கொஞ்சும் காதல் சாரல் -16

அத்தியாயம் -16

ஜீவநந்தன், மிதுன்யா இருவரின் பெயர்களையும் சொல்லி அழைத்தார் அந்த பதிவாளர் அலுவலகத்தின் ஊழியர். 

சிகை திருத்தி, முக சவரம் செய்து, எடுப்பான பேண்ட் சட்டையில் பொலிவாக இருந்த ஜீவாவும் மெல்லிய சரிகை கொண்ட பட்டு உடுத்தி வெகு எளிமையான அலங்காரத்தில் இருந்த மிதுன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

அவன் கை நீட்ட, ஆசையாக பிடித்துக்கொண்டாள். இருவரும் சேர்ந்து அலுவலகத்தின் உள்ளே சென்றார்கள். உடன் வந்திருந்த பங்கஜ், அவரின் மனைவி, மாசிலாமணி, வாசுகி, சரோஜா, ரங்கசாமி ஆகியோரும் சென்றனர். 

படிவங்களை சரி பார்த்த பதிவாளர் கையெழுத்து போட சொல்லி தடிமனான அந்த புத்தகத்தை முன் வைத்தார். இருவரும் கையெழுத்து போட்ட பின் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.  மாலைகளை கொடுத்தான் மணி. 

மாலை மாற்றிக் கொண்ட பின் கண்கள் கலங்க சிரித்தாள் மிது. அவளது கன்னங்களை பற்றிக் கொண்டு சிரித்தவன், “நினைச்சதை சாதிச்சிட்ட, ஹேப்பியா?” எனக் கேட்டான். 

ஆமாம் என்ற மிது அவனை நெருங்கி நின்று அவனது கை கோர்த்துக் கொண்டாள். அப்படியே வெளியே வந்தார்கள். 

உடனிருந்தவர்கள் வாழ்த்து சொன்னார்கள். பனித்து விட்ட கண்களை துடைத்துக் கொண்டார் சரோஜா. 

“என்னமோ நீங்க ஆசை படாத மாதிரி அவளை மட்டும் ஹேப்பியான்னு கேட்டீங்க? யாரு யாருகிட்ட மாட்டிகிட்டீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா நான் வெயிட்டிங்” என்றாள் வாசுகி. 

“இது அவங்க மொமெண்ட், ஸ்பாயில் பண்ணாதீங்க” என்றான் மணி. 

“சரியான போர் அடிக்கிற ஃப்ரெண்ட் ஜீவா உங்களுக்கு” கிண்டல் செய்தாள் வாசுகி. 

புன்னகைத்த ஜீவா, “எங்க விஷயத்துல உனக்கு டவுட்ஸ் வேணாம், நான்தான் இவகிட்ட மாட்டிகிட்டேன்” என்றான். 

“உன்கிட்ட மாட்டிகிட்டு முழிச்ச எங்களுக்கு விடியல்டா ஜீவா, பார்த்து பத்திரமா வச்சுக்கம்மா இவனை. இல்லைனா ஸ்டேட் விட்டு ஸ்டேட் தாவிட்டே இருப்பான்” என்றார் பங்கஜ். 

“ஐயோடா, இவரு கூட யார்கிட்டேயும் மாட்டிப்பாரு!” என பங்கஜிடம் நொடித்தார் அவரின் மனைவி. 

பிடித்திருந்த ஜீவாவின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள் மிது. “அப்படிலாம் போக மாட்டேன் மிது, கை வலிக்குது” என அவளுக்கு மட்டும் கேட்கும் படி அவன் சொன்னான். 

“நீங்க எந்த பிராமிஸும் பண்ண வேணாம், உங்களை விடறதாவே இல்லை நான்” என அவளும் சின்ன குரலில் சொல்லி, வேண்டுமென்றே தன் பிடியை இன்னும் இறுக்கினாள். வலியில் அவனது முகம் சுணங்கவும்தான் பிடியை தளர்த்தினாள்.  

அனைவருமே ஜீவாவின் வீட்டுக்கு சென்றனர். 

தள்ளிப் போடாமல் விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவு மிதுன்யாவுடையதுதான். வீட்டில் தெரிவித்து அவர்களின் சம்மதம் பெறுவதெல்லாம் உடனே நடக்காதே, அத்தோடு அவளின் அக்காவின் கணவன் ‘அன்பு மாமா’ ஒத்துக்கொள்ளவே மாட்டார், ஜீவாவை இனியும் தனியாக விடக்கூடாது என யோசித்து  பிடிவாதமாக அவசரத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டாள். 

சற்று பொறுக்கலாம், உன் வீட்டில் பேசி பார்க்கலாம், குறைந்த பட்சம் ஒரு வேலையாவது தேடிக் கொள்கிறேன் என ஜீவா எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டான். 

தற்போதைய சூழலில் இனியும் பொறுக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை, உனக்கு வேலை இல்லை என்றால் என்ன, எனக்கு வேலை இருக்கிறது என அவனை சரி கட்டினாள் மிது. பங்கஜும் மணியும் கூட அவளின் முடிவைதான் ஆதரித்தார்கள்.

