாம போகும் போது அதையெல்லாம் பார்த்துக்கலாம். இப்ப வா”
“ஹை! அவ்ளோ நல்லவரா நீங்க?”
“அவ்ளோ நல்லவன் கிடையாது, அதனால இந்த டாபிக் திரும்பி பேசிடாத” என்றான்.
“பிரியலாம்னு முடிவு பண்ணிட்டு வீட்டுக்கு தெரியாம கல்யாணமே பண்ணியாச்சு. இப்ப உங்களோட இந்த முடிவை எவ்ளோ நாள் ஃபாலோ பண்ணப் போறோம்னு பார்க்கலாம்” என்றாள்.
“நம்மளால முடியற வரை”
“அப்ப முடியாதுன்னுதானே சொல்றீங்க”
“போதும் மிது, எனக்கு தூக்கம் வந்திடுச்சு” என்றவனுக்கு வாய் கொள்ளாத சிரிப்பு.
“கொஞ்ச நாளைக்குத்தான் இப்படி, ரொம்ப ஓட்டாம வா” என சொல்லி அழைத்து சென்றான்.
உற்சாகத்தில் இருந்தவள் அவனை கிண்டல் செய்து கொண்டேதான் இருந்தாள். அந்தஇரவுஅப்படித்தான்முடிந்தது.
காலையிலேயே சரோஜா வந்து விட்டார். கதவை திறக்க எழுந்த மிது பின் உறங்க செல்லவில்லை. இன்று சூழலை பொறுத்து விடுப்பு எடுக்கலாம் என நினைத்திருந்தாள். அதற்குள் இன்று தவறாமல் அலுவலகம் வந்து விடு என அவளுடைய மேனேஜர் செய்தி அனுப்பியிருந்தார். ஆகவே கிளம்ப ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனும் எழுந்து வந்து விட்டான். அவனிடம் விவரம் சொன்னாள். அவனே கொண்டு வந்து விடுவதாக சொன்னான்.
நேரமிருப்பதாக சொல்லி அவளும் அவனுக்காக காத்திருந்தாள். அவசரமாக கிளம்பி வந்தவனை முறைத்தவள் சரோஜா அங்கிருந்ததால் அறைக்குள் சென்று விட்டாள்.
“என்ன… எதுவும் மறந்திட்டியா மிது?” எனக் கேட்டுக் கொண்டே அவனும் உள்ளே வந்தான்.
அவனது மேல் சட்டையின் இரண்டு பொத்தான்கள் பூட்டப் படாமல் இருந்தன. அதை சுட்டிக் காட்டியவள், “என்னதிது?” எனக் கேட்டாள்.
“ஓ அவசரத்துல போட விட்ருக்கேன். அதுக்கா வந்த?” இடுப்பில் கை வைத்த படி கேட்டான்.
பொத்தான்களை போட்டு விட்டவள், “நீஙக சாதாரணமா போனாலே குறைஞ்சது நாலைஞ்சு பொண்ணுங்க திரும்பி பார்ப்பாங்க, இப்படி போனா கேட்கவே வேணாம். பார்க்கிற பொண்ணுங்க மைண்ட் டிஸ்ட்ராக்ட் ஆகி… ப்ச்… பாவம் அவங்க வேலை கெட்டு போக கூடாதில்ல?” என்றாள்.
“காலர் பட்டனையும் போட்டு விட்ரு” என்றான்.
“நானும் நினைச்சேன், உங்களுக்கு பிடிக்காதோன்னுதான்…” என கிண்டலாக சொல்லிக் கொண்டே காலர் பொத்தானையும் போடப் போனாள்.
அவளது கையில் செல்லமாக அடி கொடுத்து விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான். மாலையிலும்அவன்தான்அழைத்துவந்தான். பின்அந்தவேலையைரங்கசாமிக்கு கொடுத்து விட்டான். தனக்கு டிரைவர் எல்லாம் தேவையில்லை எனதான் மிது சொன்னாள்.
“ரொம்ப வருஷமா இங்கேயே இருந்திட்டாங்க, இந்த வேலை சாமி அங்கிளுக்கு ரொம்ப தேவை” என அவன் கூற, அவளும் ஏற்றுக் கொண்டாள்.
காலையிலேயே வந்து விடும் சரோஜா காலை மற்றும் மதிய உணவை தயார் செய்து விட்டு வீட்டையும் சுத்தப் படுத்தி விட்டு செல்வார். இரவு உணவு நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என சொல்லி விட்டனர்.
வார இறுதியில் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். அவனை நிறைய பேச வைத்தாள். முடிந்த வரை கிண்டல் கேலி என கலகலப்பாக வைத்துக்கொண்டாள்.
அவள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவளின் பின்னாலேயே சுற்றி வந்தான். அவன் வரவில்லை என்றாலும் இவள் போய் அவனிடம் அமர்ந்து கொண்டாள். நினைத்த போது அணைத்துக் கொண்டனர், ஆசையாக முத்தங்கள் பரிமாறிக் கொண்டனர்.
இன்னுமே இரவில் பாதி உறக்கத்தில் விழித்துக் கொள்கிறான்தான் ஜீவா. ஆனால் படுக்கையை விட்டு எழுந்து செல்வதில்லை. அவளை அணைத்த படி அவளுக்குள் முகம் புதைத்துக் கொள்வான். அவளும் விழித்து விட்டால் அவனை தட்டிக் கொடுத்தோ தலை கோதியோ உறங்க வைப்பாள்.
இப்படியே இரண்டு வாரங்கள் கடந்து விட்டன.
அன்றுமிது அலுவலகம்சென்றபின் வீட்டுக்குள்ளேயே உலாவிக் கொண்டிருந்தான். எனக்காக என்னிடம் வந்து விட்டாள், அவளுக்காக தான் மாறத்தான் வேண்டுமென மனதில் உரு போட்டுக் கொண்டான்.
சரோஜா கிளம்பியதும் மணியையும் பங்கஜையும் பார்த்து வரலாம் என இவனும் கிளம்பினான். வீட்டிலிருந்தே வேலை பார்த்துக் கொண்டிருந்தான் மணி. ஆகவே அவனை சந்திப்பது எளிதாகவே இருந்தது.
வேலை பெற்றுத் தருவதில் பிரச்சனை இருக்காது, ஆனால் உன்னை விட ஜூனியர்கள் கீழ் வேலை செய்யும் படி நேரும், சம்பளமும் சொற்பமாகவே கிடைக்கும், பங்கஜ் ஸாரிடம் வேலை செய்வதில் மிதுவுக்கு சம்மதம் எனும் போது அதையே தேர்ந்தெடு என அறிவுரை சொன்னான் மணி.
மணியின் வீட்டிலிருந்த படியே நன்றாக யோசித்து பார்த்தான் ஜீவா. மணி சொன்ன காரணங்கள் எதுவும் அவனுக்கு பிரச்சனையே இல்லை. ஆனால் ஐடிவேலையில் மனம் ஒன்றிப் போகுமா என சந்தேகமாக இருந்தது. முயற்சி செய்து பின்னர் முடியாமல் போனால் தன்னோடு சேர்ந்து மிதுவுக்கும் கஷ்டம் என நினைத்தவன் நடனத் துறையிலேயே வேலை பார்ப்பது என தீர்மானித்தான்.