தன் மாமாவின் வீட்டிற்கு சொல்லி அவர்களை அழைக்கலாம் என்றான் ஜீவா. 

 இளங்கோ ஏதாவது தகராறு செய்யக் கூடும் என்பதால் இப்போதைக்கு அவருக்கு தெரிவிக்க வேண்டாம் என சொல்லி விட்டார் பங்கஜ். 

தன் பெற்றோர் ஜீவாவை ஏற்றுக் கொண்ட பின்  தாலி கட்டிக் கொள்ளலாம் என மிது சொல்ல, மறுவார்த்தை பேசாமல் அதற்கு ஒத்துக் கொண்டான் ஜீவா. 

ஆரத்தி எடுப்பது, பூஜையறையில் மணப்பெண் விளக்கேற்ற வைப்பது, மணமக்களுக்கு பால் பழம் கொடுப்பது என சடங்குகளை சரோஜாவும் பங்கஜின் மனைவியும் சரிவர செய்தனர். 

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட பின் கோபிகாவின் புகைப்படத்தை கலங்கிப் போனவனாக பார்த்திருந்தான் ஜீவா. திடீரென அனைவரிடமும் மௌனம் சூழ்ந்து கொண்டது. 

“ஜீவா…” என தயங்கிய குரலில் மிது அழைக்கவும் யாரையும் பார்க்காமல் வீட்டிற்கு வெளியில் போய் நின்று கொண்டான். மிது அவனிடம் செல்ல, “விடும்மா, அவனே வருவான்” என்றார் பங்கஜ். 

“விடுன்னா என்ன அர்த்தம்? இனி அந்த பொண்ணுதான் எல்லாம் பார்க்கணும்” என்ற பங்கஜின் மனைவி மிதுவை போக சொன்னார். 

வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஜீவா. 

“நைட்லயாவது நட்சத்திரத்தை எண்ணலாம், பகல்ல என்ன கவுண்ட் பண்றீங்க?” எனக் கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தாள் மிது.

ஒன்றும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகைக்க மட்டும் செய்தான். அவனது தோளை பற்றியவள், “என்ன ஜீவா?” என்றாள். 

சற்று நேரம் எதுவுமே பேசாமல் இருந்தவன், உள்ளே போகலாம் என சொல்லி அவளையும் அழைத்து சென்றான். மதிய உணவு வெளியிலிருந்து வரவழைத்திருந்தார்  பங்கஜ். சாப்பாடு முடிந்ததும் மற்றவர்கள் கிளம்பி விட்டனர். 

ஜீவாவும் மிதுவும் மட்டும்தான் இருந்தனர். இன்னும் தான் தங்கியிருந்த விடுதியை காலி செய்திருக்கவில்லை மிது. தேவையானவை மட்டுமே ஒரு பெட்டியில் வைத்து எடுத்து வந்திருந்தாள். எங்கே எடுத்து வைப்பது என கேட்டாள். 

“என்கிட்ட கேட்டா? உனக்கு என்ன தோணுதோ செய்துக்க” என சொல்லி விட்டான். 

ஜீவாவின் அறையிலிருந்த கப்போர்டிலேயே இடம் ஒதுக்கி அரை மணி நேரத்தில் தன் துணிகளை எடுத்து வைத்து விட்டு வந்தாள். சோஃபாவில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன். 

அவனருகில் அமர்ந்தவள் அவனை அப்படியே தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டாள். ஒரு முறை கண் திறந்து பார்த்து சிரித்தவன் அவள் மீது வாகாக சாய்ந்து கொண்டான். 

“நடந்ததை நினைச்சே வருத்த படக்கூடாது ஜீவா. அத்தை போன துக்கத்திலிருந்து வெளில வாங்க” என்றாள். 

 “சின்ன வயசுல அம்மா கூட இருக்கணும்னு நிறைய ஏங்கியிருக்கேன் மிது, விவரம் வந்ததுக்கு அப்புறம்தான் அம்மாவுக்கும் அதே ஏக்கம் இருந்திருக்கும்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. இங்கேயே இருன்னு அம்மா எவ்வளவோ சொன்னாங்க, நான்தான் கேட்கல. இப்ப நாம கல்யாணம் பண்ணிகிட்டோம்தானே? அப்பவே பிரியாம இருந்திருக்கலாம். என்னை பத்தின கவலை அம்மாக்குள்ள இருந்திருக்கும், லாஸ்ட் மினிட்ல கூட என்னை பத்திதானே யோசிச்சிருப்பாங்க? என்னால ஏன் சரியான முடிவுகளை எடுக்க முடியாம போனது மிது? சந்தோஷமா வாழற எல்லா தகுதியும் என் அம்மாகிட்ட இருந்தும்… ஏன் மிது… ஏன் அவங்க இவ்ளோ சீக்கிரம்…” அதற்கு மேல் பேச முடியாமல் அவளின் கழுத்து வளைவில் முகத்தை அழுத்திக் கொண்டான்.

சில சமயங்களில் வார்த்தைகள் மூலம் ஆறுதல் தேவைப்படுவதில்லை. மனதிலிருப்பதை சொல்லும் போது அந்த விஷயங்களை சரி தவறு என எடை போடாமல் வெறுமனே கேடடுக் கொள்வதற்கு காதுகள் கிடைத்தாலே போதுமானது. 

மிதுவும் எதுவும் பேசாமல் அவனது முதுகை மட்டும் வருடிக் கொடுத்தாள். அம்மாவை இழந்த பிறகு இப்படியான ஆறுதலுக்குத்தான் அவனும் ஏங்கிப் போயிருந்தான். 

தன் கண்ணீரை தயக்கமும் சங்கடமும் இல்லாமல் வெளிப்படுத்த தனக்கென ஒரு ஜீவன் அனைவருக்குமே தேவை. அப்படித்தான் ஜீவாவுக்கான ஜீவன் மிது. 

தனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி, வருத்தம், துக்கம் அனைத்தையும் அவள் தோளில் கரைத்தான். பதட்டப் படாமல் அவனை தாங்கி அவனுள் சுமையாக இருந்தவற்றை துடைக்க ஆரம்பித்தாள் மிது. 

நன்றாக தெளிந்த பின் விலகினான். அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். 

“இப்போ பெட்டரா ஃ பீல் பண்றீங்களா?” எனக் கேட்டாள். 

“பயமாயிருக்கு மிது” 

“எதுக்கு பயம்? எல்லாருக்கும் கல்யாணம் பண்ணினா குதூகலமாதான் இருக்கும், அதிசய பிறவிக்குத்தான் பயம் வரும்” 

“என் மனசுல ரெண்டு விஷயம்தான் இருக்கு மிது, ஒன்னு உன் வீட்ல உன்னை வேணாம்னு தள்ளி வச்சிட கூடாது, எனக்காக அவங்கள நீ விடற மாதிரி வந்தா என்னால தாங்கவே முடியாது”

“என் அப்பாம்மா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அவங்க அப்படிலாம் செய்ய மாட்டாங்க. அதனால அந்த பயம் தேவையில்லை உங்களுக்கு. இன்னொரு பயம் என்ன?”

“வேலையில்லாம வெட்டி பயலா இருக்கேனே. நாலு வருஷ கேப் விழுந்திடுச்சு, எவன் வேலை கொடுப்பான்? தனியா இருக்கிற வரை வேலைக்கு போறது பத்தின சிந்தனையே வந்தது இல்லை. யாருக்காக சம்பாதிக்கணும், சம்பாதிச்சி என்ன பண்ண போறேன் அப்படிதான் தோணும். நீ வந்ததும் என்ன செய்ய போறேன்னு பயமா இருக்கு” 

அவனை விட்டு விலகி அமர்ந்து கொண்டவள், “பங்கஜ் ஸார்கிட்ட போங்க, உங்களுக்கு பிடிச்சத செய்யுங்க” என்றாள். 

சரியாக புரியாமல் பார்த்தான். 

“ஏற்கனவே நாங்க… அதாவது நான், பங்கஜ் ஸார், மணி அண்ணா எல்லாரும் முடிவு பண்ணிட்டோம். வேலை ரெடி பண்றதுன்னா கூட பெரிய விஷயமில்லை, பார்த்துக்கலாம்னு மணி அண்ணா சொன்னார். அண்ணா என்ன என்னாலேயே ரெடி பண்ணி தர முடியும்” என்றவளை பார்த்து வியப்பாக கண்களை விரித்தான். 

“நான்னா எக்ஸாட்டா நான் இல்லை, எனக்கு தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுவாங்க. சில பெரிய ஆளுங்களை எனக்கு தெரியும்” என்றாள். 

“நீயே பெரியாளுதான். நான் விட்டுட்டு போன சோகத்துல அரியர்ஸ் வச்சிருப்பேன்னு நினைச்சிருந்தேன்,  பார்த்தா… கலக்கு கலக்கியிருக்கீங்க நீங்க”

“பின்ன என்ன செய்ய நான்? மூளைக்குள்ள குடைஞ்சிட்டே இருந்த உங்கள்டேருந்து தப்பிக்க படிப்பை தவிர வேற வழி தெரியலை”

“அப்படி நினைச்சுதான் ஆஸ்திரேலியா போனேன்” என்றவன் பெருமூச்சு விட்டான். 

“அடடா, அந்த பேச்சை விட்ரலாம். இப்ப நடக்க வேண்டியதை பேசுவோம். பங்கஜ் ஸாருக்கு நல்லா டான்ஸ் தெரிஞ்சவங்க வேணுமாம். நீங்களா இருந்தா அவருக்கு ரொம்ப உதவியா இருக்குமாம். ‘அவனை  உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு உனக்கு ஹெல்ப் பண்றேன், அவனை என்கிட்ட வேலைக்கு சேர்த்து விட்டு எனக்கு ஹெல்ப் பண்ணிடும்மா’ன்னு என்கிட்ட கேட்ருந்தார். எங்க டீல் அது” என்றாள்.